அபிராமி அந்தாதி --
14
பூத்தவளே, புவனம்
பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின்
கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே.
என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை
அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே (13)
அம்பாள் தான் புவி
ஏழையும் பெற்றவள் என்ற பொருளில் புவி ஏழையும் பூத்தவளே என்று முடித்தார். அவள்
அருளை அறிந்து அவளை பக்தி செய்வதும், அப்படி பக்தி செய்யும் அடியார்க்கூட்டத்தில்
இருப்பதும் புண்ணியம் என்றும் சொன்னார்.
பூத்தவளாய், அதாவது
படைத்தவளாய் இருப்பவள், அவள் படைத்த இந்த பதினான்கு புவனங்களையும் அதாவது வானுலகம்
ஏழும், பாதாள உலகம் ஏழும் சேர்த்து, காத்து வருகிறாள். எப்படிக் காத்து வருகிறாள்?
பூத்தவண்ணமே காக்கிறாள்.
லலிதா
ஸஹஸ்ரநாமத்தில், ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்ம ரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி,
சம்ஹாரிணி, ருத்ர ரூபா, திரோதானகரீஸ்வரீ என்று அம்பாளை சொல்கிறோம். அவளே
படைக்கிறாள், அவளே தன் கருணையால் காக்கிறாள், பின் அவளே தான் அதே கருணையினால்,
அத்தனை உலகங்களையும் தன்னுள் லயமாக்கிக் கொள்கிறார். படைத்தல் காத்தல் ஒடுக்குதல்
தொழில் செய்யும் மூவருக்கும் ஆதார சக்தியாக இருக்கும் ப்ரஹ்ம ரூபிணி அவள் தான்
என்று அம்பாளே சொன்ன வாக்கு அல்லவா?
நஞ்சை உண்ணத்
தலைப்பட்டு, பின் அம்பிகையின் பெருங்கருணையால், அந்த நஞ்சை கண்டத்தில் அடக்கி
வைத்த காரணத்தால், கறைக் கண்டன் என்று பெயர் பெற்றார் சிவபெருமான். அப்படிப்பட்ட
சிவபெருமானுக்கு முன் தோன்றியவள் பராம்பிகை.
அம்பிகையின் உபாசனா
க்ரமத்தில், எல்லாவற்றிற்கும் முழுமுதல் காரணம் அவள் தான். அவள் அனுக்ரஹத்தில்
தான் ப்ரஹ்மா, விஷ்ணு சிவன் முதலான அத்தனை கடவுளர்களும் தோன்றினர். அதன்படி,
அம்பாள் தான் மூத்தவள் என்று சொல்கிறார்.
அப்படி மூத்தவளாய்
இருக்கும் அவளே தான் அவதாரம் செய்யும் போது, முகுந்தனுக்கு இளையவளும் ஆகிறாள்.
முகுந்தனோ மூப்பே இல்லாத எப்போதும் இளமையாக இருப்பவர் என்றும் சொல்கிறார்.
காலத்திற்கு
உட்படாதவள் என்று பொருள். அவள் எல்லா காலங்களிலும் இருப்பவள். காலஸ்வரூபமாகவும்
இருப்பவள். மூப்பும் இளமையும் காலக்குறியீடுகள். அதுமட்டும் அல்ல. மாற்றம்
இல்லாதவள் என்றும் பொருள்.
மாத்தவளே என்றால்,
மாபெரும் தவத்தை உடையவளே என்று பொருள். என்ன தவம் இருக்கும் அம்பாளுக்கு?
அவளைத்தானே எல்லோரும் தவம் செய்வார்கள் என்று கேட்டால், தன் குழந்தைகள் அத்தனையும்
பெருவாழ்வு வாழ ஒரு அன்னை எப்படி அவர்கள் நினைவாகவே காரியமாற்றுகிறாளோ அப்படி
ஈரேழு லோகங்களுக்கும் ஜெகன் மாதாவாக இருப்பவள், உலகன்னையும் தான் படைத்து
காத்துக்கொண்டிருக்கும் அனைத்து உயிர்களும் நலமாயிருக்க எண்ணும் எண்ணமானதே அவளது
தவம் என்று கொள்வது நன்று.
இப்படித் தன்
பிள்ளைகளின் மீது அளப்பரிய கருணை கொண்டிருக்கும் உன்னையன்றி மற்றுமோர் தெய்வத்தை
நான் வந்தனை செய்ய மாட்டேன் அம்மா என்று சொல்கிறார் பட்டர். நாமும் தானே! அன்னையை
விட்டு யாரைப் பற்றுவது? அவளே அனைத்துமாய், யாதுமாகி நிற்கிறாளே!!
.... கண்மணி
5/7/21
அபிராமி அந்தாதி --
15
வந்திப்பவர் உன்னை,
வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர்,
நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர்,
அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு
எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே (14)
உன்னையல்லால்
மற்றொரு தெய்வத்தை நான் தொழுவேனோ? என்றார் பட்டர் பெருமான். அதன் பின் அவருக்கு,
தான் தொழும் அந்த பெருமாட்டியைத் தொழுபவர்கள் எல்லாம் எப்பேர்ப்பட்டவர்கள் என்று
எண்ணம் உதிக்கிறது.
முன்னேயே, மனிதரும்
தேவரும் மாயா முனிவரும் தொழுதார்கள் என்றார். அதன் பின் கமலாலயன், மால், மதியுறும்
வேணியனும் வணங்கினர் என்றார். மீண்டும், அவளைத் தொழுபவர்கள் வானவர்கள் மட்டுமல்ல,
தானவர்களும் தான். தானவர்கள் என்றால் அசுரர்கள். அசுரர்களும் கூட அன்னயின் அருள்
வேண்டி தொழுது தானே ஆக வேண்டும்?
திசைமுகர் என்றால்,
நான்கு தலை உடைய ப்ரம்ம தேவர், அவருடன், நாராயணரும் அன்னையின் பராக்ரமங்களை சதா
சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிவபெருமானோ, அன்னையை, தன் சிந்தையில்
எப்போதும் ஆனந்த ரூபிணியாக, அழியாத அம்ருத ஸ்வரூபமாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்.
இப்படி வானவர்,
தானவர், திசைமுகர், நாரணர், அந்த ஈசனும் சேர்ந்து அவளை நினைத்துக் கொண்டே
இருந்தாலும், அற்பமான மானுடப்பிறவியில் பிறந்த இந்த உலக மக்களுக்கும் கூட, அவளது
அளப்பற்ற கருணையினால், அவளை சந்திப்பதை எளிதாக்குகிறாள் அவர் என்று சொல்கிறார்.
அவரது அனுபவம்
பேசுகிறது. ஆம்! எப்பேற்பட்ட தவஸ்ரேஷ்டர்களாலும், அன்னையை அத்தனை எளிதில் காண
முடியாது என்பது உண்மை என்றாலும், அழும் பிள்ளைக்கு பரிந்து பாலூட்டி இந்த
பூமிக்கு ஒரு ஞானசம்பத்தப்பெருமானை அருளினாள் அல்லவா? “பக்திப்ரியா பக்திகம்யா
பக்திவஶ்யா பயாபஹா” என்று அம்பாளை கொண்டாடுகிறோம் சஹஸ்ரநாமத்தில்.
பக்திக்கு
கட்டுப்படுவாள். பக்தியால், அவளை சந்திக்க அவள் சன்னிதி அடைவோருக்கு, அவளை
சந்திப்பது வெகு சுலபமே. அது ஏன் சுலபம், எளிதாம் என்று சொல்கிறார்? எளிதாக
இருப்பதற்கு அவளது தண்ணளி காரணம் என்று சொல்கிறார்.
அதாவது அவளது
அவ்யாஜ கருணை தான் அதற்கு காரணம். அவள் நினைப்பே குளுமை தருகிறது இந்த சம்சார
துக்கத்தில் இருக்கும் சாதகனுக்கு. வெயில் சகித்திடா புழு போல் இந்த உலக மாயையின்
சூடு தாங்காமல் வரும் பிள்ளையை ஆஸ்வாசப்படுத்துவதால் அவளது இடம் தண்ணளியே.
இங்கு அம்பாள்
தன்னை சிந்திப்பவர்கள் எத்தனை பெரிய நிலையில் இருக்கிறார்கள் என்று பார்க்காமல்,
பாமரர்க்கும் இரங்கும் பரம தயாபரி என்பதை சிலாகித்துச் சொல்கிறார் பட்டர்
பெருமான். அவளை வணங்க சாத்திரம் கற்று பண்டிதனாக வேண்டாம், புண்ணியம் செய்து
தேவனாகவும் வேண்டாம், தெய்வங்கள் ஆகவும் வேண்டாம். அவள் மீது மாற்றமில்லாத பேரன்பு
ஒன்று கொண்டிருந்தால் போதும் அது ஒன்றே அவள் கருணை கிட்ட வழி என்று கொள்ள
வேண்டும்.
.... கண்மணி
6/7/21
அபிராமி அந்தாதி --
16
தண்ணளிக்கு என்று,
முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும்
செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும்
செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல்
பரிமள யாமளைப் பைங்கிளியே (15)
அம்பிகையின் அளவற்ற
கருணை இந்த பூலோகத்தில் உள்ள அத்தனை பேருக்கும், அவளை அணுகிய மாத்திரத்தில்
கிடைக்கும் என்றார் இல்லையா?
ஒரு பெரிய ப்ரதம
மந்திரியாய் இருக்கிறவர், அவரைப்பார்க்க பெரிய பெரிய அதிகாரிகள், மற்ற நாட்டின்
சிறந்த அறிஞர்களெல்லாம் வந்து காத்திருந்தாலும், தன் மீது ப்ரியம் வைத்திருக்கும்
தன் மக்கள் வந்தால் எப்படி எல்லோரையும் விட்டு அவர்களுக்கு முக்கியத்துவம்
தருவார்? இப்போதுள்ள சூழ்னிலையில், ஒரு எடுத்துக்காட்டுக்காக சொன்னேன்.
அப்படித்தான், அம்பாளும், மிகச்சிறந்த ப்ரம்மாதி தேவர்களைக்கூட விட்டு, தன்
குழந்தைகளான நமக்கு அனுக்ரஹம் செய்கிறாள் என்று சொன்னார்.
அப்படியெல்லாம்
அனுக்ரஹம் செய்ய அம்பாளுக்கு காருண்யம் அதிகமாக இருப்பது ஒன்றும் அதிசயமில்லை.
ஏனென்றால், அவளது ஸ்வபாவமே கருணம்ருத சாகரம் தான். ஆனால் பெறுவதற்கு வருபவருக்கு
தகுதி இருக்க வேண்டுமே என்று தோன்றும் இல்லையா? அதனால் தான், தண்ணளிக்கென்று,
அதாவது அப்பேற்பட்ட கருணையை பெருவதற்கென்று ப்ரத்யேகமாக, முன்னே பல கோடி
ஜென்மங்கள் தவமியற்றியிருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
அம்பாளை நோக்கித்
தவம் இயற்ற வேண்டும் என்ற எண்ணமே அத்தனை சுலபத்தில் வராது. அது வருவதற்கே பல
ஜென்மாக்கள் தவம் செய்திருக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணம் வந்து தவமும் செய்பவர்
என்ன கேட்பார்? வெறும் மண்ணும் பொன்னும் மட்டுமா கேட்பார்?
இந்த பொன் நிலம்
மாதர் ஆகிய மூன்று ஏடணைகள் மனிதப்பிறவிக்கு ஒரு நாளும் நன்மை செய்யது அல்லவா?
அப்படி அழியக்கூடிய
பொருகளான, மண் முதலிய கீழ் நிலையில் உள்ள சுகங்களை நாட மாட்டார்கள். மாறாக, அந்த
பரா பட்டாரிகையின் அனுக்ரஹத்தை நாடி அழியாத முக்தி எனும் பேரின்ப பெருநிலையைத்
தானே அடைவார்கள்? இங்கு வானவர் தம் விண்ணளிக்கும் செல்வம் பெறுவார்கள் என்றார்.
அது ஸ்வர்க போகங்களை அடைவார்கள் என்று பொருள்படும்.
அம்பிகையை
உபாசிப்பதில், அவளது உண்மை ஸ்வரூபத்தை தெரிந்து கொண்டு, முக்திக்கான வழியை தகுந்த
குருவின் துணையோடு அறியவும் முடியும், அதே சமயத்தில், ஸ்வர்கம் வேண்டும் என்ற
இச்சையும் கொண்டு அடையவும் முடியும். ஆனால், அழியா முக்தி ஆனந்தம் என்று பின்னதைக்
குறிப்பிட்டதால், ஸ்வர்கம் புகும் இச்சை கூட, அழியக்கூடிய ஆனந்தமே தரும் என்று
கொள்க.
க்ஷீணே புண்யே
மர்த்ய லோகம் விஶந்தி என்று கீதையில் சொல்கிறார் அல்லவா? ஸ்வர்கம் போனாலும், அந்த
காலம் முடிந்த்தும் ஜீவன் மீண்டும் பிறந்து, தன்னைப்பற்றிய அறிவை தகுந்த குருவிடம்
பயின்று முக்தி அடைவதே அழியா முக்தி என்று சொன்னது.
அம்பாள் பேசினாலே இன்னிசையாய்
இருக்கிறதாம். ஒரு சமயம், அன்னை சரஸ்வதி தன்னுடைய வீணையை எடுத்து கானம் செய்தவளாய்
இருக்க, அன்னை பரமேஸ்வரியானவள், அவளுடை வீணையின் நாதம் நன்றாக இருக்கிறது என்று
ஒரு ஹூங்காரம் செய்ய, சரஸ்வதி தேவி, இந்த இனிமையான ஓசையின் முன் என்ன இசையை
இசைப்பேன் என்று வீணையை எடுத்து வைத்தாள் என்று சொல்வார்கள். இங்கு தாத்பர்யம்
வீணையை எடுத்து வைத்தது அல்ல, அம்பாளின் இனிமையான பேச்சு, வீணா நாதத்தை விஞ்சும்
விதமாக இருக்கிறது என்பது தான்.
அப்படி இனிமையான
சொற்கள் பேசும் அவளை "ஸ்வபாவ மதுரா" என்றழைக்கிறோம். அன்னை பரிமளையாய், ஸ்யாமளையாய் இருக்கிறாள்
அதாவது நறுமணம் மிக்கவளாக, அடர்ந்த பச்சை நிறத்தவளாக இருக்கிறாள் என்று பொருள்.
கிளி கொஞ்ச்சும் மொழியாளாக அவளை உருவகப்படுத்தி, கிளியே என்றே அன்போடு அழைக்கிறார்
பட்டர் பெருமான்.
.... கண்மணி
7/7/21
அபிராமி அந்தாதி --
17
கிளியே, கிளைஞர்
மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும்
ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல்
பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு
அளவிற்கு அளவானது அதிசயமே (16)
கிளிபோன்று
இனிமையாகப் பேசும் மொழியுடைய அன்னை, தன்னையே நினைத்துகொண்டிருக்கும் தன் பக்தர்கள்
மனதில், கிளர்ந்து கொண்டு இருக்கிறாள். கிளர்ந்து என்றால், தொடர்ந்து ஒவ்வொரு
எண்ணத்திலும் அவளே நிறைந்து இருப்பது என்று பொருள்.
அவள் எப்படி
கிளர்ந்து கொண்டிருக்கிறாள் என்றால், “ஒளிர்கிறாள்” என்கிறார். ஒளி ரூபமாக
இருக்கிறாள். ஒளி என்பது அறிவைக் குறிக்கும். ஞான அக்னியாக, ஞானச்சுடராக அன்பர்கள்
உள்ளத்தில் அவளே இருக்கிறாள். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இருந்து ஒளிர்ந்து
சாட்சிரூபமாக இருக்கும் ஆத்ம தத்துவமே அம்பாள். அவளை அம்பாள் என்று சொல்லும் போது
கொஞ்சம் சௌகர்யமாக இருக்கிறது புரிந்து கொள்ள. ஆனால், பேரறிவு அல்லது சைதன்யம்
எதுவோ அதுவே அவள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்பேரறிவு, ஒவ்வொரு
ஜீவனுக்குள்ளும் அறிவுச் சுடராக ஒளிர்ந்து கொண்டு அவற்றை இயக்குகிறது.
அதனால் தான்
ஒளிரும் ஒளிக்கும் இடம் அவள் தான் என்று சொல்கிறார். அம்பாள் மட்டுமே அதாவது
சைதன்யம் ஒன்றே எங்கும் நிறைந்து இருப்பது என்று வேதங்கள் உரைக்கும் பேருண்மை.
அப்படி எங்கும் நிறை பரப்ரம்ம்மாக அம்பாள் ஒவ்வொரு சாதகனின் உள்ளத்தில் அறிவு
ரூபமாக அறிவுக்கு அறிவு செய்யும் ஆதார ரூபமாக ஒளிக்கு ஒளியாக இருக்கிறாள்.
சரி அவளை ஆராய்ச்சி
பண்ணி புரிந்து கொண்டு விடலாம் என்று எண்ணி, ப்ரபஞ்சத்தில் இருக்கும்,
வெளிப்பட்டிருக்கும் அனைத்து தத்துவங்களையும், ஒன்றில் ஒன்று ஒடுக்கி அபவாதம்
செய்து பார்த்தால், பின் எஞ்சியதொன்றும் இல்லை, வெளியாக இருக்கிறாள் என்று
கூறுகிறார்.
இந்த ப்ரபஞ்ச
ஸ்ருஷ்டி, முதலில் ஒன்றும் வெளிப்படாத நிலையில் இருந்து, மாயையினால் மூன்று
குணங்கள் தோன்றி பின் அவற்றிலிருந்து பஞ்ச பூதங்களும், காரண உலகும், நுண் உலகும்
பரு உலகும் வெளி வந்தது என்று வேதங்களில் ஸ்ருஷ்டி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
அவ்வனைத்து
ஸ்ருஷ்டிகளுக்கும் ஆதாரம் ப்ரம்மம் ஒன்று தான். இங்கு அன்னையே அப்பரப்ப்ரம்மாக
பட்டர் சொல்கிறார். அப்படிப்பட்ட ஸ்ருஷ்டி மாயை என்று புரிந்து அதை எல்லாம் உண்மை
அல்ல என்று அறிந்து கொள்ள அத்யாரோபம், அபவாதம் என்றிரு வழிகள் உண்டு.
அவற்றில் அபவாத
வழியானது ஒவ்வொரு ஸ்ருஷ்டியையும் அதன் முந்தைய நிலையில் அதாவது அதனதன் காரண
நிலையில் ஒடுக்கிக் காண்பது. அப்படி ஒடுக்கினால் இறுதியாக ஒடுங்குவது வெளி என்று
சொல்லப்படும் ஆகாசம் தான்.
முன்னே கூட,
“வானந்தமான வடிவுடையாள்” என்று அன்னையை சொன்னதைப் பார்த்தோம். இங்கும் அப்படி
ஆராய்ச்சி செய்து, ஒடுக்கி காணும் போது “வெளி”யாகிறாள்.
அந்த வெளிமுதல்
அனைத்து பூதங்களும் அவளே ஆகிறாள், பின் இந்த ஸ்ருஷ்டி முழுவதும் அவளே நிறைந்து
இருக்கிறாள் என்பதெல்லாம் காண்கிறார் பட்டர் பெருமான்.
ஆனால் இப்படிக்
காண்பதெல்லாம் பெரிய விஷயமில்லை, அப்பேற்பட்ட மஹிமை உடைய அன்னையானவள், என் சிறிய
அறிவிற்கு புரியும் வண்ணம் என் அறிவின் அளவிற்கு தன்னை சுருக்கிக் கொண்டு எனக்கும்
உன்னைப் புரிய வைத்திருக்கிறாயே இதுவல்லவோ அதிசயம் என்று கேட்கிறார்.
இந்த காலத்தில்
எடுத்துக் கொண்டால், ஒரு அம்மா, வேலைக்கு செல்கிறாள், பற்பல அவதாரங்கள் எடுகிறாள்
வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம். பலதரப்பட்ட மனிதர்கள் சந்திப்பு,
ஒவ்வொருவருடன் ஒவ்வொரு விதமான பேச்சுகள், இப்படி என்ன தான் பெரிய பதவிகளில்
இருந்தாலும், அவளுடைய குழந்தைக்கு அவள் “அம்மா” என்ற ஒரே ஒரு முகத்தை மட்டும் தானே
காட்டுகிறாள்?
குழந்தைக்கு அவள்
எங்கெங்கு எப்படியெல்லாம் சாமர்த்தியமாக இருக்கிறாள் என்பதெல்லாம் தேவையின்றி, தன்
உண்மையான முகத்தை எப்படி குழந்தையின் அறிவில் நிலைக்க செய்கிறாளோ, அப்படி பரா
பட்டாரிகையான, அன்னையும், தன் பிள்ளையின் அறிவில் தன்னை உணர்த்துவது அவளது
கருணையினால் தானே! அது அதிசயமும் தானே!
.... கண்மணி
8/7/21
அபிராமி அந்தாதி --
18
அதிசயம் ஆன வடிவு
உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன
சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம்
ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ,
வாம பாகத்தை வவ்வியதே? 17
முன் சொன்னபடி,
அப்பேற்பட்ட பெருமை கொண்ட அம்பிகை, சாதகனின் அறிவில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது
அதிசயம் தான். அதனோடு, அந்த அன்னையின் வடிவு அதை விட அதிசயமாக இருக்கிறது
அவருக்கு. ஒரு நேரத்தில் சாந்தமே உருவாக இருக்கிறாள், ஒரு நேரத்தில் மஹிஷனை வதம்
செய்ய மஹா உக்ரமான ரூபத்தில் இருக்கிறாள். ஈஸ்வரனிடம், காமேஸ்வரியாக, அன்பின்
வடிவாக குழைந்து இருக்கிறாள். பிள்ளைகளுக்கு ஒரு விதமாக, தாயின் அனபும் கருணையும்
பொங்க இருக்கிறாள்.
அம்பாளின் எல்லா
ரூபங்களுமே அவள் மீது மாறாத அன்பு கொண்ட சாதகனுக்கு எப்போதும் அன்பும் கருணையும்
பொங்குவதாகத்தான் இருக்கும். அவள் தரும் தண்டமும் கருணை என்றே தோன்றும்.
இப்படி பேரழகோடு
இருக்கும் அன்னை, ஶ்யாமளா தண்டகத்தில், அவளது அழகைப்பார்த்து சந்திரன்,
முத்துக்கள், தாமரை மலர், கோவைப்பழம் இவையெல்லாம் கூட வெட்கப்படும் என்று
வர்ணிக்கிறார் அல்லவா காளிதாஸர்? அப்படி, அவள் அழகின் முன் தன்னை உயர்ந்த அழகான
பொருள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் தாமரை மலர் கூட வெட்கப்பட்டதாம்.
ஒவ்வொரு
பொருளுக்குள்ளும் அம்பிகையே சைதன்ய ரூபமாக இருக்கும் போது, ஒப்பீடுகள் எதற்கு?
அவளுடைய அழகே எல்லோரிலும் பரிமளிக்கிறது என்பது கருத்து. தனியாக இன்னொரு பொருள்
அழகு என்று சொல்வதற்கில்லை.
அப்படி அழகான தாமரை
மலரைப்போன்ற முகம் கொண்ட சுந்தரவல்லியாக இருப்பவள் என்றால், அழகான கொடிபோன்று
இருப்பவள் என்று பொருள். வல்லீ என்றால் கொடி என்று ஒரு பொருள். அவள் துணையான
ஈஸ்வரன் ஒரு முறை தவமியற்றிக்கொண்டு இருந்த சமயத்தில், அவரது தவ நிஷ்ட்டை கலைத்து
அவரை அன்னை உமையம்பிகையோடு இணைய வைத்தால் தான் குமார ஸம்பவம் நடக்கும், அசுரர்கள்
தொல்லையில் இருந்து தேவர்கள் காக்கப்படுவார்கள் என்ற காரணத்துக்காக, ரதி தேவியின்
கணவர் மன்மதன் தன் வேலையை அவரிடம் காட்டினார்.
காமன் என்பது
மன்மதனின் பெயர். காம: என்றால் ஆசை என்று பொருள். இச்சை என்று பொருள். ஒரு செயலை
செய்ய இச்சை கொள்ள வேண்டும். அம்பாளின் இச்சா சக்தி என்பது மன்மதனின் மூலம்
ஜீவர்களுக்கு சென்றடைகிறது. இச்சை என்பது கெடுதல் அல்ல. அது தர்மமாக இருக்கும்
வரை.
இங்கு ரதியின்
பதியான மன்மதன் செய்தது, ஈஸ்வரனை நிஷ்ட்டையில் இருந்து வெளிக்கொணரத்தான் என்றாலும்,
அவரது கடுங்கோபத்துக்கு ஆளாக நேரிட்டு, அதனால் மன்மதன் எரிக்கப்பட்டார். காமம்,
நல்ல பக்குவப்பட்ட மனத்தின் முன் எரிக்கப்படும் என்பது தான் உண்மை. அந்த வகையில்,
ஈஸ்வரனின் கண்களில் இருந்து தீப்பொறி பறந்து வந்து மன்மதனை எரித்தது.
அப்படிப்பட்ட
சூழலில், ரதியின் பதியாகிய மன்மதனின் செயலுக்கு வெற்றியானது கிட்டாது போனது
இல்லையா? (ஜெயம் என்றால் வெற்றி, அபஜெயம் என்றால் வெற்றி கிட்டாத நிலை. தோல்வி),
அப்போது அம்பாள், மன்மதனை எரிக்கும் விதமாக நெற்றிக்கண்ணால் பார்த்தவரான தன்
பதியின் மதியை செயித்தாள் என்று சொல்கிறார். எப்படி ஜெயித்தாள்?
அம்பாளின் குழைவான
அந்த அன்பின் வெளிப்பாட்டினால், ஈஸ்வரனுக்கு மன்மதனின் செய்கையின் காரணத்தையும்
அதன் அவசியத்தையும் உணரவைத்து, அதன் மூலம், அவரின் அன்பை ஜெயித்து அவரது உடலில்
தானும் ஒரு பாகமாக இருப்பதற்கு வழி பண்ணிக்கொண்டாள். வேடிக்கையாக சொல்வதுண்டு,
ஒருத்தியை தலையில் வைத்தார், ஒருத்தியை உடலின் ஒரு பாகமாக்கினார் ஈசன் என்று.
“காமேஸா மானஸா”
என்பது அம்பாளின் பெயர். காமேஸ்வர்ரின் மனசை வென்றவள் அவள். “ஹர நேத்ராக்னி
ஸந்தக்த காம சஞ்சீவ நௌஷத்யை” எனப்படும் ஒரு நாம்ம். ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணினால்
எரிக்கப்பட்ட காமனை தன் கெருணை என்ற மருந்தினால் உயிர்ப்பித்தாள்.
சரியான அணுகுமுறை
இல்லாவிட்டால் எந்த காரியமும் ஜெயிக்காது, அது நல்ல நோக்கமாக இருந்தாலும். அதே
சமயம், சரியான அணுகுமுறையால், பெரும் தீமையைக் கூட நன்மையாக ஆக்கலாம். இதுவே கற்க
வேண்டியது. அம்பாளை நாம் உற்று நோக்கி, அவளது அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று
அறிந்து கொள்ள வேண்டும். அவளுடை பராக்ரமத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டி, தணிய
வேண்டிய இடத்தில் தணிந்து, நமக்கு கற்றுத் தருகிறாள்.
.... கண்மணி
9/7/21
அபிராமி அந்தாதி --
19
வவ்விய பாகத்து
இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள்
திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து
என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன்
என்மேல் வரும்போது-வெளி நிற்கவே (18)
இறைவனின் அன்பைப்
பெறும் பொருட்டு, தன்னுடைய மேலான அன்பான வழியினால் அவரது நேசத்தைப்பெற்று, அவர்
உவந்து தனது இடப்பாகத்தை அருளியதால், அன்னையும் தந்தையும் இணைந்த உருவாய்,
அர்த்தநாரீ ஸ்வரூபமாக காட்சி தந்தார்கள் என்பது அறிவோம்.
சென்ற பாடலில், வாம
பாகத்தை அவள் பெற்றதை சிந்தித்து, இப்போது அந்த கோலத்தில் காட்சி கேட்கிறார்.
எப்போது வேண்டுமாம்? வெவ்விய காலன் வரும்போது. வெவ்விய என்றால், மிகுந்த கோபமுற்ற
என்று பொருள். பொதுவாக மரணதேவனை அச்சுறுத்தும் வடிவினனாக சித்தரிப்பதுண்டு
இல்லையா?
அச்சமயத்தில் அவர்,
இந்த உலக பந்தங்களில் இருந்து விடுவித்து உயிரைப் பிடுங்கிப் போவதால், அவர் கோபமாக
அதைச் செய்கிறார் என்று சொல்வது. கோபம் எதற்கு அவருக்கு? பெறுதற்கரிய மனிதப்பிறவி
தந்தும், நீ பந்த பாசங்களில் உழன்று, இறையுணராது, தன்னையறியாது, தவம் செய்யாது
பிறவியை வீணாக்கினாயே என்று கோபம் கொள்வாரோ? அது கூட பட்டர் பெருமானுக்கு
பொருந்தாது. அறியாமையில் உழன்றால் அப்படி வருவார் என்பது உணர்த்த
சொல்லியிருக்கலாம்.
அர்த்தநாரீஸ்வர
ரூபத்தில் காட்சி கேட்கிறாரே! அதை மட்டும் தனியாகக் கேட்கவில்லை. அதனோடு அன்னையும்
ஈசனும் கொள்ளும் திருமணக்கோலமும் கேட்கிறார். எங்கு? தன் சிந்தையில். எப்படிப்பட்ட
சிந்தையில்? அவ்வியம் தீர்த்த சிந்தையில். அவ்வியம் என்றால் ஆணவம். ஆணவ மலம்
நீங்காது இறையை உணர முடியாது.
நான், எனது என்னும்
பற்ற்றுப்பாருக்கு மட்டுமே அன்னையின் காட்சி கிடைக்கும் என்பது இதில் அறிவுரை.
பற்றுக பற்றற்றான்
பற்றை என்றார் வள்ளுவர். எதற்கு பற்ற வேண்டும்? அப்பற்றை விடர்க்கு பற்ற
வேண்டுமாம். (குறள் 350). அன்னையின் திருவடிகள் பற்றுவது எதற்கென்றால் மற்றெல்லா
பற்றையும் துறக்கவே.
இப்படி,
கொடுஞ்சினத்தோடு காலன் தன் மேல் வரும்போது, அதாவது மரண சமயத்தில், அன்னையும்
ஈசனும் அர்த்த நாரியாகவும், கல்யாண கோலத்துடனும் ஆணவங்கள் நீக்கிய
சுத்தமாக்கப்பட்ட தன் சிந்தையில் நிறைந்து இருக்க வேண்டும் எண்டுர் சொல்கிறார்.
அப்போதைக்கிப்போதே
சொல்லி வைத்தேன் என்றார் இல்லையா ஆழ்வார் அது போல, மரணத்தின்போது வேண்டிய
தரிசனத்துக்கு முன்னாலேயே பதிந்து வைத்து விட்டார். அவ்வியம் “தீர்த்து” என்று
சொல்வதன் மூலம், அவள் அருள் இருந்தால் தான் சிந்தனையின் அழுக்குகள் போகும் என்பது
வெளிச்சமாகிறது.
வெளி நிற்கவே என்று
சொன்னது, ஹ்ருதயத்தில் உள்ள ஆகாசத்தில் காட்சி தரக்கேட்பது. அம்பாளுக்கு “தஹராகாச
ரூபிணி” என்பதொரு பெயர். இங்கு சிவசக்த்யைக்ய ரூபிணி என்னும் நாம்மும் பொருந்தும்.
அந்தகாலே ச மாமேவ
ஸ்மரன் முக்த்வா கலேபரம்|
ய: ப்ரயாதி ஸ
மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய: || (8:5)
யம் யம் வாபி
ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே கலேபரம் |
தம் தமேவைதி
கௌந்தேய ஸதா தத் பாவ பாவித: || (8:6)
இந்த இரு
ஸ்லோகங்களில், க்ருஷ்ணர் அந்திம காலத்தில் எந்த நினைப்பில் இருக்கிறானோ அதுவே
அவனுக்கு கிடைக்கும் என்பதைக் கூறுகிறார்.
பட்டர் பெருமானோ
தூய முக்தர். அவர் அம்பாளே தன் சிந்தை முழுதும் நிறைந்திருக்க வேண்டும் என்று
வேண்டுகிறார். நமக்கும் அவ்வண்ணமே வேண்ட கற்றுத்தருகிறார்.
.... கண்மணி
10/7/21
அபிராமி அந்தாதி --
20
வெளிநின்ற நின்திருமேனியைப்
பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம்
கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம்
திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள்
ஒன்பதும் மேவி உறைபவளே (19)
அர்த்தநாரீ
ஸ்வரூபமாகவும், திருமணக்கோலத்திலும் அம்பாளை, தன் இதயத்தில் காண வேண்டும் என்று
கேட்டார் பட்டர் பெருமான். குழந்தை கேட்டால், அம்மா காட்சி தந்து தானே ஆக
வேண்டும்? அவளும் வெளி நின்றாள் என்கிறார் இந்த பாடலில். இதய வெளியில் அவளது
திருவுருவ தரிசனங்கள் கண்டதும் அவரது அகவிழியும் நெஞ்சமும் ஆன்ந்தக் கூத்தாடியது.
நமக்குப்பிடித்தவற்றைப்
பார்க்கும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது இல்லையா? அதிலும் எப்படி
கேட்டோமோ அப்படியே கிடைத்தால்? அது தான் பட்டரின் நிலை இப்போது. அவள் தாயை காண
ஆசைப்பட்டார். தந்தையுடன் காண. சேர்ந்து ஒரே உடலில், சேரும் திருமண கோலத்தில்.
இதை உடனே அருளிய
அன்னையின் கருணையினால் அவரது உள்ளம் பூரிப்படைந்தது. அந்த மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை என்பதை தான் கரைகண்டது இல்லை என்றார். சமுத்திரத்தின் இன்னொரு கரையைக் காண
இயலுமா? அது போல, இந்த உள்ளத்து உவகையின் பெருக்குக்கு கரை இல்லை.
அப்படி ஒரு ஆனந்த
அனுபவத்தில் அவருக்கு தெளிந்த ஞானம் திகழ்கிறது. அம்பாளின் அருள் இருந்தால் தான்
தெளிந்த ஞானம் என்பது கிட்டும். ஞானம் குருவின் மூலம், சாஸ்த்திரங்களின் துணையால்
கிடைக்கும் என்றாலும், அது, உலக வாழ்க்கையில் ஈடுபடும்போது பலவித மன மாசுகளால்,
குழப்பங்களால், தெளிவற்று இருக்கும். தொடர்ந்து நல்லோர் சேர்க்கையிலும், அறநூல்கள்
படிப்பதனாலும், குரு, ஈஸ்வர அனுக்ரஹத்தினாலும் தான் ஞானத்தெளிவு உண்டாகும்.
இங்கு பட்டர்,
மிகச் சிறந்த அம்பாள் உபாசகர். எப்போதும் அவளையே நினைத்து வேலைகள் செய்பவர். “தத்
சிந்தனம், தத் கதனம் அன்யோன்யத் தத் ப்ரபோதனம்” என்று க்ருஷ்ணர் சொன்னது போல, அவளே
நினைவாக, அவளே பேசுபொருளாக, அவளே வந்திக்கும் தெய்வமாக இருப்பதால், அவர் கேட்டு
அவளது காட்சியும் அவரது மனத்திரையில் ஜொலிப்பதால், உலகம் மறக்கிறது, ஆனந்தம் ஒன்றே
இருக்கிறது. ஆனந்த ஸ்வரூபமே ஞானம் என்று முன் பார்த்தோம் இல்லையா? சச்சிதானந்தம்
உள்ளே ஒளிர்கிறது. அது தான் ஞானம் திகழ்கிறது என்கிறார்.
என்ன திருவுளமோ?
என்று கேட்கும் விநயம் உற்று நோக்கத்தக்கது. அவரது முயற்சி இல்லாமல் இல்லை.
ஆயினும், அவளது திருவுள்ளம் இருப்பதால் தான் தன்னால் அவளது சிந்தனை செய்து
ஞானத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது. இதைக் குறிக்க, என்ன திருவுளமோ? என்று
சிலாகிக்கிறார்.
இப்போது அம்பாளின்
உறைவிடம் பற்றி சொல்கிறார். ஸ்ரீசக்ரத்தில் அம்பாள் இருக்கிறாள். அதில் நவ
ஆவரணங்கள் என்று உண்டு. நவ என்றால் ஒன்பது. ஆவரணம் என்றால் மறைப்பு, கோட்டை என்று
சொல்வர். இந்த நவ ஆவரணங்களை ஒன்பது கோணங்கள் கொண்ட வடிவமாக சக்கரத்தில்
எழுதியிருப்பர்.
இது தந்திர
சாஸ்த்திர முறைப்படி அம்பாளை வழிபடுவது. அப்படி அந்த ஒன்பது கோணங்கள் கொண்ட
சக்கரத்தில் அம்பாள் ஒவ்வொரு கோணத்திலும் தானே பல்வேறு வடிவங்கள் எடுத்து
உறைகிறாள்.
உபாசனையில் சகுண
உபாசனை நிர்குண உபாசனை என்று இரு வகையுண்டு. சகுண என்றால் உருவ வழிபாடு. நிர்குண
என்றால் அருவ வழிபாடு. அம்பாளின் உருவ வழிபாட்டில் ஸ்ரீசக்ர ரூபத்தில் அம்பாளை
இருப்பதாக செய்து ஆராதனை செய்வது மிகவும் விசேஷம்.
.... கண்மணி
11/7/21
அபிராமி அந்தாதி --
21
உறைகின்ற நின் திருக்கோயில்-நின்
கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான்
மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண்
திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற
வாரிதியோ?- பூரணாசல மங்கலையே (20)
கோயில் என்றால், கோ
இல். கோ இங்கு அம்பாள், அதாவது அவளே சகலத்திற்கும் அரசி. அவள் உறையும் இடம்,
இல்லம், கோயில் எது? என்று பட்டர் வினவுகிறார்.
அவருக்குத்
தெரியாமல் கேட்கவில்லை. ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது கோண்டங்களிலும் உறைகிறாள் என்று
சொன்னார் இல்லையா? அப்படி ஒரு இடத்தில் இருப்பவளாக அவளை அடக்கி விட முடியாது
என்பதால், இந்த பாடலில், இன்னும் அவள் இருக்கும் இடமாகத் தோன்றும் இடங்களை எல்லாம்
பட்டியல் இடுகிறார்.
முதலில், ஈசனின்
பாகமோ? என்பது. சந்தேகமே இல்லாமல், ஈஸ்வரனே தந்துவிட்ட பின், “வேயுறு தோளிப்
பங்கன்” என்று சொன்னதால், மூங்கில் போன்ற தோள்களையுடைய, அம்பாளை ஒரு பாகமாக,
பங்காகக் கொண்டவன் ஆனதால், அவரது “இடம்” அவளுக்குத் தான். கேள்வர் என்றது,
சரிசமமாக தோழைமையுடன் நடத்துவதால், அம்பாளின் தோழர் என்னும் பொருளில். நமக்கும்
அதுபோல் இருக்க வேண்டும் என்பது செய்தி இங்கு.
அதனோடு, அன்றாடம்
ஓதப்படும் நான்கு மறைகளின் ஆதியும் அந்தமும் அவளோ! என்னும் கேள்வி வருகிறது. சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பணிகொண்ட வேரும் என்றார் இல்லையா முன்னாலே? அவள் வேதங்களின்
தொடக்கமும் முடிவும் என்றால் என்ன? வேதம் சொல்லும் உண்மைப்பொருள் அவளே என்பது தான்
பொருள். ஒரு புத்தகம் எதைப்பற்றி பேசுகிறதோ, அதுவே அந்த புத்தகத்தின் முதலும்
முடிவும் இல்லையா? அது போல, தூய உணர்வினையே வேதம் எடுத்து ஓதுவதால், அம்பாளே தூய
உணர்வாக, எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறாள்.
அன்றி, அவள்,
அமுதம் பொழியும் வெண்நிலவோ என்று ரசனையோடு கேட்கிறார். பௌர்ணமியில் அம்பாளை
நிலவில் த்யானம் செய்வது மிகவும் உகந்தது. கஞ்சமோ என்றால், தாமரை மலரோ என்று
பொருள். தாமரை மலராக அம்பாள் இருப்பாளோ? என்று கேட்கிறார்.
ஓ இத்தனை வெளியில்
சுற்றி நீ இதுவா? நீ அதுவா? என்றெல்லாம் கேட்டேன், என் நெஞ்சில் நிறைந்தவளான உன்னை
என் நெஞ்சத்தோடு ஒப்பிடவில்லையே, என் நெஞ்சகமோ? என்றும் கேட்கிறார்.
வாரிதி என்றால் பார்க்கடல்.
பார்க்கடலில் நிறைய செல்வங்கள் மறைந்து இருக்கின்றன. அதனால் தானே அதை கடைந்தார்கள்
தேவரும் அசுரரும்? அப்படி எல்லாவற்றையும் தன்னுள் கொண்டுள்ள பாற்கடலாக இருப்பாயோ?
இப்படியெல்லாம்
கேட்டு, அவள் வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி அனைத்துமாகி, அனைத்திலுமாகி
நிற்கும் பேருணர்வு என்பதால், பூரணமே என்று கேட்டு, அந்த பூரணம், அசல மங்கலையாகி
இருப்பதைக் குறிக்கிறார். அசல என்றால் அசையாத என்று பொருள். அசையாதது மலை. அசலம்
என்றால் மலை. மலை மங்கலை. மங்கலை என்றால் எல்லா மங்களங்களும் அருள்பவள். மலை மகள்,
பார்வதி தேவியைத் தான் குறிக்கிறார்.
அம்மாவை எப்படி
எப்படியெல்லாம் எங்கெங்கெல்லாம் ஒப்பிட்டு ஆராதிக்க வேண்டும் என்பது குழந்தையின்
அன்பையும் அதன் கற்பனைத் திறனையும் பொருத்தது. பட்டர், நன்கு கற்றறிந்த குழந்தை.
அன்னையை அத்தனின் பாதியோ? மறையோ, வெண்ணிலவோ? தாமரையோ? பாற்கடலோ, தன் நெஞ்சமோ?
பூரணமோ என்று சொல்லி, அவள் மலைமகள் என்றும் கூறுகிறார் இந்த பாடலில்.
“சிவசக்த்யைக்ய
ரூபிணி”, “ஸர்வ வேதாந்த ஸம்வேத்யா”, “சர்த்சந்த்ர நிபாந்நா”, “பத்மாஸநா”, “ஸாகர
மேகலா”, “ஸச்சிதான்ந்த ரூபிணி”, “மலையாசல வாஸிநீ” போன்ற நாமங்களை இந்த பாடலில்
சிந்திக்கலாம்.
.... கண்மணி
12/7/21
அபிராமி அந்தாதி --
22
மங்கலை, செங்கலசம்
முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச்
சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும்
புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி,
செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே (21)
பூரணியாகிய
மலைமகளின் ரூப வர்ணனை செய்து மாளவில்லை பட்டருக்கு. அம்மாவை குழந்தை வர்ணிக்காமல்
வேறு யார் வர்ணிப்பார். மிக நெருங்கிய குழந்தை தான் முழுமையாக அம்மாவை
வர்ணிக்கவும் முடியும். கணவர் வர்ணிக்கலாம். அதற்கு அடுத்த வாய்ப்பு குழந்தைக்குத்
தான். மங்கலை என்றாள் மங்கலம் தருபவள். மங்கலமாகவே இருப்பவள். சஹஸ்ரநாமத்தில்,
“சுமங்கலி” என்று அழைக்கிறோம் அவளை. நல்ல மங்கலம் தருபவள் என்று பொருள்.
“சங்கரனார் மனை மங்கலமாம்” என்று இவரே சொல்லப்போகிறார்.
செங்கலசம் முலையாள்
என்று அம்மாவின் கருணை பொங்கும் ஸ்தனங்களை வர்ணிக்கிறார். கலசம் போன்று உள்ளதாம்.
மலையரசனுக்கு மகளானதால் மலைமகள் என்று சொல்லலாம். அவள் கைகளில் வெண்சங்கு
வளையணிந்து இருக்கிறாளாம். அந்த வளையை வருணன் அளித்தார் என்றும் சொல்லுவதுண்டு ஒரு
புராணத்தில். அணிந்த கைகள் செம்மையான நிறத்தில் உள்ளது என்று சொல்கிறார். அனைத்து
கலைகளுக்கும் ஆதாரமான அன்னை, சகல கலாமயில் என்று வர்ணிக்கிறார். மயில் அழகின்
குறியீடு. கலைகள் யாவுமே ஒரு அழகு தான் இல்லையா? அனைத்து கலைகளிலும் தேர்ந்தவள்
ஆதலால் சகல கலா மயிலானாள்.
பகீரதரின்
தவத்திற்கு இரங்கி, பூலோகத்துக்கு பொங்கிப் ப்ரவாகமாக வந்த, தாவி வந்த அந்த கங்கா
மாதாவின் வேகம் பூமாதா தாங்க மாட்டாள் என்பதை அறிந்த ஈசனின் பெருங்கருணையினால்,
அந்த தாவி வந்த கங்கையை, பொங்கி வந்தவளைத் தாங்கிய ஈசனின் மேலெழுப்பி முடிந்து
கொண்ட சடையினில் அவள் தங்கிவிட்டாள்.
அன்றி அப்படியே
விட்டிருந்தால், பூமிப்பந்து மூழ்கியிருக்கும். அப்படிப்பட்ட பராக்கிரமம் மிக்க
சடையோன் ஈசன். அவருடைய ஒரு பாகத்தை தன் அன்பினால் வென்றவள் அன்னை அபிராமி. புரி
என்றால் முறுக்கு என்றொரு பொருள். முறுக்கிகட்டப்பட்ட சடையோன் புரிசடையோன்.
பஞ்சவர்ணம்
கொண்டவளாக அம்பாளை தரிசிக்கிறார் பட்டர் பெருமான். பிங்கலை என்றால் பொன்னிறமுடையவள்.
நம் உடலில் ஏழு
சக்கரங்கள் உள்ளது. இதில் ஆறு சக்கரங்களில் அம்பாளை வைத்து த்யானிப்பது ஒரு முறை.
இங்கு பிங்கலை
என்பது அம்பாளை பொன்னிறமாக, ஆறு இதழ் கொண்ட தாமரையின் மீது காகினி என்று
கூறப்படும் ரூபத்தில் த்யானிக்கும் ஒரு உருவம். அவளை “பீதவர்ணா” என்று ஒரு
நாமத்தால் அழைக்கிறோம். “பீத” என்றால் நல்ல பொன் மஞ்சள் நிறம்.
நீலி என்பது
அம்பாளை மூலாதாரத்தில் ஐந்து முகத்தோடு நான்கு இதழ் தாமரையில் த்யானிக்கும் சாகினி
என்ற நாமத்தோடு இருக்கும் ஒரு ரூபம்.
செய்யாள் என்பது
திருமகளின் சக்தியோடு, டாகினி, லாகினி என்ற நாமங்களோடு கூடிய ஒரு ரூபம். சிவந்த
மேனி அவளுக்கு.
வெளியாள் என்பது
ஆக்ஞா சக்கரத்தில், ஹாகினி என்ற ரூப நாமத்தோடு கலைமகளின் சக்தியோடு, ஈரிதழ்
தாமரையில் ஆறு முகங்களோடு “ஶுக்ல வர்ணா ஷடானனா” என்று சொல்கிறோமே, அப்படி வெண்மை
நிறத்தோடு இருக்கிறாள்.
பொன் நிறம், கருநீல
நிறம், செம்மை நிறம், வெண்மை நிறம், இறுதியாக பச்சைவர்ணத்தில் கொடிபோன்று
இருக்கிறாள் அம்பிகை என்று வர்ணிக்கிறார்.
இந்த த்யானங்கள்
எல்லாமே, நம் உடலில் ஒவ்வொரு சக்கரத்திலும் அன்னையை நினைத்து, அவளுக்கு ஒரு
உருவம், நிறம் எல்லாம் கொடுத்து, அவளை ஆராதித்து, அதன் மூலம், இந்த அலைபாயும்
மனதுக்கு விஷயமாக அவளையே கொடுப்பதற்குத் தான்.
யாரோ ஒரு வெள்ளை,
பச்சை, நீல வண்ணத்தில் இருப்பவர்களையெல்லாம் நினைத்து, “எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி
எண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகிப் போனதே” என்று தாயுமானவர் சொன்னது போல, எதையெல்லாமோ
நினைக்காது, உடல் இயக்கம் அனைத்திலும் அவளே இருக்கிறாள் என்று நினைக்க நல்ல
வாய்ப்பு. பயன் படுத்துவோம்.
.... கண்மணி
13/7/21
அபிராமி அந்தாதி --
23
கொடியே, இளவஞ்சிக்
கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின்
பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன்
முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து
இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே (22)
ஒவ்வொரு
சாதகனுக்கும் இருக்கும் உண்மையான மனநிலையை சொல்வதன் மூலம், நமக்கெல்லாம் இருக்கும்
துயரங்களைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை, ஏனென்றால், அப்பேற்பட்ட அபிராமி
பட்டருக்கே இந்த மாதிரி சிந்தனை இருந்ததால், பிறவித் துன்பம் என்பது பொதுவானதே
என்று நாம் ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளலாம் இப்போது. ஏன்?
முந்தைய பாடலில்,
காலன் கொடுங்கோபத்தோடு என் மேல் வரும் போது நீ வந்து என் ஆணவமலம் நீக்கி என்
சிந்தையில் காட்சி தர வேண்டும் என்று வேண்டினார் இல்லையா?
இப்போது, அவளை
மேலும் ஆர்வமான சொற்களால் புகழ்ந்து, இறைஞ்சுகிறார். கொடி போன்றிருப்பவளே, இளம்
வஞ்சிக்கொடிக்கு உவமானமாக உன்னைச் சொல்லாம், நீ என்ன செய்கிறாய்? எனக்கு அருள்
செய்கிறாய். எப்படிப்பட்ட எனக்கு? வம்பே பழுத்த படி இருக்கும் எனக்கு.
வம்பே பழுத்த என்றால்,
பழுத்தது போல் இருப்பது. அதாவது, உருவத்தால் பக்குவப்பட்டவர் போல இருந்தாலும்,
அவர் உண்மையில் அன்னையின் அன்பு கிடைக்கும் அளவுக்குப் பக்குவப்படவில்லை என்று
தன்னை தானே சொல்லிக்கொள்கிறார். அப்படிப்பட்ட எனக்கு, தானே வந்து தயவு செய்தாயே
என்று அவளது கருணையைப் புகழ்கிறார்.
நானேயோ தவம்
செய்தேன், அருள் செய்தான், தவம் செய்தேன், தவம் செய்தேன், அருள் செய்தான் என்று
தேனாய், இன்னமுதமுமாய் இருக்கிறான் என்று சிவபெருமானைக் கொண்டாடுவாரே மாணிக்க
வாசகர், அது போல அம்பாள் இவர் பக்குவம் இருப்பது போல இருப்பதற்கே அருள் செய்தாள்
என்று சொல்கிறார்.
எப்படி அருள்
செய்வாள்? அவள் வஜ்ரக்ரீடமும், பட்டு ஆபரணமும் அணிந்து ஒரு உருவம் கொண்டு வந்தால்
நம்பவா போகிறோம்? அவள் அருள் செய்வது, மறைகள் என்று சொல்லும் வேதங்களின்
கருத்துக்கள் மூலமாக. வேதகருத்துக்கள் தகுந்த குருவின் மூலம் அறியப்படும் போது,
சாதகனின் உள்ளம் குளிரும். ஒரு இனிய சுகந்தமான நிஸ்சலனமான உணர்வு வரும். அதனால்
தான் மறையினால் சுகந்தம் தரும் அவளை மறையின் பரிமளமே என்று அழைக்கிறார்.
பனி பொழியும் இமய
மலையில் ஒரு அழகிய பெண் யானையினைப்போல கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் தாய்
என்று வர்ணிக்கிறாள். பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, என்றால், நாம் முன்னே
பார்த்தோம். அவள் பூத்தவள். இந்த புவனம் பதினான்கினையும் பூத்தவள், பூத்தவண்ணம்
காத்தவள், காத்து கரப்பவள் என்று.
தாயாக,
ஜெகன்மாதாவாக ஸ்ரீமாத்ரே என்ற முதல் நாமத்திலேயே அவளது முழுமுதல் குணமும் வெளியானதால்,
அவள் அத்தனைக்கும் தாய் தானே! ஆதலால், தேவருக்கும், பிரமன் முதலாய தேவருக்கும்
தாயே!
காலன் வரும்போது
என்ன நினைக்கிறோமோ அதுவாகும் வாய்பு உண்டாகும் என்று சென்ற 18வது ஸ்லோகத்தின்
இறுதியில் கீதையில் சொன்னதை சொன்னேன் இல்லையா? இப்போது அன்னை காலன் வரும்போது வர
வேண்டும் என்று கேட்டார். இந்த பாடலில், நீயே என்னை ஆண்டு கொள் என்று சரணடைகிறார்.
எதற்கு ஆள
வேண்டுமாம்? இனி பிறவாது இருக்க, நீயே என்னை ஆண்டு கொள் என்று கேட்கிறார். யாரால்
தர முடியும் பிறவா வரம். அன்னையினால் மட்டுமே. நம் கர்மத்தளைகள் கணக்கில் அடங்கா.
அவற்றை பிறந்து இறந்து தீர்த்துக் கொண்டே இருந்தால், அதற்கொரு முடிவே இல்லை.
அம்பாளை
சரணடைந்தால் மட்டுமே அவளது உதவி பெற்றால் மட்டுமே, குருவைத் தந்து, மேலான ஆத்ம
ஞானத்தைத் தந்து, தன்னையுணர்த்தி, தன்னில் நம்மையுணர்த்தி, பின் நம்மில்
தன்னையுணர்த்தி, இருப்பதெல்லாம் ஒன்றே பேருணர்வே என்று அறிவிப்பாள். அதற்குத்தான்,
நீ என்னை ஆண்டு கொண்டு இனி பிறவாதிருக்க வையம்மா என்று இறைஞ்சுகிறார்.
“மோக்ஷ்ப்ரதாயினி”,
அன்னை.
.... கண்மணி
14-7-21
அபிராமி அந்தாதி --
24
கொள்ளேன், மனத்தில்
நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம்
விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே,
அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே,
களிக்குங்களியே, அளிய என் கண்மணியே (23)
ஆண்டு கொள் என்று
அம்பாளை அழைத்துவிட்டு, நான் புறவுலக நாட்டங்களிலோ அல்லது வேறு சமயச்சிந்தனைகளிலோ
ஈடுபடுவேனா? மாட்டேன் என்று அம்மாவிடம் உறுதி கூறுகிறார் இங்கு.
யாராவது ஒரு அதிதி
நம் வீட்டுக்கு அழைக்கப்பட்டு வந்தாலே, நாம் அவருக்காக அவர் நினைவாகவே அவருக்கு
வேண்டியதெல்லாம் செய்து வைத்து அன்போடு காத்திருப்பதில்லையா?
மானுடருக்கே இத்தனை
மரியாதை என்றால், ஜெகன்மாதாவை, தன் இதய ஆகாசத்தில், சிந்தையில் வந்து நின்று என்னை
ஆண்டு கொள், அப்போது தான் காலன் வரும் போது நீ என்னைக்காத்து இனி
பிறவாதிருக்கச்செய்வாய் என்று கேட்டுவிட்டு, தான் அப்படிக்கேட்டதற்கு, அதற்கு
தகுதியும் ஆவேன் என்று சொல்கிற மாதிரி இருக்கிறது பட்டர் பேசுவது.
கொள்ளேன் மனத்தில்,
நின் கோலம் அல்லாது என்னும்போது, அவருடைய சிந்தையில் இடையறாது அவள் ஒருவளே
நிறைந்திருப்பாள் என்று தானே அர்த்தம்? இது சாத்தியமா? அதெல்லாம் ஞானிகள்
சமாச்சாரம், நாம பண்ண முடியாது என்று எண்ணத் தோன்றும். அப்படி இல்லை.
பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்த அந்த இறைவனை, ஒரு பொருளில், ஒரு மனிதரில் ஒரு
சிலையில் ஏற்றிப்பார்ப்பானேன்?
எல்லாம் அவள் தான்.
"காக்கை
குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்கும் திசையெல்லாம்
நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்" என்றாரே பாரதியார், அது என்ன? இந்த
இறைக்காட்சி தான் அது. தானே இறையென்றுணர்ந்த பேரறிவின் பெருநிலை.
பகவான் தன்னை
எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்று கீதையில் கூறுகிறார்? “ஸூத்ரே மணி கணா இவ”
என்று சொன்னார். சூத்திரம் என்றால் மெல்லிய நூல். மணிகள் கோர்த்த சூத்திரம் எப்படி
வெளியில் தெரியாதோ, அனால் சூத்திரத்தால் கோர்க்கப்படாத மணிகள் மாலையாகாது என்பது
எப்படி உண்மையோ அப்படி படைப்பின் ஒவ்வொன்றிலும் நானே இருக்கிறேன் என்றாரே. அதனால்,
அம்பாளை படைப்பிலிருந்து வேறு படுத்திப்பார்க்காமல், அவளே எல்லாம் என்று பார்க்க
வேண்டும்.
அன்பர் கூட்டம்
தன்னை விள்ளேன் என்றார். ஆம். விண்டு சென்றால் என்ன ஆகும், இந்த தரிசனம், போகும்.
உலக மாயை தயாராக நிற்கும், இவன் எப்போது சத்சங்கம் விடுவான், நாம்
பற்றிக்கொள்ளலாம் என்று. அதனால் அதற்கு பயந்தே, சத்சங்கம் விட மாட்டேன் என்று
சொல்கிறார்.
பரசமயம் விரும்பேன்
என்றால், ஒவ்வொருவர் சொல்லும் போதும் ஒவ்வொரு விதமான வழிபாடுகள் நன்றாக இருப்பது
போல தோற்றம் அளித்து மாயையில் மயக்கமுறச் செய்யும். அப்படி பலவிதமான சமயவழிகளை
நாடாது, அன்னையே எல்லாமுமாகப்பார்ப்பதால் எனக்கு வேறு சமயங்களில் நாட்டமில்லை
என்று சொல்கிறார்.
முதலில் சொன்ன
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது வேறொன்றை என்பதையே அடுத்த வரிகளில், அவள்,
உள்ளும் புறமும் அதாவது, தன்னுள்ளும், தனக்கு புறமான உலகிலும், நிறைந்து
இருப்பதால் என்று நமக்குப் புரியவைக்கிறார்.
இப்படியெல்லாம்
பார்த்தபின் என்ன உண்டாகும்? பாரதியார் சொன்னாரே, நோக்க நோக்க களியாட்டம். அது
தான் ஆகும். பட்டர் உள்ளத்தே விளைந்த கள்ளே என்றும் களிப்புக்கு காரணமானவள் அவளே
என்றும் அந்த களிக்கும் உள்ளத்ஹ்டில் களிப்பதும் அவளே என்றும் ஆனந்தக்
கூத்தாடுகிறார்.
உன்மத்தன் என்ற
நிலையே அவரது நிலை. இது ஒரு வரம். வராது அவ்வளவு லேசில். இந்த நிலையில்,
பார்ப்பதெல்லாம் உபாசனா தெய்வமாகவும், பார்க்கும் உள்ளம் பூராவும் அந்த தெய்வமே
நிறைந்தும், அதனால் ஆனந்தப் பெருக்கும் நிறைந்து இருக்கும்.
அளிய என் கண்மணியே
என்று சொல்கிறார். எளியவனான எனக்கு இத்தனை அனுக்ரஹம் பண்ணிய கண்மணியே என்று
அம்பாளைக் கொஞ்சி மகிழ்கிறார். “ஸ்வாத்மான்ந்த லவிபூத ப்ரஹ்மாத்யான்ந்த ஸந்ததி:”
என்ற அம்பாளின் நாமம் உற்று நோக்கி உணரத்தக்கது
.... கண்மணி
15/7/21
அபிராமி அந்தாதி --
25
மணியே, மணியின்
ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும்
அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு
மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை
நின் பத்ம பாதம் பணிந்தபின்னே (24)
அம்பிகையைத் தவிர
வேறு ஒரு தெய்வம் வந்திக்க மாட்டேன், வேறு ஒரு சமயம் விரும்ப மாட்டேன், அவளைத்
தொழும் அன்பர் கூட்டத்தை விட்டு விலக மாட்டேன் என்றெல்லாம் தொழுது ஏத்தி, அவளை
நன்மொழிகளால் மேலும் கொஞ்சுகிறார்.
இந்த பாடல்
ஒவ்வொன்றிலும், அம்மா, என்னைப் பார், உன் அழகுக் கண்கள், உன் அழகு கழுத்து, அழகு
சிரிப்பு என்று சிறு குழந்தை கரங்களைத் தாயின் கழுத்தில் மாலைபோல் போட்டு பிஞ்சு
விரல்களால் வருடி விளையாடுமே அந்த பாவனை தான் எனக்குத் தோன்றுகிறது.
மணியே என்றால்
மாணிக்க மணிகள். சிவந்த மாணிக்கம் போன்ற நிறத்தை உடையவள் என்று எப்போதும் அவளை
அழைப்பார் அல்லவா? இங்கும் மணியே, என்றும், அம்மணியின் ப்ரகாசமும் அவளே என்று
மணியின் ஒளியே என்றும் சொல்கிறார். ஒவ்வொரு பொருளின் ஆற்றலும் நானே என்றார் அல்லவா
பகவான் கீதையில் விபூதி யோகத்தில்? இவரும் மாணிக்கத்தின் ஒளி அவள் என்று கூறுவது
அது ஒற்றித் தான்.
மணி புனைந்த அணி
என்று அந்த மணிகளை க்ஷண நேரத்தில் கோர்த்து அம்பாளுக்கு ஒரு ஹாரம் பண்ணிவிட்டார்.
மணிகள் கோர்த்த ஹாரத்தால் அம்பாளுக்கு அழகா? அம்பாள் அணிந்ததால் ஹாரத்துக்கு அழகா?
அணியும் அணிக்குத் தான் அவளால் அழகாம்.
இந்த காலத்தில்,
அந்த ராணி போட்டது, இந்த நடிகை போட்டது என்றெல்லாம் ஏலம் எடுத்து பெருமையாகப்
போட்டுக்கொள்கிறார்கள் இல்லையா? நகையைப் போட்டவர்கள் நகைக்கு பெருமை
சேர்ப்பார்கள். அம்பாளே போட்டால்? அது அந்த நகைக்கே பெருமை சேர்க்காதா? அதனால்
அணிக்கு அழகு சேர்ந்தது.
அவளை
நினைத்தவர்களுக்கு அம்ருத நிலை கிடைக்கும் என்பது திண்ணம். அப்படி அணுகாதவர்க்கு
என்ன கிடைக்கும்? அணுகாதவர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள்? இந்த மாயா உலகம்
உண்மை என்று நம்பி அதில் உழன்று சிறு இச்சைகளின் பின் சென்று நேரத்தையும்
பிறவியையும் வீணடிப்பார்கள். இல்லையா? அப்படி உழன்றால் என்ன ஆகும்? மீண்டும்
மீண்டும் பிறந்து இறந்து இந்த சுழலில் சிக்கித் தவிக்க வேண்டியது தான்.
பிணிகளிலேயே பெரும்
பிணி பிறவிப்பிணி தான். அதனால் தான் அவளை அணுகவில்லை என்றால் பிணி வரும் என்று
எச்சரிக்கிறார். அணுகியவர் பிணி தீர்ப்பதால் தான் அவளை “ஸர்வ வ்யாதிப்ரசமனா” என்று
சொல்கிறொம் சஹஸ்ரநாமத்தில்.
அணுகினால் அம்ருதத்
தன்மை கிடைக்கும் என்று பார்த்தோம். 15வது பாடலில், அவளை பல கோடி
ஜென்மத்தவங்களுக்குப்பின் அடைந்தவர்கள் வேண்டிப்பெறுவது அழியா முக்தி வீடு என்றார்
அல்லவா?
அழியா முக்தி வீடு
என்றால் அம்ருதமான நிலை. ம்ருதம் என்றால் மரணம். அம்ருதம் என்றால் மரணமற்ற
பெருவாழ்வு என்று பொருள். அமரர்கள் என்றால் அப்படி மரணமற்ற பெருவாழ்வு
பெற்றவர்கள். அந்த அமர நிலையில் இருக்கும் அவளது பக்தர்களுக்கு அவள் சிந்தனை ஒன்றே
பெரு விருந்து என்று சொல்கிறார்.
விருந்து என்றால்
புதுமை என்றும் ஒரு பொருள் உண்டு. அதன் படி, ஒவ்வொன்றிலும் அவள் புதியது போல்
எப்போதும் தோன்றுவதால், அழிவே இல்லாதவளாக இருப்பதால், பெரும் புதுமை அவள் தான்
என்றும் கொள்ள இடம் உண்டு.
மீண்டும் அன்னையிடம்
உறுதி சொல்கிறார். உன் தாமரை மலர் போன்ற பாதங்களைப் பணிந்த பின் வேறு யாரையும்
பணிய மாட்டேன் அம்மா என்று. ஆணவமா? என்றால் இல்லை. அனைத்தும் அவளுள் அடங்கி
இருக்க, இன்னொன்று எதற்கு என்று தான்.
.... கண்மணி
16/7/21
அபிராமி அந்தாதி --
26
பின்னே திரிந்து,
உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள்
முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு
அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை
யான் மறவாமல் நின்று ஏத்துவனே (25)
சென்ற பாடலில்,
பிணிக்கு மருந்தே! என்று அவளை விளித்ததால், இன்னும் ஆழமாக, அவள் எப்படி தன்
பிறவிப்பிணிக்கு மருந்தாகினாள் என்று சொல்ல நினைத்தார் போலும்.
ஒரு மோக்ஷ
சாதகனுக்கு, மோக்ஷத்தை அடைய குருவை அணுகி சாஸ்த்திரங்கள் கற்று அந்த சாஸ்த்திர
விஷயங்களையே சதா சிந்தித்து, அது சம்பத்தப்பட்ட சத்சங்கங்களிலேயே உழன்று இருப்பது
தான் மோக்ஷ ஞானம் நன்கு நிலைபெற வழி.
பக்திமார்கத்திலும்
கூட, நல்லோர் இணக்கம் மிக மிக முக்கியமான ஒரு விஷயம். இந்த உலகியல் வாழ்விலேயே,
ஒவ்வொருவரும் அவரவர் படித்த துறை, அல்லது வேலை பார்க்கும் துறை சார்ந்தவர்களுடன்
தானே எந்த தயக்கமும் இன்றி பேசி விஷயங்கள் பகிர்ந்து கொள்ள முடிகிறது?
நிலையற்ற இந்த உலக
விவகாரங்களுக்கே இரு பொருந்தும் என்றால், என்றும் அழியாத முக்தி ஆனந்தமே என்று
அம்பாளைக்குறிப்பிட்டாரே அவளை, அவளது மேன்மைகளை, தனியாக சிந்திப்பதோடு, அவளையே
துதிக்கும் அடியார்க்கூட்டத்தில் இருந்து, அந்த அடியார்களுக்கு அடியாராக தொண்டு
செய்து, அவள் புகழையும், அருளையும் கொண்டாடிக்கொண்டு இருப்பது பெரும் பேறு அல்லவா?
அதன் பெரும் பயன்,
இந்த பிறப்பு இறப்பு சுழலே நீங்கும் என்று சொல்கிறார். அவ்வளவு பெரிய பேறு பெற,
அவர், முன் பல ஜென்மங்களில் தவம் இயற்றி, இருக்கிறேன் என்று சொல்கிறார்.
முயன்று கொண்டேன்
என்று சொல்வதில் இருந்து இந்த செயல், முயற்சி செய்தால் வரும் என்று தெரிகிறது.
எந்த செயல்? அடியாரைப்பேணுதலும், அவர் பின்னே திரிவதும். திரிவது என்றால், தீராத
தாகத்தோடு, அவள் குறித்த செய்திகளையே சிந்தித்தும், பேசிக்கொண்டும் இருப்பது.
அப்படி அவளைக்குறித்துப்
பேச அவள் பெருமையோ, அவள் மூவருக்கும் முதலாக இருப்பவள் என்பதும் ஒரு காரணமாம்.
லலிதாம்பாளின் உற்பத்தி கதையில் பார்க்கிறோம், அன்னை தான் லலிதா திரிபுரசுந்தரியாக
இருந்து, சகல தேவதைகளையும் உற்பத்தி செய்கிறாள் என்று. மூவா முகுந்தனுக்கு
மூத்தவள் என்று முன்னே சொன்னார். இங்கு மூவருக்குமே அவளே அன்னையாக விளங்குகிறாள்
என்று சொல்வது, அவளே ஜெகன் மாதா என்று சொல்லியதால், அவளே இவ்வுலகனைத்தையும்
பூத்தவள் என்பதால். சகலருக்கும் அவளே அன்னை ஆனதால், மூவருக்குமே அவள் அன்னையாம்.
சரி, மூவருக்கு
அன்னை, உலக மக்களுக்கு, போன பாடலிலேயே சொன்னார், அவள் பிணிக்கு மருந்தாவாள் என்று.
இங்கு அவள் அருமருந்து என்று சொல்கிறார். வெறும் மருந்து வ்யாதி மட்டும் போக்கும்.
திரும்ப இன்னொரு வ்யாதி வரும்போது மீண்டும் மருந்து தேவைப்படும். ஆனால் இவளோ
“அரு”மருந்து. அரிய மருந்து. இனி பிறவாமை என்னும் அரிய வரம் தந்து காக்கும்
அருமருந்து.
அப்படி இருக்கும்
உன்னை, நான் இனி மறவாமல் புகழ்ந்து வாழ்த்தி வணங்கிக்கொண்டிருப்பேன், அதற்கு
எனக்கு என்ன குறை உண்டு? என்று கேட்கிறார்.
பட்டரின் மனோநிலை
நமக்கு அவரது சரித்திரத்தில் இருந்து தெரியும். காணும் யாவையிலும் அபிராமியைக்
கண்டு, உள்ளும் புறமும் அவளே நிறைந்தவர் அவர்.
அவரே, இனி உன்னை
மறவாமல் நின்று ஏத்துவேன் என்றும், இன்னும் ஒவ்வொரு பாடலிலும், தான் அன்னையைத்
தவிர மற்றொரு தெய்வத்தை வந்திக்கிலேன் என்றும், உன் அடியாரை விட்டு விலக மாட்டேன்
என்று ஏன் சொல்ல வேண்டும்?
இந்த மஹா மாயையின்
சக்தி அப்படி. “ஞானினாமபி சேத்தாம்ஸி தேவி பகவதி ஹி ஸா” என்று துர்கா சப்த
ஸ்லோகியில் சொல்கிறார். அப்படி என்றால், ஞானிகளைக்கூட இந்த மாயைவிடாது, மஹா
மோகத்தில் ஆட்படுத்தும். கீதையில் க்ருஷ்ணர் ஏழாவது அத்யாயத்தில் “மம மாயா
துரத்ய்யா” என்று சொல்வதும், என்னுடைய மாயையைக் கடப்பது அரிது அர்ஜுனா என்று
சொல்வதும் உற்று நோக்கத்தக்கன.
மிகச்சுலபமாக, இந்த கர்ம பந்தங்கள் எனும் குழுயில் விழச்செய்து மாட்டிவிட்டுவிடும் இந்த மஹா மாயை. அதனால் தான் மாயையை மஹா மோஹ க்ராஹ என்று சொல்வார்கள். க்ராஹ என்றால் முதலை என்று பொருள். முதலை எவ்வாறு கவ்வினால் விடாதோ அவ்வாறு இந்த மாயையானது பிடித்தால் ஞானிகளும் கூட அவஸ்தை பட வேண்டும். அதனால் தான் மீண்டும் மீண்டும் உன்னை விட மாட்டேன் என்று சொல்வது. Auto Suggestion.
நமக்கும் அதுவே
செய்தி. அடியார் கூட்டமும் அன்னையின் நினைவுமன்றி வேறு ஒன்றும் வேண்டாதிருப்போம்.
.... கண்மணி
17/7/21
அபிராமி அந்தாதி --
27
ஏத்தும் அடியவர்,
ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும்
திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல்
அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு
புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே (26)
உன்னை மறவாது
ஏத்துவேன், புகழ்வேன், தொழுவேன் என்றெல்லாம் சொன்னவர், தன் பால் அன்னை கொண்ட அருளை
எண்ணி வியந்து, தன்னோடு இன்னும் யார் அவளை ஏத்துகிறார் என்று சொல்லி, வியக்கிறார்.
சென்ற பாடலில்,
அன்னையை மூவருக்கும் அன்னை என்றார் இல்லையா? எந்த மூவர் சாதாரண தொழில்
செய்யவில்லை. அவர்கள் தான் இந்த உலகை படைத்து காத்து ஒடுக்கும் பெரும் தொழில்களை
முறையே, ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்னும் மூவரும் செய்கிறார்கள். இவர்களுக்கும்
அன்னை அபிராமியாகிய அந்த பராம்பாள் தான். அவர்கள் அன்னையைத் தொழாமலா இருப்பார்கள்?
தான் தொழும் அன்னை, மூவராலும் தொழப்படுகிறாள் என்பது விஷயம். பெருமை பிள்ளைக்கு.
அவர்கள் தொழும்
அந்த மஹாபராசக்தியான பரமேஸ்வரியானவள்,
நல்ல கடம்ப மலர்கள் தொடுத்த மாலையை சாற்றிக்கொண்டுள்ள அழகிய மணம் கொண்ட கூந்தலுடன்
இருக்கிறாள். “கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ண பூர மனோஹரா”, “கடம்ப வன வாசினீ”,
காதம்பரீப்ரியா, என்பதெல்லாம் அவள் அயிரம் நாமங்களில் சில.
அப்படி, கடம்ப மலர்
சாற்றிய மணம்வீசும் குழல் கொண்ட அணங்கே, அழகானவளே, என்று அவளை அழைத்து, உன்
தாள்களையே என் சிந்தையில் கொண்டு நான் பேசும் சொற்களைக்கூட ஏற்றுக் கொள்கின்றாயே
இது எனக்கே சற்று நகைப்பாக இருக்கிறது அம்மா என்று அவளிடம் வாஞ்ச்சையோடு
சொல்கிறார்.
பிள்ளை மொழிகள்
தாய்க்கு எப்படி இருக்கும்? தத்து பித்து என்று உளறினால் கூட, அவள் அதற்கு ஒரு
பதவுரை பொழிப்புரை சொல்லிப் பெருமைப்படுவாள் இல்லையா? இந்த உலகியல் தாய்க்கே
அத்தனை பெருமை பிள்ளையை பற்றி இருந்தால், உலகன்னைக்கு, தன் பிள்ளை தன்னிடம்
ஆத்மார்த்தமாக பேசும் இது போன்ற மொழிகள், பிள்ளையைப் பொருத்தவரை புன் மொழிகள்
அதாவது அத்தனை அர்த்தம் பொதிந்த சொற்களாக இல்லாது போனாலும், தாய்க்கு அவை
ரசிக்கக்கூடியவையே.
இங்கு புன்மொழிகள்
என்று அவர், விநயத்தோடு சொல்கிறார். அவருக்கு இருந்த ஞானத்துக்கு, அவருடைய
நிலைக்கு, அவர், அன்னையின் முன் தான் ஒன்றும் இல்லை, தனக்கு அவளிடம் பேசுவது ஒன்று
தான் பெரிய விஷயம், அதில் அந்த சொற்கள் செம்மைப்படுத்தப்பட்டவையா, அல்லது சாதாரண
சொற்களா என்றெல்லாம் பார்த்து பேசுவதில்லை என்பதால் புன்மொழிகள் என்றார்.
தன்னையே நகைப்பது
என்பது, தனக்கு அவள் செய்த கருணையை வியந்து ஆனந்தப்படுவது. ஒரு சொல் என்றாலும்,
அவள் அருளின்றி பேசிவிட முடியுமா? மூகனுக்கு பேச வரவில்லையே! அவள் அருளும்வரை.
காளிதாஸருக்கு சொல் வரவில்லையே அவள் வாயில் எச்சிலால் அனுக்ரஹம் செய்யும் வரை!
அதனால், அவள் விபூதியே நாம் பேசுவதும் செயல்படுவதும் சிந்திப்பதும் என்று
கொள்ளவேண்டும்.
“அஹமாத்மா குடாகேச
ஸர்வபூதாசய-ஸ்த்தித: |
அஹமாதிச்ச மத்யஞ்ச
பூதானாம் அந்த ஏவ ச ||
என்றார் க்ருஷ்ணர்
விபூதி யோகத்தில். ஒவ்வொரு சக்தியும் இறைவன் விபூதி தான். எல்லாம் அவளுடைய
ப்ரசாதம் என்று ஏற்றுக்கொள்வது தான் விவயம்.
தான் பேசுவது
புன்மொழிகளாக இருந்தாலும் அதை புகழ் மொழிகளாக்கும் அன்னையின் பெருங்கருணை எண்ணி
வியந்து, தனக்குக் கிடைத்த பாக்யத்தை நகைத்து அனுபவிக்கிறார் பட்டர் பெருமான்.
நாம் எங்கு எப்போது
நன்றாகப்பேசினாலும், எழுதினாலும், சிந்தித்தாலும், அது அன்னையின் கொடை என்று அவள்
அருளை எண்ணியிருப்பது நமக்கு செய்தி.
.... கண்மணி
18/7/21
அபிராமி அந்தாதி --
28
உடைத்தனை வஞ்சப்
பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம
பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து
அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,-
சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே (27)
அம்பிகையின்
அருளுக்குப் பாத்திரமான, தனது செம்மைப்படுத்தப்படாத சொற்களைகூட ஏற்றுக்கொள்ளும்
அவளது கருணையை எண்ணி தன்னையே பார்த்து நகைத்தார் சென்ற பாடலில். இல்லையா? இன்னும்
அவளது அருளை எண்ணி வியக்கிறார்.
வஞ்சப் பிறவியை
உடைத்தாள் அம்பாள் என்கிறார். பிறவி என்பதே நமக்கு எஞ்சிய வினைகளின் காரணமாகத்தான்
என்கிறது சாஸ்த்திரம். அப்படி வினைகள் ஏன் எஞ்சுகின்றன? நாம் அவற்றை முழுதும்
தீர்க்காததால். முழுதும் தீரக்க எப்போது முடியும்?
நாம் நம்மைப்பற்றிய
உண்மையான அறிவைத் தகுந்த குருவின் துணையோடு, சாஸ்த்திரங்கள் துணையோடு, இந்த மனித
உடலுக்குள் உறையும் உயிர் (ஜீவன்), தொடர்பு கொள்ளும் இந்த உலகம் (ஜகத்), அருளும்
இறைசக்தி (ஈஸ்வரன்) இம்மூன்றுக்குமான தொடர்பு என்ன? இம்மூன்றும் எப்படி ஒன்று என்று
சாஸ்த்திரம் சொல்கிறது என்று புரிந்து தன்னில் தான் இன்புற்று இருப்பது தான் பிறவி
தீர வழி. சுருக்கமாக, முக்தி நிலை. முக்தி என்றால் விடுதலை. எதிலிருந்து விடுதலை?
இந்த பிறவிச்சுழலில் இருந்து விடுதலை. வினைகளை அனுபவிப்பதில் இருந்து விடுதலை.
இந்த மேலான செயலை, செய்ய
விடாது தடுக்கும் நம் மனத்தில் உள்ள காம, க்ரோத, லோப, மோஹ, மத மாஸ்சர்யம் என்னும்
ஆறு பகைவர்கள் நமக்கு அகப்பகைவர்களாக, எப்போதும் உடன் இருப்பார்கள். இவை தான் மன
அழுக்குகளுக்கு முதற்காரணம். அவற்றின் வஞ்சத்தால் தான் மீண்டும் பிறவி வருகிறது.
வஞ்சம் என்றாலே, நல்லது போலகாட்டி கெடுதல் செய்வது தானே!.
இந்த வஞ்சம் நமது
உள்ளேயே நடக்கிறது. அதை அம்பாள் உடைத்து எறிகிறாள். எப்படி உடைத்தாளாம்? அவளிடம்
பக்தி பெருகி, அன்பினால் உள்ளம் என்னும் பாறையை உருகச் செய்தாள் என்கிறார்.
அம்பாளைப் பற்றி
அறிந்தால் தானே அவளிடம் அன்பு கொள்ள முடியும். “உறவுக்கோல் நட்டு
உணர்வுக்கயிற்றினால் முறுக வாங்கிக்கடைய முன்னிற்குமே” என்று இறைவனை அறிதலைப்
பற்றி அப்பர் ஸ்வாமிகள் சொன்னாரில்லையா? அப்படி, இங்கும் அம்பாளை அறிந்ததால், அவள்
அன்பின் மிகுதியால், அவரது உள்ளம் உருகியது.
அந்த அன்பு கூட,
அவராகவே வரவழைக்கவில்லை. அவளருளாலே, அவள் தாளைப்ப்பற்றினார் என்னும் விதமாக,
படைத்தனை என்று சொல்கிறார். உள்ளம் உருகும் அன்பு கூட அவள் தான் ஏற்படுத்துகிறாள்.
எப்படி அவள் அதைச் செய்தாள்?
அனுக்ஷணமும், அவளது
திருவடித்தாமரைகளிலேயே மனம் லயித்து இருக்கச் செய்து, அப்படி அவர் லயித்து, உலகம்
மறந்து இருந்து, தன்னைச்சுற்றி என்ன இருக்கிறது என்பதே தெரியாததால், அவற்றின் மீது
கொள்ளக்கூடிய, காமமோ, அது நிறைவேறாததால் கோபமோ, தனக்கென வைத்துக்கொள்ளும் லோபமோ,
அதன் மீது மோஹமோ, தன்னுடையது என்று கொள்ளும் மதமோ, அது பிறருடையது போல இருக்கிறதா
என்று பார்க்கும் மாஸ்சர்யமோ கொள்ளாது, சதா, அவள் தாமரைப்பாதங்களையே நினப்பதால்,
இந்த ஆறு பகைவர்கள் உள்ளத்தை அழுக்காக்க முடியவில்லை.
அவள் பாதங்களின்
மீது எண்ணம் என்னும் தூய நீரால், ஏற்கெனவே இருந்த அழுக்குகள் அனைத்தும்
“துடைத்தனை” என்று சொல்வதன் மூலம், அவளது ப்ரத்யேக கருணை ஒன்று தான் அவரது இத்தனை
தீவிர பக்தி நிலைக்கும் காரணம் என்று பரிபூரண சரணாகதி அடைகிறார்.
இப்படிஎல்லாம், என்
உள்ளத்தைத் “துடைத்து”, உன்னிரு பதங்களிலேயே என் உள்ளத்தை “அடைத்து” அதற்கு
ஏற்றபடி என் உள்ளத்தை உன் மீது அன்பு பூணும்படி “படைத்து", தொடரும் என்
பிறவித்தளையை “உடைத்து”, இப்படியெல்லாம் எனக்கு அருள் செய்யும் அழகே வடிவான
சுந்தரியே, உன் அருளின் அழகை என்னவென்று சொல்லுவேன்? என்று வியக்கிறார்.
நாம் தான் நமக்கான
பிறவியின் தளைகளை உடைத்து பிறவி தீர்க்க பாடு பட வேண்டும். ஆனால், அதைச் செய்ய
இறைவனுடைய அனுக்ரஹம் மிக மிக முக்கியம். இங்கு எந்த விதமாக, ஒரு சாதகனுக்கு
அம்பாள் அருள்கிறார், அவள் அருள் என்பது எத்தனை அறிவுபூர்வமாக
சொல்லப்பட்டிருக்கிறது என்பது பார்க்கத்தக்கது. மாயா மந்திர ஜாலங்கள் எதுவும்
இல்லை. நம் அன்பு அன்னையிடம் எத்தனை தீவிரமோ அவள் கருணையும் அத்தனை தீவிரம்.
“கற்பகமரம், கனல்
புனல் மூன்றும் தனை அடைந்தவர் வறுமையும் தாகமும் சீதமும் தீர்த்து அருளும்,
அடைந்தவர்க்கு அருள் செய்வான், அகன்றவர்க்கு அருள் செய்யான்” என்று கைவல்ய
நவனீதத்தில் ஈஸ்வரனின் கருணை பற்றி சொல்லியிருக்கிறது.
“பக்த சௌபாக்ய
தாயினி”, “புருஷார்த்தப்ரதா”, “கைவல்யபத தாயினீ”, “பவரோகக்னீ”,
பவசக்ர-ப்ரவர்த்தினீ”, என்றெல்லாம் சொல்லும் நாமங்களை சிந்தித்து, நாம் அவளிடம்
என்றும் மாறாத அன்பு பூணுவோம். அவள் நன்மை அளித்துக்காப்பாள்.
.... கண்மணி
19/7/21
அபிராமி அந்தாதி --
29
சொல்லும் பொருளும்
என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப்
பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும்
தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும்
தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே (28)
அம்பிகையின்
பேரருளால், உள்ளத்து அழுக்கெல்லாம் நீங்கப்பெற்று அவளை உள்ளே கண்டு களிக்கிறார் பட்டர்
பெருமான்.
அவள் உள்ளே
எப்படியெல்லாம் காட்சி தருகிறாள் என்பது விவரிக்கிறார். தனியாக இல்லை அவள்.
துணைவருடன் இருக்கிறாள். இவர் தானே முன்னே 18வது பாடலில், திருமணக்கோலத்தில் வா,
ஈசனிடப்பாகம் கொண்ட அர்த்தநாரீயாக வா என்றெல்லாம் அழைத்தார்? எப்படி குழந்தை அழைத்ததோ
அப்படியே தானே வருவாள்?
“வாகர்த்தாவிவ
ஸ்ம்ப்ருத்தௌ, வாகர்த்தப் ப்ரதிபத்தயே’ என்று சொல்லும் பொருளும் பிரிக்க முடியாது,
அது போல இருக்கும், “ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ” உலகன்னையும் தந்தையுமான
பார்வதியையும் பரமேஸ்வரரையும் வணங்குகிறேன் என்றார் இல்லையா மஹாகவி காளிதாசர்?
அது போல, சொல்லும்
பொருளும் என, இணைந்து, பிரிக்க முடியாத, விதமாக, அம்மையும் அப்பனும் இணைந்து
நடனமாடுகிறார்கள். ஒரு பொருளை நம் மனது அறிய வேண்டும் என்றால், வெறும் சொல்,
மனதுக்கு அப்பொருளின் அர்த்தத்தை தராது.
வடிவம்
தெரிந்திருந்தால் தான் நமக்கு அச்சொல்லின் உண்மை பொருள் புரியும். “பானை” என்ற
சொல்லே அறிவைத்தராது. “பானை” என்ற வடிவம் மனதில் பதிவாகி இருந்தால் தான் “பானை”
என்றவுடன் புரியும். இல்லாவிட்டால், புரியவில்லையே என்று தான் சொல்வோம். சொல்லும்
பொருளும் பிரிக்க முடியாதவை என்பதற்காகச் சொன்னேன்.
அப்படிப்பிரிக்க
முடியாத சொல்லும் பொருளும் போல, துணைவருடன் நடமாடும் அவள், எப்படி இருக்கிறாள்?
(அவள் நமாடும் இடம் சாதகனின் உள்ளம் என்பது கவனத்தில் இருக்க வேண்டும்) புல்லும்
பரிமளப் பூங்கொடியாய் இருக்கிறாள். ஒன்றி, இரண்டற்ற அத்வைத ஸ்வரூபமாக, அவளை அவரிடத்தினின்று
பிரித்துப்பார்க்க முடியாத, பரிமள சுகந்தத்தோடு கூடிய ஒரு கொடி போன்று
பின்னிப்பிணைந்து காணப்படுகிறாள்.
பரமேஸ்வரனை சத்
என்றும் அம்பாளை சித் சக்தி என்றும் சொல்வதுண்டு. சத் என்றால் இருப்பு நிலை. சித்
என்றால் செயல் நிலை. இருப்பும் செயலும் இணைந்தால் தான் இயக்கம். இந்த உலகம்
இயங்குவது நடராஜ தத்துவம். அவ்வாறு நடமாடும் ஈசனின் உள்ளே சக்தி இருந்து இந்த உலக
விவகாரங்களை நடத்துகிறாள்.
இப்படி
சர்வேஸ்வரியாக, சர்வசக்திப்ரசமனீ யாக இருக்கும் அவளது திருவடித் தாமரைகள், புது
மலர்த்தாள் என்று சொல்கிறார். புது மலர்த் தாள் என்றால், எப்போதும் புதியது போன்று
இருக்கிறது. அவள் விகாரம் அற்றவள், மாற்றமற்றவள் என்று பார்க்கிறோம்
சஹஸ்ரநாமத்தில். “நிர்விகாரா” என்று. மாற்றம் இல்லாத ஒரு பொருள், தேய்மானமற்று
இருப்பதால் எப்போதும் புதியது போலத்தானே இருக்கும்?
அந்த புது
மலர்த்தாளை அல்லும் பகலும் தொழுபவர்க்கு அழியா அரசு, செல்லும் தவ நெறி, சிவலோகம்
சித்திக்கும் என்று சொல்கிறார்.
அம்பாளின் பாதங்கள்
வேதத்தின் கர்ம, ஞான காண்டத்தைக் குறிக்கும் என்று முன்னே பார்த்தோம். கர்ம
காண்டம் முழுதும், உபாசனா காண்டத்துடன் சேர்த்து, அவள் கருணையால், அவனுடைய
புத்தியில் தெளிவான அறிவாகக் கிடைத்த ஒரு சாதகனுக்கு, ஶ்ரத்தையுடன் அவன்
கர்மங்களைச் செய்வதால், அரும் பெரும் பலன்களான, ஸ்வர்க, மற்றும் இதர ஆனந்த
லோகங்கள் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறது.
அது மட்டும் அல்ல,
அவன் மேலும் அம்பாளை நன்கு உபாசனை செய்வதால், ஞான காண்டத்தின் பலனான மோக்ஷத்தை
பெறுவான். அழியா அரசு என்றால் என்ன? அழியா மோக்ஷ சாம்ராஜ்யம் தான் அது. அம்ருத
நிலை அடைவான் என்று முன்னே பார்த்தோமே, அந்த அழிவற்ற தற்பதம் சித்திக்கும். அது
பெறத்தக்க தவநெறிகளும் சித்திக்கும் என்று சொல்கிறார்.
இவையெல்லாம் அவர்
படித்துவிட்டு சொன்னாரா? இல்லை. அனுபவத்தைச் சொன்னார். மஹான்களின் அனுபவங்கள்
கேட்கும் போது நமக்கும் ஒரு உற்சாகம் வரும். அன்னையின் அன்பை அடைவது சுலபமே என்று.
அவளை அல்லும் பகலும் தொழுவோம்
கண்மணி
20/7/21
அபிராமி அந்தாதி --
30
சித்தியும் சித்தி
தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி
தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும்,
முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும்,
புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே (29)
அம்பாளை
நினைப்பவனுக்கு, தொழுபவனுக்கு மோக்ஷ சாம்ராஜ்யம் சித்திக்கும் என்று சொன்னார்.
சிவலோகம் கேட்டால் அதுவும்கிடைக்கும் என்றார் சென்ற பாடலில்.
இங்கு அம்பாள்
எவ்விதம் அந்த அருளை செய்கிறாள் என்றும் சொல்ல முற்படுகிறார். அம்பாளை வழிபடும்
யாவர்க்கும் (உண்மையான அன்போடு தவநெறி வழுவாமல் விதிப்படி அவளைப்
பூஜிப்பவர்களுக்கு) அஷ்டமா சித்திகளும் அவள் தருவாள் என்று சொல்கிறார். அணிமா,
லகிமா, கரிமா, மஹிமா, ப்ராந்தி, ப்ரகாயம் ஈசத்வம், வசித்வம் இவை அஷ்டமா சித்திகள்.
இவை சரியாக
உபயோகப்படுத்தப்பட வேண்டிய அரிய ஆற்றல்கள். இந்த அரிய சித்திகள் தரும் தெய்வம்
அந்த பராசக்தி என்று சொல்கிறார். “பராசக்தி” என்று அம்பாளின் சஹஸ்ர நாமத்தில்
ஒன்று. பரா என்றால் மேலான. மேலான சக்தி பொருந்தியவள். அவளுக்கு மேல் இன்னொரு சக்தி
இல்லை. அதனால் பரா சக்தி.
அந்த சக்தி அவள்
மட்டும் வைத்திருக்கிறாளா என்றால் இல்லை. அவள் சக்தி தழைப்பது அவள் சேர்ந்தே
எப்போதும் இருக்கும் பரமசிவனின் அருளாலும் தான். சக்தியும் சிவனும் சேர்ந்தே
இயங்கும் தத்துவங்கள். உலகத்தில் இருப்பும் இயக்கமும் பிரிக்கமுடியாதவை.
“சிவசக்த்யைக்யாயை”
என்று தானே அவளை அழைக்கிறோம். “மஹா சித்தி:”, “சித்தேஸ்வரி” என்றும் அவளை
அழைக்கிறோம். சித்திகளுக்கெல்லாம் ஈஸ்வரி, மஹா பெரிய சித்திகள் வைத்திருப்பவள்
அவள். பரமசிவனுடன், இருப்புத்தத்துவத்துடன் இருக்கிறாள்.
என்ன தருவாள்?
சேர்ந்து இருந்து? தவம் முயல்வாருக்கு முக்தி தருவாள். இதிலிருந்து முயலாமல்
கிடைக்காது முக்தி என்று தெரிகிறது. முயற்சி செய்பவருக்கு, தன் மெய், வாய், விழி,
ஊறு, ஓசை என்னும் ஐவாயையும் கட்டி, விருப்பு வெறுப்புகள் களைந்து, அறுபகைவர்களை
வென்று, முறையாக அன்னையைத் துதித்து, முயன்றால், முக்தி தருவாள். முக்தி என்றால்
விடுதலை. எதிலிருந்து விடுதலை? இந்த பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் இருந்து
விடுதலை.
முக்திக்கு வித்து
என்னவென்றால், மேல் சொன்ன சாதனைகள் தான்.
“சாதகம் இன்றி
ஒன்றை சாதிப்பார் உலகில் இல்லை” என்றார் கைவல்ய நவநீதத்தில் தாண்டவராய ஸ்வாமிகள்.
சாதகம் பண்ண வேண்டும். அது தான் வித்து முக்திக்கு. அதற்கே அவள் அருள் வேண்டும்.
அப்படி வித்திட்டு,
இந்த புத்தியை சாதகம் செய்து செம்மைப்படுத்தி சத்சங்கத்தில் இருக்கும் சாதகனுடைய
புத்தியில் தான் மோக்ஷத்தைப்பற்றி குரு உபதேசிக்கும் சொற்கள், வெறும் சொற்களாக
இருக்காது ஞானமாக, அறிவாக மாறும்.
“மனம் வெளுக்க
வழியில்லையே எங்கள் முத்து மாரியம்மா” என்றார் பாரதியார். மனம் வெளுத்து, சுத்தமாக்கி,
அங்கு அம்பாளைப்பற்றியும் சாஸ்த்திரம் உண்மைப்பொருளை எப்படிச் சொல்கிறது என்பதை
பற்றியும் புரிந்து கொள்ள நிறைய உழைக்க வேண்டும். அதைத்தான் தவம் முயல்வாருக்கு
முக்தி தருவாள் என்றார்.
புத்தியில், உள்ளே
புரக்கும் என்று சொல்கிறார். புத்தியில் தான் அறிவு புலப்படும். “தானே எங்குமாம்
ப்ரம்மம் என்பால் கவருடைப்புவனமெல்லாம் கற்பிதம்” என்று கைவல்ய நவநீதம் சொல்கிறது.
அந்த விஷயங்கள் புரிய வைப்பாள்.
புரக்கும் புரத்தை
என்றது. அம்பாளின் திரிபுர சிந்தரி என்னும் நாமத்தின் சுருக்கமாக, புரத்தை என்று
பெண்பாலில் புரம் என்ற சொல்லைக் குறிப்பிட்டதாம். திரிபுரம் என்றால், முப்புரம்.
மூன்று மலங்கள். ஆணவம், கன்மம் மாயை. அன்னை இந்த மூன்றையும் தகர்த்து அதில் ஆட்சி
செய்வாள். அவளைத் துதிப்பவர்களின் புத்தியில் அவள் இந்த மூன்று குணங்களையும்
நீக்குவதன் மூலம், முக்திக்கு வித்தாகும் புத்தி ஞானத்தை அருளி, முயற்சி
செய்பவருக்கு முக்தி அருள்வாள் என்பது திண்ணம் என்று சொல்கிறார்.
எப்போதுமே,
பகவானிடம் என்ன வேண்ட வேண்டும் என்பதை நாம் இப்படி அடியார்களைப்பார்த்து தெரிந்து
கொள்ள வேண்டும். அன்றி நாமாகப் போனால், எனக்கு இன்னும் ஒரு வீடு தா, கார் தா,
என்று அழியும் பொருட்களை வேண்டி விரும்பி கேட்டு வருவோம். மஹான்கள்
கற்றுத்தருகிறார்கள் என்ன கேட்பது என்று.
முக்தியே
வேண்டுவோம்.
.... கண்மணி
21/7/21
அபிராமி அந்தாதி --
31
அன்றே தடுத்து
என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி
நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும்,
கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே,
அருவே, என் உமையவளே (30)
அம்பிகையை
உள்ளத்தில் கொண்டோர்க்கு சித்திகள் மட்டும் இன்றி புத்தியில் தெளிவும்,
அத்தெளிவினால் முக்தியும் ஏற்படும் என்று பாடினார். பாடியபின், தன்னை நோக்குகிறார்.
இந்த தன் நிலைக்கு, அவளை உணர்ந்த நிலைக்கு காரணம், அவள் அருள் தானே!, அதை ஒரு
க்ஷணமேனும் அவள் நிறுத்தினால் என்னவாகும் என்று சிந்திக்கிறார் போலும்.
சொல்லப்போனால்,
அவருக்கு அப்படி ஒரு எண்ணம் என்பது அல்ல, நமக்கு, சாதகனாய் இருக்கும்
அனைவருக்கும், அவள் அருள் தொடர்ந்து இருப்பதன் முக்கியத்துவம் உணர்த்துவது தான்
நோக்கம் என்றே கொள்ளல் நலம்.
அன்னை வெகு காலம்
முன்னே (அன்றே) தடுத்து ஆட்கொண்டாளாம். என்றே? நாம் முன்னே பார்த்தோம், இந்த
உபாசனையின் ஆரம்பம், இந்த பிறவியாகவும் இருக்கலாம், தொடர்ந்து பல பிறவிகளாகவும்
இருக்கலாம். காலத்தின் நிர்ணயம் சொல்லவே முடியாது. எத்தனையோ பிறவிகளின்
புண்யத்தால் தான் இன்று ஒரு நாமம் காதில் விழும் அது நாமம் என்றும் அதன்
மஹத்துவமும் கூடப் புரியும் என்று மஹான்கள் சொல்கிறார்கள். அதனால் தான் “அன்றே”
என்றார்.
இந்த பிறவி என்னும்
கடலுள் சென்று அது தரும் வசீகரமான துன்பங்களில் முழ்காது ஒரு தோணி போல தடுத்து
ஆட்கொண்டாள் அம்பாள் என்று சொல்கிறார்.
அப்படித் தடுத்து
ஆட்கொண்டதை “அல்ல” அதாவது நான் தடுத்தாட்கொள்ளவில்லை என்று என்னை கைவிட்டுவிடுவது
முறையல்ல என்கிறார்.
கைவிட்டாளா?
என்றால்? இல்லை. ஆனால், குழந்தை, ஒரு புதிய இடத்திற்கோ, அல்லது கொஞ்சம் பயமாக
இருக்கும் இடங்களிலோ அம்மாவின் தலைப்பை எப்படிப் பிடித்து இறுக்கிக்கொண்டு
இருக்கும்? அம்மா தன்னை விடவே மாட்டாள் என்று த்ருட நம்பிக்கை இருக்கும். ஆனாலும்,
கண்களில் நீர் முட்ட, மலங்க மலங்க முழித்து, அன்னை விட்டு விடாதே என்று விழியால்
மொழி பேசுமே! அப்படித் தான் தாய் எங்காவது, அசந்து மறந்து, இந்த கடலுக்குள்
விட்டுவிடுவாளோ என்று தவிப்பு இந்தக் குழந்தைக்கு.
அதற்குத் தான்
சொல்கிறார், அம்மா, ஏதாவது நான் என் அறியாமையினால், என் குணங்களின்
குற்றங்களினால், உன்னை மறந்து, தவறு செய்தாலும், நீ தாயல்லவா? என்னை இந்த பிறவிக்
கடலுக்குள் ஒரு வேளை உன் கைநழுவி விழுந்தாலும், மீண்டும் கரை சேர்ப்பது தான் உன்
திருவுள்ளமாய் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியென்றால் ஒரு
கேள்வி வரும். இப்படி தெய்வ உபாசனை எல்லாம் தீவிரமாகப் பண்ணும் ஒருவர் அப்படி
மீண்டும், சாரமற்ற இந்த உலக வாழ்வை விரும்பி அது உண்மை என்று எண்ணி போக வாய்ப்பு
உண்டா? என்று. ஏற்கெனவே பார்த்தோம், மாயையின் ப்ரபாவத்தை. மாயை, ஞானிகளையும்
விடாது, மாயை கடப்பது அரிது என்று சொன்னோம். அந்த மஹா மாயையானது, ஒரு க்ஷணத்தில்
திசை திருப்பி விடும். அதனால் தான் ஞானிகளாக இருந்தாலும், அவர்களும் ஈஸ்வர பக்தி,
உபாசனை போன்றவற்றை உலக நன்மையைக் கருதியேனும், தங்களின் அன்றாட கடமைகளாகச்
செய்வது. பலன் எதிர்பார்க்காது பூஜைகள் செய்வதும் கூட, உள்ளத்தூய்மையின் பொருட்டே.
அப்படி மனம்
சத்விஷயங்களிலேயே ஈடுபட்டால், நல்லோர் இணக்கமே எல்லா நேரங்களிலும் இருந்தால், ஒரு
வேளை, வினையின் வசத்தால், ஏதாவது சஞ்சலம் ஏற்பட்டாலும், இறையருளால், தடுத்துக்
காக்கப்படுவர். அதனால் தான் பூரண சரணாகதி நிலையில் அன்னை, தான் அவ்வாறு ஏதேனும்
ஒரு சந்தர்பம் ஏற்பட்டாலும் தன்னைக் காக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இங்கு, அன்னையை
மீண்டும் எப்படி தான் பார்த்து இன்புறுகிறார் என்றும் சொல்கிறார். அவள் ஒருத்தி
தான் இருக்கிறார், அதாவது எல்லாவற்றுள்ளும் அவளே இருக்கிறாள் என்று பலமுறை
சொன்னார், அவளே எல்லாவற்றுள்ளும் இருப்பவளாதலால், அவள் பல உருவானவள், அப்பல உருவாக
இருப்பவள், நிர்குணமாக, அருவமாகவும் இருக்கவல்லவள்.
மனதில் எந்த விதமான
பக்குவம் இருக்கிறதோ அப்படி அவளைப் பிடித்து வைக்கலாம். காணும், காணாத, யாவும்
அவளேயாம். “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து” என்று இந்த பாடல்களிலேயே பின்னால்
சொல்லப்போகிறார். “ஈஶாவாஶ்யம் இதம் சர்வம்” என்ற உபநிடத மொழிகள் சொல்வதும்
இதைத்தான். தூய உணர்வாக, அனைத்துள்ளும் நிறைந்த பூரணம் அவள் என்கிறார்.
அந்த அம்மையைத் தன்
உமையவள் என்று மீண்டும், அப்படி உலகெலாம் அவளே என்று பொதுவாகிவிடப்போகிறாளே என்று
சட்டென்று “என்” உமையவள் என்று தனக்கானவளாக ஆக்கிக்கொள்கிறார்.
இப்படி அன்னையை
உபாசிப்பது, “பஹுரூபா” “வ்யாபினீ”, “விவிதாகாரா”, “ஸூக்ஷ்மரூபிணீ”, “ஏகாகினீ”,
“பாவ, அபாவ, விவர்ஜிதா” போன்ற நாமங்களில் ஸஹஸ்ரநாமத்தில் சிந்திப்பதை ஒப்பிட்டு
உணரலாம்.
.... கண்மணி
22/7/21
அபிராமி அந்தாதி --
32
உமையும்
உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு
அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை,
ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு
தோளியர்மேல் வைத்த ஆசையுமே (31)
அன்னை தன்னுடைய
உமையவள் என்று சொந்தம் கொண்டாடி முடித்தார். துன்பமாகிய பிறவிக்கடலில், தவறி
விழுந்தாலும், அவளே கரையேற்ற வேண்டும் என்றெல்லாம் கேட்டார்.
இங்கு, உமையும்,
அவள் மணவாளன், ஈஸ்வரனுடன், இணைந்து ஒரு உருவமாக வந்தாள் என்று சொல்கிறார்.
எப்போதும் பட்டர் பெருமான், இந்த அர்த்தநாரீ சரீரத்தையே உபாசனை அதிகம் செய்வது
போலத் தோன்றுகிறது. இந்த அர்த்தநாரீ யாக இருக்கும் சிவ சக்த்யைக்ய ரூபமானது,
கீழ்நிலை ஆசைகள் என்று உலகம் பழிக்கும் ஆசைகளில் முதன்மையான பெண்ணாசையை அறவே
ஒழிக்கும் என்பது ஆன்றோர் கூற்று.
ஆன்மீக வாழ்வில்,
பலரும், மிக கவனமாக இருக்க வேண்டிய விஷயம், பெண்ணாசை முளைக்காது பார்த்துக்கொள்வது
தான். அதனால் தான் விவேகானந்தர், தன்னுடைய ப்ரம்மச்சர்யத்தை பாதுகாக்கும் விதமாக,
எல்லா பெண்களையும் தன் தாயாக பாவிப்பதாகவே கூறினார். கூறினார் என்பது மட்டும்
அல்ல. அப்படித் தான் இருந்தார்.
ஒரு பெண் தாய் என்ற
நிலையில் வைத்துப் பார்க்கப்படும் போது அவளுடைய அங்க அழகியல்கள் மனதை
ஆக்ரமிக்காது. தாய்மை என்பது த்யாகத்தின் உருவகம். அதனால் தான், அம்மையப்பனாகவே
அவளை எப்போதும் பார்க்க விரும்புகிறார். சித்தத்தில் அம்மையப்பனாகவோ, கல்யாணக்
கோலத்திலோ வா என்றார் அல்லவா முன்னே?
இப்படி,
அம்மையப்பனாக வந்து என் போன்று பக்குவம் இல்லாதோருக்கும் அருள் செய்து, தனக்கே
அன்பு செய்ய வைத்த தயாபரி அவள் என்று சொல்கிறார். ஏன் இப்படி பக்குவம் இல்லாதோர்
என்றார்? முன் பாடலில் தான் சொன்னார், தான் தவறு செய்தாலும் காத்து ரக்ஷிக்க
வேண்டும் என்று. அதனால், அப்படி தவறுவது நடக்கலாம், யாருக்கும் இந்த சூழல் வரலாம்
என்றதால், தன் போன்ற அத்தகைய சரணாகதியில் இருக்கும் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு
“எமையும்” என்றார்.
இப்படி, அறிவும்
தந்து, அவ்வறிவில் ஏற்படும் இடர்களைந்து பின் அவ்வறிவில் நிலைக்கவும் செய்யும்
பெருங்கருணை இங்கு இருக்க, வேறு சமயம் எதற்கு? இன்னொரு தெய்வம் எதற்கு என்பது
பட்டர் பெருமானின் திண்ணமான எண்ணம். நமக்கு உலகியல் வாழ்வின் துன்பங்கள் தீர்ந்து
ஆனந்தம், அதுவும் தடையில்லாத பூரணமான ஆனந்தம் அனுபவிப்பதே முடிவான ஆசை.
அந்த ஆசை தான்
அதற்கான வழிகளைத் தேடத் தூண்டுகிறது. அதற்கு முதலில், தான் ஒரு புதைகுழியில் கால்
புதையுண்டு இருக்கிறோம் என்று உணர வேண்டும். சேற்றில் இருப்பது நாற்றமாக இருந்தால்
தானே அதிலிருந்து மீளவேண்டும் என்று தோன்றும். சேற்றில் வாழும் தவளைக்கு அந்த
எண்ணம் வருமா?
அப்படி சேறாக
இருக்கும் பிறவிச்சுழலில் இருந்து விடுதலை தரும் அன்னையைத் தரிசித்த மனம் மீண்டும்
வேறொரு உபாயத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் கருத்து. பூரணமான
மன்நிலையில் சொன்னது இது.
சரி, சமயங்கள்
இல்லை, ஏனென்றால், சமயம் நாடிய பயன் முழுமையாகத் தந்தாள் அன்னை. இனியொரு தாயும்
இல்லை என்று சொல்கிறார். அன்னையின் பெரும் கருணையானது, தகுந்த குருவின் வாயிலாக,
தன்னைத் தனக்கு அறிவித்துவிட்டபின், இனி பிறவாமை என்ற பெருவரம் கிடைத்த பின்
இன்னொரு கருபுகும் அவம் தனக்கு இல்லை என்பது நன்கு உணர்ந்து சொல்கிறார்.
“தன்னை உணர,
தனக்கொரு கேடில்லை” என்பது ஆன்றோர் வாக்கு. தான் யார் என்று உணர்ந்த பின், அழியா
முக்தி ஆனந்தம், அம்ருத நிலையில் யாண்டும் இருப்பார்கள் என்பது சாத்திரம் கூறும்
உண்மை. அவ்வகையில், தான் யார் என்று அன்னை அருளியதால், இனி ஒரு தாய் ஈன்று
வரவேண்டிய நிலை இல்லை என்றார்.
இப்படி இன்னொரு
பிறவி வராது என்பது ஏன் சொன்னார், அவ்வளவு உறுதியாக? உலகியல் ஆசைகளின் ஏக
உருவகமாக, பெண்ணாசையைச் சொல்லி, இனி அப்படி எந்த ஒரு ஆசையும் இல்லை, அதனால் அடைய
வேண்டியது என்று ஒன்றும் இல்லை. அப்படி அடைய ஏதும் இருந்தால், அதை நிறைவேற்ற ஒரு
பிறப்பு வேண்டியிருந்திருக்கும்.
ஆசைகள் அனைத்தும்
போனதால் அதன் பயனான முக்தி, நிறைவுணர்வு என்னை முழுமையாக அடைந்தது, நான் இனி
பிறக்கிலேன் என்று உறுதிபடக் கூறுகிறார். தோளியர் என்றது, (வேயுறு தோளியர்)
மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடைய பெண்கள் என்பதாம்.
உலகில் பிறப்பு
இறப்பு சுழலை அம்பாளின் மீது மட்டும் ஆசையை நிலை நிறுத்தி வெல்ல வேண்டும் என்பதே
சாதகனுக்கான செய்தி. “பவசக்ரப்ரவர்த்தினீ” யாக அம்பாள் நம்மை காப்பாள்.
.... கண்மணி
23/7/21
அபிராமி அந்தாதி --
33
ஆசைக் கடலில்
அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட
இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம்
தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என்
சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே (32)
ஆசைகள் வெல்வதற்கு
உபாயமாக, அத்தனை ஆசைகளையும் அன்னையின் மீதே வைப்பதை சொன்னார்.
இப்படி ஆசை என்னும்
பெருங்கடல் தான் சாதகனின் பெரிய பயமே. ஒரு இரண்டு விஷயங்கள் இல்லை ஆசைக்குக்
காரணங்கள். பொதுவாக, பொன் நிலம், மாதர் என்று மூன்று பெரிய பிரிவுகளுக்குள்
இவ்வாசைகளை அடைக்கி இருக்கிறார்கள் முன்னோர்.
“வளைப்பட்ட
கைம்மாதொடு மக்கள் எனும் தளைபட்டழியத் தகுமோ?”, “மட்டூர் குழல் மங்கையர் மையல்
வலைப் பட்டூசல் படும் பரிசென்று ஒழிவேன்?” என்று அருணகிரியார், கந்தர் அநுபூதியில்
வேண்டுகிறார் இல்லையா?
மிக மோசமான
விளைவுகள் கொண்டது பெண்ணாசை என்பது அனுபவத்தின் வெளிப்பாடு. அப்படி ஆசைகள் பல
என்னை இந்த ஆழமான கடலான உலகியல் மாயக்கடலுக்குள் அமிழ்த்திய நேரத்தில்,
“வானந்தமாக” வான் முதல் பூமிவரை விரிந்து இருக்கும் அன்னையாகிய உன் பாதங்களை நான்
அந்த கடலின் ஆழத்தில் சென்றிருந்த போது கண்டு கொண்டேன்.
அப்படிக் கண்டதால்,
அதை நீயும் உன் பெருங்கருணையால் என் தலை மீது வைத்து அருளி எனக்கு உன் தாமரை
மலரப்போன்ற பாதங்களால் ஸ்பர்ச தீக்ஷை தந்து ஆட்கொண்டதால், நான் தப்பித்தேன்.
உன் கருணைக்கு நான்
என்ன ஈடு சொல்வேன், என் தந்தையாகிய ஈசனின் ஒரு பாகமாக இருக்கும் அன்னையே என்று
மிகுந்த நன்றியை வெளிப்படுத்துகிறார்.
இங்கு உற்று நோக்க
வேண்டிய விஷயம், பட்டர் பெருமான், நான் கடலுக்குள் கால் வைத்தேன், நீவந்து
காப்பாற்றினாய் என்று சொல்லவில்லை. கடலுக்குள் எப்படி அகப்பட்டார்? அந்தகன் போல
அகப்பட்டார்? அந்தகன் என்றால் கண் இல்லாதவர். இங்கு ஞானக் கண் இல்லாதவர். அறியாமை
மிகுந்த நிலை.
எது சரி, தவறு,
தர்மம் அதர்மம் எது என்று பிரித்துப் பார்த்து பகுத்து அறிந்து தெரிந்து கொள்ளும்
அறிவான, விவேகம் அற்ற நிலையில், நிலையானதும் நிலையற்றதும் பகுக்கத் தெரியாத
நிலையில் அறியாமை பீடித்த அறிவின் தெளிவு அற்ற அந்தக நிலை.
அப்படிப்பட்ட
நிலையில், நிலையற்றதெல்லாம் நிலையென்றெண்ணி இந்த நெஞ்சம் அதற்கெல்லாம் மிகவும்
உண்மைத் தன்மை கொடுத்து அதில் உழன்று அதனால் துன்பம் மிகவுற்று இருக்கும், அது
தான் பாசம் என்ற நிலை. இந்த பாசம் தான், தர்ம தேவதையான எமனுக்கு சரியான விஷயம்
நம்மை மீண்டும் இன்னொரு கருவில் இடுவதற்கு, இந்த பிறவியின் தொடர்ச்சிக்கு வழி
செய்வதற்கு.
அந்தகன் என்பது
யமனையும் குறிக்கும். அவர் கையில் இருக்கும் பாசக்கயிறு என்னும் கயிறு தான் இந்த
உயிரானது பிணைக்கப்பட்டு மீண்டும் அதன் செயல்களுக்கு ஏற்ப சொர்க, நரக, இதர
உலகங்களும் மறுபிறவிகளும் கிடைக்க முக்கிய காரணமாக இருப்பது.
இப்படி என்
அறியாமையால் நான் ஆசைக்கடலில் பாசங்களுக்குட்பட்டு இருக்கும் வேளையில், அந்த
அந்தகனான யமனின் பாசக்கயிறுக்கும் வேலை வந்த போது, தான் உன் திருவடித் தாமரை
என்னைக் காத்தது என்று நன்றி தெரிவிக்கும் விதமாகக் கூறுகிறார்.
“சம்சார பங்க
நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா” என்று அம்பாளைக் கொண்டாடுகிறோம். சம்சாரம் என்னும்
கடலில் மூழ்கிய பேர்க்கெல்லாம் அவளே புகலிடம் அன்றோ!
.... கண்மணி
24/7/21
அபிராமி அந்தாதி --
34
இழைக்கும்
வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது
வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக்
குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது,
உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே (33)
சம்சாரம் என்னும்
கடலில் மூழ்கும் நிலை வந்தால், என்னை உன் திருவடியைத் தலை மீது வைத்து காப்பவள்
நீயே என்று சொன்னவர், இன்னும் மரண பயத்தின் போது சாதகனுக்கு ஏற்படும்
அவஸ்த்தைகளின் போது உள்ள மன நிலை, அதற்கு உபாயமும் சொல்கிறார்.
வினைகளின்
போக்கின்படி, அவ்வினைகளின் முடிவு வரும் போது, பிறவியின் முடிவும் வரும் என்பது
சாஸ்திரம் வகுத்தது. அப்படி ஒரு உயிரின் காலம், வினைகளால் நிர்ணயிக்கப்படுகிறது
என்பதால், அவ்வினைகளின் தன்மைக்கேற்ப இறுதி முடிவும் இருக்கும்.
எவ்விதமாக வினைகள்
இருக்குமோ அவ்விதமாகவே கால தேவன் வந்து அழைத்துச்செல்வான். தான் செயும் வினைகள்
எப்படியோ அதற்குத்தகுந்தபடி கொடுமையான அந்த கால தேவன் வந்து என்னை அழைக்கும் போது
நான் எங்கு புகலிடம் கேட்பேன்? நீ தான் வந்து அஞ்சேல் என்று அபயம் தர வேண்டும்
என்று இறைஞ்சுகிறார்.
“யம் யம் வாபி
ஸ்மரண் பாவம்” என்று முன்னமேயே பார்த்தோம். மரண காலத்தில் என்ன எண்ணம் இருக்கிறதோ
அதுவே நிறைவேற்றப்படும் என்பது இறைவனின் வாக்கு. “உடலம் ஆசையால் த்யானித்த பேர்கள்
உடல்கள் ஆகுவர் மைந்தா, ஸ்வரூபமே த்யானித்தவர் ஸ்வரூபமாகுவர் மெய்யே” என்றார்
தாண்டவராய ஸ்வாமிகள் கைவல்ய நவநீத்த்தில்.
அடும் காலன்
என்றால், தண்டிக்கும் கால தேவன் என்று பொருள். பாகவதத்தில் அஜாமிளன் கதை எல்லோரும்
அறிந்ததே. வாழ்நாள் முழுதும் கெட்டவனாக வாழ்ந்த அந்த அந்தணன், இறுதி நாட்களில்,
தன் ப்ரியத்துக்குரிய கடைசி மகனான “நாராயணனை” சதா அழைத்துக்கொண்டே இருந்ததால்,
அவன் இறக்கும் போது, யம கிங்கரர்கள் வரும் போது, விஷ்ணு பார்ஷதர்கள் வந்து நாராயண
நாமம் சொன்னதால் அவனுக்கு வைகுண்டமே நிச்சயம் என்று வாதிட்டு அழைத்துச்
செல்வார்கள் என்பது கதை.
மிக மிக
சுருக்கமாகச் சொன்னேன். நாமத்தின் மஹிமை சொல்ல இந்த கதை. அது மட்டும் அல்ல,
வாழ்வின் இறுதியிலாவது இறைவனின் நாமமும் அவரது எண்ணமும் இருக்க வேண்டும் என்பதும்
செய்தி.
இங்கும் பட்டர்
பெருமான், தன் இறுதிக்காலத்தில் அன்னையே வந்து அஞ்சேல் என்று அபயம் தர வேண்டும்
என்று கேட்கிறார்.
இங்கு அன்னைக்கு
என்ன விசேஷம் சொல்கிறார்? குழைக்கும் களபக் குவிமுலை கொண்டவள். களப என்றால்
சந்தனம். யாரைக்குழைக்கும்? அத்தன் சித்தமெல்லாம் குழைக்கும். அன்னையின் பெருத்த
ஸ்தன பாரங்களைப்பற்றி சொல்வது அவளது அளப்பறிய கருணையின் குறியீடு என்பது முன்னமே
பார்த்தோம்.
அக்கருணை பொங்கும்
சந்தனம் பூசிய தண்மை பொருந்திய முலைகள் அத்தனின் சித்தத்தை நெகிழச்செய்து,
அன்னையுடன் அந்தக்கருணையை வழங்கும் முகமாக ஒன்றாக இருக்கிறது. அன்னையோ மெல்லிய
கொடி போன்று இருக்கும் கோமள ரூபமுடையவளாக இருக்கிறாள் என்று அன்னையைப்
பார்க்கிறார்.
“கோமலாகாரா”,
“கோமலாங்கி” என்று சஹஸ்ரநாமத்தில் சொல்கிறோம். இங்கு ஏன் அன்னையை இப்படி ஒரு
விசேஷமாகச் சொல்ல வேண்டும்?
வினைகளின்
தீவிரத்தினால் காலனை எதிர்கொள்ள தன் மகன் தவிக்கும் போது அவனுக்கு பெருங்கருணை
செய்ய வேண்டும். அந்த செயலில் அத்தனும் இணைய வேண்டும். அதற்கு அவளுக்கு தண்மை
அதிகம் வேண்டும் என்று நினைத்து அன்னையை அந்த கோலத்தில் த்யானிக்கிறார்.
இங்கும், சாதகனாக
அவரை மட்டும் நினைத்தலை விட, பக்குவம் அடையாத இன்னும் எத்தனையோ சாதகர்களையும்
இணைத்தே சொல்கிறார் என்று கொள்ளல் நலம்.
.... கண்மணி
25/7/21
அபிராமி அந்தாதி --
35
வந்தே சரணம் புகும்
அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான்
போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல்
பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும்,
அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே (34)
மரணத்தருவாயில்
இருக்கும் சாதகன், அம்பிகை வந்து அஞ்சேல் என்றால் எங்கு செல்வான்? நிச்சயம்
நரகமல்லவே!! அதனால் தான் மேலும் சொல்கிறார், வந்து உன்னைச் சரணடைந்த அடியார்,
வானுலகம் பெறுவார்கள் என்று.
அன்னையை உபாசனை
பண்ணினால், சித்திகள், சொர்க லோகம், சிவலோகம், முக்தி, அழியா ஆனந்தம் எல்லாம்
கிடைக்கிறது என்றார் இல்லையா? இங்கு, வினைப்பயனால், காலன் வந்து அழைத்தபோது
அன்னையின் கருணையினால், வானுலகம் கிடைத்ததாம்.
அப்படி அன்னை
அடியாருக்கு வானுலகம் தந்து தான் போய் எங்கு இருந்தாளாம்? அவள் தான் சர்வ வ்யாபி
ஆயிற்றே. ஒரு இடமா அவளுக்கு. மீண்டும் அவளது பராக்ரமத்தை சிந்திக்க வைக்கிறார்.
எங்கெல்லாம் மங்களமாக சிந்தித்து சொல்ல முடியுமோ அங்கெல்லாம் சொல்கிறார்.
இதெல்லாம் மனதுக்கு நல்ல சிந்தனைக்கான பயிற்சிகள்.
நான்முகன் என்று
சொல்லும் ப்ரம்மாவிடம் சென்று இருக்கிறாள். “சரஸ்வதி” என்பது அம்பாளின் ஆயிரம்
நாமங்களில் ஒன்று. ப்ரம்மாவின் மனைவி சரஸ்வதி, அந்த சரஸ்வதிக்கு கலைகளில் தேர்ச்சி
அருளும் ஆற்றலாக சக்தியாக இருப்பது அம்பாள் தான். பொதுவாக, ப்ரம்மாவின் கலைமகள்
அவரது நாவில் இருப்பதாக புராணங்கள் சொல்லும். அம்பாள் அப்படி சதுர்முகனிடம்
படைக்கும் சக்தியாக இருக்கிறாள்.
நாராயணனின்
மார்பில் இருக்கிறாள். மார்பில் இருப்பது மஹாலக்ஷ்மி. அம்பாள் தன் இச்சா சக்தி
என்னும் சக்தியை மஹாலக்ஷ்மி ரூபத்தில் இருந்து கொண்டு செய்கிறாள். அதாவது
செல்வத்தை அருளும் சக்தியாக மஹாலக்ஷ்மியிடம் இருப்பதும் அவளே. அந்த மஹாலக்ஷ்மி
இருக்கும் திருமாலின் மார்பில் என்ன அலங்காரம் சொல்கிறார்? தேன்சொரியும்
திருத்துழாய் மாலைகளும், பெரிய கௌஸ்துப மணிகள் கொண்ட ஹாரமும் அலங்கரிக்கிறதாம்.
பரமேஸ்வரனின் ஒரு
பாகமாக இருக்கிறாள், அதனோடு, மிகுந்த உயர்வான, தாமரை மலரில் இருக்கிறாள்,
சூரியனில், சந்திரனில் இருக்கிறாள் என்றும் சொல்கிறார். “பத்மாஸனா”, “பானு மண்டல
மத்யஸ்தா”, “சந்த்ரிகா” என்பதெல்லாம் அவள் பெயர்கள் அல்லவா?
எதற்கு இந்த
உபாசனைகள்? ஏன் அவளை இத்தனை இடங்களில் வைத்துப்பார்ப்பது என்று நமக்குத் தோன்றும்.
சர்க்கரை இனிப்பு தான். வெறும் சர்க்கரையையே ஒரு கிண்ணம் நிறைய வைத்து தின்ன
முடியுமா? மனிதனின் மனதுக்கு பல விதமான பிடிமானங்கள் தேவை.
எங்கெங்கெல்லாம்
உயர்வான பொருட்கள் உள்ளனவோ, அவற்றில் எல்லாம் அன்னை இருக்கிறாள் என்று எண்ணி
விபூதி யோகத்தில் க்ருஷ்ணர் சொன்னது போல, அவளை அத்தனை உயர்ந்த பொருளிலும்
வைத்துப்பார்த்து, அதில், ரசமாக அனுபவித்து சொல்லித்தருகிறார் சாதகனுக்கு.
நாமும் அவளை
அனைத்திலும் பார்த்து சிந்தித்து இன்புறுவோம்
.... கண்மணி
26/7/21
அபிராமி அந்தாதி --
36
திங்கட் பகவின்
மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம்
எய்தியவா, எண் இறந்த விண்ணோர்-
தங்கட்கும் இந்தத்
தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி
அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே (35)
அம்பிகையை சகல
உயர்ந்த விஷயங்களிலும் வைத்து த்யானித்து வழிபடக்கற்றுத்தந்தார்.
இப்போது, மீண்டும்,
அவளது கருணையையும், அக்கருணை தங்களுக்கு மட்டும், அதாவது, மனிதராகப்பிறந்து,
அம்பிகையின் மேன்மையை உணர்ந்து, அவள் குறித்து தவமியற்றும் நல்லோர் அனைவருக்கும்
கிடைத்தது பெரும் பேறு, அது தேவருக்கும் கிடைக்கவில்லை என்று பெருமைப் படுகிறார்.
ஒவ்வொரு பாடலும்,
ஒவ்வொரு கோணத்தில், இந்த வாழ்வின் நிலையாமையில் இருந்து மீட்டதை எண்ணி எண்ணி
போற்றி அலுக்கவே அலுக்காத அவள் பராக்ரமங்கள் சொல்வதே லக்ஷியம் பட்டருக்கு.
அவள் பாதங்கள் மணம்
வீசுகின்றன. என்ன மணம்? திங்களின் மணம். சந்திரனின் குளுமையான மணம் வீசுகின்றது.
எங்கு போனாள்?
முன்னே சந்திரனில் இருக்கிறாள் என்றார். அதற்கு முன், 11வது பாடலில், அவளது
செந்நிறப்பாதங்கள், எம்பிரான் முடிக்கண்ணியதே என்று பாடினார் இல்லையா? அத்தன்
சென்னியில், பிறைச்சந்திரன் இருப்பதால், அங்கு வைத்த அவளது பாதங்கள், சந்திர வாசனை
பெற்றதாம்.
இப்போது, அடும்
காலன் வரும்போது, அவளது பாதங்களைப்பிடிக்க, அவற்றில் அடியாரின் சென்னி (தலை) பட,
அவள் அஞ்சேல் என அருள, என்ன தவம் அம்மா நாங்கள் செய்தோம்? என்று
ஆச்சர்யப்படுகிறார்.
என்ன ஆச்சர்யம்
இதில்? அவளை வணங்குகிறோம், அவள் அருளுகிறாள், இதில் என்ன ஆச்சர்யம்? என்றால்,
எப்போதும் அவள் குறித்த கீர்த்தனங்களே நடந்து கொண்டு இருக்கும் தேவலோகத்தில் உள்ள
விண்ணவர்களுக்கெல்லாம் இந்த பாக்யம் இல்லையாமே!! அதனால், எங்களுக்கு நீ அருளுவது
எங்கள் பாக்யம் தான் என்று சொல்கிறார்.
ஒரு பெரும்
பதவியில் இருப்பவர்கள், பெரும்பாலும், அவர்களுடைய நேரடி கண்காணிப்பில்
இருப்பவர்களைக்காட்டிலும், சற்று தள்ளி இருப்பவர்கள் மீது அன்பு சற்று
கூடுதலாகத்தானே வைத்திருப்பார்கள்? அதுவும் ஏதாவது ஒரு நிகழ்வென்றால், அவர்களுக்கு
நல்ல கவனிப்பும், ப்ரத்யேக பேட்டிகளும் கூட கிடைக்கும். ஏன்?
அருகில் இல்லாமல்
தொலைவில் இருந்து, நன்கு காரியங்கள் செய்கிறார்களே, அவர்களை உற்சாகப்படுத்த
வேண்டும் என்று தான். உலகியலில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் இந்த ஈஸ்வரத்தன்மை
யாரிடமிருந்து பெறுகிறார்கள்? அம்பாளிடம் தான்.
அவள் தன் பக்தர்கள்
எங்கோ பூமியில் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறார்களே என்று அவர்களுக்கு
அருளப்ரயத்தனப்படுகிறாள். விண்ணொர்களோ அவள் அனுக்ரஹம் பெற்றுத் தான் அந்த பதவிகளே
அடைந்திருக்கிறார்கள்.
அப்படி அருளும்
அன்னையை இம்முறை, பாற்கடலுள் பாம்பணை (பணி என்றால் பாம்பு) மேல் துயில் கொள்ளும்
மஹாவிஷ்ணுவிடம் விளங்கும் வைஷ்ணவி சக்தியாக கருதி த்யானிக்கிறார்.
வைஷ்ணவி என்னும்
சக்தியானது, விஷ்ணுவுக்கு, காத்தல் என்னும் தொழிலைத் திறம்படச்செய்ய
ஏதுவாயிருக்கிறது. அதனால் தான் அவள் பாதங்களைப்பிடித்து அதன் மூலமே இந்த
பிறவிச்சுழலைக் கடக்கும் வரத்தை நமக்கு அருளியிருக்கிறாள், அதன் மூலம் நம்மை
காக்கிறாள் என்று ஆனந்தப்படுகிறார். “வைஷ்ணவி” சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். விஷ்ணு
என்றால் எங்கும் நிறைந்த என்று பொருள். வைஷ்ணவி எங்கும் நிறைந்தவள்.
பற்றுவோம் அவளை,
பற்றற்று இருப்பதற்கு.
.... கண்மணி
27/7/21
அபிராமி அந்தாதி --
37
பொருளே, பொருள்
முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில்
வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி
ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.-
அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே (36)
பெரும்
தவச்சீலர்களுக்கு மட்டுமே தன் கருணையைத் தருகிறாள் அம்பாள். இங்கு, பெரும் என்றது
பெரும் முயற்சி செய்யும் என்பதே. அதனால் தான் விண்ணோர்க்கும் கிடைத்தல் அரிது,
எமக்கு அருள் கிட்டியது என்றார் இல்லையா?
இங்கும் அம்பாளை
விஶ்வரூபமாக பார்க்க கற்றுத்தருகிறார்.
அவள் சாதகன்
உபயோகிக்கும் பொருள் அனைத்திலும் இருக்கிறாள். அது என்ன சாதகன் உபயோகிக்கும்
பொருள்? அவள் தான் எல்லாவற்றிலும் இருக்கிறாளே! என்றால், சாதகனுக்குத் தான்
முக்கியமாக, எல்லாம் என்பது தன்னிடமிருப்பதும் சேர்த்து என்னும் உணர்வு வர
வேண்டும். பொதுவாக, “எல்லாரும் நல்லா இருக்கணும்” என்று வேண்டி விட்டு, “என்
பையனுக்கு ஒரு நல்ல வரன் வேணும்மா” என்றால், அதற்கு என்ன அர்த்தம்? முதலில் சொன்ன
“எல்லாரும்” யார்? தான் நீங்கலாகவா? இதனால் தான் சாதகனுக்கு உபதேசம்.
அவள் தான்
எல்லாப்பொருளுமாக இருக்கிறாள். அந்தப் பொருட்கள் தரும் போகம், அதாவது அனுபவமாக
இருக்கிறாள். அனுபவம் மகிழ்ச்சி, துன்பம் இரண்டும் கலந்து தான் இருக்கும்.
விஶ்வரூப தரிசனம் அத்யாயத்தில் க்ருஷ்ணர், தனது கோர முகமும் காட்டுகிறார்,
சௌம்யமான முகமும் காட்டுகிறார் அர்ஜுனனுக்கு. அதற்கு பொருள் என்னவென்றால்,
இருமைகள் அனைத்திலும் இருப்பது இறைவனே. அதுபோல, பொருளும் அவள், பொருள் தரும்
அனுபவமும் அவள் தான்.
பொருளை நாடுவது
எதனால்? மருள் என்னும் மாயையினால். “மஹா மாயா”, “மாயா” என்பதெல்லாம் அன்னையின்
நாமங்கள்.
அந்தப்பொருளை நாட
வைக்கும் மருள் அவளே. அப்பொருளின் பால் சென்று அது தந்த மயக்கம் நீங்கிய பின்
கிடைப்பது தெளிவு. என்ன தெளிவு? நிலையானதையும், நிலையற்றதையும் பற்றி பகுத்து
அறியும் விவேகம் என்னும் தெளிவு. சாதகனுக்கு முதலில் வர வேண்டிய அறிவு,
நிலையானதும் நிலையற்றது எது என்னும் அறிவு தான். அந்த தெளிவும் அவளே. மருளும்
அவள். மருளில் இருந்து நீங்கிய தெருளும் அவள்.
மனம் தெளிவான பின்,
அங்கு அறியாமை என்னும் இருளுக்கு இடம் இல்லை இல்லையா? மனம் ஒரு வஞ்சம்
செய்யக்கூடிய கருவி. “வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம்” என்று மனதை வஞ்சிக்கும் தன்மை
கொண்டது என்று வள்ளுவரும் சொல்கிறார். அப்படி வஞ்சம் இல்லாத இருளான அறியாமை ஏதும்
இல்லாத ஒளி, சித்சக்தி, ஸ்வயம்ப்ரகாசமான ஜோதியாக, உள்ளே, அறிவின் வடிவில் அன்னையே
இலங்குகிறாள் என்று சொல்கிறார்.
அப்படி அறிவே
வடிவான அம்பிகை தன் இதயத்தில் வீற்றிருப்பதை, அம்புதாயனத்து அம்பிகை என்று
சொல்கிறார். அம்பு என்றால் நீர். நீரில் உதிப்பது “ஆயதனம்” அம்புதாயதனம். தாமரை
நீரில் உதிப்பதால், அதற்கு அந்தபெயர்.
இதயம் என்னும்
தாமரையில் அவள் வீற்றிருக்கிறாள். எப்படி வீற்றிருக்கிறாள்? மனதில் வஞ்சம் என்னும்
அறியாமையை ஒழித்து, அறிவு என்னும் ஒளியேற்றி. அதற்கு முன், மாயையின் மருளை நீக்கி
தெருளளித்து. அதற்கு முன், மஹா போகியாக அனைத்தும் அவளாகவே இருந்து அனுபவிக்கவும்
வைத்தாள்.
திகட்ட திகட்ட
அனைத்தையும் அனுபவித்து, அனைத்தும் நிலையல்ல என்று உணர்ந்து, நிலையான
பரம்பொருளின்பால் சாதகன் ஈர்க்கப்படுவது தான் உயர்ந்த நிலை.
இந்த தண்கருணை ஏன்
என்று எனக்குப்புரியவில்லையம்மா என்று நன்றியின் பெருக்கில் உருகுகிறார் பட்டர்
பெருமான்.
நமக்கும் அப்படி
ஒரு வைராக்யம் சித்தித்து, அவளே இதயத்தாமரையில் இடம்பெற வேண்டுவோம்.
…. கண்மணி
28/7/21
அபிராமி அந்தாதி --
38
கைக்கே அணிவது
கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது
வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது
பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும்
திரு உடையானிடம் சேர்பவளே (37)
பொருளாசை விட்டது
அம்பிகையின் பேரருளால் என்று அவளை மனதின் வஞ்ச இருள் நீக்கிய அம்பாளின் கருணையை
வியந்தார்.
சாதகனின் மனத்தில்
பொருளாசை போனாலும், அந்த வாசனை அவ்வளவு லேசில் விடாது. அப்படி விடாதபோது, வாசனைகள்
அனுபவித்து தீர்க்க வேண்டியிருக்கும் இல்லையா? நிறைய நகை வாங்க வேண்டும், நிறைய
அலங்காரங்கள் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பொதுவாக இருக்கும் ஆசைகள் கூட,
அப்படியே மடை மாற்றப்பட்டு, அன்னையின் பெரும் கருணையால், அவளுக்கே அந்த அலங்காரங்களை
செய்து பார்த்து அனுபவித்து தீர்ந்தும் போக வைத்து விடும். அதற்காகத்தான்
தெய்வப்ரதிமங்களுக்கு அலங்காரங்களே.
இங்கு அம்பாளை
எப்படி பட்டர் பெருமான் பார்கிறார் என்று சொல்கிறார். அவளது கையில் இருப்பது
கரும்பு வில்லும், ஐந்து மலர் அம்புகள் என்று சொல்கிறார். இந்த கரும்பு வில்லும்
ஐந்து அம்புகளும் குறித்து, 2வது பாடலில் ரூப வர்ணனை பண்னும் போது “பனிமலர்
பூங்கணையும், கரும்புச் சிலையும்” என்றார், அப்போது கரும்பு வில் மற்றும்
அம்புகளைப்பற்றிப் பார்த்தோம். ஐந்து இந்த்ரியங்களை ஐந்து வித மலர்களாக
உருவகப்படுத்தி, அவற்றை ஆசை என்னும் வில்லில் இட்டு, நம் மீது இச்சா சக்தியால்
இச்சைகளைத் தூண்டும் வேலையைச் செய்துவருவது மன்மதன்.
அவனுக்கு ஒரு சமயம்
உருவமற்றவனாக ஆகும் சூழல் வந்த போது, அம்பாள் கருணையுடன் தானே அந்த கரும்பு
வில்லுடன் அம்புகளை ஏற்று ஈசனிடம் அன்போடு இணைந்து தேவர்களுக்கு அனுக்ரஹம்
செய்தாள் என்பது பார்த்தோம்.
கரும்பு வில்லும்,
ஐந்து பாணங்களும் என்பது சௌந்தர்ய லஹரியில் கூட ஆச்சார்யாள் குறிப்பிடும் வர்ணனை
தான். இங்கு நமக்கு புரிந்து கொள்வது என்னவென்றால், அப்படி நம் ஆசைகள் அத்தனையும்
அம்பிகையின் கரங்களில் இருந்து விட்டால், பூரண சரணாகதியில் இருக்கலாம். புற உலக
இச்சைகள் நமக்கு துன்பம் தராது என்பது தான்.
கமலம் அன்ன மெய்
என்பது மீண்டும் அவரது ப்ரியமான, செம்மையான சிந்தூரத் திருமேனி வர்ணனை. அவளது மேனி
அழகிய தாமரை போல இருக்கிறது. அதில் அவள் அணிந்திருக்கும் மாலையோ வெண்முத்து மாலையாம்.
9வது பாடலில் “ஆரமும் செங்கைச் சிலையும்”
என்றார் இல்லையா? நல்ல வெண்மணிகளால் ஆன முத்து மாலை அணிந்து இருக்கிறாள்.
பைக்கே என்றால்,
நாகத்தின் படம் எடுத்திருப்பது போன்று இருக்கும் அம்பாளின் இடைப்ரதேசத்தில் அவள்
அணிந்திருப்பது பலவித மணிகளால் ஆன ஆபரணம் என்று அவர் வர்ணிக்கிறார்.
இவள் இப்படி
கரும்பு வில்லும் அம்பும் முத்து மணி பல்வகை ரத்னங்கள் எல்லாம் அணிபவளாக இருக்க
அவள் கணவரோ, எட்டுத் திக்குகளையே ஆடையாக அணிபவராம். ஆனால் அவர் “திரு” வுடையவராம்.
அவளை அம்பாள் இடபாகத்தில் சேர்ந்திருக்கிறாள்.
நோக்கத்தக்கது என்ன
இந்த பாடலில்? திகம்பரர் என்று சொல்லும் திசைகளை ஆடையாக அணிந்திருப்பினும் மிகுந்த
மங்களமான ரூபனாக இருப்பவர் சிவபெருமான். அவருக்கு அலங்காரங்கள் பெரியதாக இல்லை.
அம்பாளின் அலங்காரங்களும் கூட, உற்று நோக்கினால், எங்கெங்கு தேவையோ அங்கங்கு
மட்டும் தான்.
இது ஒரு விதமான ரூப
த்யானம். நமது பொருள் முடிக்கும் போகமானது முடிவு பெற வேண்டும் இல்லையா? அதனால்,
நாம் உபாசிக்கும் தெய்வத்துக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும்.
அப்படிப்பார்க்கும் போது, நமது எண்ண ஓட்டங்கள் போலத் தான் அந்த உபாசனையும்
இருக்கும். சென்ற பாடலில் தான் பொருள் குறித்த மருளை நீக்கினாள் என்றார். அதனால்,
அப்படி நீங்குபவருக்கு எப்படி ஒரு மன நிலை இருக்கும் என்பதை அம்பாளுக்கும்
ஈஸ்வரனுக்குமே அலங்காரம் செய்து பார்த்து நமக்கும் கற்றுத் தருகிறார்.
“க்வணத் காஞ்சீ
தாமா” என்ற ஸ்லோகத்தில் அம்பாளின் இடையாபரணம், அவளது வர்ணனை செய்திருக்கிறார் ஆதி
சங்கர்ர், சௌந்தர்யலஹரியில்.
“ரணத்கிங்கிணி மேகலாயை” என்று அர்ச்சிக்கிறோம்
சஹஸ்ரநாமத்தில்.
நாமும் பட்டரின்
வழியில், அவளை திசையணி நாதனோடு ஈசர் பாகத்து நேரிழையாய் த்யானிப்போம். நம் ஆசை
கடலைக் கடப்போம்.
.... கண்மணி
28/7/21
அபிராமி அந்தாதி --
39
பவளக் கொடியில்
பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும்
துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது,
துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின்
கண்டீர், அமராவதி ஆளுகைக்கே (38)
சென்ற பாடலில்,
“பொன்” அதாவது பொருளாசையின் நிறைவு அம்பாளுக்கே அந்த பொருளால் அலங்காரம் செய்து
பார்த்து இன்புறுவது தான் என்பது அறிந்தோம். இந்த பாடலில், மாதராசையின் நிறைவு,
அம்பாளையும் ஈசனையுமே அவ்விதம் ஆசைகொண்டவர்களாகப் பார்ப்பது தான் என்று பொருள்பட
சொல்கிறார்.
ஆசை என்பது அத்தனை
எளிதில் தீர்க்கக்கூடியதும் இல்லை. அது தேவையும் இல்லை என்று தான் நம் குருமார்கள்
சொல்கிறார்கள்.
அப்படிச் சொல்வது எப்படித் தெரியும் என்றால்?
சித்தாந்தங்கள் சொன்ன சங்கர்ர் கூட எத்தனை ஸ்தோத்திரங்களில் அனைத்து
தெய்வங்களையும் உபாசனைக்காக அலங்கரித்து மகிழ்கிறார்! இறைவன் மேல் ஆசை கொண்டால் தானே
அவரை உணர முடியும்?
ஒரு விஷயம் நம்
மனதில் இருந்து நீங்க வேண்டும் என்றால், வேண்டிய அளவு அனுபவித்து, இனி அதில்
அனுபவிக்க ஒன்றும் இல்லை என்றாக வேண்டும். அது நம் வாழ்நாளுக்குள் நடக்க வேண்டும்.
அப்போது, அளவற்ற இறைவனிடம் அந்த ஆசைகளை மடை மாற்றிவிட வேண்டும். இது ஒன்று தான்
வழி.
அம்பாள் இங்கு
பவழக் கொடியில் பழுத்த செவ்வாயோடு இருக்கிறாளாம். பொதுவாக அவளது வாய்
கோவைப்பழத்துக்கு உவமையிட்டு கூறப்பட்டுளது. மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆச்சார்யார்
“பிம்போஷ்டீம்” என்கிறார். பிம்ப பழம் என்றால் கோவைப்பழம். அதே சொல்லாடலை காளிதாசரும்
கையாள்கிறார் ஶ்யாமளா தண்டகத்தில் “பக்வ பிம்பாதரே” என்று சொல்கிறார் அவளது
உதடுகளை. இங்கு பட்டரும் “செவ்வாய்” என்று புகழ்கிறார். சஹஸ்ரநாமத்திலும் “நவ
வித்ரும பிம்பஸ்ரீ” என்று அவளது அதரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
அவளது திருமேனி மிக
அழகிய கொடி போன்றது என்பது முன்னரே “பரிமள யாமளை” என்று சொன்ன போது சொன்னார்.
அவளது புன்சிரிப்பு குளிர்ந்த பனி போல் இருக்கிறது. பனி முறுவல் காட்டும் அழகை
வர்ணிக்கிறார். நகை என்றால் சிரிப்பு. திரு நகை என்பது மங்களம் பொருந்திய
சிரிப்பு.
அதுவும் அதிர அதிர சிரிக்கவில்லை. முறுவல் தான்
பூக்கிறாள். அதற்கே, சங்கரனார் மயங்கி
விடுகிறார் அவளது அங்க வர்ணனையில் எப்போதும் அவர் அந்த பெருங்கருணை சுரக்கும்
பெருமுலைகளை த்யானிப்து தெரிகிறது. அவை எவ்வளவு பெரியது என்றால், அவற்றின்
பாரத்தால், இடை துவள்கிறதாம் அவளுக்கு. அவளுக்கு எதற்கு அத்தனை பாரமும்? அவள்
அத்தனைக்கும் அண்ட சராசரத்துக்கும் அன்னையாக இருப்பதால், அவளுக்கு பொருப்பு
அதிகம், அவள் கருணையும் அதிகம் வேண்டியிருக்கிறது இல்லையா? அதனால் தான்.
சாதாரண மானுட
மங்கையை மனதில் எண்ணி அவளது அங்க லாவண்யங்களை சிந்திப்பதால் என்ன கிடைக்கும்? அதிக
பட்சம் அந்த க்ஷண நேர சந்தோஷம், அதன் பின் மீளா துயரம். இது தான் கிடைக்கும்.
அம்பாளை, அவளது
காருண்ய வதனத்தை த்யானிப்பதால் என்ன கிடைக்கும்? மிகுந்த புண்யம் கிடைக்கும்.
எதனால் புண்யம் கிடைக்கும்? கீழ்நிலையான ஆசைகள் இன்றி உயர்ந்த பரம்பொருளை ஒரு
உருவமாக த்யானிப்பதால். அப்படிக் கிடைத்த புண்யம் எங்கு இட்டுச்செலும்?
உயர்ந்த பரம்ப்பொருளின் அருளால், உயர்ந்த
லோகங்களுக்கு இட்டுச்செல்லும். அதன் உச்சம், இந்திர பதவி தான். இந்திர பதவி என்பது
மிக அதிகமான புண்யம் இருந்தால் தான் கிடைக்கும். அது வேண்டுமானால் அம்பாளை
த்யானிக்க வேண்டும் என்று சாதகனுக்கு அழகாக ஆசை காட்டுகிறார் பட்டர் பெருமான்.
“ஸ்தனபார தலன்மத்ய
பட்ட பந்த வளித்ரயாயை” என்று சஹஸ்ரநாமத்தில் அவளை அர்ச்சிக்கிறோம்.
சாதகன் வழி தவறாது
இருக்க, இயற்கையாக மனதில் எழும் ஆசைகளுக்கு ஒரு சரியான வடிகால் வேண்டும். மாற்றி
மாற்றி சுழலுக்குள் இழுக்கும் இந்த உலகில் “பராஞ்ச்சிகானி வ்யத்ருத் ஸ்வபாவம்”
என்று நம் மனதை உபநிடதம் வர்ணிக்கிறது. வெளியில் பராக்கு பார்ப்பது தான் அதற்கு
வாலாயமாக வருமாம். அதை இழுத்துப் பிடித்து, அம்பாளிடம் கொண்டு சேணத்தில் குதிரை
பூட்டுவது போல பூட்டுகிறார்.. அவளிடமே நிலை நிறுத்துவோம்.
.... கண்மணி
28/7/21
அபிராமி அந்தாதி --
40
ஆளுகைக்கு, உன்தன்
அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன்
விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என்
குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு
தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே (39)
குறைவான
பொருட்களின் ஆசைகள் வைத்தால், அந்த ஆசையானது நம்மை நல்வழியில் இட்டுச்செல்லாது.
அதே, உயர்வான பொருட்களில் நம் ஆசை இருந்தால், அப்பொருளின் உயர்வு, நம்மையும்
உயர்வுக்கு இட்டுச் செல்லும். அம்பாளைத் தவிர வேறு ஒரு உயர்வான பொருள் இல்லை. அதனால்
தான் அவளை வித விதமாக த்யானிக்கக் கற்றுத்தருகிறார் நமக்கு. சென்ற பாடலில், அவள்
அழகை ரசித்து அவளை த்யானிக்க, அமராவதி ஆளும் இந்த்ர பதவியே பெறலாம் என்றார்.
இப்போது, மீண்டும்,
அவள் அருளைப் பெறுவது, அதனாலான பயன் சொல்கிறார். அமராவதி ஆளுவது இருக்கட்டும்,
அதற்கு முன் நான் ஆசைக்கடலில் அகப்படாமல் இருக்க, எனக்கு அக்கடலின் பிடியில்
இருந்து மீள உன் திருவடித்தாமரைகள் உள்ளன. நான் ஒரு வேளை அப்படி ஆசைக்கடலின்
அடியில் மூழ்கியவனாக இருந்தாலும், உன் வாசக்கமலங்களை என் சென்னியில் வைத்துக்
காப்பாய் என்று சொன்னார் இல்லையா? அதே எண்ணம் இப்போதும் வருகிறது அவருக்கு.
ஆசை ஒரு சுழல்.
அதன் பிடி, நாம் அறியாமலே நம்மை அதனுள் இழுக்கும். மனிதன் எனதால் துன்புறுகிறான்
க்ருஷ்ணா? என்று அர்ஜுனன் கேட்க, க்ருஷ்ணர் கூறும் இரு விஷயங்கள் என்ன தெரியுமா?
“காம ஏஷ:, க்ரோத ஏஷ:” என்ற பதில் தான். காமமும் க்ரோதமும் தான் ஒரு மனிதன்
சறுக்குவதற்கு முக்கிய காரணம். அதனால், அமராவதிப்பட்டணம் கிடைக்கிறதோ இல்லையோ,
நான் அடும் காலன் வரும் போது உன்னை நினையாமல் இருக்கக் கூடாதே என்று விசனப்பட்டார்
முன்பு. இங்கும் அதே நிலையில் தான் சொல்கிறார்.
உறுதி உண்டாயிற்று
அவருக்கு. நான் அழைத்தேன், அம்பாள் காப்பாள் என்ற உறுதி. உன் அடித்தாமரைகள் உண்டு
என்கிறார். முன்னே திருவடி சென்னியில் வையம்மா என்றார். இப்போது சொல்கிறார், உன்
திருவடி உண்டு, அதனோடு உபரியாக, உன் விழியின் கடைக்கண் பார்வை உண்டு அம்மா. அது
போதுமே அந்தகனாகிய எமன் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் அகப்பட மாட்டேன் என்று
சொல்கிறார்.
“சாகாது, எனையே
சரணங்களிலே கா கா நமனார் கலகம் செயும் நாள்” என்று அருணகிரிநாதர் கந்தர்
அநுபூதியில் இறைஞ்சுகிறார் இல்லையா? அடியார்கள் யாவருக்கும் பாருங்கள் ஒரே
விதமாகத் தான் சிந்தனை.
இங்கு பட்டர் பெருமான்,
அம்பாளின் கடாக்ஷ வீக்ஷத்தைப் பற்றி சொல்கிறார். திருவடிகளோடு, அவள்
அருட்பார்வையும் சேர்ந்து கிடைக்கும், அதனால், அந்தகனாகிய யமன் வரும் போது
பயமில்லாது போகும். பயம் இருந்தால் என்னவாகும்? நாம் இறைவனை நினைக்க மறப்போம்.
அதுவே பயமற்றி இருந்தால், எந்த அனுபவத்துக்கும், இறைவனின் நாமத்தை சொல்லிச்
சொல்லிப் பழகிய மனமாக இருந்தால், யமனே வந்த போதும், இறை நாமம் உள்ளே ஓங்கி
ஒலிக்கும்.
அடுத்து, மேல்,
இவற்றின் மூளுகைக்கு என் குறை, நின் குறை அன்று என்று சொல்கிறார். இங்கு அம்பாளின்
கடாக்ஷம் எப்போதும் இருக்கிறது. அதை உபயோகிக்காது போனால் அது என்னுடைய குறை தானே
அன்றி உன் குறை அல்ல என்று சொல்கிறார்.
“அனைய ஈசனும்,
அடைந்தவர்க்கு அருள் செய்வான், அகன்றவர்க்கு அருள் செய்யான்” என்கிறார், கைவல்ய
நவனீதத்தில். ஈறைவன் கர்ம பலன்கள் அருளுபவர். அதாவது செயலுக்கான பலன் தருவார்.
செயல் யார் செய்ய வேண்டும்? நாம் தான். அன்றி எல்லாம் அவன் பார்த்துப்பான் என்பது
சரியல்ல. முயற்சி செய்பவருக்குத்தான் பலன் கிடைக்கும். அதன் அடிப்படையில், உன்னை
நாடி உன் அருளைப்பெறாமல் போனால் அது என் குறை தான் உன் குறையன்று என்று
சொல்கிறார். அதனால் தான் உண்டு, உண்டு என்றால் முதல் வரிகளில். அவர் முயற்சி
செய்துகொண்டே தான் இருக்கிறார் என்பதால். இங்கு மேலான அருள் முக்தியே.
சூரியன்
ஒளிர்கிறது. அதன் வெளிச்சம் பொதுவாக எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. நான்
என் அறையின் கதவு, ஜன்னல் எல்லாம் மூடி வைத்து, திரையும் போட்டுவிட்டு, சூரியன்
எனக்கு அனுக்ரஹமே பண்ணவில்லை என்றால் சரியாகாது இல்லையா? அது போல, பாரபட்சமற்ற
கருணையை அம்பாள் காட்டுகிறாள். அவளை அறிந்து பூசித்து பயன் பெறுவது சாதகனின் கடமை.
இதை ஏன் சொல்கிறார்
என்றால், இந்தப் பிறவியின் பயனே, நம் அறிவின் துணை கொண்டு, குறையான குணங்களை எல்லாம்
களைந்து, மேலான அந்த பரம்பொருளை நாடும் இச்சை ஒன்றே கொள்ள வேண்டும் என்று
உணர்த்தத் தான்.
சரி, அப்படி நான்
முயற்சி செய்தால், அம்பாள் அருளுவாள். அவள் இந்த சமயம் எப்படி
த்யானிக்கப்படுகிறாள்? முப்புரமெரித்த, த்ரிபுராந்தகனாகிய ஈசனின் இடபாகம் உறைபவளாக
த்யானிக்கிறார். முன்பே சிந்தித்தோம், அவளை அர்த்த நாரீயாகத்தான் அதிகம்
பார்க்கிறார், அதற்கு முக்கிய காரணம், கீழான ஆசைகள் களையும் ஸ்வரூபம் அது என்று.
இங்கும், அதுவே காரணம்.
முப்புரம் என்பது,
ஒரு உருவகம். ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று கோட்டைகள், கோட்டைகள் போன்று
பலமாக நம்மைச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அவற்றை, மேருவை வில்லாகவும்,
மஹாவிஷ்ணுவை அம்பாகவும் கொண்டு, ஈசன் தகர்க்கிறார் என்பது ஒரு புராண உருவகக் கதை.
நம் மனத்தில் உள்ள
ஆசைகள், அவற்றால் உண்டாகும் கீழான குணங்கள் இவற்றை, அழித்துக் காக்கும் அந்த
ஈசனின் இடபாகம் உரையும் அம்பாளையே சதா சிந்தனை செய்து கொண்டிருக்க, ஆசையெல்லாம்,
அவள் மீதே வரும் என்பது திண்ணம்.
“தாபத்ரயாக்னி
சந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா”, “புண்யாபுண்ய ஃபலப்ரதா”, “த்ரிபுரா” போன்ற நாமங்கள்
சிந்திக்கத்தக்கவை.
.... கண்மணி
31/7/21
அபிராமி அந்தாதி --
41
வாள்-நுதல்
கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள்
அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய
எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே (40)
அம்பாளின் பரம
கருணையினால் இந்த உலக பந்தங்களில் இருந்து மீளலாம். அப்படி அவளின் அருளை
நாடாதிருந்தால் அது சாதகனின் குறைதான் என்று அவளின் ஸ்வபாவ கருணையை எண்ணினார்
சென்ற பாடலில்.
இங்கு, அவளை
எண்ணுவதற்கு புண்ணியம் வேண்டும் என்று சொல்கிறார். வாள் நுதல் கண்ணி என்றால், ஒளி
பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவள் என்று பொருள். த்ரி நேத்ரன் என்று
சிவனைக்குறிக்கிறோம். அம்பாளுக்கும் “த்ரையக்ஷரீ” என்ற நாமம் சஹஸ்ரநாமத்தில்.
முக்கண்ணி என்று இந்த பாடல்களிலேயே பின்னே சொல்லப்போகிறார். மூன்று கண்களுடைய
அவளின் மூன்றாவது கண்ணானது ஒளி பொருந்தியதாம். என்ன ஒளி? ஞான ஒளி. ஞானமே ஒளி.
அறிவொளியாய்த் திகழ்கிறாள் அவள்.
அறிவு இருக்கும்
இடம் ஆராதனைக்கு உரியது தானே!. அதிலும் அறிவோடு கருணையும் இருந்து விட்டால்?
கேட்கவே வேண்டாம். விண்ணோர்கள் அவளை உபாசிக்க ஆசைப்படுகிறார்கள். அவளை அறிந்து
பூசித்தாலும் அறியாமல் பூசித்தாலும் பலன் உண்டு. அவளை அறிந்து பூசித்தாலும்,
முக்தி நிலை என்பது அவள் அருளால், தூய உணர்வின் தத்துவங்கள் அறிவதால் வரும்.
அறிந்து பூசித்து
வானுலகம் பெற்றவர்கள் ஏன் அவளை வந்து இறைஞ்சிப் பேண எண்ணுவார்கள்? என்றால், என்ன
தான் விண்ணுலகம் அடைந்தாலும், “க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விஶந்தி” என்று
கீதையில் க்ருஷ்ணர் சொன்னது போல, புண்யம் அனுபவித்து தீர்ந்த உடன், மீண்டும் கர்ம
வினையின் படி ஒரு பிறவியை அடைவரே! அவ்விதம் அடையாமல் முக்தி நிலையான இனி பிறவா
வரம் அல்லவா பெரும் பேறு? அதற்காக, ஞானத்தை அடைய அம்பாளை விண்ணவர்களும் இறைஞ்சி
ஏத்துகிறார்களாம்.
அப்படி ஏத்தும்
அவள் பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாதவள் என்று சொல்கிறார். அண்மை என்றால்
அருகில். அருகில் காண்பதற்கு இல்லை அவள். யாருக்கு? பேதை நெஞ்சினருக்கு. பேதை
என்றால், அவளைப்பற்றிய அறிவைப் பெறாது, அல்லது அவள் மீது அசஞ்சல, மாறாத அன்பு
பூணாதவர்கள் பேதையர் என்று சொல்கிறார்.
“அந்தர்முக
சமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா” என்று அம்பாளை சஹஸ்ர நாமத்தில் சொல்கிறோம்.
அந்தர்முக என்றால், உள்ளே, ஹ்ருதயத்தில். அவளை இதயத்தாமரையில் வைத்துப் பூஜிப்பது
சுலபம், வெளியில் வைத்திருப்பவருக்குக் கடினம் என்கிறது இந்த நாமம். எதை வெளியில்
வைப்பது? எதை உள்ளே வைப்பது? என்றால், நம் மனதை. மனதை அவள் இருப்பிடமாக ஆக்கி,
உள்ளே அவளது கருணையை அனுபவிப்பது சுலபம்.
அதை விடுத்து, உலக
விஷயங்களில் செலுத்தி விட்டால், அகத்தில் அவளைக் காண்பது அரிது இல்லையா? மனம்
சுத்தமாக இருப்பது தான் முக்கியம். மனதின் சுத்தம் இல்லாதவர் பேதையர்.
அவர்களுக்கு, அம்பாளை மனதில் வைத்து அருகில் காணுதல் வாய்க்காது என்று சொல்கிறார்.
மனம் சுத்தமாக, ஆறு
பகையையும் ஓட்ட வேண்டும். காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாஸ்சர்யம் அந்த ஆறு
பகைவர்கள்.
இப்படி ஆறு
பகைவர்களை ஓட்டி, அதன் பின் ஐந்து அறிவுக்கருவிகளையும் அவளை நோக்கியே செலுத்தி,
அவள் மயமாகவே மனம் ஆவது என்பது எத்தனை கடினம்? அப்படி ஒரு கடினமான செயலை எனக்கு
சுலபமாக பண்ண முடிகிறது என்றால், அதற்கு நான் முன்னே பல கோடி ஜென்மங்களில் செய்த
புண்ணியம் தானம்மா காரணம் என்று சொல்கிறார்.
“பக்தப்ரியா”,
“பக்திகம்யா”, பக்திவஶ்யா” “மனோன்மண்யை”, தஹராகாஶ ரூபிணி போன்ற நாமங்களை
சிந்திக்க, அவளது இருப்பிடம் நம் மனதின் உன்மணியாக இருப்பதும், அப்படி அவளை
வைத்திருக்கும் பக்தன் அவளுக்குப் ப்ரியமானவர், பக்திக்கு அவள் ஆட்பட்டு வருவாள்,
பக்திக்கு மட்டுமே வசப்படுவாள் என்பதெல்லாம் புலப்படும்.
.... கண்மணி
1/8/21
அபிராமி அந்தாதி --
42
புண்ணியம்
செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய
கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து
தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம்
சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே (41)
ஒவ்வொரு பாடலிலும்
அம்பாளின் கருணை தன்னை என்ன செய்ய வைக்கிறது, அதனால் என்ன பயன் என்று வியந்து
வியந்து பேசுகிறார்.
இந்த பாடலில் அவளது
ரூப வர்ணனை, அவளது கண்களுக்கு. கண்கள் புதிய குவளை மலர்கள் போன்று இருக்கிறது.
குவளை என்பது அல்லியின் ஒரு வகை. அம்மலரைப்போன்று அவள் கண்கள் இருக்கிறதாம். அவள்
கணவரோடு கூடி, வருகிறாள். அவரோ, சென்னிறமேனியனாக இருக்கிறார்.
எதற்காக வந்தார்கள்
அவர்கள் இருவரும்? நம் பொருட்டு. அடியார்களுக்காக வருகிறார்கள். வந்து செய்வது
என்னவென்றால், நல்லோரிணக்கத்தில் நம் பக்தன் இருக்க வேண்டும் என்று தம் அடியார்கள்
நடு இருக்கப் பண்ணுகிறார்கள்.
பக்தன் ஆகி அவளை
ஹ்ருதயத் தாமரையில் வைத்து வழிபட பல ஜென்ம தவம் செய்திருக்க வேண்டும் என்றார்.
அப்படி செய்ய முடியாத பேதையர் பலர் இருக்கிறார்கள் என்றார். விண்ணோர்களும் அவளை
பூஜிக்க விரும்புகிறார்கள் என்றார்.
ஹ்ருதயத்தில் இன்று
வைத்து நன்கு பூஜித்து விட்டு, நாளை உலக இன்பங்களில் ஆட்பட்டு விடலாமா? இது
தற்போதைய “Course” போன்று, ஒரு நாள், ஒரு வாரம், இப்படியா? என்றால்,
இல்லை. இந்த உலக மாயை மிகப்பொல்லாதது. ஒரு முறை அந்த பக்தன் தன்னிடத்தில் மாறாத
அன்பு பூண்டவன் என்று தெரிந்து விட்டால், ஈஸ்வரனும் தாயாரும், சேர்ந்து வந்து
குழந்தையை பள்ளியில் சேர்க்கும் தற்கால பெற்றோர் போல, பத்திரமாக வளரவேண்டுமே இந்த
பக்தி என்னும் அருமையான குணம் என்று அக்கறையோடு, அடியார்க்கூட்டத்தில்
சேர்க்கிறார்களாம்.
“ஒன்று கேள் மகனே!
புமான் முயற்சியால் உறைத்து மாநுடர்க்கு ஈசன்,
நன்று செய்யவே
காட்டிய நூல்வழி நடந்து நல்லவர் பின்னே
சென்று துட்டவாதனை
விட்டு ஜெனித்த மாயையைத் தள்ளி
நின்று ஞானத்தை
அடைவர், பவங்கள் போம் நிச்சயம் இது தானே”
என்று கைவல்ய
நவனீதம் சொல்கிறது.
மனிதன் தன்
முயற்சியால் தான் சுழலில் அகப்பட்டிருக்கிறோம் என்று கண்டு அறிந்து, இறைவனை அடைய,
அவர், குருவையும் சாஸ்த்ர நூல்களையும் அருளி, அவனுக்கு இந்த சுழலில் இருந்து
விடுபடும் பேரறிவை வழங்கி, அது மட்டுமின்றி, நல்லவர் பின்னே சென்று தன் தீய
குணங்களையெல்லாம் விட்டு, மாயையை கடக்க அருளுவார் என்று சொல்கிறார்.
என்ன ஒரு கருணை????
இது தாயாரைத்தவிர யாருக்கு வரும்? தன் மீது பக்தி பூணும் சாதகன், தன்னையே அனன்ய
பக்தியோடு பூஜிப்பதற்கு அவனுக்கு சூழல் நன்கு அமைய வேண்டுமே என்று, தான் மட்டும்
கூட இல்லை, கணவரோடு வந்து நல்லோர் கூட்டத்தில் இருக்க அருளுகிறாள் என்று சொல்கிறார்.
அம்பாளின்
பாதகமலங்களினை தலையில் வைத்து அருள்வது இதற்காகத்தான் என்று சிலாகிக்கிறார்.
வாஸக்கமலம் என் தலை மேல் வைக்க வேண்டும் என்று கேட்டாரே!. அவள் வைக்க என்னவெல்லாம்
நடக்கும் என்று நினைத்து, ஆன்ந்தித்து, ஏ மனமே, நீ மிகவும் புண்ணியம்
செய்திருக்கிறாய் இப்பெரும் பேறு கிடைக்க என்று மனதைப்பார்த்து சொல்வதாக
இருக்கிறது.
“தவஹி சரணா ஏவ
நிபுணா” என்று அவளது திருவடித்தாமரைகளின் மகிமையை ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில்
வியக்கிறார். அவள் திருவடிகளுக்கு மட்டுமே இந்த பிறப்பு இறப்பைக் கடக்கச்செய்யும்
சக்தி இருக்கிறது என்று சொல்கிறார்.
தாயுமானவரும்
மலைவளர்காதலி பதிகத்தில், “கறையுண்ட கண்டர் பால் அம்மை நின்தாளில் கருத்தொன்றுமே
உண்டாகுமேல், எனக்கு மதியுண்டு, பதியுண்டு, புத்திரர்கள், மித்திரர்கள்,
பக்கமுண்டு, பவிசுண்டு, தவிசுண்டு, யமபடரென் திமிரணுகாக் கதிருணு, ஞானமாம் கதிருண்டு,
சதிருண்டு காய சித்திகளும் உண்டு என்று வியக்கிறார் இல்லையா?
அம்பாளை
உபாசித்தால், என்னதான் கிடைக்காது? அழியா முக்தி ஆனந்தமே நம் வேண்டுதலாகட்டும்.
.... கண்மணி
2/8/21
அபிராமி அந்தாதி --
43
இடங்கொண்டு விம்மி,
இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு
இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை
நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல்
பணிமொழி--வேதப் பரிபுரையே (42)
அடியார்க்
கூட்டத்தோடு சேர்க்க அம்மையும் அப்பனும் சேர்ந்து வந்தார்கள். அப்படி வந்ததற்கு
பெரும் புண்ணியம் செய்திருக்கிறோம் மனமே என்று வியந்தாரல்லவா? இப்போது அப்படி வந்த
அன்னையின் ரூப வர்ணனை மீண்டும் சொல்கிறார்.
ஒவ்வொரு முறை
அம்பாளின் ரூப வர்ணனை வரும் போதும், அவளது ஸ்தன பாரமும், அவள் கொங்கைகள் மலை
போன்று இருக்கிறது, பருத்து இருக்கிறது, பாரம் இருகிறது என்று சொல்வதும், அப்படி
பருத்து மலை போல இருக்கும் நாமறிந்த பொருட்களின் இயல்பான கடினத்தன்மை இல்லாது,
குழைந்து இருக்கிறது என்றும் சொல்கிறார்.
உருவாய், அருவாய்
என்று தான் இறைவனை பெரியோர்கள் வர்ணிக்கிறார்கள். உள்ளான், பின் இல்லான்.
பரம்பொருளுக்கு, மேலான பேரறிவுக்கு உண்மையில் உருவம் இல்லை. ஆனால், ஈஸ்வரனை நாம்
உணர, நம் அறிவின் பிடிமானத்துக்கு உருவம் அவசியமாகிறது. அந்த வகையில், அம்பாளின்
உருவத்தில், எல்லா ஆச்சார்யார்களுமே வியப்பது அவளது குழைந்த பெருமுலைகள் தான்.
முன்னே பார்த்தபடி,
இப்பெரு முலைகள், மலை போன்றிருப்பது, அவளது கருணை மலை தான். கருணை காட்ட வேண்டிய
விஷயங்கள் நிறைய இருப்பதால், அவளது கருணையில் அளவை உருவகப்படுத்த அக்கருணை
சுரக்கும் ஸ்தானமானது பெருத்து இருக்கிறது. அது கருணை நிறைந்ததாலேயே குழைந்தும்
காணப்படுகிறது.
அந்த ஸ்தனகளின்
மேல் அழகான வடம் அணிந்திருக்கிறாள். முத்து வடம். முத்து என்பது குளிர்ச்சியான
ஒன்று. இடபாகம் அவளுக்கு, இடம் கொண்டவள். இணை கொண்டு இறுகியவள். அவள் கணவருடன்
இணைந்து பிறிவற்ற ஒன்றாகவே இருப்பவள். அவள் கொங்கைமலை இளகி குழைந்து இருப்பதும்,
அவ்விளகிய கொங்கையின் மீது, குளிர்ச்சியான முத்து மாலை தொங்குவதும் மேலும் அவளை
குளிர்விக்கிறது.
இறைவர் வலிய
நெஞ்ச்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி அவள் என்கிறார். ஈசனின் இடப்பாகத்து
நேரிழையே என்றார் இல்லையா முன்பு? ஈசர், இடப்பாகம் தந்து, அவளது அந்த கருணா
விலாசம் பொருந்திய பெருமுலைகள் வழியாக, சுரக்கும் அன்பைக் கண்டு, அவர் நெஞ்சை அவள்
ஆள அநுமதித்தாராம். அன்பு ஒரு பெருநதி போல பாயும் போது அது ஈசனது உள்ளத்துள்ளும்
நிறைந்து தேங்குகிறது.
கொள்கை என்பது
இங்கு அவளது பதிவிரதா தர்மத்தைக் குறிக்கிறதாம். அவள் நல்லரவின் படம் போன்ற ஒரு
இடையாபரணம் அணிந்திருந்தாள் என்று 37வது பாடலில் சொன்னார் இல்லையா? அதே தான்
இங்கும் உதாரணம் சொல்கிறார். நல் அரவின் படங்கொண்ட அல்குல் என்று சொல்கிறார்.
அல்குல் என்பது இடையின் இறுதியில் குறுகிய பாகம் அது தான் அல்குல் என்ற சொல்லுக்கு
பொருள். அந்த இடையின் ஆபரணம் ஒரு நாகத்தின் படம் போன்ற வடிவில் இருக்கிறது.
அம்பாளின் மேனியில் என்று சொல்கிறார்.
இந்த பாடலில்,
அம்பாளை வேத பரிபுரையே என்றழைக்கிறார். வேதத்தின் முழுமுதல் பொருளான,
ப்ரம்மஸ்வரூபிணி அவள் தான் என்பதால், வேத பரிபுரை என்று அவளைப்போற்றுகிறார்.
பரிபுரை என்பது ஒரு ஆபரணம். அவளது கால்களில் சிலம்பாக அணிந்திருப்பது பரிபுரை. அவை
வேறு ஒன்றும் அல்ல, வேதங்களையே என்று சொல்கிறார். முன்னரே அவளது திருவடிகள்,
வேதங்களின் கர்ம காண்ட, ஞான காண்டங்களைக் குறிக்கும் என்று பார்த்திருக்கிறோம்.
அதையும் நினைவில் கொண்டு சிந்திக்க நலம்.
“ஸர்வாபரண பூஷிதா,
ஶிவகாமேஸ்வராங்கஸ்தா, ஶிவா ஸ்வாதீன வல்லபா”, , “ரத்ன கிங்கிணிகாரம்ய ரசநா தாம
பூஷிதா” போன்ற நாமங்கள் அம்பாளின் அலங்காரங்களை சிந்திக்க ஏதுவாயிருக்கும்.
“யோனிமுத்ரா” என்ற நாம்மும் சிந்திக்கத் தகுந்த்து.
“ஸர்வ வேதாந்த
ஸம்வேத்யா, ஸத்யான்ந்த ஸ்வரூபிணீ” என்ற நாமமும் அவள் வேத பரிபுரை என்று
சிந்திப்பதற்கு ஏதுவாகும்.
வேத விழுப்பொருள்
அவள் பாதம் பணிவோம்.
.... கண்மணி
3/8/21
அபிராமி அந்தாதி --
44
பரிபுரச் சீறடிப்
பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி,
சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை
அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி,
இறைவர் செம்பாகத்து இருந்தவளே (43)
மேலும் ரூப வர்ணனை
விரிகிறது. அம்பாளை அவர் எப்படிப்பார்க்கிறார் என்பது மேலும் சொல்கிறார்.
வேதங்களையே
காற்சிலம்புகளாக அணிந்த அம்பாளின் கரங்கள், பாசம், அங்குசம் என்ற இரு விஷயங்களைக்
கொண்டுள்ளது. பாசாங்குசங்கள் பெரும்பாலும் எல்லா தெய்வ வடிவங்களுக்கும்
சொல்லப்படுகிறது.
நம் இக உலகப்
பொருட்களின் பற்று பாசம் எனவும், அதை அங்குசம் என்னும் ஆயுதத்தின் துணைகொண்டு
யானையை அடக்குவது போன்று ஆசைகளை பற்றுகளை அடக்குவது அவள் அருளால் நடக்கிறது என்று
குறியீடு.
நிறைய பொருள் ஆசை
வருகிறதா? அதையெல்லாம் அவளுக்கே அர்பணிக்க வேண்டும்.
நிறைய அலங்கார ஆசை
வருகிறதா? அவளுக்கே அலங்காரங்கள் செய்து பார்த்து இன்புற வேண்டும், நிறைய சாப்பிட
ஆசை வருகிறதா? அவளுக்கே ப்ரசாதங்கள் வித விதமாகச் செய்து அர்பணித்து இன்புற
வேண்டும். ஒரு கேள்வி வரும், நாம் அர்பணித்துப் பின் நாமே தானே சாப்பிடுகிறோம்,
அனுபவிக்கிறோம் என்று.
இப்படி
அர்பணித்துப் பெறும் ப்ரசாதங்கள் அடியார்கள் அனைவருக்கும் வினியோகிக்கவும்
வேண்டும். எதுவானாலும், இறைவனுக்கு என்பது அந்த மூர்த்தியின் முன் வைத்துப்
படைப்பது அல்ல. அது ஒரு உருவகம். படைத்து விட்டு, இல்லாதோருக்கும், இயலாதோருக்கும்
கொடுக்க வேண்டும். ஒரு நல்ல நாளின் நாம் அம்பாளுக்குப் புடவை சாத்துகிறோம்.
அவளுக்கு சார்த்திய
புடவையை, அம்மாதிரி வாங்க இயலாத அவளது பக்தர் ஒருவருக்கு வழங்க, அவ்வுள்ளத்தில்
தோன்றும் உவகை அம்பாளையே நேரில் பார்ப்பதற்கு சமம் இல்லையா? இதையே அத்தனை ஆசைக்கும்
பொருத்தி இயன்ற போது அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தலாமே!
பஞ்ச பாணி அவள்
என்பது முன்னரே பார்த்திருக்கிறோம் விளக்கமாக. இன்சொல் சொல்பவள் அவள். ம்ருது
பாஷிணி என்று புகழ்கிறார்கள் அவளை அறிஞ்சர்கள். அவள் சொற்கள் இனிமையாக இருக்கிறது.
நமக்கு என்ன
செய்தி? அவளே, அத்தனை பராக்ரம சாலிக்கே! இந்த ஈரேழு உலகங்களையும் ஆளும் அவளுக்கே
சொற்கள் கடுமையாக இல்லை எனும் போது, சிறு சிறு பதவிகளில் நாம் இருந்துகொண்டு,
அவளது இன்சொல் பேசும் தன்மையை உள்வாங்காமல் இருத்தல் ஆகாது என்பது தான்.
அவரது பிடித்த
வர்ணனையான சிந்தூர மேனியள் என்று இங்கும் சொல்கிறார். முன்னொரு சமயம், வஞ்சகமான
எண்ணத்தோடு அசுரர்கள் துன்புறுத்திய போது,
ஈசன், மேரு மலையை வில்லாக, மஹாவிஷ்ணுவை அம்பாக உருவகித்து, அந்த மாயையினால்
உண்டாக்கப்பட்ட முப்புரங்களை எரித்துத் தகர்த்து அசுரர்களைக் கொன்று
நல்லோரைக்காத்தார். அந்த த்ரிபுராந்தகனின் செம்பாகம். செம்பாகம் என்றார் சரியான
பாகம். சரிபாதி என்று பொருள். செம்பாகம் கொண்டவள் அம்பாள் என்று ஈசனின்
பராக்ரமத்தை நினைவுக்கு கொண்டு வருவதோடு, அப்படிப்பட்ட பராக்ரமத்தை செய்யும் கணவன்
உள்ளவள் என்று அவளை போற்றுகிறார்.
த்ரிபுரா,
த்ரிஜெகத்வந்த்யா, சாந்திமதீ, சாந்தா, ஶிவ வாமாங்கஸ்தா, பஶுபாஶ விமோஸினீ, மத்யமா,
வைகரீரூபா, போன்ற நாமங்கள்
சிந்திக்கத்தக்கவை
.... கண்மணி
4/8/21
அபிராமி அந்தாதி --
45
தவளே இவள், எங்கள்
சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு
அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர்
யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு
தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே (44)
மாத்தவளே என்றார்
முன்னே 13வது பாடலில். மிகப்பெரிய தவமியற்றுபவள். தவம் என்றாலே யாரை நினைவு
கூறலாம்? சிவபெருமானின் உருவகம் தான் முதலில் வரும். அவர் ஞான உருவானவர். தவத்தில்
எப்போதும் தன்னில் இன்புற்றிருப்பவர். மாதவ நெறியில் இருப்பவர். அவரது மனையாள்.
மனை மங்கலம் என்றால், இல்லத்துக்கு மங்களம் சேர்க்கும் மனைவியானவள் என்று பொருள்.
பெரும் தவச்சீலரின்
மனைவியும் பெருந்தவம் செய்பவளாக இருப்பது இயல்பே. அவள், உமையாக இருக்கும் போது
மனைவியாகவும், அன்னை லலிதாம்பிகையாக இருக்கும் போது அவளே மூவரையும் தோற்றுவித்தவள்
என்பதால், மூவர்க்கும் அன்னையாக இருப்பவளாகவும் இருக்கிறாள். அந்த வகையில், சக்தி
லலிதையின் மகன்களாக ப்ரம்மா விஷ்ணு சிவன் மூவரும் சொல்லப்பட்டிருப்பதால் அவள்
ஈஸ்வரனின் தாயாகவும் இருக்கிறாளாம்.
இப்படி இவளே
மூவர்க்கும் அன்னையாக விளங்குபவள் ஆதலால், இறைவர்க்கெல்லாம் இவளே மேலானவள்.
இங்கு, ஒரு
குழந்தையின் மன நிலையில் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பொருளிலும், தன்னிடம் உள்ளதே
உயர்ந்தது என்ற மனநிலை ஒரு குழந்தைக்கு இருக்கும். அப்பா என்றால், என் அப்பா தான்
உயர்ந்தவர், அம்மா, என்றாலும் அதுவே. கொண்டிருக்கும் விளையாட்டுப்பொருட்களில் கூட,
எனது தான் சிறந்தது என்ற எண்ணம் இருக்கும். இங்கு அன்னையின் சேயாய், அவள் தான்
அகில உலகத்துக்கும் அன்னையாக இருக்கின்ற காரணத்தால், அவள் தான் அனைத்திலும்
சிறந்தவள் என்று சொல்கிறார். உண்மையும் அது தான் என்றாலும், பக்தனின் மன நிலையை
நோக்க உதாரணம் சொல்லப்பட்டது.
இவ்வளவு பெரிய ஒரு
தெய்வத்தை நான் என் இதயத்தாமரையில் ஒளிரும் விளக்காக வீற்றிருக்க வைத்து அவள்
திருவடிகள் என் சென்னியிலும் வைக்க, இனி ஒரு தெய்வம் இருக்குமோ நான் தொண்டு செய்ய?
இருக்காது. நான் இனி ஒரு தெய்வத்தைத் தொழுது துவள மாட்டேன் என்று அவரது உறுதியை
மேலும் கூறுகிறார்.
மாறி மாறி வருகிறது
அவரது நன்றியும், அதன் பயனாக, அவளது காட்சியும், அதன் வர்ணனையும், அதிலிருந்து
மீண்டும் அவளது தொண்டும், அதன் பயனும், இப்படி அவரது மன ஓட்டங்களைக் கவனிக்க
வேண்டும் நாமும். ஈசனுடன் உறவு, அதனால் அன்பு பூண்டு தொண்டு, தொண்டினால், அகத்தில்
தெளிவு, தெளிவினால் அவரது தரிசனம், அத்தரிசனத்தினால் நன்றி, மீண்டு தொண்டு,
இப்படிச் சுழல வேண்டும் நாமும். அன்றி, உலகியல் மாயையில் சிக்கினால், நம் பிறவி
வீண்தானே!
சிந்திப்போம்...
... கண்மணி
5/8/21
அபிராமி அந்தாதி --
46
தொண்டு
செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார்
உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது
கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும்
பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே (45)
பண்டு என்றால்,
முன்பு என்று பொருள். முன்பிருந்த பக்தர்கள் உனக்கு தொண்டு செய்யாது, உன் பாதங்கள்
தொழாது, தன் இச்சை எதுவோ அதன் படி உன்னைத் தொழுதார்களோ அல்லது, முறைப்படி உன்னைத்
தொண்டு செய்து, பாதம் தொழுது துதித்தார்களோ? எனக்குத் தெரியாது என்கிறார்.
உபாசனையில் 4
வகைகள் உண்டு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பது அதன் பெயர்கள். சரியை என்பது
தாசனாக தொண்டு செய்வது. கிரியை என்பது சேயைப் போல தொழுவது. யோகம் என்பது இணையாக
தோழைமையுடன் பக்தி செய்வது, ஞானம் என்பது, உண்மைப் பொருளின் அறிவைப் பெற்று,
அறிவின் துணைகொண்டு ஆன்ம ஐக்யத்தை உணர்ந்து அதன்பின்னும் இறைவனுக்கு தொண்டு
செய்வது.
முன் இருந்தவர்கள்
இப்படி வகுத்து வைத்த முறைகள் படி உன்னைத் தொழுதார்களா அல்லது இச்சையின் போக்கில்
உன்னைத் தொழுதார்களா என்று தெரியவில்லை. நான் அவர்களை ஒட்டி, என் இச்சை போல சில
நேரங்களில், குரு சாஸ்த்திரங்களில் சொன்ன படி முறையாக உன்னைத் தொழாமல் இருந்து
விட்டால், அது குற்றமா? என்று அன்னையைக் கேட்கிறார்.
சில முறைகளில்
செய்யப்படும் பூஜைகளில் சடங்குகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். பாமரனாக
இருப்பவர்களுக்கு அந்தச் சடங்குகள் பெரும்பாலும் புரியாது, கடைப்பிடிக்கவும்
மாட்டார்கள். தேசங்களும் காலங்களும் ஆசாரங்களை மாற்றவும் செய்கிறது. அப்படி, ஏதோ
ஒரு சமயம் சொன்ன ஒரு சில சடங்குகள் தவறினாலும், ஈஸ்வர ஆராதனை குறைபடுமா? என்பது
நிறைய பக்தர்களின் கவலை தான். அதைத் தான் அவரும் கேட்கிறார்.
கண்ணப்பருக்கென்ன
ஆசாரம் தெரிந்தது? அவருக்கு ஈஸ்வர அனுக்ரஹம் எப்படிக் கிடைத்தது? பக்திக்கு
சடங்குகளை விட ஶ்ரத்தை தான் முக்கியம். எந்த அளவுக்கு அன்பு பரிமாறப்ப்படுகிறதோ
அந்த அளவுக்கு அந்த உறவு பலப்படும். இது மனித உறவுகளுக்கே உண்டு என்றால்,
இறைவனுடனான உறவுக்கு கேட்கவா வேண்டும்? சும்மாவே “கருணா ரஸ ஸாகரா” என்று
சஹஸ்ரநாமம் சொல்கிறது. அதிலும் பக்தனிடம். பக்தப்ரியா இல்லையா?
அதனால் தான் உடனே
சொல்கிறார், அம்மா, அப்படி நான் என் இச்சைப் படி முன்னோர்கள் வகுத்த நெறிகள்
தெரியாமல் ஏதாவது தொண்டு செய்திருந்தால், அதில் பிழை இருந்தால், நீ அதைப்
பொறுத்துக்கொள், என்னை வெறுத்து விடாதே என்று.
வெறுப்பாளா
அம்பாள்? வெறுக்க முடியுமா? என்று கேள்வி வரும். இந்த விருப்பு, வெறுப்பெல்லாம்
யாருக்குத் தெரியும்? சாதகனுக்கு. அதாவது மனிதனுக்கு. நமக்குத் தெரிந்த விஷயத்தை
வைத்துத் தானே நாம் உயர்ந்த பரம்பொருளையும் பார்ப்போம்? அந்த மனநிலையை அவர் இங்கு
வெளிப்படுத்துகிறார்.
Intention என்பது நாம் என்ன உள்ளார்ந்து நினைக்கிறோம்
என்பது. Instinct என்பது
சட்டென்று செய்யப்படும் செயல். கண்ணப்பர் செய்த சட்டென்ற செயல்லுக்குப் பின் நல்ல
உயர்ந்த எண்ணம் இருந்தது இல்லையா? அது போல, என் ஆசாரக்குறைவுகளுக்கும் பின்னே உன்
அன்பு என்ற ஒரு உயரிய காரணம் இருக்கும் அம்மா என்று சொல்கிறார் இங்கு.
நமக்கும் அதுவே
அறிவுரை. உயர்ந்த எண்ணகளோடு செயல்கள் புரிவோம். சடங்குகள் கொஞ்சம் குறைந்தாலும்
அன்பும் அன்பினால் விளைந்த பக்தியும் தான் இறைவனை அறியும் வழி. அறிய அன்பு
பெருகும். அன்பு பெருக அறிவு விசாலமாகும். காண்பதெல்லாம் இறைக்காட்சியாகும்
"நிற்பதுவே
நடப்பதுவே பறப்பத்வே !! நீங்களெல்லாம் சொப்பனம் தானா? வெறும் தோற்ற மாயைகளோ"
என்றாரே பாரதி? அனைத்தும் மாயத்தோற்றம். அவளே சத்யம். “சத்யப்ரஸாதினி”
“விஸ்வஸாக்ஷிணீ” “ஸாக்ஷிவர்ஜிதா” என்றெல்லாம் அவளைக் கொண்டாடுகிறோம்.
.... கண்மணி
1/8/21
அபிராமி அந்தாதி --
47
வெறுக்கும்
தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை
புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும்
திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள்
செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே (46)
முன்பே சொன்னது
போல, அம்பாளிடம் பட்டர் கொண்டிருக்கும் உணர்வு பெரும்பாலும், தாயும் சேயும்
போன்றதே என்றே எண்ணத்தூண்டுகிறது அவரது சொற்கள்.
நான் ஒரு வேளை
உன்னைச் சரியாக தொண்டு செய்து தொழாதிருந்தால், நீ என்னை வெறுக்காமல் ஏற்க வேண்டும்
என்றார் இல்லையா?
இப்போது, தான்
செய்வது தகாத செயலாக இருந்தாலும், அதைப் பொறுத்துக்கொள்வது அவளது கடமை என்பது போல
பேசுகிறார். அத்தனை உரிமை. மகனோ மகளோ நமக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்தால் என்ன
செய்வோம்? ஒவ்வொரு தலைமுறை ஒவ்வொரு விதமாக கையாண்டது. சாம தான பேத தண்டம் என்று
நால்வகை வழிகளையும் கையாண்டு பார்ப்போம்.
ஒன்றுக்கும்
கட்டுப்படவில்லை என்றால், பின், இது தான் ஸ்வபாவம் என்று ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும் ஏனென்றால், செய்கை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த ஜீவனின் மீது
உள்ள அன்பு மாறுவதில்லையே!
மானிட உறவுக்கே
இத்தனை அனுசரணை வரலாம் என்றால், “கருணா ரஸ ஸாகரா” என்ற பெயர் கொண்ட அந்த
கருணைக்கடல் என்ன செய்ய வேண்டும்? அதைத்தான் சொல்கிறார், மிக்கோர் பொறுக்கும்
தகைமை புதியதன்றே! என்று. அறிவில் சிறந்தவர்கள், சற்று புத்தியில் குறைவுள்ளவர்கள்
தெரியாமலோ தெரிந்தோ செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொள்வது ஒன்றும் புதிய
விஷயமல்லவே? என்று கேட்கிறார்.
தான் தவறு
செய்வதும் இயல்பு, அதை அவள் பொறுத்துக்கொள்வதும் இயல்பாம். யாரிடம் இப்படி பேச
முடியும்? அம்மவைத்தவிர? அதனால் தான் இந்தப்பிள்ளையின் புலம்பல்கள் ரசிக்கும்படியாக
இருக்கிறது.
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு ரூபமாக அவர் வர்ணிப்பது சிறப்பு. இங்கு புது நஞ்சை உண்ட கறுக்கும்
திருமிடற்றான் இடப்பாகம் கலந்தவளே என்று அழைக்கிறார்.
புது நஞ்சு
என்றால், அப்போது பழைய நஞ்சும் இருக்குமா? என்றால், பாற்கடலில் கடைந்து அப்போது தான்
வேதனையினால் வாசுகி புதியதாக கக்கியதால், அது புதிய நஞ்சாம். அந்த நஞ்சை விழுங்க
அத்தன் முற்பட, அப்படி ஏதும் செய்தால், ஒரு மிடற்று உள்ளே போனாலும், உலக உயிர்கள்
ஒன்று கூட மிஞ்சாதே என்று பாய்ந்து வந்து அந்த மிடறு, விழுங்கப்படாமல் பிடித்தது
அம்பாள் தானே?
அதனால், நஞ்சின்
வண்ணம் கழுத்துக்கு வந்து, கருநீலமாக ஆனது கழுத்து. அவரது இடபாகம் சேர்ந்தவளோ
பொன்னிறமாக மின்னுகிறாள். “ஶிவ வாமாங்கஸ்தா” சிவனின் இடபாகம் உறைபவள் என்கிறது
சஹஸ்ரநாமம்.
பொன் என்று சொன்னது
உயர்ந்த அவளது கருணையையும், அவளது வெளிப்புற தோற்றத்தையும் குறிக்கும்.
சரி, அப்படி உனக்கு
என்னை மன்னிக்கும் அளவுக்கு பெரிய மனது இல்லை, நீ என் தவறை மன்னிப்பதை மறுப்பாய்
என்றாலும், நான் என்ன செய்வேன் தெரியுமா? உன்னை வாழ்த்துவேன் என்று சொல்கிறார்.
இது என்ன
முரண்பாடு? நமக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களைத்தானே வாழ்த்துவோம்?
என்றால், இரு காரணங்கள் வாழ்த்த. ஒன்று, அவள் மீது எதிர்பார்ப்பில்லாத அநன்ய
பக்தி, அன்பு அவருக்கு உள்ளது. அவள் இது செய்தால் தான் அவள் மீது ப்ரியம்
என்பதில்லை. அவளை அவளுக்காகவே நேசிக்கும் அன்பு பூணும் பக்தன்.
இன்னொன்று,
ஈஸ்வரனின் தண்டமும் கருணை தான் என்பது ஒரு கருத்து. நமக்கு ஒன்று ஆசை. அது கிடைக்க
ஈஸ்வரனிடம் முறையிடுகிறோம். அவரோ கர்ம பல தாதா. அதாவது, நாம் செய்யும்
செயல்களுக்கான புண்ய பாப பலன்களைத் தருபவர். சில சமயம், நம் வினைப்பயனால், நாம்
ஆசைப்பட்டது கிடைக்காது விபரீதமாக ஏதாவது கிடைத்தாலும், அவரைப்பொருத்தவரை நம்
கர்மாவின் பலனைத் தந்தார். அந்த பலனைத் தந்ததால், நமக்கு பலன்கள் அனுபவிக்கப்பட்டு
கர்மா தீருகிறது. இது அவரது பெருங்கருணை.
அது போலத்தான்,
அம்பாளும், நம் மீது அன்பு வைத்து இருந்தாலும், நமது கர்ம வினைகளின் பலனையே
தருவாள். அது கசப்பானாலும் சரி ஏற்க வேண்டும். ஏனென்றால், அதுவே அவளது கருணை. நாம்
அப்படி அனுபவிக்கும் சமயம், அவள் கருணை நம் உள்ளத்தில் தைரியம் என்ற வடிவில்
இருக்கும். இதை உணர்ந்து தான் உன்னை வாழ்த்துவேன் என்று சொல்கிறார்.
.... கண்மணி
7/8/21
அபிராமி அந்தாதி --
48
வாழும்படி ஒன்று
கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று,
விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை
எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு
நடுவே கிடந்து சுடர்கின்றதே(47)
அன்னையை, தன்
குறைகள் பொறுக்காது மறுக்கும் தகைமைகள் செய்தாலும் நான் வாழ்த்திக்கொண்டு
தானிருப்பேன் என்று சேயின் அன்புப்பிடிவாதம் சொன்னார். அப்படி வாழ்த்துவது
என்றால், அவளையே பணிந்து போற்றி பாடி, அவள் நினைவாகவே இருப்பது. அப்படி இருக்கும்
அன்பருக்கு தான் யார் என்பதை அன்னை குருவின் மூலம் நன்கு உணரச்செய்வாள்.
உயர்ந்த
மெய்யறிவையும் இறைவனின் ஸ்வரூபத்தைப்பற்றிய ஞானமும் பெற்ற ஒருவன் இனி இந்த
பூவுலகில் வாழ்வது என்பது ஒரு லீலைதான். எந்த விஷயங்களும் அவனை பாதிக்காது.
மெய்யறிவின் தன்மை, மற்ற சிறிய விஷய இன்பங்கள் தோன்றாமல் செய்வது தானே!
அன்னையைப்
புஜித்து, அப்படி வாழும் வழியைக் கண்டு கொண்டேன் என்கிறார். அது மட்டுமல்ல. அந்த
வழி தெரிந்துவிட்டால் ஒருவர் வீழல் என்பது நடக்காது. அந்த மெய்யறிவின் சக்தியினால்
ஏறுமுகம் தான் எப்போது. ஏறுமுகம் என்றால், இறையுணர்வில் சதா நிலைத்து நின்று
நிலையான பேரின்ப நிலையடைந்த ஒரு வாழ்க்கைமுறை. அதனால், கீழான ஆசைகளோ, அல்லது கீழான
பொருட்களினால் உண்டாகும் பாதிப்போ இருக்காது மனதில்.
சரி, அப்படி ஒரு
நிலை உண்டென்றால் அது எப்படி இருக்கும்? என்று யாராவது கேட்டால், அந்த
மெய்ப்பொருளைப்பற்றி சொல்லிவிட முடியுமா? என்றால் இல்லையாம். விள்ளும் என்றால்
விளக்கிச் சொல்லுவது. அதுவோ மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத பெரும்பொருளாக
இருக்கிறது. “மனோவாசாமகோசரா” என்பது அவள் நாமம். அகோசரம் என்றால் எட்டாது. மனோ,
வாக், அகோசரா, என்றால், மனதுக்கும் வாக்குக்கும் எட்டாதவள் என்று பொருள். அதனால்
விள்ளும்படி சொல்ல முடியாதாம். உடைத்துச் சொல்வது என்றொரு வழக்குச்சொல் உண்டு
இல்லையா? அது மாதிரி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா அவளை இப்படித்தான் என்றி சொல்ல
முடியாது.
வேலை நிலம் ஏழு
என்பது கடல் சூழ்ந்த த்வீப பூமிகள் ஏழு என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன இந்த
பூமியை. அந்த ஏழு பூமிகளையும். ஏதோ இந்தியாவில் மட்டும் இல்லை. க்ரீன்லேண்டுக்கும்
இவளே தாய். க்ரீன் லேண்ட் மட்டுமா, 14 உலகங்களுக்குத் தாய் என்றார் இல்லையா?
அந்த ஸப்த
த்வீபங்களில், எட்டு பெரிய மலைகள் (பருவரை எட்டும்) உள்ளன, அவற்றில் எல்லாம்
இருப்பது அன்னையே என்கிறார்.
நம்மால்
எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இல்லாது, ஆனால், அனாயாசமாக நம்மை தன் சுடரொளியால்
எட்டும் சூரிய சந்திரர்களுக்கிடையேயும் அன்னையே இருக்கிறாள் என்று சொல்கிறார்.
அன்னையை அவர் எல்லா
உலகங்களிலும் இருக்கிறாய் என்று சொன்னதே போதாதா? மீண்டும் மீண்டும் ஏன் அதிலும்
இதிலும் இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றும். இவையெல்லாம் சீரிய உபாசனை
முறைகள். வேத மந்த்ரங்களில் இப்படிப்பட்ட உபாசனை முறைகள் நிறைய
சொல்லப்பட்டிருக்கின்றன.
சாதகனின் மனமானது
பல விஷயங்களில் சென்று கொண்டிருக்கும். ஒரு ரூபமோ அவனது தணியாத தாகத்துக்கு ஈடு
செய்யாது. இயற்கையாகவே வெளியில் செல்லும் மனதை, அந்த வெளியில் இருக்கும் ஒவ்வொரு
பொருளையும் நினைத்து, அதில் சக்தியான லலிதாம்பிகையே நிறைந்து இருப்பதாக த்யானம்
செய்வது விஸ்வரூப உபாசனை.
பூமி (ஏழு பூமிகள்,
பெருவரை), நீர் (கடல் சூழ்ந்த ஏழு நிலம்), நெருப்பு (சூரிய சந்திர்ரின் சுடர்),
சுடர்க்கு நடுவே வெளியென்று அத்தனை பூதங்களிலும் அன்னையின் இருப்பைக்காண்பது ஒரு
விதமான உபாசனை.
“ஈஶாவாஶ்யம் இதம்
சர்வம்” என்று உபநிஷத் சொல்கிறது. அனைத்திலும் வ்யாபகமாக இருப்பது அந்த மேலான
பரம்பொருளே என்பதை உணர வேண்டும்.
சூழும் சுடர் என்று
சொன்னது, இரவையும் பகலையும் உண்டாக்கும் கிரணங்கள் என்று பொருளாம்.
“மேருநிலையா”,
“சந்த்ர மண்டல மத்யகா”, “ஸுமேரு மத்யஸ்ருங்கஸ்த்தாயை” என்றெல்லாம் அம்பாளைத்
தொழுகிறோம் ஸஹஸ்ரநாமத்தில்.
இருப்பதெல்லாம்
இறைவனே!!
.... கண்மணி
8/8/21
அபிராமி அந்தாதி --
49
சுடரும் கலைமதி
துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப்
பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து
இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும்
குருதியும் தோயும் குரம்பையிலே (48)
எல்லாமே அவள் தான்
என்ற பொருள் பட, சென்ற பாடலில், அன்னையை அறிந்தவர் அதை விளக்கிச்சொல்ல அவள்
மனவாக்குகளுக்கு எட்டாத பெரும்பொருள் என்றார். மீண்டும் அவளை த்யானித்து அப்படி
அறிந்தவர் பெரும் பலன் என்னவென்று சிந்திக்கிறார்.
மீண்டும் மீண்டும்
சொன்னது போலவே இருந்தாலும், இந்த நூறு பாடலும், ஒரு குழந்தை தாயை இழந்து, பின்
அடைந்து, மீண்டும் இழந்து விடுவோமோ என பயந்து, பின் தாயினால் பேணப்பட்டு,
அவளருளால் மீடும் அவளை அடைந்து, அடைந்த இன்பம் நுகர்ந்து அனுபவிக்கும் அழகை
ரசித்தோமானால், சொன்னதே சொன்னது போலத் தோன்றாது. ஏனென்றால், ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிலையில் மனம் இருப்பது நாம் அறிந்ததே.
அம்மாவை அவர்,
ஒன்று உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவளாய்ப் பார்ப்பார், அல்லது அய்யனுடன்
திருமணக்கோலத்தில் பார்ப்பார், அல்லது அம்மையப்பனாக ஏக உருவில் செம்பாதி இருவருமாக
பார்க்கிறார். இந்த பாடலில் மீண்டும் அத்தனின் வர்ணனை.
நன்கு குளுமையான
கிரணங்களைக்கொண்ட சந்திரனைச் சூடியிருக்கும், மலை போன்று உயர்த்திக்கட்டியிருக்கும்
குன்றனைய சடையுடன் கூடிய ஈசனுடைய இடபாகத்தில், பரிமளக் கொடி போன்று மெல்லியலாளாக,
பச்சையம்மையாகப் படர்ந்து அவருடன் இணைந்து இருக்கிறாள்.
இப்படி
அம்மையப்பனைத் த்யானம் செய்யும் பலன், கீழான ஆசைகள் தவிரும் என்று முன்னமே
சொன்னேன். அப்படித் த்யானம் செய்து பார்க்கும் ஒரு சாதகன், கீழான ஆசைகள்
விடுப்பான் ஆகையால், இப்படி நெஞ்சில் இந்த இணையை நினைத்தவர், எத்தகைய இடரும்
வராமல் காக்கப்படுவார்கள். ஏனென்றால், இடரென்பதே அவர்களுக்கு உணர முடியாத ஒன்றாகி
விடும். இமைப்போதிருப்போர் என்கிறார். எப்போதும் என்று பொருள்.
அப்படி எப்போதும்
அம்மையப்பனையே நெஞ்சில் வைத்தவர் மீண்டும் ஒரு ரத்தமும் சதையும் அழுக்கும் கொண்டு
கருவறைக்குள் புகுவாரோ? என்று ஆட்சேபமாக கேட்கிறார். புகமாட்டார் என்று பொருள்.
“முக்தாயை”,
“க்ஷிப்ரப்ரஸாதின்யை”, “அஜ்ஞானத்வாந்த தீபிகாயை” என்றெல்லாம் அவளைக்
கொண்டாடுகிறோம். அவள் அருளே வேண்டி, அவள் நினைவே கொண்டு, அவள் செயலே புரிபவர்,
மீண்டும் பிறவார் என்பது அவளது பெருவரம். அதையே பட்டரும் உறுதிப் படுத்துகிறார்.
“எந்தையிடத்தும்
மனத்தும் இருப்பாள்
எண்ணுபவருக்கருள்
எண்ணமிகுந்தாள்
மந்திர
வேதமயப்பொருளானாள்
மாதா ஜெய ஓம்
லலிதாம்பிகையே”
என்கிறாரே
அகஸ்த்யர். நினைவெல்லாம் அவளே நிறைப்போம். கிடைத்த இப்பிறவியின் அரும்பேறடைவோம்.
.... கண்மணி
9/8/21
அபிராமி அந்தாதி --
50
குரம்பை அடுத்து
குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து
மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து
அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-
நரம்பை அடுத்து இசை
வடிவாய் நின்ற நாயகியே (49)
மீண்டும்
பிறவாதிருப்பான், அம்பைகையை சதா நினைத்துக்கொண்டிருப்பவன் என்று சொன்ன கையோடு,
ஒருவேளை, அந்த த்யானத்தில் குறையுள்ள சாதகனாக இருந்தால் என்னாவது என்று
இரக்கத்தினால், அப்படி இருந்தாலும் அம்பாளின் அருள் எப்படிக்கிடைக்கும் என்றும்
சொல்கிறார்.
குரம்பை எய்துவரோ?
என்று கேட்டு, பின் குரம்பை எய்திய இந்த பிறவியின் இறுதியில், வினைகளின் முடிவு
வரும் சமயம், யமனுடைய வேலையைச் செய்ய அவர் வரும் சமயம், அந்த வெங்கூற்று என்று
சொல்லப்படும், கொடுங்கோபமான கூற்றுவனின் வருகையை எண்ணி அஞ்சிக்கொண்டு
இருப்பேனேயாகின், நீ வருவாயே என்று வியக்கிறார்.
எப்படி வருவாள்?
அவளது சேனைப்பரிவாரங்கள் தாங்கும் அரம்பையர் என்று சொல்லும் தேவலோகப் பெண்கள் சூழ,
வந்து அவளது வளை பொருந்திய அழகிய கைகளைக் காட்டி அபயம் தந்து, அஞ்சேல் என்று
அருளுவாள் என்கிறார்.
வந்த அவளது உருவ
வர்ணனையோ, அவள் இசைக்கருவிகளில் உள்ள நரம்புகளின் இசைவடிவாக, அத்தனை இனிமையானவளாக
இருக்கிறாள் என்கிறார்.
வாழ்நாளெல்லாம்
அவளையே நினைத்திருந்தால் தானே, அவள் கூற்றுவன் வரும் சமயம் வரும் அழகை
ரசித்துப்பார்க்க முடியும்? மனம் அமைதியாக இருக்கும். அம்மா, அப்போது அழைத்தாலும்
செல்ல, பிள்ளை தயாராக இருக்கும். அப்படிச்செல்லும் போது பின் பயம் ஏன் என்ற கேள்வி
வரும். கூற்றுவனின் உருவத்தின் தன்மை சொல்லவே இங்கு மறுகுதல் சொல்லப்பட்டது.
அன்னையின் இசைவடிவ உருவம் அறிய முடிறது என்றால், எப்பேர்ப்பட்ட ஆழ்ந்த நிலையில்
சாதகன் இருப்பார், அவரை அன்னை வந்து அஞ்சேல் என்று சொல்லும் போது!
32வது பாடலில்
சொன்னார், அந்தகன் கையில் அகப்படும் நேரம் உன் வாஸக்கமலம் என் சென்னியில் வைத்து
ஆண்டாய் என்று. 33வது பாடலில், அடும் காலன் வந்து எனை நடுங்க, நீ அஞ்சேல் என்பாய்
என்றார். ஒப்பிட வேண்டும். மரண பயம் என்பது மனிதர்கள் யாவருக்கும் இயற்கை
என்பதும், அது அன்னையின் அருளால் தான் நீங்கும் என்பதும் எத்தனை முக்கியம் என்பது,
ஒரு விஷயத்தையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணத்தில் சொல்வதனால் உணர்தல்
வேண்டும்.
“ரம்பாதி வந்திதாயை”
என்று அம்பாளை அழைக்கிறோம். “அபயா” என்பதும் ஓரத்தக்கது.
.... கண்மணி
10/8/21
அபிராமி அந்தாதி --
51
நாயகி, நான்முகி,
நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி,
சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி,
வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண்
நமக்கே (50)
இசைவடிவாய்
நிற்கும் அம்பாளைப் பல ரூபங்களில் துதிக்கிறார் இந்தப்பாடலில்.
நான்முகி –
ப்ரஹ்மாவின் சக்தியாய் இருக்கிறாள். ப்ராம்மி என்ற பெயரில் இருப்பாள். நான்முகனாக
ப்ரஹ்மா இருப்பதால், அவரது சக்தியின் பெயர் நான்முகி என்றார். இவளே காகினி என்றும்
சொல்வது. ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் ஆறு இதழ் கொண்ட தாமரையில் வீற்றிருக்கிறாள்.
ஸ்வாதிஷ்டானம் என்ற சக்ரம், ஸ்ருஷ்டிக்கான சக்ரம். “சதுர்வக்த்ர மனோஹரா” என்கிறோம்
ஆயிரம் நாமங்களில்.
நாராயணி –
மஹாவிஷ்ணுவின் சக்தியாக இருந்து ஸ்திதி என்று சொல்லும் பரிபாலிக்கும், காக்கும்
சக்தியாக இருகிறாள். நாராயணனுக்குத் தங்கையாகவும் புராணங்கள் சொல்லும்.
நளின கை பஞ்ச சாயகி
– மெல்லிய அழகான கைகளில், பஞ்ச பாணங்களான ஐந்து மலரம்புகள் வைத்திருக்கிறாள். பஞ்ச
பாணங்களின் தன்மையும் அதன் புராண கதையும் சிந்தித்திருக்கிறோம்.
சாம்பவி – சம்பு
என்பது ஈசனின் பெயர். அவரது சக்தியாக இருப்பதால் சாம்பவி என்று அவள் பெயர்.
ஸ்ருஷ்டி, ஸ்திதி
லயம் என்னும் முத்தொழில்களுக்கும் ஆதார சக்தியாக அம்பாளே இருப்பதால், அவளே
ப்ரஹ்மா, விஷ்ணு சிவன் மூவரின் சக்தியாக இருக்கிறாள்.
சங்கரி என்றால்,
மங்களத்தை, சந்தோஷத்தை, இன்பத்தைத் தருபவள். சாமளை என்பது அவளது ஒருவித கரும்பச்சை
நிறம். ஸ்யாமளா தண்டகம் என்று ஸ்லோகம் இயற்றியிருக்கிறார் அல்லவா அன்னையின் மீது
காளிதாசர்? இந்த ரூபத்தை ஆதாரமாக வைத்துத் தான் அது.
சாதி நச்சு வாயகி
என்பது, நல்ல சாதிப் பாம்பை, வீர்யமான விஷம் உடைய வாய் உள்ள பாம்பு. அதை அணிகலனாக
அணிந்திருப்பவள். அகி என்றால் பாம்பு. வாயில் நச்சு உள்ள ஜாதிப்பாம்பு. இங்கு
பாம்பு என்பது நம் உலக இச்சையின் உருவகம்.
மாலினி என்பவள்
மாலான சம்சாரத்தில் இருந்து மீட்பவள். வாராகி என்பது அம்பாளின் ஒரு வடிவம்,
பண்டாசுர வதத்தின் போது வாராகியின் பராக்ரமங்களை தேவி பாகவதம் மிக அழகாகச்
சொல்லும்.சப்த மாதர்களில் வாராகியும் ஒரு சக்தி.
சூலம் தரித்ததால்
சூலினி, மதங்க முனிவரின் மகளாக அவதரித்ததால் மாதங்கி.
“மாதா மரகத ஶ்யாமளா
மாதங்கி மதஶாலினி” என்று ஶ்யாமளா தண்டகம் அம்பாளை அழைக்கிறது இல்லையா?
இப்படிப்பலவடிவினளாகி,
ஆதியுமாகியவள் அன்னையே. அவள் இருதாள் நமக்கு அரண் என்று சொல்கிறார்.
அம்பாளின் இரு
தாள்கள் பக்தனை எல்லா துன்பங்களில் இருந்தும் காக்கும் என்று முன்னும் பார்த்தோம்.
“ப்ரஹ்மாண்யை”,
“வைஷ்ணவ்யை”, “விஷ்ணுரூபிண்யை”, “மஹேஶ்யை”, “மங்கலாக்ருத்யை”,
“பஞ்சஸங்க்யோபசாரிண்யை”, “மாலின்யை” “சூலின்யை” “வாராஹ்யை” என்று எல்லா நாமங்களுமே
ஸஹஸ்ரநாமங்களின் வெளிப்பாடு தான்.
நாமம் சொல்வோம்.
நம்மை மறப்போம். பாவம் தொலைப்போம், பாதம் சேர்வோம்.
.... கண்மணி
11/8/21
அபிராமி அந்தாதி --
52
அரணம் பொருள்
என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய
முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என
நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி
இரண்டும் எய்தார், இந்த வையகத்தே (51)
முப்புரங்கள் என்று
மூன்று வித கோட்டைகள். பொன், வெள்ளி, இரும்பு என்று மூன்று உலோகக்கோட்டைகளைக்
கொண்டு, அவையே உறுதியானவை என்று இந்த உலகைத் துன்புறுத்தி வந்த அசுரர்கள்,
வித்யுன்மாலி, தாரகாக்ஷன், வாணன் மூவரையும், அந்த கோட்டைகளையும் அழித்து
உலகைக்காத்தனர், சிவபெருமானும், மஹாவிஷ்ணுவும் என்பது புராணக்கதை.
புராணங்கள்
தத்துவங்கள் விளங்க வைக்க, கதைகளாகச் சொல்லும் தன்மையுடையது. பொருட்பற்றே
உயர்ந்தது என்று எண்ணி அவற்றைச்சேர்ப்பதிலேயே குறியாக இருப்பதே அசுரத்தனம். அப்படி
அல்ல, அந்த பொருட்பற்று முக்தியைத் தாராது என்று அவற்றை அடியோடு அழிப்பதே இறைவனின்
கருணை. அதைச் செய்த நாராயணனும், ஈசனுமே அன்னையை வணங்கி சரணம் சரணம் என்று
துதிக்கிறார்கள் என்று சொல்கிறார்.
முன்பே 7வது
பாடலில் சொன்னார், மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடி
அவளுக்கு என்று.
ஆச்சார்யார்,
சௌந்தர்ய லஹரியில், அவளது பாத தூளியை எடுத்து அதைக்கொண்டு தான் ப்ரம்மா இந்த உலகை
உருவாக்குகிறார், மஹாவிஷ்ணுவோ, அப்படி உருவாக்கப்பட்ட உலகை சுமக்க முடியாமல்
சுமக்கிறார், ஹரனோ, அந்த தூளியையே பஸ்மமாக, உடல் முழுதும் பூசித்திரிகிறார் என்று
அம்பாளின் பாத தூளியின் மஹிமையை 2வது ஸ்லோகத்தில் சொல்கிறார்.
அப்பேற்பட்ட
சரணங்களைத் தொழுத அன்பர்களுக்கு என்ன கிடைக்கும்? மரணம், பிறவி இரண்டும் எய்தார்
இந்த வையகத்தே என்கிறார்.
இது என்ன? ஒன்று
மரணம் எய்தாமல் யாண்டும் இருப்பார் என்று சொல்ல வேண்டும், இல்லையென்றால், பிறவி
அடையார், யாண்டும் அன்னையுடனே இருப்பார் என்று சொல்ல வேண்டும். இரண்டும் எய்தார்
என்றாள் என்ன அர்த்தம் என்று தோன்றுகிறது இல்லையா?
அது தான் முக்தி
நிலை. இந்த பிறவியே ஒரு மாயத்தோற்றம். பிறக்கவே இல்லை, பின் தானே மரணம், மரண பயம்,
மரணத்துகுப்பின் உள்ள லோகங்கள், அவற்றிலிருந்து மீண்டும் வருதல் எல்லாமே!!!
29வது பாடலில்
சொன்னதை நினைவு கூற வேண்டும், சித்தியும் தரும், முத்தியும் தரும் அன்னையின்
திருவடி என்றார் இல்லையா? முக்தி என்பது அடையப்படும் விஷயம் அல்ல. இங்கேயே இப்போதே
உணர்வது. அறிவினால் அறியப்படுவது. நான் பிறவாத பரம்பொருள். இறவாத பெரும்பொருள்,
யாண்டும் இருக்கும் தூய உணர்வு என்று உணர்வதே முக்தி. நான் எப்படியோ அப்படியே
அனைத்தும் என்பது தான் உண்மையான விடுதலை.
இப்படி அறிந்தபின்,
அழியும் பொருட்களான பொன்னும் மணியுமா நாடும் இந்த மனம்?
“த்ரிஜகத்வந்த்யாயை,
ப்ரஹ்மாதி வந்திதாயை, என்று ஆயிரம் நாமங்களிலும், “ஹரிப்ரஹ்மேந்திர ஸேவிதாயை”
என்று லலிதா த்ரிசதீயிலும் தொழுகிறோம்.
“தாபம் நீக்கியே
எனைத் தாங்கும் துர்க்கையே” என்று துர்காஷ்டகத்தில் பாடுகிறோம். தாபங்கள் வருவது
பொருளாசையினால் தான். முக்திக்கு அவையே தடை.
.... கண்மணி
12/8/21
அபிராமி அந்தாதி --
53
வையம், துரகம்,
மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம்,
பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
ஐயன் திருமனையாள்
அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும்
தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே (52)
முன் பாடலில்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார் என்றார். இந்த பாடலில், அன்னையின் அன்புக்குப்
பாத்திரமானவர்களின் இகலோக அடையாளங்கள் என்ன என்று சொல்கிறார்.
வையம் என்றால்
தேர், துரகம் குதிரை. மதகரி என்பது மதம் கொண்ட யானை. மதம் என்பது இங்கு வீரம்மிக்க
என்று பொருளுக்கு சொல்லப்பட்டது. மா மகுடம் என்றால் மணிமகுடம், சக்ரவர்த்திகள்
அணியும் பெரிய மகுடங்கள், சிவிகை என்பது பல்லக்கு. பெய்யும் கனகம் என்றால்,
வீரத்தினால் விளைந்த வெற்றிக்காக, தோற்ற தேசத்து அரசன் கட்டும் திரைப்பணம்.
பெருவிலை ஆரம் என்றால், மிக உயர்ந்த ரத்தினங்களால் ஆன ஆரங்கள்.
மேற்சொன்ன
அடையாளங்கள் எல்லாம் ஒரு மாபெரும் ஸாம்ராஜ்யத்தை ஆளும் சக்ரவர்த்தியின் வெளிப்புற
அடையாளங்கள். இந்த பாடலை இரு விதமாக கொள்ளலாம். ஒன்று, அம்பாளை ஜென்மாந்திரங்களில்
பூஜை செய்து கொண்டே இருப்பவர்களுக்கு இந்த மாதிரி செல்வச்செழிப்பு எப்போதும்
கிடைக்கும் என்பது ஒரு பொருள்.
இன்னொன்று, இந்த
மாதிரி செல்வங்கள் அனைத்தும் ஸ்தூலமாக கிடைத்தாலும், ஒன்றுமே இல்லாது போனாலும்,
இவையனைத்தும் இருப்பது போன்ற ஒரு ஆனந்த நிலை கிடைக்கும் என்றும் கொள்ளலாம்.
ஒரு பொருளை
அனுபவிக்க அதை உடையவராகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அனுபவம்
என்பது பொருளால் அல்ல. மனதால். மனம் தான் அனுபவத்தை நமக்கு ஆனந்தமாகவும்
துக்கமாகவும் மொழிபெயர்க்கிறது.
இன்றைய கால
உதாரணங்களாகச் சொன்னால், ஒரு BMW காரில் பயணம்
செய்கிறோம். சுகமாக இருக்கும். பயணத்தின் போது நமக்கு அதன் உரிமையாளர் என்ற
அந்தஸ்து இல்லாது போனால் சுகம் கொஞ்சம் குறைவாக கிடைக்குமா? இல்லை. ஒரே அனுபவம்
தான். அந்த பொருள் எனது எனபதில் ஒரு சுகம். ஆனால், பயணத்தில் கிடைக்கும்
சுகத்துக்கு இந்த எனது என்ற எண்ணம் தேவையில்லை இல்லையா?
அது போல, நமக்கு
சுக அனுபவங்கள் வர அனுக்ரஹம் தான் வேண்டும். பொருள் அல்ல, அதன் மீது நமது என்ற
எண்ணமும் அல்ல. இதையே கார் இருந்தும் வெளியே போக இயலாத சூழலில் உரிமையாளர் இருக்கிறார்
என்று நினைத்துப்பார்த்தால், பொருள், உரிமை இரண்டுமே சுகத்துக்கு காரணம் அல்ல,
அனுக்ரஹம் தான் வேண்டும் என்பது இன்னும் புரியும்.
பலவித விஷயங்களை,
உயர்ந்த பொருட்களைச் சொன்னது, அப்படி உயர்வான ஆனந்தம் கிடைக்கும்.
“ஸாம்ராஜ்யதாயினி” என்று சொல்கிறோம் அவளை. என்ன ஸாம்ராஜ்யம்? மோக்ஷ ஸாம்ராஜ்யம்
உத்தமம். தேவைப்படுவோருக்கு ஜனகர் போல, ஸாம்ராஜ்யத்தையும் தந்து மோக்ஷத்தையும்
தரவல்லவள் அவள்.
அவளது ரூபம்
பிறைசூடன் திருமனையாளாக த்யானிக்கிறார்.
“ஸர்வமங்கலாயை,
ஸர்வ ஸௌக்யதாத்ர்யை, ஹ்ரீங்கார பரசௌக்யதாயை” என்றெல்லாம் த்ரிசதீ சொல்கிறது அவளை.
அவள் பாதம் சரண்
புகுந்து ஆனந்தம் அடைவோம். பிறவா ஆனந்தம் அடைவோம்.
.... கண்மணி
13/8/21
அபிராமி அந்தாதி --
54
சின்னஞ் சிறிய
மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய
முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய
குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி
இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே (53)
அம்பாளைச் சரணம்
என்றடைந்தவர் பிறவா பெருநிலை அடைவார், அவளை நேசிக்கும் அன்பர்கள் அவளது
திருவடிகளால், பெரும் செல்வங்கள் பெருவர், பெரும் செல்வங்களிலேயே பெரியதான அழியா
முக்தியும் அடைவர் என்று சொன்னார்.
இப்போது அவ்வாறு
அம்பாளையே நினைத்துக் கொண்டு இருப்பதற்கு அவளைத்யானம் செய்வது ஒன்றே வேலையாக கொள்ள
வேண்டும் என்று சொல்கிறார்.
எப்படித்யானம்
செய்வது. ரூப வர்ணனைகளை ஒவ்வொரு பாடலிலும் சொல்கிறார். அங்கங்கு த்யானத்துக்கான
ரூபங்களையும் சொல்லிக்கொண்டு வருகிறார்.
9வது, 37வது, 42வது
பாடல்களில் அம்பாளின் பெரும் ஸ்தனங்கள் அதில் ஆரங்கள் குறித்த ரூபம்
சொல்லப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. அதே போல, இங்கும் அம்பாளின் கருணாம்ருதம்
பொங்கும் முலைகளும், அதன் மீது தவழும் ஆரங்களும், அழகிய பிச்சிப்பூ வைத்துத் தைத்த
கரிய நிறக்கூந்தல் அழகும் சொல்கிறார். “நீபஸ்ரகாபத்த சூலீஸனாதத்ரிகே” என்று கதம்ப
மலர் சூடிய கரிய கேசங்கள் அலைபாய்கின்றன என்று ஶ்யாமளா தண்டகத்தில் வர்ணிக்கிறார்
காளிதாஸர்.
கண்கள் மூன்று
இருக்கிறது அம்பாளுக்கு என்கிறார். “த்ரிநயனா”, “த்ரிலோசனா”, “த்ரயம்பிகா” என்று
ஸஹஸ்ரநாமத்திலும் சொல்லப்படுகிறது.
இப்படி, கரிய
கூந்தலில் அழகிய பிச்சிப்பூ சூடிய, மூன்று கண்களுடன் கூடிய, முத்தாரங்கள் அணிந்த
அம்பிகையின் வடிவத்தையே மனதில் இருத்தி த்யானித்துக் கொண்டிருப்பவருக்கு, அதிலும்
ஏகாந்தமாக, தனியே இருப்பவர்க்கு இத விட ஒரு பெரும் தவம் வாய்க்காது என்று
சிலாகிக்கிறார்.
ஏன் தனியே இருக்க
வேண்டும்? கூடியிருந்து குளிரச்சொன்னாளே ஆண்டாள் நாச்சியார்? சத்சங்கத்வே
நிஶ்சங்கத்வம் என்றாரே சங்கரர்? தவத்துக்கு சொல்லவில்லை.
பக்தியில் இருவகை
உண்டு. ஒன்று நல்லோர் இணக்கத்துடன் நல்ல செயல்கள் புரிந்து, இறைவனுக்கு தொண்டு
செய்து, இறைவனை முழுமையாக உணர முற்படும் பொருட்டு அவர் மீது பாடல்கள் பாடி, அவரது
பெருமைகளை அறிந்து பூசிப்பது.
அடுத்து, அவ்வாறு
செய்து, மனம் பக்குவம் அடைந்த பின், அவ்விறையின் பேராற்றலை உள்ளத்தில் இருத்தி,
அந்த மேலான பரம்பொருளை, அதன் உண்மை ஸ்வரூபத்தை அறிந்ததை சதா இடைவிடாது சிந்தித்து,
அவ்விறையும் தன் உண்மை ஸ்வரூபமும் வேறல்ல என்று அறிந்து த்யானத்தில் இருப்பது. இது
தான் தவம்.
ஒன்று வேலை,
இன்னொன்று சாதனை. வேலை செய்யும்போது கூட ஆட்கள் வேண்டும். சாதனைக்கு, கூட
ஆட்களைக்குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த உடனிருக்கும் மனிதர்களிடம் நாம்
பூணும் அன்பானது நம்மை பந்தப்படுத்தி, இறையின் சிந்தனைக்குத் தடையாக்கும்.
தடையேற்பட்டால், மீண்டும் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு, மனம் வருந்தும்.
அதனால் தான் தன்னந்தனியே தவம் இருக்கச்சொன்னார்.
உறவுகள் நமது
வினைகளைக்களையவே அருளப்பட்டுள்ளன. சுகமும், துக்கமும் வருவது நமது பிறப்பினால்
உண்டான உறவுகள், நாமே ஏற்படுத்திக்கொண்ட நட்பு, உறவு இவற்றால் தான். ஒரு உறவு
மட்டுமே நிரந்தரம். அது இறையுடனானது. இதை மட்டுமே சதா நினைப்பது நலம்.
“தன்னை அறிந்தார்,
தலைவன் மேல் பற்று அலது பின்னையும் ஒரு பற்று உண்டோ? பேசாய் பராபரமே” என்றார்
தாயுமானவர்.
பட்டரின் தவ
அநுபவம் நமக்கும் வாய்க்க வேண்டும் என்று வேண்டுவோம்.
.... கண்மணி
14/8/21
அபிராமி அந்தாதி --
55
இல்லாமை சொல்லி,
ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில்
நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர்
தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த
திரிபுரை பாதங்கள் சேர்மின்களே (54)
சென்ற பாடலில்,
அம்பாளை, அவளது உருவத்தை, மனதில் இருத்தி, தன்னந்தனியே த்யானிப்பவர்க்கு இது போன்ற
ஒரு அருமையான தவம் வேறு இல்லை என்றார்.
இப்படி தனியே
தவமியற்றச் சென்றால், நான் வாழ்வியலுக்கான பொருளுக்கு என்ன செய்வது என்று யாராவது
கேட்டுவிடக் கூடாதல்லவா? அதற்காக, இந்த பாடலில், பொருளும், பொருளின் மீதுள்ள மருள்
நீக்கும் வித்தையை அவள் தனக்குச் செய்தாள் என்று சொல்கிறார்.
பொதுவாக, உலக
காரியங்கள், அதாவது, வ்யாபாரம், அலுவலக வேலை போன்றவற்றைத்தான் பொருள் வரக்கூடிய
சாத்யங்கள் இருப்பதால், மதிக்கப்படுகின்றன. தவம் என்று சொன்னால், அதை ஏதோ ஒரு
நாளில் ஒரு 5 நிமிடம் செய்தால் போதாதா? நாள் முழுதுமா செய்யப் போகிறோம் என்று
தோன்றுகிறது.
உலகத்தாரும்,
இப்படி தவமியற்றுவோரைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். இப்படி சதா
தவமியற்றிக்கொண்டிருந்தால், குடும்பமும் புரிந்து கொள்ளாது. வரவு என்ன என்று
பார்க்கும் சமூகம் இல்லையா? இப்படி இருக்க, நானோ நித்தம் அன்னையையே எண்ணி என்
காரியம் யாவையுமே தவமாகச் செய்கிறேன். என்னிடம் பொருள் இல்லை. ஆனால் அளவிடற்கரிய
அருள் உண்டு.
என்ன அருள்
தெரியுமா? என்னிடம் இருக்கும் பொருள் இல்லாமையே எனக்கு தெரியாது. யாராவது
கொடுப்பார்களா? என்றால், என் மனம் என் வறுமையை அறியாது. ஏனென்றால், அதில்
முழுதும், அன்னையைக்குறித்த எண்ணங்கள் நிறைந்து இருப்பதால், அடுத்த
வேளையைப்பற்றிக் கவலை இல்லை. நான் காலம் உணரவில்லை. பசியில்லை. பசித்தால் தானே,
தவத்திலிருந்து எழுந்து, பொருள் தேடுவது?
அப்படி எழுந்து
சென்று யாரிடமாவது பொருளுக்காக காரியங்கள் செய்தாலோ, அவர்கள், எப்படிப்பட்டவர்களாக
இருப்பார்கள்? நிச்சயம் என் போல் நீடுதவம் இயற்ற முடியாது. ஏனென்றால் உலக
எண்ணங்கள் அல்லவா ஆக்ரமித்திருக்கும்? எப்படிப்பொருள் சேர்ப்பது? எப்படி சுகம்
பெறுவது என்றிருப்பவர்கள், தவமியற்றக் கற்காத கயவர்கள். ஏன் கயவர்கள்?
கயமை என்றால்,
தனக்கிட்ட பணியை நிறைவேற்றாதவர். ஏமாற்றுபவர். இந்த ஜீவனின் தலையாய பணியானது,
இறைவனை சதா மனதில் இருத்தி, அந்த சிந்தனையிலேயே இருப்பது தான். அதை செய்யாது,
வாழ்வியல் காரணங்களுக்காக தொழில்கள் செய்தாலும், அவை நல்ல தர்ம்மான காரியங்களாக்
இருந்தாலும் கூட, கயவர்கள் தான். இவையெல்லாம் பட்டர் பெருமானின் பார்வையில், .
சரி, அப்படிப்பட்ட
அம்பாளையே சதா நினைக்காதிருக்கும் கயவர்களிடம் என்னை செல்லும்படி வைக்காதது,
வேதமாதாவாகவே இருக்கும் அன்னையின் பேரருளே என்கிறார். அதனோடு, என்னைப்பார்த்து
கற்றுக்கொள்ளுங்கள், நீங்களும் அன்னையைக் குறித்தே சித்தம் செலுத்த உங்களுக்கும்
இதே போன்று அடுத்தவரிடம் பொருளுக்காக செல்ல வேண்டியிராது என்கிறார்
நம்மைப்பார்த்து.
இது எதற்கு
சொல்லப்பட்டது என்றால், என்னால் தவத்துக்கு எல்லாம் நேரம் செலவழிக்க முடியாது,
எனக்கு ஆசை இருந்தாலும், நான் சம்பாதித்தால் தானே எனக்குப் பணம் கிடைக்கும்?
என்றெல்லாம் தோன்றும் சில சமயம். அப்போது, நான் சம்பாதிக்காமல், அடுத்தவரிடம்
யாசகம் பெற்று எப்படி வாழ முடியும்? அதனால், முதலில், என் கடமைகள், அவற்றின்
மூலம், பொருள் ஈட்டுதல் இவையெல்லாம் நிறைவேறிய பின், அன்னையின் த்யானத்தில்
அமரலாம் என்று அது ஏதோ ஒரு Post Retirement Plan போல வைத்திருக்க வேண்டியதில்லை.
அன்னையை த்யானம்
செய்பவருக்கு வாழ்வியல் தேவைகளில் அடுத்தவரிடம் சென்று நிற்கும் நிலை வராது என்று
அவர் உறுதி கூறுகிறார். இப்போது தான் சொன்னார், 52வது பாடலில், ஒரு
சாம்ராஜ்யத்தின் தலைவன் போன்று வாழ்க்கையின் சுகங்கள் அளிப்பாள் என்று.
அன்னையின் மீது இடையறாத
சிந்தனை, பக்தி, புறவுலக பற்று நீக்கும், அதனால், அப்படி இடைவிடாத சிந்தனை செய்ய
இயலாதோரிடம் சென்று இரந்து நிற்க வேண்டியதில்லை, நம் தேவைகளை அன்னையே பூர்த்தி
பண்ணுவாள் என்பது கருத்து.
“மலர் மிசை ஏகினான்
மாணடி சேர்ந்தார்
நில மிசை நீடு
வாழ்வார்”
நிலமிசை நீடு
வாழ்தல், பணக்காரர்களா? பண்பாளர்களா? என்று சிந்திக்க வேண்டும். செல்வம் அழியும்
தன்மையுடையது. அழியாதது முக்தி ஆனந்தமே.
“ஸர்வஜ்ஞே ஸர்வவரதே
ஸர்வதுஷ்டபயங்கரி
ஸர்வதுக்கஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
என்று
போற்றுகிறோம். உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாய், அனைத்து வரங்களையும் அளிப்பவளாய்,
அனைத்து துன்பங்களையும் பயங்கரியாக இருந்து நீக்குபவளாய், அனைத்து துக்கங்களையும்
போக்குபவளாய் இருக்கும் மஹாலக்ஷ்மி தாயே உனக்கு நமஸ்காரம் என்று பொருள்.
சம்சாரம் என்பது
கடக்க வேண்டிய பெருங்கடல். அதற்கு, பொருட்தோணி உதவாது. அருட்தோணி தான் உதவும்
என்று அறிந்து பூசிப்போம், அவள் நம்மை அளித்துக் காப்பாள்.
“அனன்யாஶ்சிந்தயந்தோ
மாம் யே ஜனா: பர்யுபாஸதே|
தேஷாம்
நித்யாபியுக்தானாம் யோக்க்ஷேமம் வஹாம்யஹம்”
என்று க்ருஷ்ணரும்
உறுதி கொடுக்கிறார்.
.... கண்மணி
15/8/21
அபிராமி அந்தாதி --
56
மின் ஆயிரம் ஒரு
மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம்
மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு
எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும்,
உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே (55)
அற்புதமாக
இட்டுச்செல்கிறார் பட்டர் பெருமான். அம்பிகையை சரணடைந்தவர், பிறவா நிலை எய்துவர்
என்றார், அவர்களுக்கு அன்னை செய்யும் அருளின் அடையாளங்கள் சொன்னார், அவளையே
சிந்தமிசை வைத்து த்யானிப்பது போன்று ஒரு தவம் வேறு இல்லையென்றார், அப்படி
இருக்கும்போது, நம் தேவைகளை அவளே பார்த்துக்கொள்வாள் என்றார்.
அவளோ ஆயிரம்
மின்னல்கள் சேர்ந்த ஒரு கொடி போன்று ஆனந்தமாக இருக்கிறாளாம். ஒரு மின்னல்
பார்க்கவே கண்கள் கூசும். ஆயிரம் மின்னல்கள் பார்க்க கண்களால் இயலாது இல்லையா?
அதுவுமன்றி, அகமகிழ்ந்து ஆனந்தமாக இருக்கிறாள் என்கிறார். அவளுக்கு ஆனந்த ஸ்வருபம்
தானே? ஆனந்த தாயினி, ஆனந்த ரூபிணி, அவள். ஆனந்தத்தை அளிப்பவள், ஆனந்தமாகவே
இருப்பவள். சச்சிதானந்த ஸ்வரூபிணி.
ஆனந்த வடிவாகவே
அன்னை இருக்கிறாள். எப்போது ஆனந்தமே வடிவாகும்? எனக்கு அது வேண்டும், இது வேண்டும்
என்று நினைத்துக்கொண்டே இருக்கும் மனம் ஆனந்த்த்தை உணர முடியாது. அது குறையான
ஆசைகளை நிறவேற்றிக்கொள்ள வேலை செய்து கொண்டே இருக்கும். எனக்கு வேண்டுவதொன்றில்லை
என்ற நிலையில் தான் நிறைவாக இருக்கும்.
நிறைவே ஆனந்தம்.
அன்னை நிறைவானவள். வேண்டுதல், வேண்டாமை இலாதவள். அவளுக்கு, நாம் அனைவரும்
அவளைப்போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி என்ன ஆகப்போகிறது?
“போற்றிப்புகழ்ந்து
பொய் கெட்டு மெய்யானார்” என்றாரே திருவாசகத்தில், யார் பொய் கெட்டது, யார்
மெய்யானது? அடியார், ஈசனைப் போற்றியதால், இந்த பொய்யான உலக சிந்தனை அழிந்து
(கெட்டு) மெய்யான பரம்பொருளில் சிந்தை செலுத்த பரம்பொருளேயானார் என்று பொருள். அது
போல, நமக்கு இருக்கும் மல விக்ஷேபங்கள் கழியத்தான் நமக்கான ஒரு சாதனை தான்
த்யானமும், தவமும் அன்றி, அவளுக்கு 100000 த்யானம் செய்ததால் அவளுடைய சக்தி
கூடியது என்று target ஏதும் இல்லை.
ஏனென்றால், சக்தியே
வடிவானவள். ஆனந்தமே வடிவானவள். நாமும் அப்படியே, நமக்கும், அடிப்படை ஸ்வரூபம்,
சத், சித் ஆனந்தம் தான். அதை நன்கு உணர்ந்து, அன்னையின் த்யானத்தில் ஈடுபடுவது,
நம்முடைய மனத்தூய்மைக்குத்தான். அன்றி அவளுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்கிறார்.
பொதுவாக கேள்வி
வரும், நாஸ்திகர்கள் இறைவனை நினைப்பதே இல்லை, அவர்கள் நன்றாகத்தானே
இருக்கிறார்கள்? நானோ எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு ஏன் இவ்வளவு
கஷ்டங்கள்? என்று.
உண்மையில், இறைவன்
இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்று சொல்ல, ஒவ்வொரு இல்லையின் பின்னும் இருப்பையே
சிந்திக்க வேண்டியிருக்கிறது நாஸ்திகனுக்கு. இல்லாத ஒன்றுக்கு இன்மை சொல்ல
முடியாதில்லையா? இருக்கும் ஒன்றைத்தானே இல்லை என்று சொல்ல முடியும்? இருப்பது
விளங்கவில்லை. அது தான் உண்மை. அவர்கள் இல்லை என்று சொல்வது, இருப்பின்
விளங்காமையே. அதுவும், அவர்களுக்கு விளங்காமை.
சதா
நினைத்துக்கொண்டிருப்பவர், இறைவனுக்காக இறைவனை நினைக்கிறார்களா? தனக்காக இறைவனை நினைக்கிறார்களா?
இறைவனுக்காக என்றால் இப்படி ஒரு கேள்வி வராது. அவர் தருவது யாவும் ப்ரசாதமே.
தனக்காக என்றால், அப்படி அவர் நினைத்ததோ நினைக்காததோ இறைவனை எந்த விதத்திலும்
பாதிக்கப்போவதில்லை.
ஆக,
எப்படிப்பார்த்தாலும், மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் யாக்யவல்க்யர் சொன்னது போல,
“ஆத்மனஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் பவதி” என்ற கூற்றுக்கு ஒப்ப, ஒவ்வொரு செயலும்
தனது சந்தோஷத்துக்கே செய்யப்படுகின்றன என்பது இங்கு விளக்கப்பட்ட்து பட்டரின்
பாடலில்.
“பரமாநந்தாயை நம:,
த்ருப்தாயை நம:” என்ற நாமம் அவளை ஏதும் தேவையற்ற ஆனந்த ஸ்வரூபியாகவே சித்தரிக்கிறது.
.... கண்மணி
16/8/21
அபிராமி அந்தாதி --
57
ஒன்றாய் அரும்பி,
பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள்,
அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று
புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில்
துயின்ற பெம்மானும், என் ஐயனுமே (56)
சாதகனின்
உள்ளத்தெளிவுக்காகத்தான் இறை வழிபாட்டு சாதனைகளேயன்றி, நாம் பக்தி செய்தாலும்,
பக்தி செய்யாவிட்டாலும் அவளுக்கு ஒன்றும் கூடவும் போவதில்லை குறையவும் போவதில்லை
என்று சென்ற பாடலில் பார்த்தோம். அதற்கு காரணம் அவள் நிறைவானவள் என்பதும் சிந்தித்தோம்.
நிறைவானது
என்பதாலேயே அது இரண்டற்றதாகிறது. இன்னொன்று இருந்தால் தானே அதனோடு ஒப்பிட்டு
துன்பப்படுவதற்கு? பரம்பொருள் ஒன்றே என்கிறது வேதம். அதனால் தான் “பூர்ணமத:
பூர்ணமிதம்” மன்ற து. பூர்ணம் என்றால் நிறைவு. நிறைவான ஒன்றில் இருந்து அந்த
நிறைவான ஒன்றின் அருளோடு கூடிய இந்த ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியானது நிகழ்ந்தது என்று வேதம்
ஸ்ருஷ்டியை சொல்கிறது.
“ஸோ காமயத” என்று
சொன்னது வேதம். அந்த மேலான பரம்பொருள் ஆசை கொண்டு, பலவாக தோன்றியது. ஆசை கொண்டு
என்றால், மாயையின் சேர்க்கையின் காரணமாக என்று பொருள். “ஈசன் உட்பார்வையாலே, முது
மூல சுபாவம் விட்டு முக்குணம் வ்யக்தமாமே” என்கிறது கைவல்ய நவநீதம்.
பரம்பொருளின்
பலவடிவங்கள் தான் நாம் அனைவரும். “ஈஶாவாஸ்யம் இதம் ஸர்வம்” என்று உபநிஷத்
சொல்கிறது. ஒன்றான பரம்பொருள், தன் இச்சையினால், நாம் அனைவரும் உய்வுற, பலவாகியது
என்று சாஸ்த்திர நூல்களின் மூலம் அறிகிறோம்.
பலவாய் விரிந்தவள்,
ஒரு கண்டத்தில், ஒரு பூமியில் இருந்தாளா என்றால், இல்லை. இதம் ஸர்வம் என்றதால்,
அனைத்திலுமானாள், அனைத்துமானாள். அங்கிகெநாதபடி எங்கும் நிறைந்து ஆனந்த
பூர்த்தியாகினாள். அனைத்துமானவள் அனைத்திலும் இருப்பவள் அவை அனைத்தையும் கடந்து
நிற்பாள் என்கிறார்.
பரம்பொருளின்
இலக்கணம், காலத்தை கடந்தது, குணத்தைக்கடந்தது, ஒரு வடிவத்துக்கு உட்படாதது,
அறிபடும்பொருளாக இல்லாதது என்றெல்லாம் சாஸ்த்திரம் ப்ரம்மத்தைப்பற்றி பல இடங்களில்
சொல்கிறது.
“நிர்லேபா –
ஒட்டிக்கொள்ள மாட்டாள்
நிர்மலா – அப்பழுக்கற்றவள்
நித்யா – யாண்டும்
இருப்பவள்
நிர்குணா –
குணங்கள் அற்றவள்
நிஷ்கலா – கலைகள்
(வளர்ச்சியும் தேய்மானமும்) அற்றவள்
நிஷ்காமா –
ஆசைகளற்றவள்”
இப்படி அவளின்
நிர்குண உபாசனை ல்லிதா சஹஸ்ரநாமத்தில் நீண்டுகொண்டே போகிறது. அத்தனையும், அவளது
வடிவமற்ற, அந்த பரப்ரம்ம ஸ்வரூப நிலையைச் சொல்வது தான். பலவாக இருந்தாலும்,
அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதால், அவற்றோடு அவள் சேர்ந்து கொள்ள மாட்டாள்,
அவற்றில் இருந்து நீங்கி நிற்பாள் என்கிறார். இங்கு ஸ்தூலமாக சேர்க்கை, பிரிவு
என்று பொருள் கொள்ளக்கூடாது. அறிவு ஸ்வரூபமாக அவளே இருப்பதால், அவளை
அறியப்படுபொருளாக அறிய முடியாது என்பது தான் கருத்து.
“த்யான, த்யாத்ரு,
த்யேய ரூபாயை நம:, நாம ரூப விவர்ஜிதாயை நம:, அப்ரமேயா, ஸ்வப்ரகாஸா, மனோவாசாமகோசரா”
என்கிறது ஸஹஸ்ரநாமம். அறிபவன், அறியப்படுபொருள், அறிவு இது மூன்றும் கடந்து
இருக்கிறாள்.
அப்படி
அறியப்படுபொருளாக, அறிய முடியாத அந்த அப்ரமேயமான அம்பாள், பட்டரின் நெஞ்சினுள்ளே,
பொன்றாது நின்றாளாம்.
என்ன ஒரு
தரிசனம்!!!! பொன்றாது என்றால், அழியாத, கொஞ்சம் கூட குறைவில்லாத, ஒரு கணம் கூட
விலகாத, இருப்பு, இதயத்தில் அம்பாளின் இருப்பு அவ்வளவு ப்ரத்யக்ஷம் அவருக்கு.
6ம் பாடலில்,
சிந்தையுள் மன்னியது உன் திரு மந்திரம் என்றார், 10ம் பாடலில், தெளிகின்ற ஞானம்
திகழ்கின்றது என்ன திருவுளமோ? 16ல், எண்ணில் ஒன்றுமில்லா வெளியே, வெளி முதற்
பூதங்களாகி விரிந்த அம்மே!, அளியேன் அறிவுக்கு அறிவானது அதிசயமே, 27ம் பாடலில்,
என் நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை, என்றார்,
இவையெல்லாம், நினைத்துப்பார்க்க, அம்பாளின் இருப்பு, அவளது அருளால் அவரது நெஞ்சில்
நீங்காது இடம்பெற்றது என்பது எப்படி என்று அறியலாம்.
இந்த விதமாக,
ஒன்றாகி அவள் பலவாகி நிறைந்து பூரணமாய் எங்கும் ததாகாரமாய் நிற்கும் நிலை என்று
நான் சொல்ல, யாருக்கம்மா இது அறிய முடியும்? உன் இந்த நிலையின் மேன்மையை அறிய
வல்லார், அந்த ஆலிலையில் துயின்ற ப்ரளய காலத்தில் உலக ஸ்ருஷ்டிகளனைத்தையும்
லயமாக்கிக்கொள்ள எடுத்த அந்த ரூபத்தில் இருந்த நாராயணரும், என் அத்தனுமன்றி வேறு யாருக்கும்
இது முழுமையாக விளங்காது என்று ஆனந்தப்படுகிறார்.
இறையின் நிஜ
ஸ்வரூபம் அறிவது அத்தனை சுலபமில்லை. குருவருளால் அது கைகூடும். குருவன்றி,
தெளிவில்லை. அதனால் தான் ஜகத்குருவான கண்ணனையும், தக்ஷிணாமூர்த்தியாக இருக்கும்
சிவபெருமானையுமே உதாரணமாகக் காட்டுகிறார்.
குருவே துணை
.... கண்மணி
17/8/21
அபிராமி அந்தாதி --
58
ஐயன் அளந்தபடி இரு
நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும்
உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப்
பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும்
இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே? (57)
ஒரு சமயம் அன்னை,
காமாக்ஷியாக காஞ்சியில் அவதரித்த போது, ஏகாம்ரநாதரிடம் இரு நாழி நெல் பெற்று 32
அறங்கள் வளர்த்தாள் என்று புராணம் சொல்கிறது. அதை இங்கு குறிப்பிடுகிறார்.
அன்னை செய்த
முப்பத்திரண்டு அறங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்:- [ஆதாரம் = காஞ்சிபுராணம்
(கச்சியப்பமுநிவர்]
1. ஆவுரிஞ்சுதறி
அமைத்தல் :- மாடுகள் இதன் மீது உராய்ந்து தங்கள் தினவை(அரிப்பு) தீர்த்துக்
கொள்ளும்.
2. பசுவிற்கு
வாயுறை :- பசுவிற்குப் பசும்புல்லை அரிந்த உணவாகக் கொடுத்தல்.
3. துறந்தோர்க்கு
உணவு :- உண்மைத்துறவிகளுக்கு உணவளித்தல்.
4. மக வளர்த்தல் :-
அநாதைக் குழந்தைகளை தாய் போல் வளர்த்தல்
5. வேதம் முதலான
ஓது வித்தல் :- ஆர்வம் உள்ளவர்களுக்கு வேதம், ஆகமம், இயலிசை நாடகத் தமிழ் ஓது
வித்தல்.
6. மகப்பால்
கொடுத்தல் :- பிறந்த போதே தாயைப்பறி கொடுத்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் சுரக்காத
தாயின் குழந்தைக்கும் பால் கொடுத்தல்.
7.
அறுசமயத்தார்க்கும் உணவு அளித்தல்:- காணாபத்யம், சௌமாரம், சைவம், சாக்தம், வைணவம்.
சௌரம் ஆகிய அறுவகை சமயங்களைப் பின்பற்றுவோர்க்கு உணவளித்தல்.
8. கருவாய்த்த
மகளிரைக் காத்தல் :- கருவுற்ற மகளிரைப் பேணி அன்பு காட்டுதல்.
9. ஒப்புரவு
செய்தல் :- படைகளுடன் வரும் அரசர்களைக் கௌரவித்தல்.
10. மருந்து
கொடுத்தல் :- நோயாளிகளுக்கு இன்சொல் கூறி மருந்தும் உணவு அளித்தல்.
11. சோலை அமைத்தல்
:- மரக்கன்றுகளைக் காப்பாற்றி மரமாக வளர்த்து அவற்றில் வந்தமரும் பறவைகளுக்கு
உணவும் நீரும் அளித்தல்.
12. நீர் நிலை
அமைத்தல் :- குளங்கள் அமைத்து அதில் மீனினங்களை வாழச் செய்து உணவிடுதல்.
13. விலங்கிற்குணவு
:- விலங்குகளுக்கு உணவளித்தல்.
14. அறவுரை
கேட்பித்தல் :- கல்விச் சாலைகளை நிறுவுதல், ஒப்பற்ற இறைவனின் கதைகளை, உயிர்களின்
அக இருள் நீங்குமாறு கேட்பித்தல்.
15. தீட்சை
கொடுத்தல் :- குரு மூலமாக ஐந்தெழுத்தை உபதேசித்தல்.
16. அறவோர் இருக்கை
:- துறவர்களுக்கும் முதிர்ந்த பக்தியினருக்கும் உயர்ந்த மடங்கள் அமைத்து அவர்களைக்
காத்தல்.
17. ஆதுலர்க்குச்
சாலை :- சத்துள்ள உணவை ஆதரவற்றோர்க்கு அளிக்க அன்னசாலைகளை நிறுவுதல்.
18. மகட் கொடை :-
தேவையான ஆடை ஆபரணங்களைக் கொடுத்து மகள்களைக் கன்னிகாதானம் செய்வித்தல்.
19. தீராக்கடன்
தீர்த்தல் :- தீராக்கடன்களால் துன்புறுவோரின் கடன்களைத் தீர்க்க உதவுதல்.
20. தூர்த்தற்கு
உதவுதல் :- காமுகனையும் மாற்ற உதவுதல்.
21. படுக்கை
அளித்தல்.
22. தண்ணீர்ப் பந்தல்
அமைத்தல்.
23. சிறுவர்களுக்கு
உணவளித்தல்.
24. பிச்சை
கேட்பவருக்கு கருணையுடன் உணவளித்தல்.
25. தீர்த்த
யாத்திரை மேற்கொள்ளுபவர்க்கு உணவளித்தல்.
26. தின்பண்டம்
வழங்கல்.
27. முன்னோர்
அறங்கள் காத்தல் - முன்னோர்கள் செய்து வந்த அறங்களைத் தொடர்ந்து செய்தல்.
28. உடுக்க உடை-
அவசியம் உள்ளவர்களுக்கு உடுக்க ஆடை அளித்தல்.
29. அறவைப் பிணம்
அடக்கம் செய்தல்:- உறவினர் அற்ற பிணங்கள். வறுமையில் வாடியோர் பிணங்கள், அநாதைப்
பிணங்கள் ஆகியவற்றை சடங்குகள் செய்து அடக்கம் செய்தல்.
30. உயிரினங்கள்
கட்டி வைக்கப்பட்டாலோ, துன்புறுத்தப் பட்டாலோ அவற்றைக் காத்து விடுவித்தல்.
31. ஆடை துவைத்து
வெளுத்துக் கொடுத்தல்.
32. மயிர்
கழிப்பித்தல் - நீண்டு வளர்ந்து கிடக்கும் அழுக்கு முடி வைத்திருப்பவர்களை
நாவிதர்களிடம் அழைத்துச் சென்று முடி திருத்துதல்.
இவ்வனைத்து
அறங்களிலும் ஊடுபொருள் என்ன? கருணை. அன்னைக்கு விருப்பு வெறுப்பு இல்லை. நல்லோர்
தீயோர் பாகுபாடு இல்லை, நர ஜந்து வித்யாசங்கள் இல்லை. எவ்வுயிரும் அவளே என்ற
கருணையினோடு, அந்தந்த ஜீவன் செய்த கர்ம வினை அனுபவிக்கும் போதும் கூட, அவற்றின்
வேகம் குறைக்க இயன்ற உதவிகள் செய்வதே அறம் என்ற வகையில், அறம் வளர்த்த நாயகி
ஆனாள்.
இப்படி ஒரு
பெருங்கருணைப் பேராறைப்போற்றுவது என்பது ஆனந்தமான விஷயம். அவள் அதற்கு தகுதியாக
இருப்பதால். ஆனால், பிழைப்புக்காக, உன்னைப்புகழ்ந்த வாயினால், உண்மையோ இல்லையோ,
நாட்டின் தனவந்தர்களையும், அரசர்களையும் புகழ்ந்து பாடும் புலவர் தொழில் தந்தாயே,
இதுவும் ஒரு கருணையா அம்மா? என்று அங்கலாய்க்கிறார்.
பொதுவாக, இறைவனையே
போற்றும் நிலையில் இருக்கும் முக்தன், மானுடர்களைப் புகழ்வதையும், பாடுவதையும்
விரும்ப மாட்டார்கள். அப்படிச் செய்ய நேரிட்டாலும் அது அவர்களுக்கு வேதனையாகத்தான்
இருக்கும். ஸத்குரு த்யாகராஜர், “நிதி சால சுகமா” என்றாரே? ராமனைப்புகழ்ந்து
பாடும் வாயால், ஒரு நரனைப்புகழ்ந்து எப்படிப் பாடுவேன்? அதற்கு நான் பசியில்
இருந்துவிட்டு போகிறேன், வயிற்றுக்குத்தானே பசி, இந்த ஆத்மாவுக்கல்ல, அது
ராமாமிர்த்த்தில் திளைக்கிறது என்று மறுத்தார் பெரும் தகைமைகளை.
பட்டரின்
அங்கலாய்ப்பு, ஒரு முக்தனின் மன நிலையை ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறது. இப்படி
முக்தியடைந்து பின்னும் வேலைகளில் ஈடுபட்டு ப்ராரப்த கர்மாவைக்கழிக்க
வேண்டியிருக்கும் ஜீவன்முக்தர்கள் “பெரிதான த்ருஷ்ட துக்கம் அநுபவிப்பர்” என்று
கைவல்ய நவநீத ஆசிரியர் கூறுகிறார். துக்கம் என்றால், அவர்கள் துவள்வதல்ல, ஆனாலும்
அவர்கள் முழுதும் விலக முடியாத, கர்ம பந்தங்களினூடே காரியங்கள் செய்து கொண்டு அதே
சமயம் உள்ளே சதா ப்ரம்ம சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
அது கஷ்டம் போல
தோன்றும். ஏனென்றால், அவர்கள் உள்ளம் இருக்கும் நிலை வெளியில் இருந்து
பார்ப்பவருக்குத் தெரியாது இல்லையா? காஷாயம் கட்டிக்கொண்டு விட்டால், நெருங்கி
வேலை சொல்ல மாட்டர்கள். அகத்துறவு வெளியில் தெரியாது. பட்டர், அகத்துறவில்
இருந்தார் என்பது இந்தப் பாடலின் மூலம் வெளியாகிறது.
அகத்தில் துறவு
பூண்டு அன்னையைத் துதிப்போம். நர ஸ்துதிகள் குறைப்போம்.
துறவு என்பது
விஷயங்களில் இருந்து விடுதலை.
.... கண்மணி
18/8/21
அபிராமி அந்தாதி --
59
அருணாம்புயத்தும்,
என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத்
தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும்,
வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும்,
அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே (58)
ஒரு நேரம், தன்
முக்த நிலையைக் காட்டி, பின் அதற்குக் காரணம் அம்பாள் தான் என்று போற்றி, அது
நழுவாதிருக்க அருள் வேண்டி, அதற்கு அவளையே த்யானிப்பதைச் சொல்லி, அதற்கும் ஒரு
அருள் வேண்டும் என்று பெருமைப்பட்டு, தாயிடம் தானே அத்தனை உணர்ச்சிகளையும் சொல்ல
முடியும்?
குழந்தை
புலம்பினாலும், உளறினாலும், பிதற்றினாலும், தாய்க்கு இன்பமே இல்லையா?
அவளைப் போற்றும்
மனம் வேறு யாரையும் போற்ற மறுக்கும் காரணம் அவளன்றி வேறொன்றும் இல்லை மனதில்
என்பதால் தான் என்று எப்படி அவளைக்காண்கிறார் என்ற ரூப வர்ணனை சொல்கிறார்.
அபிராமி அந்தாதி,
பட்டரின் வர்ண்ணனைகள் என்று தனியாக ஒரு பதிவே எழுதலாம். அப்பப்பா அத்தனை விதமாக
அம்மாவைப்பார்க்கும் குழந்தை அவர்.
இப்போது மிக
இளமையான தோற்றம். சூர்யனைக்கண்டு அலர்ந்த தாமரையின் மீது புதுமலர்த் தாள் என்றாரே
அவள் பாதங்களை, அது போல, புது மலரில் அவள் வீற்றிருக்கிறாள். அது போலவே, அவரது
இதயத் தாமரையில் பொலிவோடு அமர்ந்திருக்கிறாள். இந்தப்பாடலில் எல்லா பாகங்களுக்குமே
தாமரையே உவமை என்பது மிகச்சிறப்பு.
தாமரையின் மொட்டு
போன்ற மென்மையான நகில்கள் கொண்டிருக்கிறாள், கண்கள் இரண்டும் கருணை ததும்பும்
தாமரைகள் இரண்டாய், முகத்தின் பொலிவில், புதிதாய்ப் பூத்த தாமரையின் மென்மையுடன்,
கரத்தில் கொண்ட தாமரைகள், அல்லது கரங்களே தாமரைகளாய், மென்மையாய், சிவந்த நிறம்
கொண்டதாய், சரணங்கள் இரண்டும் எப்போதுமே திருவடித்தாமரை என்பாரில்லையா, அப்படியே
இங்கும் சொல்லி, இவற்றை அல்லாது ஒன்றுமே எனக்கு தஞ்சமடைய தகுதியாகத் தெரியவில்லை
அம்மா என்று சொல்கிறார்.
தருணம் என்றால்
இளமை என்றொரு பொருள் உண்டு. தருணாம்புயம், என்பது இளமையான தோற்றத்தில் இருக்கிறாள்
என்பதற்கான குறியீடு. தையல் என்று சொன்னதால், பாலாம்பிகையாக வரித்துப்
பார்க்கிறார்.
“பத்மநயனாயை,
பத்மாஸனாயை, ஹ்ருத்யாயை, ராஜீவலோசனாயை,
தருண்யை, கமலாக்ஷ நிஷேவிதாயை, பாலாயை” போன்ற நாமங்களை சிந்திக்கலாம், இந்த
பாடலின் கருத்துகளுக்கு இணையாக.
முன் பாடலுடன்
கூட்டிப்பொருள் பார்க்க இன்னும் சுவை கூடுகிறது. இவற்றையல்லால் தஞ்சம் வேறில்லாத
நான் வெறும் கும்பியை வளர்க்க, இந்த மானுடர்களைப்புகழ்ந்து பாடுவது எப்படிம்மா?
என்று கேட்பது போல அவரது அங்கலாய்ப்பு இருக்கிறது.
அடியார்கள்
பெரும்பாலும், இறைவனைத்தவிர, மானுடர்களைப் புகழ்வதை விரும்பாது இருந்திருப்பது,
அவர்களின் விவேகத்தையும் வைராக்யத்தையும் காட்டுகிறது. எது நித்யம், எது அநித்யம்
என்பது நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு இருப்பதால், அநித்யமான இந்த மனித
பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, “நித்ய வஸ்து ஏகம் ப்ரம்ம” என்ற சாஸ்த்ர
வாக்யத்தின் பால் மனம் செலுத்த, அந்த ஈஸ்வர சிந்தனையிலேயே சதா ஈடுபட்டிருக்கவே
விரும்பியிருக்கிறார்கள்.
சம்சாரம் என்னும்
பெருநதியில் நீந்த நிலையானது தான் பிடிமானத்துக்கு உகந்தது. அன்றி நிலையற்ற மனித
உறவுகள் வெறும் உணர்ச்சிகளின் வடிகால்களேயன்றி உய்வுக்கு வழியன்று. அதனால் தான்
சரணாகதிக்கு பரம்பொருள் ஒன்றே உகந்தது என்பது முக்தர்கள் நமக்குச்சொல்லும் பாடம்.
ஒருவருக்கொருவர்,
புகழ்ந்தும் இகழ்ந்தும், நெஞ்சில் வஞ்சங்கள் பெருக்காது, புகழுக்கும்,
இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்ட எண்குணத்தானை சரணடைவதே உத்தமம்.
.... கண்மணி
19/8/21
அபிராமி அந்தாதி --
60
தஞ்சம் பிறிது
இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில
நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும்
இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்
அடியார், அடியார் பெற்ற பாலரையே (59)
தவம் செய்வார் தம்
கருமம் செய்வார் என்பார்கள். தவம் செய்வதையே கருமமாக வைத்திருப்பவர்கள் தான்
அடியார்கள். முக்தர்கள். அப்படி எப்போதும், இடைவிடாது, அம்பாளையே தன்
இதயத்தாமரையில் வைத்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார் பட்டர் பெருமான்.
அப்படி இருப்பதாக
அவரது பாடல்களுல் இருந்து நாம் அறிகிறோம். ஆனால், அவரது சுய சோதனையின் முடிவுகளோ,
அவ்வப்போது, அவர், அம்பாளின் சிந்தனையில் இருந்து, தன் கரும வசத்தினால், வெளி
வந்து, உலக விவகாரங்களில் ஈடு பட வேண்டியிருப்பதும், தன் வாழ்க்கையின் அத்யாவஸ்ய
தேவைகளுக்காக விவகாரம் பண்ண வேண்டியிருப்பதனால், அந்த சமயங்களில், தன் சித்தம்
சிந்திக்கத் தவறுவதையும் நினைத்து அங்கங்கு விசனப்படுகிறார்.
இப்போது தான்
சொன்னார், அவளது பரசிவ வெள்ளமான ரூபத்தை தெரிந்து கோண்டதும், அந்த நிலையறிய
சிவனும் மாலும் மட்டுமே முடியும் என்றும், ஆனால், அந்த தூய பரம்பொருளின்
த்யானத்தில் இருப்பவனை, அழைத்து வந்து சாதாரண மனிதர்களின் குணங்களைப் புகழும்படி
வைக்கிறாயே, இது தகுமா என்று கேட்டு, உன்னையே தஞ்சமடைகிறேன், இது போல வேறு
தஞ்சமடைய தகுதியான ஒன்றில்லை என்றார்.
தஞ்சம் என்றாலே,
அதன்பின் நம் கவலைகள் மறக்க வேண்டும். அது தான் நியதி. தஞ்சமும் அடைவேன், நானும்
முயற்சி செய்வேன் என்றால், த்ரௌபதிக்கு க்ருஷ்ணர், பூர்ண சரணாகதிக்கு
காத்திருந்தது போல நேரும் இல்லையா? தஞ்சமடைந்த கணமே, நம் பிடி, இறையினிடம் தான்
என்று உறுதியோடு இருக்க வேண்டும்.
அதைத்தான் இப்போது
சொல்கிறார். நான் நீயே தஞ்சம் என்று சொல்கிறேன், அதையே என் நெஞ்சத்தில் பயிற்சி
செய்யவும் வேண்டும். ஆனால், என் நினைப்பின் அவ்வப்போது குறைவிருக்கிறது.
நினைக்கின்றிலேன் என்றதால், நினைக்க ஆசைப்படுகிறேன், ஆனால் செய்வதில்லை என்கிறார்.
நான் அறியாமை
வசப்பட்டவனாக இருக்கிறேன். சஞ்சலங்கள் என் மனதில் நிழலாடிக்கொண்டு இருக்கின்றன.
அவ்வப்போது என் ஆறு பகைவர்களும், ஐந்து இந்திரியங்கள் வாயிலாக வெளிப்பட்டு, என்
அமைதியைக் கெடுக்கிறார்கள். இவையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
காம, க்ரோத லோப,
மோஹ, மத, மாஶ்சர்யங்கள் மனிதனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சூழலில் வரத்தான்
செய்கிறது. அவற்றை நமது இந்திரியங்களும் நன்கு வெளிப்படுத்துகின்றன. இந்த்ரியங்களை
(செயற்கருவிகள், அறிவுக்கருவிகள்) நாம் இறையுணர்வுக்கே பயன்படுத்துவது அவற்றை
நெறிப்படுத்த உதவும். அன்னையின் கையில் இருக்கும் கரும்பு வில்லும், பஞ்சபாணமும்
பற்றி முன்னர் சிந்தித்திருக்கிறோம்.
அம்பாளின் கையில்
கரும்பு வில்லும், அம்பும் இருப்பதை, நீள்சிலையும் அஞ்சு அம்பும் என்று
குறிப்பிடுகிறார். காமேஸ்வரி அவள், காமங்கள் அவளிடம் அடங்கும். அந்த காமத்தின்
கட்டுப்பாடு அவள் வசம் இருந்தால், நமக்கு எந்த துன்பமும் இருக்காது என்பதால் தான்
இந்த ரூபம் அம்பாளுக்கு.
அப்படி காமங்களை வசப்படுத்திக்கொண்டிருக்கும்
தாயின் குணமானது, பிள்ளை அறியாது தவறு செய்தாலும் கூட, தான் பெற்ற பிள்ளை தவறு
செய்தால் எப்படிப்பொறுப்பாரோ அப்படி பஞ்சினும் மெல்லிய அடிகளைக்கொண்டவளான
அம்பாளும் பொறுக்க வேண்டும் என்று சொல்கிறார். இங்கு பஞ்சு என்பது செம்பஞ்சுக் குழம்பு
என்றும் குறிக்கும் என்று இலக்கணங்கள் சொல்கின்றன. செம்மையான பஞ்சின் மீது கால்
வைக்க அஞ்சும் குணமுள்ள மென்மையானவள் என்றொரு குறியீடு.
கருணை காட்ட,
மென்மையான மனம் வேண்டும், அதே சமயம் உறுதியான மனமும் வேண்டும். உறுதி, அவளது
கரும்பு வில்லும் பஞ்ச பாணங்களை கையாள்வதும், மென்மை அவளது பஞ்சனைய பாதங்கள்.
காக்கும் மனம்.
“மனோரூபேக்ஷு
கோதண்டாயை (மன+ரூப+இக்ஷூ+கோதண்டம்; இக்ஷூ = கரும்பு; கோதண்டம் = வில்);
பஞ்ச்தன்மாத்ரஸாயகாயை (பஞ்ச+த்ன்மாத்ர+ஸாயக:--தன்மாத்ர = பஞ்ச பூதங்களால் ஆன பஞ்ச
அறிவு/செயல் கருவிகள், ஸாயக: = அம்புகள்)
அம்பாளை, நம்
காமங்களின் லயஸ்தானமாக்குவோம். அவள் நம் மீது அளவில்லாத கருணை கொள்வாள்.
.... கண்மணி
20/8/21
அபிராமி அந்தாதி --
61
பாலினும் சொல்
இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க--
மாலினும், தேவர்
வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும்,
கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால
நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே? (60)
பட்டர்,
பாட்டுக்குப்பாட்டு, தன் நிலையைச் சொல்லி, அதற்கு அம்பாளின் கருணை எப்படி
இருக்கவேண்டும் என்று கேட்டு, உடனே அதைப் பெற்றதையும் அடுத்தடுத்து சொல்லிக்கொண்டு
போகிறார்.
பாலினும் இனிமையான
சொற்களைக்கொண்டவளாம் அவள். நரம்பை அடுத்த இசைவடிவானவள் பாலினும் இனிய சொல்
பேசத்தானே வேண்டும்?
அவளது, பனிபோன்ற
குளிர்ந்த பாதங்களை “எம்பிரான் முடி கண்ணியதே” என்று 11வது பாடலில் சிவ பெருமானின்
குன்று போன்ற சடைமுடிமேல் வைத்ததாகச் சொன்னார். 32வது பாடலில், அவ்வடிகளை,
“வாஸக்கமலம் தலை மேல் வைத்து ஆண்டு கொண்டாய்” என்றார். 35வது பாடலில், “சீறடி
சென்னி வைக்க எங்கட்கொரு தவம் எய்தியவா?” என்று வியந்தார்.
இங்கு, அப்படி,
திருமாலும், தேவர்களூம் வணங்கும் தகுதியுடைய, கொன்றை மலர்கள் சூடிய செஞ்சடையோன்
என் அத்தன் சடையின் மீது வைத்த உன் பாதங்களை, நான்கு வேதங்களின் மீதும் வைத்தாய்,
“வேத பரிபுரையே” என்றாரே முன்னரும்!.
மெய்ப்பீடங்கள்
நான்கு என்பது, ப்ரணவ பீடங்கள் நான்கைக்குறிக்குமாம். ஸ்தூல, சூக்ஷ்ம, காரண,
மஹாகாரண பீடங்கள் அந்த நான்கும் எங்கின்றன அற நூல்கள். அப்படி நான்கு பீடங்களிலும்
வைக்கிறாள். என்ன அர்த்தம். வேத ரூபமாகவே இருக்கிறாள். வேதத்தில் சொன்ன ஸ்தூல,
சூக்ஷ்ம, காரண ப்ரபஞ்சங்கள் அனைத்துமாய், அனைத்துக்கும் அப்பாலாய், காரணத்துக்கும்
காரணமாய் இருக்கும் அவளது பரம்பொருள் தத்துவம் தான் சொல்லப்படுகிறது.
இங்கு உருவகமாகச்
சொன்னது எதற்கென்றால், அப்படி வைத்த பாதங்களை, என் சென்னியில் வைத்தாயே அம்மா?
நானோ, உன்னை தவநெறியோடு நினைக்கவில்லை, தொண்டு செய்யும் இலக்கணமும் அறியவில்லை,
என் ஆவியோ ததியுறு மத்தில் சுழல்வது போல சுழல்கிறது. இப்படி, உலகப்பற்றில் உழண்டு
அவ்வப்போது உன்னையும் தொழுவதால், முடை என்று சொல்லும், புலால் உண்ணும் ஒரு நாயைப்
போல, நான் இருக்கிறேன் என்று தன்னை சொல்கிறார்.
புலால் என்று
சொன்னது, இந்த புறப்பற்றின் அளவைக்குறிக்க. மீண்டும் மீண்டும் அநுபவிக்கத்தூண்டும்
ஒரு விஷயமாக இருப்பது, அது தவத்திற்கு இடைஞ்சலாகவும் இருப்பதால், அப்படி,
உலகப்பற்றில் உழலும் என் தலையிலும், அப்பேற்பட்ட மகிமை பொருந்திய உன் பாதங்களை
வைத்து என்னை ஆண்டது எனக்கு எப்படி இருக்கிறது என்றால், அந்த மேலான இடங்களை ஒத்ததோ
என் தலை என்று ஆனந்தப்பட வைக்கிறது என்று பொருள் படக் கேட்கிறார்.
தன்னை இழிவாக
நினைப்பது அடியாரின் ஒரு பாவனை. அது தன் விநயத்துக்காக. இத்தனை சாதனைகள்
செய்கிறார் என்று நாம் அவரது பாடல்களில் அம்பாளை ஆராதிப்பதை என்ணி மாய்ந்து
கொண்டிருக்கிறோம், அவரோ, தான் இன்னும் உயர்ந்த ஆராதனைகள் செய்ய வேண்டும் என்று
தனது நிலையை அம்பாளுக்கு சொல்லி, அப்படி இருந்த போதும் எனக்கு அனுக்ரஹம் பண்ணினாயே
என்று வியக்கிறார்.
நமக்கும், செய்தி
உண்டு. சாதனைக்கு எல்லையில்லை. மனம் பண்பட, நிறைய உழைக்க வேண்டும். எழும்பி வரும்
ஆசைகளை அடக்குவதும், எழும்பாது இருக்கும் இறையுணர்வை தூண்டி எழுப்புவதுமே முதற்
சாதனை ஒவ்வொருவருக்கும்.
.... கண்மணி
21/8/21
அபிராமி அந்தாதி --
62
நாயேனையும் இங்கு
ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி
ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும்
அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே,
செங்கண் மால் திருத் தங்கைச்சியே (61)
தன்னை நாயென்றும்
பேயென்றும் சொல்லிக்கொண்டு அம்பாளின் கருணையின் அளவைக்காட்ட முற்படுகிறார்.
அடியார்கள் தங்களை
நாய் என்று சொல்லிக்கொள்வதை பல இடங்களில் பார்க்கிறோம். நாயிற்கடையாய்க் கிடந்த
அடியேற்க்கு, என்றார் மாணிக்கவாசகர். பொதுவாக, நாய் நன்றியுள்ள ப்ராணி தானே? ஏன்
மனிதரை நாய் என்று வெசவுக்கு பயன் படுத்த வேண்டும் என்று தோன்றும். நாயிடம் ஒரு
கெட்ட குணம் உண்டு. அது வாந்தி எடுத்ததை உண்ணும் தன்மையுடையது.
பரம்பொருளைப்பற்றிய
ஞானத்தைப்பெற்றும் அதில் நிலைத்து நிற்கும் மனமின்றி, மீண்டும் மீண்டும் உலக
வாழ்வில் ஈடுபடுவது, வேண்டாம் என்று உமிழ்ந்ததை மீண்டும் எடுத்து அனுபவிப்பதற்கு
ஒக்கும் என்ற காரணத்தால் தான் எல்லா அடியார்களும், இந்த நாய் உதாரணத்தை
எடுத்துக்கொள்கிறார்கள்.
இங்கும், அது தான்
பாடலின் சூழல் இல்லையா? 56ம் பாடலில் இருந்து நோக்கும் போது, அவருக்கு பரசிவ
வெள்ளமாய்த் தெரிந்து, அவளைப்போற்றும் வாயால், நரர்களின் குணங்கள் போற்ற
வேண்டியுள்ளதே என்று அவர் ஆரம்பித்து, தொடர்ந்து, ஒவ்வொரு விதத்தில் அவளது கருணையை
சொல்கிறார்.
சென்ற பாடலில்,
எப்பேர்பட்ட பெருமை கொண்ட திருவடிகள், வேதங்களாகவே திகழும் திருவடிகளை என்
சென்னியில் வைத்து என்னை ஆட்கொண்டாயே அம்மா என்கிறார். ஒரு விஷயம் நமக்கு
இதிலிருந்து புரிகிறது. அன்னையின் அருள், அவருக்கு சாஸ்த்திரங்களின்
உபதேசமாகத்தான் கிடைத்திருக்கிறது. வேத சாஸ்த்திரங்களைப் புரியவைப்பது தான் அவள்
செய்யும் மிகப்பெரிய கருணை.
நயந்து வந்து
அருளினாள் என்று சொல்கிறார். “நானேயோ தவம் செய்தேன்? அருள் செய்தான் தவம்
செய்தேன், தவம் செய்தேன் அருள் செய்தான்” என்றாரே மாணிக்க வாசகர்! ஈசனருள் இல்லாது
என்னால் என்ன தவமியற்ற முடியும் என்று கேட்டாரில்லையா? அவனருளால் அவன் தாள் வணங்க
வேண்டுமாம்.
இங்கும் அவள் தான்
அவரை நயந்து வந்து, மனமிரங்கி வந்து, ஐயோ பாவம், பிள்ளை பிறவிச்சுழலில்
மாட்டிக்கொண்டு அவஸ்த்தைப்படுகிறதே!, அதற்கு நம் மீது ஒரு பக்தியும் இருக்கிறதே,
பிழைப்புக்காக பல தொழில்கள் புரிந்தாலும், நம் மீதல்லவா கவனம் இருக்கிறது
என்றெல்லாம், நினைத்து வந்தாள். அவள் அப்படி வர, அவளைக் கருத்தில் வைத்து
தன்னந்தனியிருந்தார் அவர். அது முக்கியம். அவளையே கதியென்று நினைத்த பின், அவள்
நயந்து வந்து தானே ஆக வேண்டும்?
நினைவின்றி
ஆண்டுகொண்டாளாம். யார் நினைவின்றி? 59ல் பார்க்கவேண்டும். உன் தவனெறிக்கே நெஞ்சம்
பயில நினைக்கின்றிலேன் என்றார். அப்படி நினைக்காத எனக்கு, சற்று நேரம் தான்
என்றாலும், உன் நினைவின்றியிருந்த போதும், நான் உலக மயக்கத்தில் கிடந்து உருண்ட
போதும், நீயோ, நான் செய்த தவத்தை ஏற்று என்னை காக்க வந்தாய் என்று அவள் கருணையைப்
புகழ்கிறார்.
வந்து என்ன
செய்தாள்? அவளது நிஜ போத ஸ்வரூபத்தை, பேரறிவு என்னும் பேருண்மையை அறியும் அறிவைத்
தந்தாள். 47ல் அவள் எப்படி இருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டேன் என்றார். நிலம்
ஏழாய், திக்கெட்டாய், எட்டாத சூரிய சந்திரர்க்கிடையுள்ள அனைத்துமாய், யாதுமாகி
நின்ற ஸ்வருபத்தைக் கண்டேன் என்றார். 56ல், ஒன்றாய் அரும்பிப் பலவாய் இருந்து அனைத்திலும்,
அனைத்திற்கும் அப்பாலும் நின்றாள் என்றார். இப்படி அவள் தன்னை அறிவித்தாள்.
எப்படிப்பட்ட
நிலையில் அதை அறிந்தாராம்? பேயாய் என்கிறார். பேய் எப்படி அறியும்?
பேய் எப்போது
வரும்? இரவில், இருட்டில். இரவும் இருட்டும் அறியாமையின் குறியீடுகள். அறியாமையில்
உழன்று கொண்டிருந்த நான் பேய் போல ஆசைகளின் பின்னே அலைந்து கொண்டிருந்தாலும், நீயே
நயந்து வந்து என்னை ஆண்டு கொண்டாய் அம்மா என்கிறார்.
நினைவில் கொள்ள
வேண்டும். அவர் முக்தர், ஆனாலும் சிறு விவகாரங்கள் ஜீவன் முக்தனுக்கும் உண்டு,
ப்ராரப்தம் தீரும் வகையில் என்ற அளவிற்கு, குறைவான கர்ம வினைகளுக்கே, அவர் இத்தனை
கீழே தன்னைச் சொல்கிறார். வினையொன்றே வாழ்க்கை என்றிருப்பவர்க்கு அதிலிருந்து
விடுபட எண்ணம் வருவதற்காக, தன்னை இத்தனை தாழ்த்திக்கொள்கிறார்.
மலை மகள்
என்கிறார், “ஹிமகிரி தனையே” என்று அம்பாளுக்கு ஒரு பெயருண்டு. செங்கண்மால் திரு
தங்கச்சி என்றார். பச்சை மா மலைபோல் மேனி, பவள வாய்க் கமலச் செங்கண் என்று
பெருமாளின் ஒரு வர்ணனை. அவர், ராஜீவ லோசனன், தாமரை போன்ற சிவந்த கண்கள் கொண்டவர்
என்று வர்ணனைகள் உண்டு.
“பக்திப்ரியா,
பக்திகம்யா, பக்திவஶ்யா, பக்த ஶௌபாக்ய தாயினி, தயாமூர்த்தி, கல்மஷ நாசினீ, பக்த
நிதி:,” என்பதெல்லாம், அவளது இந்த அவ்யாஜ கருணைக்கு ஹேதுவான நாமங்கள்.
.... கண்மணி
22/8/21
அபிராமி அந்தாதி 63
தங்கச் சிலை
கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி
போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக்
குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக்
கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே (62)
தன்னையும் ஒரு
பொருட்டாக மதித்து, தனக்கும் அவளது பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறிய வைத்துக் கருணை
செய்ததை வியந்தார் சென்ற பாடலில். “வித்யா விநய ஸம்பந்நே” என்பது போல, மகா
பண்டிதராக இருந்தும் சிறிதும் கர்வம் இன்றி தாயிடம் சேயாக அவர் நிலையைப்
பார்த்துக்கொண்டு வருகிறோம்.
இப்போது, எப்போதும்
அவளை எப்படித் தன் சிந்தையில் இருத்தியிருக்கிறார் என்பதை சொல்கிறார்.
அவர் அன்னையை
தனியாக ஒரு போடும் காணவில்லை. ஒவ்வொரு பாடலிலும், அவர் அத்தனொடு கூடிய அன்னையையே
கண்டு களிக்க விரும்புகிறார். இங்கு சிவபெருமானின் வீரம் மிக்க இரு நிகழ்வுகள்
நினைவு கூர்ந்து அவரைப் போற்றுகிறார்.
ஒன்று முன்னரே
பார்த்தோம், முப்புரம் எரித்தார் என்று. ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று
துர்குணங்களின் அடையாளமாக, பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகக் கோட்டைகளை
கட்டிவைத்து, அதனைக்கொண்டு உலகைத் துன்புறுத்தி வந்த அசுரர்களை மாய்த்தார் என்று
ஒரு கதை பார்த்தோம். அப்போது அவ்வசுரர்களை மாய்க்க, மஹாவிஷ்ணுவுடன் சேர்ந்து, மேரு
மலையையே வில்லாக உபயோகித்து, அக்கோட்டைகளை தகர்த்து, அசுர்ர்களை மாய்த்தார் என்பது
புராணக்கூற்று.
கஜமுகாசுரன் என்ற
அசுரன், தாரகவனத்தில் தவம் இயற்றிக் கொண்டிருந்த முனிவர்களை தவத்தில் ஈடுபட
முடியாது செய்த போது, அவர்களைக்காக்க, கஜமுகனைக் கொன்று, அந்தப் பெரிய யானையைப்
பிளந்து, தோலைப் போர்த்துக்கொண்டு நடனம் ஆடினார் பெருமான் என்பது புராணக்கதை.
அப்படி கரி உரி போர்த்து ஆடியது அவரது அட்ட வீர செயல்களுள் ஒன்றாகச்
சொல்லப்படுகிறது.
இப்படி, தங்கச்
சிலை, அதாவது மேரு மலையைக் கொண்டு முப்புரங்களை மாய்த்தவனும், கரியைக் கொன்று
உரித்துப் போர்த்திய சிவனுமான என் அப்பனின் ஒரு பாதியானது, உன் அழகிய கொங்கையின்
தாமரை மொட்டுப்போன்ற மென்மையான நகில்களாக இருப்பதைக்காண்கிறேன், அங்கு, உன் கைகளோ
சிவந்து, அவற்றில் கரும்பு வில்லும் மலரும் எப்போதும் என் சிந்தையில் இருக்கிறது
என்று ஆனந்தப்படுகிறார்.
வெறும் பத
பதார்த்தங்கள் பார்த்தால், இது ஒரு ரூப வர்ணணை. அம்பாளையும் ஈசனையும், அர்த்தநாரி
ஸ்வரூபத்தில் பார்த்த வர்ணணை என்று தோன்றும். நம் கருத்து, அதையும் தாண்டி
சிந்திப்பது.
பொன் மலையாம் மேரு
மலையைக்கொண்டு முப்புரம் மாய்த்தது, மனித மலங்களான ஆணவம், கன்மம், மாயை இவற்றை
மாய்க்க ஈசன் கொண்ட கருணை.
யான்எனது என்னும்
செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம்
புகும்
என்றாரே வள்ளுவர்,
அந்த அஹங்கார மமகாரங்கள் போனால் தான் இந்த பிறவி உய்வுறும் என்று உணர்த்திய அவரது
கருணை அது.
கஜாசுரன் அழித்தது,
தாரக முனிவர்களுக்கு பாடம் புகட்ட. அவர்கள், தத்தம் கருமம் ஒன்றே போதும், ஈஸ்வர
ஆராதனைகள் தேவையில்லை, நமக்கு மேல் ஒரு சக்தியில்லை என்று வாதத்தில், தற்காலத்தில்
இருக்கும், கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்தார்கள். அச்சமயம், அவர்கள் சில துர்
மந்த்ரங்களை ஏவி விட்டு, ஈஸ்வரனையே அழிக்க முறபட்டார்கள். அப்போது அவர்கள்
அனுப்பிய மான், புலி, பாம்பு அனைத்தும் அவரது ஆபரணங்கள் ஆயின. யானையும் அவர்கள்
அனுப்பியது தான். அந்த யானையை ஈசன் பிளந்து தோலுரித்து போர்த்திக்கொண்டார் என்ற
உருவகக் கதை,
அஹங்காரத்தினால்
நிலை மறந்து ஆடும் ஜீவனின் ஆணவத்தை அடக்க ஈசன் கொண்ட கருணையின் வெளிப்பாடு.
உறுத்தெரியாமல் அந்த ஆணவத்தை போக்குகிறார் என்பது குறியீடு.
இப்படி, எனது,
என்னும் எண்ணமும், நான் என்ற அஹங்காரமும், போக்கச்செய்யும் ஈசனுக்கு ஒரு பாதியாக
இருப்பது யாரென்று பார்த்தால், அவள் அழகிய மென்மையான கைகளில் கரும்பும் பஞ்ச
பாணங்களான மலர் அம்புகளும் வைத்திருக்கிறாள். அவையோ, என் மனமும், அதன் ஆசைகளும்
என்பது அறிந்தேன்.
ஆக, என் ஆசைகளினால்
உண்டாகும் செயல்களும், அச்செயல்களினால் எனக்கு உண்டாகும் ஆணவமும், அந்த ஆணவம்
தரும் யான், எனது என்னும் செருக்கும் என்னைவிட்டு நீங்க வேண்டும் என்பதே என் தவ
வாழ்வுக்கு முக்கிய அங்கம் என்பதாலும், இந்த அத்தனின் ஆணவமலமறுத்த உருவமும்,
ஆணவத்துக்குக் காரணமான ஆசையினைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உன் உருவமும்
சேர்ந்து எப்போதும் என் சிந்தையில் இருக்கிறது அம்மா என்கிறார் பட்டர் பெருமான்.
ஒவ்வொரு
புராணக்கதையும் ஒரு உள்ளார்ந்த கருத்து சொல்லும். நாம் தான் தேடி அறிந்து, அப்புராணக்கதைக்கான
உண்மையை அறிந்துகொண்டு உய்த்து உணர வேண்டும். எல்லாமே முடிவில், ஜீவனை ப்ரம்மத்தை
உணரச்செய்யும் நிலைக்கு இட்டுச்செல்வனவே. இதற்குத் தடைகள் உடைப்பதே இறைவன் கருணை.
“ஸதாசிவ
குடும்பினி, தத்வமர்த்த ஸ்வரூபிணி, ஶிவசக்த்யைக்ய ரூபிணி, த்ரிபுராம்பிகா” போன்ற
அம்பாளின் நாமங்கள் சிந்திக்கத்தகுந்தவை.
மனத்தை அன்னையிடம்
வைத்து மலம் நீக்குவோம்.
.... கண்மணி
23/8/21
அபிராமி அந்தாதி 64
தேறும்படி சில
ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள்,
குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
ஆறும் தலைவி இவளாய்
இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு
என்று கொண்டாடிய வீணருக்கே (63)
சிந்தையில் சதா
உறைந்திருக்கும் அம்பாளின் வேலை என்ன? ஒன்றும் இல்லாது போகாது. ஏனென்றால்,
அப்படிச் சிந்தையில் அவளை இருத்த ப்ரம்மப்ரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது
சாதகன். லேசில் அவளை உள்ளே இருத்த முடியாது, அதற்கு இந்த ஊசலாடும் மனம் இடம்
கொடுக்காது, நிறைய பயிற்சியும், முயற்சியும், புண்யமும், அவளுடைய பரம அநுக்ரஹமும்
வேண்டும் என்பது இதுவரை பார்த்த பாடல்களின் மூலம் அறிந்தோம்.
இந்த பாடலில்,
உள்ளே விரவியிருந்து, வெளி முதலாகிய பூதங்கள் யாவும் தானே என்று காட்டிய அவள்,
தரும் அந்த பேரறிவு, முக்தி நிலையாக இருக்கிறது. அதை அடையும் வழியும் அவளே என்று
கூறுகிறார்.
இறையுணர்தல் தான்
இந்த மனித வாழ்வின் முதல் குறிக்கோள். இறையுணர்ந்து, தனை உணர்ந்து, இரண்டும்
ஒன்றென உணர்ந்து ஆனந்தமாக இருப்பது தான் இந்த வாழ்வின் பரம ப்ரயோஜனம். இதை மனிதன்
உணர, ஆறு விதமான வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
கணபதி உபாசனை
செய்து காணாபத்யம் என்ற சமயம் கொள்ளலாம்,
சூர்யனை உபாசித்து
சௌரம் என்ற சமயம் கொள்ளலாம்
குமரக்கடவுளை
உபாசித்து கௌமாரம் என்ற சமயம் கொள்ளலாம்
விஷ்ணுவை உபாசித்து
வைஷ்ணவம் என்ற சமயம் கொள்ளலாம்
சிவனை உபாசித்து
சைவம் என்ற சமயம் கொள்ளலாம்
சக்தியை உபாசித்து
சாக்தம் என்ற சமயம் கொள்ளலாம்.
ஒவ்வொன்றிலும்,
ஒவ்வொரு விதமாக இறைவனை வழிபட, ஆராதிக்க நியமங்களும், அதற்கென்று முறையான
மந்த்ரங்கள் ஸ்தோத்திரங்கள் வகுக்கப்பட்டு, அதற்கென்று பரம்பரையான குருபீடங்கள்
அமைத்து முறையான வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.
அம்பாள், சர்வ
சக்தியாக விளங்குவதால், அவள் இச்சமயங்களுக்கெல்லாம் தலைவியாக இருந்து, அனைத்து
தெய்வங்களையும் உபாசிக்கக் கற்றுக்கொடுக்கும் பெருங்கருணையை செய்து வருகிறாள்.
அம்பாள் இருக்க
எதற்கு ஆறு வகை உபாசனைகள் என்று கேட்கத் தோன்றும்.
லட்டு, குலாப்
ஜாமூன், மைசூர்பாக் எல்லாம் இனிப்பு தான் என்றாலும், ஒவ்வொன்றில் ஒரு சுவை உள்ளது
இல்லையா? அது ஒவ்வொருவருடைய விருப்பத்துக்கு ஏற்ப தேர்வும் செய்யப்படுகிறது
இல்லையா? அது போல, ஒவ்வொரு மனம் ஒவ்வொரு உபாசனை முறைக்கு பக்குவப்பட்டிருக்கும்.
எல்லாவகையும் உள்ளன, ஏற்றதை தேர்ந்தெடுத்து அதை முறையாக கடைப்பிடித்து வர, இறுதி
பயனான முக்தியை அம்பாள் நிச்சயம் அருள்வாள் என்பது திண்ணம்.
இந்து மதம் இப்படி
ஒரு பல்சுவை விருந்தாக இருப்பது தான் சிறப்பு.
இங்கேயே இத்தனை
விதங்கள் இருக்க, அவற்றைத் தேர்ந்தெடுக்க சுதந்திரமும் இருக்க, ஒரு சிலரோ, வேறு
சமயங்களுக்கு செல்கிறார்கள், அதற்காக அலைந்து திரிகிறார்கள் என்கிறார்.
பொதுவாக, நம்
நாயன்மார்கள், அப்பர், ஞான சம்பந்தர் காலங்களில், சமணம் வளர்ந்து
கொண்டிருந்ததையும், அதற்காக, அங்கங்கு மன்னர்கள் மாறுவதும், அதனால் குடிகளை
மாற்றுவதும் நடந்து கொண்டிருந்தன என்றும் பார்க்கிறோம் வரலாற்றில். சமணம் நல்ல
விஷயங்கள் சில கொண்டிருந்தாலும், அவர்கள் வேதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. சடங்குகள்
ஏற்கவில்லை. ஆனால், கோட்பாடுகள் என்று அவர்கள் கொண்ட புத்தகங்கள் அவர்களால்
வேதநூல்களாக வைத்து வழிபடப்பட்டதென்னவோ உண்மை. அவர்கள் கொள்கைகள் வேத
கருத்துக்களுக்கு ஒவ்வாது இருந்ததால், வேதங்களை பின்பற்றி வாழ்க்கை நடத்திய
வைதீகர்கள் அச்சமயங்களை ஏற்கவில்லை.
இச்சமயச் சண்டைகள்
இன்று வந்தது அல்ல, அநாதி காலமாக இருந்து கொண்டு தான் உள்ளன.
பட்டர் சொல்வது,
இப்படி அம்பாளால் ஆளப்படும் ஆறுவிதமான சமயங்கள் இருக்கும்போது, சிலர் வீணாக மற்ற
சமயங்களை நாடுவது எப்படி இருக்கிறது என்றால், ஒரு பெரிய மலையை, ஒரு சிறு மரத்தூண்
கொண்டு தகர்க்க முற்படுவது போல் உள்ளது என்கிறார்.
மலை என்றது வேதங்களை.
அவை எண்ணிலடங்காது இருப்பதால், அவற்றின் பெருமை சொல்ல, மலை போன்றது என்றார். சிறு
மரத்தூண் என்றது, மற்ற புதிய சமயங்கள் வேதங்களை ஏற்காத சமயங்கள், கோட்பாடுகளில்
நிலையில்லாத சமயங்கள் என்ற காரணத்தால்.
அம்பாளின் பெருமை
சொல்ல ஒரு பிறவி போதாது. “வேத வேத்யா, ஸர்வ வேதாந்த ஸம்வேத்யா, ஸத்யாநந்தா,
ஸமயாசார தத்பரா” என்கிறது ஸஹஸ்ரநாமம். வேதங்களை முற்றிலும் அறிந்தவள் அவள்.
அவளடி பற்றுவோம்,
பற்றற்றிருப்போம்.
.... கண்மணி
24/8/21
அபிராமி அந்தாதி 65
வீணே பலி கவர்
தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு
அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு
பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு
நிலமும் திசை நான்கும் ககனமுமே (64)
அன்னையைத் தவிர
யாரிடமும் சரணடைய மாட்டேன் என்பதை ஆங்காங்கு சொல்லிக்கொண்டே வரும் பட்டர்
பெருமான், 23ம் பாடலில் பரசமயம் விரும்பேன், 31ம் பாடலில் இனியெண்ணுதற்கு சமயமும்
இல்லை, என்றார்.
இங்கு, சில சிறு
தெய்வங்கள் க்ராமத்து தெய்வங்கள் பெயரைச்சொல்லி, அவற்றுக்காக பலி கொடுப்பது போன்ற
துராச்சார செயல்கள் செய்யும் அந்த வீணான செய்கை புரிபவர்களுடன் சேர மாட்டேன்.
அவர்கள் காட்டும் தெய்வங்கள் மேல் சென்று அன்பு பூண மாட்டேன் என்கிறார்.
ஏன் அன்பு செய்ய
முடியாதாம்? அன்னையிடம் அன்பு பூண்டதால். அன்னை யார்? சகல ப்ரபஞ்சங்களுக்கும்
ஆதாரம், தாய். அவளிடம் அன்பு பூண்டால், பின் ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்
தனியாக, அன்பு பூணுதல் என்பது எதற்கு?
எது ஒன்றத் தெரிந்து
கொண்டால் எல்லாம் தெரிந்தது ஆகுமோ அதைப் பற்றி எனக்கு உரையுங்கள் என்று சிஷ்யன்
கேட்பார் குருவிடம் முண்டகோபநிஷத்தில். இருப்பதெல்லாம் இறைவனே என்னும் போது,
அவ்விறைவனை அறிந்தபின், மற்ற படைப்பில் உள்ள அனைத்திலும் அவன் தான் இருக்கிறான்
என்பதால், ஒவ்வொரு படைப்பைப்பற்றியும் விரிவாக அறிய என்ன இருக்கிறது என்பதால்,
பூரண ஞானம் அடைய பரம்பொருள் குறித்த ஞானம் ஒன்றே போதும் என்பது ஆன்றோர் கருத்து.
அது போல, இங்கும்
உன்னை விரும்பி உன் மீது அன்பு கொண்டேன். பின் சிறு தெய்வங்கள் மீது அன்பு செலுத்த
மாட்டேன் என்று சொல்கிறார்.
அம்பாள்
மூவுலகுகும் உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே இருக்கிறாள் என்றார், ஒளி நின்ற
கோளங்கள் ஒன்பதும் மேவி உறைபவள் என்றார், அருமறைக்கு முன்னாய், நடு எங்குமாய்,
முடிவாய முதல்வியாய் இருக்கிறாள் என்றார் முன் பார்த்த பாடல்களில். இங்கு, இப்படி
எங்கும் நிறை பரப்ரம்மாய் இருக்கும் அவளது ப்ரகாசம் மட்டும் தான் அவருக்குத்
தெரிகிறது, வானுக்கும் பூமிக்குமாய் அந்த ப்ரகாசமானது படர்ந்து விரிந்து, நான்கு
திசைகளிலும், அப்ரகாசமே தெரிவதால் அவரது விழிகள், அகமும் சரி புறமும் சரி,
அவளையன்றி ஒன்றையும் காணவில்லை.
“சித்சக்தி சேதனா
ரூபா, ஜட சக்திர் ஜடாத்மிகா, ஸர்வாதாரா, ஸதஸத் ரூபா, மஹதி, விராட் ரூபா,” இப்படி
பல பெயர்களால், அவளுடைய விஸ்வரூபம் ஸஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருப்பதை த்யானம்
செய்ய நல்லது.
.... கண்மணி
25/8/21
அபிராமி அந்தாதி 66
ககனமும் வானும்
புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த
தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும்,
முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது
அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே (65)
அன்னையின் வல்லமை
கூறும் இன்னுமொரு பாடல் இது. அன்னையின் கருணை இடம் பொருள் ஏவல் அறிந்து செயல் படும்
என்பது முன்னரே பார்த்தோம்.
தேவர்கள் குறை
தீர்க்க, ஈசனை நாடிய சமயம், அவர் கடும் தவத்தில் இருக்க, அத்தவம் கலைந்து, அவர்
அன்னையை, பார்வதியாக இருந்த அம்பாளை மணந்து, இருவரும் இணைந்து, குமரனைத்
தோற்றுவிக்க செய்வதற்கு காலம் ஆகிறதே என்று அவர்கள் மன்மதனின் உதவி நாடினர்.
எப்போதும் நமக்கு
ஒரு விஷயத்தில் நல்ல அறிவு இருந்தாலும், அவ்வறிவில் நம்மை விட சிறந்தவர்களிடமே
அதைக் காட்டுவது தவறு. அனைத்து கலைகளுக்கும் பிறப்பிடமாக விளங்கும் பரம்பொருளிடம்,
ஒற்றைக் கலையான இச்சையைத் தூண்டும் கலையைப் ப்ரயோகம் செய்து தன் திறமையை உபயோகப்படுத்த
வந்தது மன்மதனின் அறியாமை, அல்லது அந்த நேரம் அறிவுக்கண்ணை மறைத்த கர்வம்.
அதற்கு ஈசன் தந்த
தண்டனை, மூவுலகோரும் அறியும் வண்ணம், மன்மதனின் தகனம்.
வானில் தேவர்களும்,
மண்ணில் மனுடர்களும், ககனத்தில் அருவமாக இருந்து கொண்டிருக்கும் சித்தர்களும்
அறிய, மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன்.
இந்த செயல், இச்சா
சக்தி என்ற சக்தியை நிறுத்திவிட்டது. அப்படி இச்சை இல்லாது போனால் உலக இயக்கம்
பாதிக்கப்படுமே என்று அனைவரும் அன்னையைத் தொழ, அவரது பெருங்கருணையால், ஈசனிடம்
முறையிட்டு, பின் மன்மதனின் உருவம் இரதிக்கு மட்டும் தெரியவும், அவரது வேலைகள்
தொடர்ந்து செய்யவும் வழி வந்தது. ஈசன் கோபமும் தணிந்தது.
ஈசனுக்கு ஏன் கோபம்
வந்தது? அவரது தவம் கலைக்கப்பட்டதாலா? இல்லை. அவரது தவம் கலைக்க எடுத்த தவறான
அணுகுமுறையினால். எந்தச் செயலிலும் அணுகுமுறை முக்கியம். சாதாரண மானுடன் போல, பெண்
மோஹம் கொள்ளச் செய்ய ஈசன் நரன் அல்லவே. அவர் பரம்பொருள். அவரது சங்கல்பமும்
அனுக்ரஹமும் பெற சரியான அணுகுமுறை வேண்டும். அது இல்லாததால் தான் அவரது
கோபத்துக்கு ஆளாக வேண்டி இருந்தது.
கோபப்பட்டாலும்,
நோக்கம் என்னவென்று அறிந்ததால், அவரோ, தனது அறிவுச்சுடரைத் தந்து, மிக வலிமையான,
ஆறுமுகத்துடன் பன்னிரு கரங்கள் கொண்ட அழகிய முருகன் உருவாக அருள் செய்தார். இது
தான் மேன்மக்கள் குணம். நோக்கம் நல்லதென்றால் கோபப்பட்டாலும், பின் உதவியும்
செய்வது.
இந்த கோபம்
தணிந்து, அழகன் குமரன் உருவாக காரணமாக இருந்தது, அன்னையின் சரியான அணுகுமுறையே.
அவரது எண்ணம் அறிந்து பக்குவமாக அவரிடம் ஐந்து அம்புகளையும், மன்மதனின் கரும்பு
வில்லையும் சரணடைவித்து, தேவர்களைக்காக்கும் வல்லமை படைத்த ஒரு குமாரனை
வேண்டிப்பெற்ற வல்லமை அன்னையின் கருணையே.
முந்நான்கு என்றது
குமரனின் தடந்தோள்கள் பன்னிரண்டும், இருமூன்றென சொன்னது ஆறு முகங்களையும் என்றறிக.
அதனால் தான் அவளது
வல்லமையைப் புகழ்கிறார் இங்கு.
அன்னையைத் தொழ
நமக்கும் எங்கு யாரிடம் எப்போது எப்படிப் பேசுவது என்ற அறிவும் வரும் இல்லையா?
“குணநிதயே நம:”
என்பது அவள் நாமம். குணம் முக்கியம் எந்த உயரம் சென்றாலும்.
.... கண்மணி
26/8/21
அபிராமி அந்தாதி 67
வல்லபம் ஒன்று
அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது
பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
வில்லவர் தம்முடன்
வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும்,
நின் திரு நாமங்கள் தோத்திரமே (66)
ஒவ்வொரு
சொல்லுக்கும் என்ன பொருள் புதைந்து இருக்கிறது என்று நாம் ஆராய்ந்து அநுபவித்துக்
கொண்டிருக்கிறோம். அவரோ, தன்னை, எத்தனை விநயமாக சொல்லிக்கொள்கிறார் பாருங்கள்!
வல்லமை
அன்னையினுடையது என்று முன் பாடலில் அவளது வல்லமை புகழப்பட்டது. அது போன்று ஒரு
வல்லமை தனக்கு இல்லை, தான் மிகவும் சிறிய மதியுடையவன் என்று கூறுகிறார்.
முன்னே சொன்னார்,
நான் நடுக்கடலில் வீழினும் நீயே வந்து காக்க வேண்டும் என்றார், அவளது பாதங்கள்
தனது சென்னியில் வைத்து ஆள வேண்டும் என்றார். அவ்விதம் ஆண்டு காக்க அவள் திருவுளம்
கொண்டாலும் தனக்கோ அதற்கு சிறிதும் தகுதியில்லை, நாயைப் போன்று இகசுகங்களில்
அலையும் மனம் கொண்டு நிலையற்று இருப்பதால், அவளை நினைக்கும் என்ணம் இருந்தாலும்,
அவ்வப்போது நினைக்கின்றிலேன் என்றெல்லாம் தன்னை, தன்னிடம் உள்ள உண்மையான குறைகளை
அன்னையிடம் முறையிட்டுக்கொண்டே துதித்து வருகிறார்.
இங்கு, மீண்டும்,
அவளது திருவடித்தாமரை அல்லாது வேறு ஒரு பற்று தனக்கில்லை என்று சொல்லி, அது ஒன்றே
அறிவேன் என்கிறார்.
அன்னை, பொற்பரப்பு
என்று சொல்லும் பொன்மலையான மேரு மலையை வில்லாக வைத்திருக்கும் வல்லமையுடன் ஈசன்
இருக்கிறார். அவருடன் இணைந்து அன்னை வீற்றிருக்கிறாள் என்பதாக அவளது ரூப வர்ணனை
செய்கிறார்.
அப்படி
வீற்றிருக்கும் அன்னை, தான் பாடும் பாடல்கள் எப்படி இருந்தாலும், ஏதாவது இலக்கணப்
பிழையுடன் இருந்தாலும், சொற்கள் பொருளற்று இருந்தாலும், அல்லது விபரீதமான பொருள்
கொண்டிருந்தாலும், அன்னையின் கருணை அதை பொருக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறார்.
ஏன் அப்படி
பொருளற்ற சொற்களை எல்லாம் அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
ஏனென்றால்,
அவற்றின் இடையே, அவளது திருநாமங்கள் சொல்லப்படுவதால், அவையே பெரும் பலனைத் தந்து
விடும், பொருளற்ற சொற்களாகவே இருப்பினும், பொருள் பொதிந்த திரு நாமங்கள் தரும்
பலன் உய்விக்கும். ஆதலால், தன் உளரல்களாக இருந்தால், அவற்றையும் அவளது கருணையினால்
பொறுப்பது அவள் கடன் என்கிறார்.
குழலினிது யாழினிது
என்பார் தம் மக்கள்
மழலைச் சொல்
கேளாதவர்
என்பது மானுடத்
தாய்மார்களுக்கு மட்டும் அல்ல. ஸாக்ஷாத் ஜகன் மாதாவுக்கும் தான்.
அம்மா என்று
சொல்வதே போதும் அவளுக்கு, பெரிய இலக்கிய தரமான பாடல்கள் அவள் கேட்கவில்லை. அவளிடம்
சொல்லும் அந்த ஒரு “அம்மாவில்” அவள் மாத்திரம் தான் மனதில் இருந்து
இருப்பாளேயானால், அது ஒன்றே பலன் தரும். சுருங்கச் சொல்வதானால், பாவனை ஒன்று தான்
பக்தியின் ஆணிவேர்.
“நாமபாராயண ப்ரீதா”
அவள். அவள் நாமங்கள் உய்விக்கும். உயர்வோம், அவள் பெயர் சொல்வோம்.
.... கண்மணி
27/8/21
அபிராமி அந்தாதி --
68
தோத்திரம் செய்து,
தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும்
மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி,
குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு
பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே(67)
அன்னையைத்
தோத்திரம் செய்து தொழுவதால் என்ன பயன் என்று எத்தனையோ பாடல்களில் சொன்னார்.
எப்படித் தொழ வேண்டும் என்று முன்னே தவம் செய்தவர்கள் கடைபிடித்தவற்றைக்
கடைபிடிக்காது செய்தாலும் என் தவத்தைப் பொறுத்துக்கொண்டு அருள் புரிவாய் என்றார்
அவளிடம்.
அன்னையின் திருவடியை இமைப்போதும் நெஞ்சில் வைத்தார்க்கு
துன்பமில்லை என்றார். இனியொரு கருபுகும் அவலம் இல்லை என்றார். வானுலகம்
கிடைக்கும், சிவலோகம் கிடைக்கும், வேண்டிப்பெற முக்தியும் கைகூடும் என்றெல்லாம்
சொன்னார்.
இப்போது சற்று அதே
விஷயத்தை, செய்வதால் பயன் சொன்னது போல, செய்யாநிற்பதால் என்னவாகும் என்று
சொல்கிறார்.
மின்கொடி
போன்றிருக்கும் அம்பாளின் தோற்றத்தை ஒரு க்ஷண நேரமேனும் நெஞ்சில் வைத்து
த்யானிக்காதவர்களுடைய, நல்ல குலம், கோத்திரம் இவற்றின் பெருமைகள் இழந்து,
கல்வியிழந்து, குணம் குன்றி, ஐயம் புகுந்து உண்ண நேரும் என்று சொல்கிறார்.
இதென்ன? தெய்வம்
கருணை மிக்கது என்று தானே அறிந்திருக்கிறோம்? தொழாது இருப்பவனுக்கெல்லாம் நன்மை
செய்வதைக் கண்கூடாக வேறு பார்க்கிறோம், இப்படி தண்டித்தால் அது எப்படி தெய்வமாகும்
என்று நம் சிற்றறிவின் புரிதலுடன் இந்தப்பாடலை அணுகுதல் பயன் தராது என்பது என்
எண்ணம்.
வண்மை குலம்
என்றால், நல்ல சத்தான, தர்மம் மிக்க செயல்கள் செய்து, சந்ததிகள் பெருக்கி வாழ்ந்து
கொண்டிருக்கும் குலம் என்று கொள்ளலாம். அப்படி ஒரு குலத்தில் தோன்றியவர், நிச்சயம்
நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டவராகத்தானே இருப்பார்? அப்படி இருக்கும் ஒருவர் மனதில்
நிச்சயம் சுத்தமான எண்ணங்கள் இருக்கும் ஆதலால் அம்பாள் குடி கொள்ள ஏதுவானதாக
இருக்கும். அம்பாளின் இருப்பு, உள்ளே இருக்க, அவள் குறித்த சிந்தனை நிறைந்திருக்க
வேண்டும் மனத்தில்.
நினைத்தால் தான்
அநுக்ரஹம் செய்ய வேண்டுமா? என்றால், நமக்கு இக லோக பலன்கள் நம் கரும வினையின் படி
அம்பாள் கொடுத்துக்கொண்டு தானிருப்பாள். முக்தி விரும்பும் இச்சை வந்தால், அவள்
உள்ளததுள் அமர்ந்து இருக்கத்தான் வேண்டும், அதற்கு ப்ரயத்தனப்படத் தான் வேண்டும்.
இப்படி ஒரு கணம் கூட அவளை நினைக்காது இருந்தால், என்ன தான் நல்ல குலமானாலும்,
அதனால் என்ன பயன்?
“உத்தரேத்
ஆத்மநாத்மாநம்” என்று தான் க்ருஷ்ணர் சொல்கிறார். நீ தான் முயற்சி செய்ய வேண்டும்
என்று அர்ஜுனனுக்கு பாடம். நமக்கும் தான். முயற்சி செய்யாதவர்கள், இந்த உலக
வாழ்வில் உழன்று, பர சிந்தனையை மறந்து, சேர்க்கை சரியில்லாது போனால், பர
நிந்தனையும் செய்து, தன் குலத்தின், கோத்திரத்தின் பெருமை எல்லாம் நஷ்டமாகும்படி
நடந்து கொள்வர்.
அதனால், பெற்ற
கல்வி பயன் தராது இல்லையா? அம்பாளைப்பற்றிய சிந்தனை பண்படுத்தும். பண்பாடு ஒன்று
தான் கல்வியின் முக்கிய பலன், காட்டு மிராண்டிக்கும் கல்வியாளனுக்கும் என்ன
வித்தியாசம்? அது பண்பு, குணம் இவை தானே?
நெஞ்சில் அம்பாளின்
சிந்தனை இல்லாது போக, பண்பு கெடும். அதனால், அதன் தொடர்ச்சியாக, வாழ்வில்
தோல்விகள் வரும், அதனால் செல்வம் இழந்து அடுத்தவர் தயவு நாடியிருக்கும் நிலை
வரும்.
ஒரே ஜென்மத்தில்
வருமோ, அடுத்து அடுத்து கிடைக்கும் மனிதப்பிறவிகளில் வருமோ! ஆனால், நன்னெறியும்,
நல்லொழுக்கமும் ஒரு பிறவியில் சம்பாதித்தால் பல பிறவிகளுக்கு பயன் அளிப்பது போல,
தீநெறியும் தீயொழுக்கமும் கூட, பல பிறவிகளுக்குத் தொடர்ந்து வரும்.
அம்பாளைத்
தொழாவிட்டால் உனக்கு தீமை என்பதல்ல இங்கு பொருள். அவர் தான் 55ம் பாடலில்
சொன்னாரே, உன்னாது ஒழிந்தாலும் அவளுக்கு ஒன்றும் குறைவில்லை. நாம் நம் சாதனைக்காக
அவளிடம் அன்பு செலுத்துகிறோம். சாத்யம் முக்தி என்றால் மெனக்கெட வேண்டும். சுகபோக
லோகங்கள் என்றால் அதற்கு மெனக்கெட வேண்டும் யாக யக்ஞாதிகள் செய்து. எந்த லோகம்
போனாலும் ஒன்றும் கவலை இல்லை என்றால், மிருக வாழ்வை ஆனந்தமாக வாழலாம் இங்கே.
நமக்கு முழு சுதந்திரம் உண்டு தேர்வு செய்ய.
“சொல்லிய பாட்டின்
பொருளுணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்துக்கு, பல்லோரும் ஏத்தப்பணிந்து”
என்றாரே திருவாசகத்தில்! அன்னையின் ரூபத்தை, அவளை உணர்ந்து அவள் மீது மாறாத
அன்புடன், ஒரே ஒரு கணம் நினைக்க அவள் அழியா பதம் அருளக்காத்திருக்கிறாள்.
“முக்திதாயை,
முக்திப்ரதாயை, மோக்ஷப்ரதாயை, பவதாரிணி” அவள். இந்த பிறப்பு இறப்பு சுழலை நிறுத்த
அவள் ஒருத்தி தான் உதவ முடியும். அது வேண்டுமானால், அந்த மின்னலையொத்த மலைமகளை ஒரு
க்ஷணமேனும் உள்ளத்தில் “இருத்தி” உணர்ந்து த்யானிக்க வேண்டும் என்பதே இங்கு
பெரும்பொருள்.
.... கண்மணி
28/8/21
அபிராமி அந்தாதி 69
பாரும், புனலும்,
கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை
ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி,
சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம்,
உடையார் படையாத தனம் இல்லையே (68)
அன்னையைத் தொழுது
ஏத்தாதவர்கள், இந்த பிறவிச்சுழலில் சிக்குண்டு விஷய வாசனைகளில் இருந்து மீள
முடியாமல் தவிப்பார்கள் என்பது சென்ற பாடலில் சொன்னார்.
ஏன் அவ்வாறு தவிக்க
வேண்டும்? இந்த உலக இன்பங்கள் இன்பம் தருவது போன்று இருந்தாலும், இறுதியில்
துன்பம் தருவனவாகவே இருக்கின்றன.
அம்பாளைத்
தோத்திரம் செய்து தொழுதால், கவனம் இந்திரிய சுகங்களில் இருந்து விடுபட்டு ஆன்ம சுகத்தை
நாடும். நம் நிஜ ஸ்வரூபமான ஆனந்த நிலையை உணரும். அது துன்பங்கள் கடந்த பேரின்ப
நிலையாகும்.
அப்படி பேரின்ப
பெருநிலையே மோக்ஷம், முக்தி என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. அது தான் இருப்பதிலேயே
பெரிய செல்வம் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
அப்பெரிய செல்வம்
யாருக்கு எளிதாக கிட்டும்? அம்பாளை, அவளது திருவடிகளை சரணடையும் அடியார்களுக்கு
மிக எளிதாக கொடுக்கிறாள் அவள். தவம் செய்து தம் கரும்ம் செய்தவர்கள், வேதங்களின்
உருவகமாக இருக்கும் அவளது திருவடியை சதா த்யானம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு,
இந்த உலகம் முழுவதும் அவள் வடிவமாகத் தான் தெரியும்.
உலகம் எதனால் ஆனது?
பஞ்ச பூதங்களால் தான் ஆனது. பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம்
ஆகியன. இவை தந்மாத்திரைகள் என்று சொல்லப்படும்.
இவ்வைந்து
பூதங்களும் ஒவ்வொரு வகையான அநுபவங்கள் தருகின்ற தன்மைகள் உடையன. நிலத்தால் வாசம்
அறியப்படும், நீரால் சுவை அறியப்படும், நெருப்பினால் ஒளி அறியப்படும், காற்றினால்
தொடு உணர்வு அறியப்படும், ஆகாயத்தால் ஒலி அறியப்படும். இப்படி ஐவகை பூதங்களினால்,
ஐவகை விஷயங்கள் அறியப்படுகின்றன. இந்த விஷயங்கள் தான் அநுபவத்திற்கு காரணமாகின்றன.
சுவை ஒளி ஊறு ஓசை
நாற்றம் இவ்வைந்தின் வடையறிவான் கட்டே உலகு என்று இவற்ற அடக்குதல் குறித்து
கூறுகிறார் வள்ளுவர்.
இவ்வைந்து
விஷயங்களுக்கும் அவ்விஷயங்களின் தன்மை உண்டாக சக்தி அவசியம் வேண்டும். இல்லையேல்,
அந்தந்த விஷயங்களின் தன்மை நம்மால் அறிய முடியாது.
அம்பாளை,
உள்ளேயும், வெளியேயும், வெளியாகவும் பார்க்கிறார் பட்டர் பெருமான். வெளிமுதலாகிய
பூதங்களும் அவளே என்றார் முன்பே. இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து பொருள் நோக்க
வேண்டும். அப்படி அனைத்தினுக்கும் உள்ளே, புறம்பே, வெளி முதலாகிய
பூதங்களுக்குள்ளும் புறமும் அவள் என்னவாக இருக்கிறாள்? அவற்றின் சக்தியாக
இருக்கிறாள்.
இந்த்ரியங்களின்
சக்தியும் அவளே, இந்த்ரியங்களுக்கான விஷயங்களின் சக்தியும் அவளே. நிலம் அவளே,
நிலத்தில் அறியப்படும் நறுமணமான ஊரும் அவளே. நீரும் அவளே, அந்நீரால் அறியப்படும்
நறுஞ்சுவையும் அவளே, நெருப்பும் அவளே, அந்நெருப்பின் ஒளியாகி நிற்பதும் அவளே,
வேகமாக வரும் வெங்காற்றும் அவளே, அக்காற்றில் அறியப்படும் தொடு உணர்வும் அவளே,
ஆகாசமும் அவளே, அவ்வாகாசத்தின் தன்மையான சப்தமும் அவளே என்கிறார்.
இப்படி அனைத்துமாய்
இருக்கும் அவளிடம் யார், மனம் ஒன்றி தவம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவள் தரும்
முக்தி என்னும் பெருநிதியை தனம் என்று சொல்கிறார்.
“சௌபாக்யதாயின்யை,
சௌக்யதாயை, சகலாயை” இப்படித்தானே கொண்டாடுகிறது ஸஹஸ்ரநாமங்கள் அவளை?
அவள் இல்லாதொரு
இடம் இல்லை. இருப்பதெல்லாம் அவளே என்பதை அறிவது தான் செல்வத்துட் செல்வம் பெரும்
செல்வம்.
.... கண்மணி
29/8/21
அபிராமி அந்தாதி 70
தனம் தரும், கல்வி
தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ
வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன
எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங்
குழலாள், அபிராமி, கடைக்கண்களே (69)
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம் என்றொரு பாடல் உண்டு. அதிகபட்ச வரம் முக்தி. அதைத் தான் பெரிய
தனம் என்று சொல்கிறார் பட்டர் பெருமான்.
அத்தகைய
முக்திப்ரதாயினியின் கடைக்கண்கள் தரும் அநுகூலங்கள் தான் எத்தனை!! அவளது வேதரூபமான
இரு திருவடிகளும், வேதங்களின் முழுமையான பயனான முக்தியைத் தருவது முக்காலும்
உண்மை. அத்தகைய முக்தி நிலையின் ஒரு சில பரிமாணங்கள் சொல்கிறார் இந்த பாடலில்.
தனம் தரும் என்பது
எல்லாவிதமான செல்வங்களையும் தரும். கல்வி தரும். என்ன கல்வி தரும்? இன்று நாம்
படிக்கும் கல்வியைக் காட்டிலும் உயர்ந்த ஆத்யாத்மிகமான கல்வி தரும். அப்படி
ஆத்மஞானத்தைப் போதிக்கும் கல்வி வேதங்களைக் கசடறக்கற்பதன் மூலம் கிடைக்கும். கல்வி
தரும் என்ற போதே, நல்ல வழிகாட்டும் தகுதியும் அறிவும், பொருந்திய குரு கிடைப்பார்
என்றும் பொருளாகிறது. குரு இல்லமல் இந்த உலக வாழ்க்கையின் உன்னத பயனான மோக்ஷ சாஸ்த்ரத்தை
அறிய முடியாது. கல்வி என்றாலே மோக்ஷத்தைப்பற்றிய அறிவைப்பெறுவது தான்.
சாதாரண மனித
மனங்களுக்கு. பல விஷயங்களில் ஈடுபடுவதால், பலவிதமான ஆசைகள் உண்டாவதால், அதில் சில
அடையப்பட்டும், பல அடையப்படாதும் போவதால், ஆசையின் விளைவான பற்றும், அதன் காரணமான
கோபமும், அதன் தொடர்ச்சியான மோஹமும், மோஹத்தின் காரணமான புத்தி நாசமும் ஏற்படும்
என்பதை க்ருஷ்ணர் கீதையில் விஷயங்களின் மீதுள்ள பற்றை விடுவதைப்பற்றிக் கூறும்
போது சொல்கிறார். அன்னையின் பேரருளால், கல்வி, மோக்ஷ ஸாஸ்த்ரம் பற்றிய அறிவு
உண்டாவதால், இந்த மேல் சொன்ன ஆசையினால் உண்டாகும் தளர்வுகள் உள்ளத்தில் ஏற்படாது.
ஏனென்றால், குறிக்கோள் நிச்சயமாகி விட்டது. அது இந்த கீழான சிறிய
இன்பங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாயிறே!
இப்படி குழப்பமற்ற
தெளிவான தளர்வறியா மனத்தில், சுகமாக குடிகொள்ள அந்த பரம்பொருள் வந்து தானே ஆக
வேண்டும்? அதனால் தெய்வ வடிவம் தரும் என்றார். வடிவம் என்றதும், உருவம் தெய்வம்
போன்று ஆகும் என்பதல்ல பொருள். தெய்வத்துக்கு எப்படி விருப்பு வெறுப்பு அற்ற
தன்மையுள்ள மனம் இருக்கிறதோ, அப்படி, சாதகனின் மனம் விருப்பு வெறுப்பு அற்றதாக
நிர்மலமாக இருக்கும்.
எந்த விருப்பும்
வெறுப்பும் அற்று வேண்டுதல் வேண்டாமை இல்லாது இருக்கும் போது நெஞ்சில்
யாரைக்குறித்தும் தாழ்வான எண்ணங்கள் இருக்காது. ஏனென்றால், அபிப்ராயங்களே
இருக்காதே! அப்படிப்பட்ட நெஞ்சம் யாருக்கும் கெடுதல் செய்யாது, ஏமாற்றாது, பொய்
சொல்லாது. சொல்லிவிட்டு, வாய்மையிடத்து என்று சமாதானம் சொல்லாது, இப்படி
இவையனைத்தும் இல்லாததால், நெஞ்சில் வஞ்சம் இல்லாத தன்மை அமையப்பெறும்.
இவற்றையெல்லாம்
தருவதால், அன்னையின் அருளால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
குணம் நன்றாக
இருந்தால், எதிலும் எங்கும் வெற்றி தான் கிட்டும். குணம் நன்றாக இருக்க நல்ல
அநுஷ்டானங்கள் இருக்க வேண்டும். நல்ல அநுஷ்டானங்கள் (பழக்கவழக்கங்கள்) இருக்க
நல்லோர் இணக்கம் வேண்டும். நல்லோர் இணக்கம் கிடைக்க, தெய்வத்தின் அருளும்
புண்யமும் அவசியம் வேண்டும். இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே.
இப்படி, தனம்,
கல்வி, தெய்வ வடிவம், தளர்வறியா மனம், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம், நல்லன எல்லாம்
தரும் அன்னையின் ரூபம், கனம் (மேகம்) போன்ற கரிய கூந்தலுடையதாக இருக்கிறது,
அக்கூந்தல், நறுமணங்கள் பரப்பும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது, அவளது
கடைக்கண்களே இவையனைத்தையும் தருகின்றன என்று சொல்கிறார் பட்டர் பெருமான்.
“கன ஸ்நிக்த
லக்ஷ்ணம்” என்று கருத்த அடர்ந்த கூந்தல் கொண்டவளாக இருக்கிறாள் என்று அம்பாளை
சௌந்தர்யலஹரியில் 43வது பாடலில் ஆதிசங்கரர் வர்ணிக்கிறார். அவளது மேகம் போன்ற
கருமையான இருண்ட கூந்தல், எங்களது மன இருளை அகற்றட்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
கருநெய்தல் பூங்காட்டினை ஒத்த பளபளப்பு கொண்டுள்ளன அந்த அடர்ந்த கூந்தல் என்று
வியக்கிறார்.
கன்னங்கரிய
கூந்தல், பிச்சி மொய்த்தது என்று பட்டரும் முன்னே 53வது பாடலில் பாடினார்.
“ஸுஸ்நிக்த
நீலாலகஸ்ரேணி ஶ்ருங்காரிதே” என்று நீலக்கருங்கூந்தல் கொண்டவளாக ஶ்யாமளா
தண்டகத்தில் வர்ணிக்கிறார் காளிதாசர்.
அம்பாளின் இந்த
கருங்கூந்தலை, அதன் அழகை, அந்த இருண்ட கூந்தல் நம் மன இருளைப்போக்குவதை த்யானிக்க
அவளை மைவார்குழலி, மட்டுவார்குழலி, ஏலவார்குழலி என்றெல்லாம்
த்யானித்திருக்கிறார்கள் அடியார்கள். அப்படி த்யானிக்க, இவ்வுலக பந்தத்திற்கு
காரணமான சிற்றின்ப நாட்டங்கள் குறைந்து அந்த பேரின்பப்பெருவெள்ளம் அடைய நாடும்
மனம்.
“நீலசிகுரா,
சம்பகாசோகபுன்னாகஸௌகந்தீகலஸத்கசா, அஞ்ஞானத்வாந்த தீபிகா” போன்ற நாமங்கள் சிந்திக்க
உகந்தவை.
அவள் நம்
அஞ்ஞானத்தை அழித்து முக்திப் பாதையில் இட்டுச்செல்வாள்.
.... கண்மணி
30/8/21
அபிராமி அந்தாதி 71
கண்களிக்கும்படி
கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல்
வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும்
பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய
எம்பெருமாட்டிதன் பேரழகே (70)
அம்பிகையின் வர்ணனை
இன்னும் சிறிது விஸ்தாரமாக சொல்கிறார்.
கடைக்கண்கள்
அருளிச்செய்த பல நல்லனவற்றைச் சொன்ன பட்டர், அவளைக் கருங்கூந்தல் அழகியாகக்
கண்டார். இப்போது, அவ்வுருவைக் கண்குளிர, கண்கள் ஆனந்தப்பட களிப்போடு கண்டு
கொண்டேன் என்கிறார்.
கடம்ப வனவாசிநீ
என்பது அன்னையின் நாமம். கடம்பம் என்று ஒரு மரம். இன்றும் மதுரையில்
மீனாக்ஷியம்மன் கோவிலில் கடம்ப பரம் ஸ்தல வ்ருக்ஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒரு சமயம் மதுரை கடம்ப மரங்கள் நிறந்த பகுதியாக இருந்திருந்தது.
கடம்ப வனம்
அம்பாளின் ஸ்ரீபுர வர்ணனையில் உள்ளது. சௌந்தர்ய லஹரியில் 8வது பாடலில், அம்பாளின்
ஸ்ரீபுர வர்ணனை உள்ளது. அதில், நீபோபவனவதி என்று அவளது இருப்பிடம், நீப உப
வனத்தில் உள்ளது என்கிறார் ஆச்சார்யார். நீப என்றால் கடம்பம். உப வனம் என்றால்,
சிறு வனம். அடவி என்றாலும் வனம். கடம்பாடவி என்றால், கடம்ப மரங்களால் நிறைந்த
வனம்.
அங்கு என்ன
செய்கிறாள் அவள்? பண் களிக்கும் குரலில், இசையோடு கூடிய குரலால் பாடியபடி
கரங்களில் அழகிய வீணையேந்திய திருவுருவாய் இருக்கிறாள்.
ஶ்யாமளா
தண்டகத்திலும், காளிதாஸர், “சாரு வீணாதரே” என்கிறார். சாரு என்றால் அழகிய என்று
பொருள். அழகிய வீணையேந்திய திருக்கரங்கள்.
அழகிய
திருமார்புகள், பூமியின் பச்சை வண்ணம் கொண்டு, ஒருவித கரும்பச்சை நிறத்தில்
இருக்கிறாள். மதங்கர் என்ற முனிவருக்கு மகளாக அவதரித்ததால், மாதங்கி என்பதுண்டு
அம்பாளை. அங்கு மாதங்கியாக பார்க்கிறார் பட்டர் பெருமான்.
“ஜெய மாதங்க தனயே”
என்கிறார் காளிதாஸரும் ஶ்யாமளா தண்டகத்தில்.
அன்னையின் இத்தனை
அழகையும் பருகப்பருக, இவ்வுலக விஷயங்களில் நாட்டமும் வருமா என்பது மிகவும்
கேள்விக்குரியதே
அவள் அழகை
த்யானித்து, பேரின்பம் பெறுவோம்.
.... கண்மணி
31/8/21
அபிராமி அந்தாதி 72
அழகுக்கு ஒருவரும்
ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த
பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக்
கோமளயாமளைக் கொம்பு இருக்க--
இழவுற்று நின்ற
நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே? (71)
அம்பாளின் பேரழகைப்
பருகப்பருகத் தெவிட்டாத தெள்ளமுதாக உள்ளது பட்டருக்கும்.
அவளது அழகுக்கு
இன்னொரு பொருளை உதாரணமாக சொல்ல முடியாதாம். ஏன்? இன்னொன்று இருந்தால் தானே? அவளே
சகலமுமாய் இருக்கும் போது அவள் போன்று இன்னொன்று இருக்க முடியாதல்லவா?
வல்லி, என்ற பதம்
அவளது மெல்லிய அழகிய கொடிபோன்ற தேகத்தை, அவளது ரூபமாக அவர் பார்க்கும் காட்சியைக்
கூறுகிறார்.
அவளது இருப்பு, விண்ணுக்கும்,
மண்ணுக்குமாய், விரிந்து பரந்து இருப்பதால், அவள் திருவடிகள் எங்கும் விரவி
இருப்பதால், சிவந்து காணப்படுகின்றன என்கிறார். வேதங்கள் முழுதும் அவளது
திருவடியில் என்று கண்டோம் முன்னே பல பாடல்களில். பத அம்புயம் என்கிறார். சிவந்த
தாமரை மலர்களை ஒத்த இரு பாதங்கள் அவளுக்கு.
பிறைசந்திரனை,
குளிர்ந்த சந்திரனை தன் கூந்தலில் சூடியவளாக இருக்கிறாள்.
“ஶேகரீபூத ஶீதாம்
ஶுரேகா” என்று காளிதாஸர் ஶ்யாமளா தண்டகத்தில் அவளது குளுமையான சந்திர ப்ரபையினை
அணிந்த கூந்தல் அழகை சொல்கிறார். கோமளம் என்றால் அழகானவள் என்று பொருள்.
யாமளை என்று முன்னே
33வது பாடலிலும் சொன்னார். ஶ்யாமளை என்னும் உருவ வர்ணனை தான் இன்னும் முன் பாடலில்
இருந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. ஒருவித கரும்பச்சை நிறம் அம்பாளுக்கு இந்த
ரூபத்தில்.
கொம்பிருக்க
என்றது, நம் இகலோக வாழ்வின் பற்றுக்கோடாக அந்த பெருந்தேவியே இருக்க, அவள் தான் நம்
கொழுக்கொம்பு என்று உணர்ந்திருக்கும் மனமுடைய அடியார்க்கு வேறு ஒன்று பற்ற
முடியாது என்பதால், அவளை ஒத்தவரும் இல்லை, அவளே பிடிமானமாகவும் இருக்கிறார்
என்றார்.
அவ்வப்போது
அம்பாளிடம் சரணாகதியும், பின் அவளது அநுக்ரஹமும், அதன்பின் அவளது அருளின் பால்
கொண்ட நன்றியும், அதனால் அவளைன் காட்சியும், அது போகுமோ என்ற பயமும் கலந்த
பயணமாகவே இருக்கிறது இவ்வனைத்து பாடல்களிலும். அதன் படி, முன்னே பல துன்பங்களில்
உழன்ற நெஞ்சே உனக்கு இவ்வளவு அழகாக அருள் புரிய காத்திருக்கும் அவளது பேரருள்
இருக்க, என்ன குறை இப்போது? என்று நெஞ்சை வினவுகிறார்.
“சாரு சந்த்ர
கலாதரா, சரத்சந்த்ர நிபானனா” போன்ற நாமங்கள் சிந்திக்கத்தக்கன.
.... கண்மணி
01/9/21
அபிராமி அந்தாதி --
73
எங்குறை தீரநின்று
ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி
யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி
மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர,
எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே (72)
அன்னையைத்
துதிக்காமல் எதற்கு பழையனவற்றையெல்லாம் நினைத்து துன்புறுகிறாய் என்று
நெஞ்சத்திடம் கேள்வி எழுப்பினார். மீண்டும் அன்னையிடமே சரணாகதி பண்ணுகிறார்.
என் குறை தீர
நின்று ஏற்றுகின்றேன் என்கிறார். என்ன குறை அவருக்கு? பிறப்பே குறையினால் வந்தது
தானே? நம் கர்ம வினைகள் இன்னும் தீராது குறை இருப்பதால், தான் ஜீவன் மீண்டும்
மீண்டும் வினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்து கணக்கை சரி செய்து கொண்டு வருகிறது.
அந்த ஒவ்வொரு பிறவியிலும் கர்ம வினைகளின் பலன்கள் அநுபவிக்கப்பட்டு வருகின்றன.
மனிதப்பிறவி
ஒன்றில் தான் வினைகளின் பலன் அனுபவிக்கவும் முடியும், புதிய வினைகளின் பலன்கள்
சேர்க்கவும் முடியும், அதே சமயம், இந்த வினைகளும் பலன்களும் மாயை என்றுணர்ந்து
இந்தச் சுழல் அறுக்கவும் முடியும்.
அதனால் தான், “நான்
நிறைவானவன், பூர்ணன்” என்ற நினைவகன்று, நான் ஜீவன், அல்பமானவன், குறைவுள்ளவன்
என்னும் எண்ணங்கள் தீர, என்னைப்பற்றிய உண்மையான அறிவு எனக்கு கிடைத்து நான் இந்த
பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபட, உன்னைத் தொழுது ஏற்றுகிறேன் என்கிறார்.
நீயோ, எப்படி
இருக்கிறாய் தெரியுமா? மின்னல் கொடி தான் மிகச்சிறிய மெல்லிய உருவுக்கு ஒப்பென்று
இது வரை நினைத்திருந்தேன். அந்த மின்னல் கொடியின் மெல்லிய அளவுக்கும் ஒரு குறை
ஏற்படும் விதமாக, உன் இடையோ அதனினும் மெல்லியதாக இருக்கக்காண்கிறேன்.
உன்னுடன் ஏற்பட்ட ஊடலைத்
தீர்க்க, என் அத்தன் ஈசன், தன் தலையை உன் திருவடிகளின் மீது படுமாறு வைத்து, உன்
திருவடிகளின் மேன்மையை அறியச் செய்தார். அத்தனை பெருமையுடையவள் நீ.
உன்னருளால், உன்னை
நான் வணங்கி வீடு பேறு பெற்றேன். இனி, ஏதோ காரணங்களால், நான் மீண்டும் பிறந்தால்,
அது உன் குறை தானம்மா. என் குறை அல்ல. ஏனென்றால், நான் தான் உன்னை முழுதும்
சரணடைந்து நீ இருக்கும் போது ஒரு குறையும் இல்லை என்றிருக்கின்றேனே! என்கிறார்.
அம்பாளைச் சரணடைந்த
பின்னும் அவள் அருள் பெற்ற பின்னும் மீண்டும் பிறவி வருமா? என்றால், நம் ஞானத்தின்
நிஷ்டை பலமாக இல்லாது போனால், நமக்கு இந்த உடல் மெய், உலகம் மெய் என்னும் உணர்வு
இருக்குமானால், யோகப்ரஷ்டனாக மீண்டும் பிறப்பு வரும், அப்படி வந்தாலும், நல்ல
ஸம்ஸ்காரங்களுடன், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் சாதனைகள் தொடர்ந்து, முக்தி
நிலை அடைவான் என்று கீதையில் 6ம் அத்யாயத்தில், யோகப்ரஷ்டனின் லக்ஷணம் சொல்லும்
போது சொல்கிறார் க்ருஷ்ணர். ஜடபரதர் கதையும் பாகவதத்தில் நாம் அறிந்ததே.
அப்படியென்றால் ஏன்
அவளது குறை என்று சொல்ல வேண்டும்? அது அம்மாவிடம் உள்ள உரிமை. என் பாதை நீ காத்து
தருவது. அதில் குறையின்றி பார்த்துக்கொள் என்று அன்புக்கட்டளை இடுகிறார் என்றே
கொள்ள வேண்டும்.
அப்படி எல்லாப்
பொருப்பும் அவளிடம் தந்து, நமக்கிட்ட கடமைகள் மட்டும் செய்ய, ஒருநாளும் தளர்வறியா
மனம் தருவாள் அவள்.
“அஜ்ஞானத்வாந்ததீபிகா,
தௌர்பாக்யஸ்தூலவாதூலா, ஸம்ஸாரபங்கநிர்மக்னஸமுத்தரண பண்டிதா, தமோபஹா” போன்ற நாமங்கள்
நம் குறைகள் களைந்து முக்திப்பாதையில் இட்டுச்செல்லும் மந்திரச்சொற்கள்.
அவள் குறையற்ற
நிறைவேயென நம்மை உணரச்செய்வாள்.
.... கண்மணி
2/9/21
அபிராமி அந்தாதி --
74
தாமம் கடம்பு, படை
பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர்
ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி,
செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை,
ஒன்றோடு இரண்டு நயனங்களே (73)
எத்தனை
துதித்தாலும் போதாது மீண்டும் மீண்டும் துதிக்கத் தகுந்தது அன்னையின் திருவடிகள்
என்பது தான் பட்டரிடம் நாம் கற்கும் முதல் பாடம் என்று தோன்றுகிறது.
திருவடி என்றவுடன்,
ஸ்தூலமாக நமக்கிருக்கும் பாதங்களை மனதில் கொள்ளுதல் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு
முறையும் அவர் குறிப்பிடும் பலன்கள், திருவடி துதிப்பதன் பலன்கள் பார்த்தால்
நிச்சயமாக அவை பாதங்கள் அல்ல என்பது புரியும். பின் என்ன?
பாதங்கள்
வேதங்களின் உருவகம் என்று முன்னே பார்த்தோம். புகழப்படுவது வேதங்கள். வேதங்கள்
யாவும் அன்னையின் பாதங்களில் இருப்பதால், அன்னையின் பாதங்கள் அத்தனை மஹிமை
பொருந்தியவை. அவற்றின் தூளிகள் கூட முக்தியைத் தருகின்றன என்று சௌந்தர்ய லஹரியின்
3வது பாடலில் சொன்னார். 4வது பாடலில், திருவடித் தாமரைகள் மட்டுமே கேட்ட அத்தனை
வரங்களும் தரவல்லவை. மற்ற தெய்வங்கள் தான் அபய வரத ஹஸ்த முத்திரைகள் எல்லாம்
காட்டி பக்தனுக்கு அருள் பாலிக்க வேண்டும், உனக்கோ திருவடித் தாமரைகள் மட்டுமே
அத்தனை அருளும் தரும் என்றார்.
அடுத்து அவளது
நயனங்கள். கண்கள். முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே என்றார் அல்லவா?
சௌந்தர்ய லஹரியில் கூட ஆச்சார்யார், 6வது பாடலில், அம்பாளின் கடைக்கண்களின்
சக்தியினால் தான் மன்மதன் தன் வில்லையும் மலர் அம்புகளையும் செலுத்துகிறார் என்று
அம்பாளின் கடாக்ஷ வீக்ஷத்தைப் புகழ்கிறார்.
அம்மா, உன் வலது
கண் சூர்யனாக பகலை உருவாக்குகிறது, உன்
இடது கண்ணோ சந்திரனாக இரவை உருவாக்குகிறது, மூன்றாவது கண்ணோ இடது கண்ணும் வலது
கண்ணும் உருவாக்கும் இரவுக்கும் பகலுக்கும் இடையேயான சந்த்யா காலத்தை அல்லவா
உருவாக்குகிறது என்று ஆச்சார்யார் சௌந்தர்யலஹரியில் 48ம் பாடலில் வியக்கிறார்.
என்ன பொருள்? காலங்கள் யாவுமே அவள் அருளினால் தான் என்பது தான் அது.
தேவியின் கண்களில்
எட்டுவகை நோக்குகள் இருக்கின்றன என்று ஸ்ரீவித்யா சாஸ்த்ரங்கள் உரைக்கின்றன.
மேலும் அன்னையின்
பிடித்தமான மலரான கடம்ப மலரில் மாலை அணிந்தவளாய், அவளது கரங்களில் ஐந்து மலர் அம்புகள்,
கரும்பு வில்லுடன் செம்மையான ஒளி பொருந்தியவளாக இருக்கிறாள் என்கிறார்.
அவளை நடு இரவில்,
வழிபடும் பைரவர்களுக்கு அவள் அருள் புரிகிறாள். இப்படி பலவித ரூபங்களில்,
பலருக்கும் நேரம் காலம் பார்க்காமல் அருள் புரியும் அன்னை, எனக்கு என்ன நன்மை
செய்தாள் தெரியுமா? அவளது திருவடிகளை எனக்காகத் தந்தாள். அதாவது, வேத விழுப்பொருளை
எனக்கு உணர்த்தினாள் என்று சிலாகிக்கிறார். வேதத்தின் விழுப்பொருள் என்ன? நம் ஆத்ம
ஸ்வரூபத்தை உணர்த்தும் தத்துவங்கள் தான். அவை உணர்ந்த பின், நமக்கு இருக்கும் மாயை
அகலும், கர்மவினைகள் ஓயும், ஆணவமலம் அழியும். அவற்றை அழிப்ப்தால் அவளுக்கு
திரிபுரை என்று பெயர் என்கிறார்.
“மஹா பைரவ பூஜிதா,
மார்த்தாண்ட பைரவாராத்யா, திரிபுராம்பிகா” போன்ற நாமங்கள் சிந்திக்க உகந்தவை.
.... கண்மணி
3/9/21
அபிராமி அந்தாதி --
75
நயனங்கள் மூன்றுடை
நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும்
அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று
கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து
தமனியக் காவினில் தங்குவரே (74)
அம்பிகையின் நயன
தீக்ஷையின் மேன்மை பற்றி சென்ற பாடலில் சொன்னார். நயனங்கள் மட்டும் அல்ல, அவளது
திருவடிகள் செய்யும் மாயமும் சொன்னார். திருவடிகள் வேதங்களின் இருப்பிடமாகத்
திகழ்வதால் அவை முக்திக்கான சாதனமாகவும் சொல்லிக்கொண்டு வருகிறார்.
இப்போது, அதே
போன்று மூன்று நயனங்கள் உடையவர் சிவபெருமான். அப்படி முக்கண்ணனாய் இருக்கும்
சிவபெருமான் அவளுடைய நாதனுமாய் இருக்கிறார். இடப்பாகம் ஈந்த பெருமகனார், அம்பாளின்
சக்தியை முழுதும் உணர்ந்து, அவளை போற்றும் அவரும், அவரோடு சேர்ந்து, நாரணரும்,
ப்ரம்மாவும் கூட அம்பாளைப் போற்றுகின்றார்கள். “ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா” என்கிறது
ஸஹஸ்ர நாமம்.
தநீயாம்ஸம்
பாம்ஸும், தவ சரண பங்கேருஹபவம்,
விரிஞ்சி:
ஸஞ்சின்வந் விரசயதி லோகாநவிகலம்
வஹத்யேநம் சௌரி:
கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம்,
ஹர: ஸம்ஷுத்யைநம்
பஜதி பஸிதோத்தூளந விதிம்
என்று சௌந்தர்ய
லஹரியில் அம்பாளின் பாத தூளியை வைத்துக்கொண்டு தான் ப்ரஹ்மா இப்படைப்பை
செய்கிறார், விஷ்ணுவோ, அதன் துணையால் தான் இவ்வுலகைத் தாங்குகிறார், பரமேஸ்வரனோ
அந்த பாத தூளியை வைத்து தன் உடலெங்கும் பூசிக்கொண்டு
அவளைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறாராம். அப்பேற்பட்ட பெருமதிப்பு அவளுக்கு.
அப்படிப்பண்ணினால் தான் “பரவுவது”
பரவுதல் என்றால்,
அவளன்றி வேறு ஒரு பிடிமானம் இல்லையென்னும் உணர்வோடு பக்தி செய்வது. ஏதோ, இந்த ஒரு
வழியும் இருக்கட்டும், நாம் பல பேரிடமும் சொல்லி வைப்போம் என்று பலவற்றில் ஒரு
வழியாக தெய்வ வழிபாடு வைத்திருக்கவில்லை நம் முன்னோர்கள். முன்னே நடு எங்குமாய்
அவளே சகலமும். அதைக் காட்டத்தான் மும்மூர்த்திகளின் பக்தியை காட்டுவது.
இப்படி, அம்பாளின்
பெருமைகளை முழுதும் உணர்ந்து, அவளது திருவடிகளையே கதி என்று பற்றிக்கொண்டவர்கள்
பின்னும் வேறு சுகங்கள் நாடுவரோ என்றால் நிச்சயம் இல்லை. இங்கு அவளை அழியாத முக்தி
ஆனந்தம் தரும் அவள் திருவடிகளை நாடியவர், பொன் மெத்தைகளில் துயின்று தேவ
மங்கையருடன் கூடியிருக்கும் சுகம் மிகுந்த இந்திர பதவியும், அந்த பாரிஜாத மரங்கள்
நிறைந்த தேவ லோகமும் கூட வேண்ட மாட்டார்கள் என்று சொல்கிறார்.
15வது பாடலில்
சொன்னார் இல்லையா? மண்ணளிக்கும் செல்வம் பெறுவரா? என்றார். விண்ணளிக்கும்
செல்வமும் நாடார். அழியா முக்தி வீடொன்றே நாடுவார் என்பது சொல்கிறார்.
உலக இன்பங்கள்
கண்டனம் செய்வதை நம்மால் ஏற்க முடியும். அது அநித்யம் அஸுகம் என்பது மனம் உணரும்.
ஆனால், தேவ லோகமும், ரம்பா ஊர்வசி போன்ற தேவ மங்கையருடன் ஆனந்தமாக வாழலாம் என்றால்
அதையும் அல்லவா கண்டனம் செய்கிறார் பட்டர் பெருமான்?
“க்ஷீணே புண்யே
மர்த்ய லோகம் விஶந்தி” என்கிறாரே க்ருஷ்ணர்!! அதனால் அவையும் சுகமே ஆயினும்
அநித்யம் தான்.
முக்தி ஒன்றே
அழியாத பரமானந்தம். அதை தர அவளது திருவடிகளுக்கு சக்தி உண்டு. நாம் ஏன்
கீழானவற்றைக் கேட்டுப் பெற வேண்டும்? மேலான முக்தியைக் கேட்போம். தருவாள்.
பெறுவோம்.
.... கண்மணி
4/9/21
அபிராமி அந்தாதி --
76
தங்குவர், கற்பக
தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில்
வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர்
ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர்
பூங்குழலாள் திருமேனி குறித்தவரே (75)
சென்ற பாடலில்,
அம்பாளின் திருவடியைப் பற்றிக்கொண்டவர்கள் இனி ஸ்வர்க போகங்கள் நாடுவரோ என்று
பொருள் படக் கேள்வி எழுப்பினார். உடன்பாட்டு முறையெனக் கொள்ளின், அவர், ஸ்வர்கம்
தான் புகுவர், நரகம் புகார் என்றும் சொல்ல இடம் அளிக்கிறது. ஆனாலும், ஸ்வர்கமோ
நரகமோ, இரண்டும் அந்தியம் தான் என்பது தான் இங்கு முக்கியம்.
இங்கு என்ன
சொல்கிறார்? அப்படித் தங்குவராயின், அவர்கள் ஸ்வர்கத்தில், கற்பகத்தருவின் கீழ்
அதன் நிழலில் நின்று கொண்டு வேண்டும் வரங்களைப்பெறுவர். என்ன வரம் கேட்கலாம்? சர்வ
நிச்சயமாக, இத்தனை ஸ்ரேஷ்டமான சிந்தனைகள் கொண்ட அடியார்கள், அன்னையையே சதா துதித்துக்கொண்டு
இருந்த அடியார்கள், ஏதோ காரணத்தால் முக்தி கைகூடாது ஸ்வர்கம் சென்றார்கள் ஆயினும்,
அங்கும், மீண்டும் ஒரு தாயின் கருபுகாத பெருவரம் அல்லவா கேட்பார்கள்?
ஏன் அப்படி ஒரு
மானுடத் தயின் வயிற்றில் வரமாட்டார்கள் என்றால், அன்னை தான் பெருந்தாயார் ஆயினளே!
அவள் தானே இந்த உலகேழையும் பூத்தவள், புவனங்கள் பதினான்கினையும் காத்து, கரந்து
கொண்டிருக்கும் பெரிய தாய்?
அவளுடைய உலகமோ
பெரும் மலைக்க வைக்கும் மலைகள், உவர் கடல்கள் கொண்டு மிகப்ரம்மாண்டமாக அல்லவா
இருக்கின்றன? அவற்றைப்பெற்ற அன்னையாக அம்பாள் இருப்பதால், அவளிடமே அழியாத தத்பதம்
அடைந்த பேற்றினைப்பெற்ற முக்தர்கள், இனி ஒரு தாயின் வயிற்றில் வர மாட்டார்கள்.
அன்னையர்க்கெல்லாம் அன்னையாக அவளே கிடைத்ததால்.
ஆக, அவள்
பாதங்களைப்பிடித்த முக்தர்கள் இனி பிறப்பது இல்லை. பாதங்களைப் பிடித்ததால், இந்திர
பதவியே வந்தாலும் அதற்கு ஆசையும் இல்லை. சென்ற பாடலையும், இந்த பாடலையும் சேர்த்து
பொருள் கொள்ளின் சுகம் அதிகம். ஆட்சேபமும் சொல்லி, அதற்கு விடையும் சொல்கிறார்.
அவள் ரூப வர்ணனை,
பூங்குழலாள் என்று சொன்னது சிறப்பு. நறுமணம் வீசும் புது மலர்கள் சூடிய
கருங்கூந்தல் அம்பாளுக்கு என்று சொல்கிறார்.
அம்பாளின் கூந்தல்
அழகும், அதில் உள்ள நீலோத்பல மலரின் அழகும் வெகுவாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது
ஶ்யாமளா தண்டகத்திலும்.
அவள் பாதங்கள்
நம்மை முக்தி ஆனந்த்த்தில் என்றும் நிலைத்திருக்கச்செய்யும்.
.... கண்மணி
5/9/21
அபிராமி அந்தாதி --
77
குறித்தேன்
மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி
வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ்
கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே,
குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே (76)
அன்னையின் அருளால்
அழியாத முக்தி ஆனந்தமே பெரும் பயன் என்பதை ஒவ்வொரு முறையும் கூறிக்கொண்டே
வருகிறார் பட்டர் பெருமான்.
இங்கு, அத்தனோடு
ஒரு பாகமாக, இருக்கும் அம்மையின் ரூபத்தை, பைரவியாக வர்ணிக்கிறார். பஞ்ச பாணங்கள்
மலர்களால் ஆனது என்று முன்னரே காமாக்ஷி ரூப வர்ணனையில் பார்த்தோம். ஐந்து பாணங்களை
ஏந்தி, சிவபெருமானின் ஒரு கூறு அவளுக்கு என்று பாதியை அவள் திருவுடலாக
வரிக்கிறார். சிவபெருமானின், உடலில் பாதியில் அவள் உரிமையுடன் குடிபுகுந்தாள்
என்று சொல்கிறார்.
சிவ பெருமான்
எப்படி இருக்கிறார்? அவரது அழகிய சிரசில், தேன் சொரியும் கொன்றை மலர்கள்
சூடியிருக்கிறார். தேன் சொரிவது எப்படி என்றால், வண்டுகள் வந்து
அம்மலர்களைக்கொண்டி தேன் எடுக்க முற்பட்டதால், அவற்றில் இருந்து தேன் சொரிகிறதாம்.
இப்படி
அம்மையப்பனின் திருக்கோலத்தை மனதில் இருத்திக் கொண்டு அவளைத் த்யானித்துக்கொண்டே
இருக்கிறார் பட்டர் பெருமான். அப்படித் த்யானிப்பதால், மீண்டும் ஒரு குரம்பையில்
குடிபுகும் அவலம் அடைய மாட்டார் என்று 48ம் பாடலில் சொன்னாரல்லவா?
அதை நினைவில்
கொண்டு இந்த பாடலையும் பார்க்க வேண்டும். அம்மையப்பனின் இணைந்த அர்த்தநாரீ உருவ
வர்ணனை, கீழான இச்சைகள் களையும் என்பதையும் முன்னே பார்த்தோம்.
இந்த பாடலில்,
இப்படி அவள் கோலத்தை மனத்தில் குறித்ததால், யமனின் வருகையை அறிந்து அதை அடைத்து
விட்டாராம்.
நேர்வழி வரும் மறலி
என்கிறார். நேர் வழி என்றால் நுண்மையான வழி. நுண்மை ஏன் என்றால், மிக ஜாக்ரதையாக
நம் மனதை வைத்திருக்க வேண்டும் அல்லவா? இருமைகள் அண்டாது, சகலமும் அவளே என்னும்
எண்ணம் அகலாது, ஒன்றாகிப் பலவாக விரிந்த அவளின் விஸ்வரூபத்தை அறிந்து, அதுவே
தானும் என்றுணர்த்திய அவளது கருணையில் திளைத்து இருக்கும் போது, ஏதேனும் வினைவழி
இடையூறுகள் வந்தால், சாதகன் மீண்டும் பரமபத சோபான படத்தில் இறங்குவது போல இறங்கி,
கஷ்டப்பட்டல்லவா ஏற வேண்டும்? அத்தனை நுண்ணியது மாயை.
“என் மாயையை
கடப்பது அரிது அர்ஜுனா” என்றாரே க்ருஷ்ணர்!
மாயை என்பது ஏது?,
வருவானேன்? என்று சிஷ்யன் கேட்க, அது இன்னதென்று அறியப்படாத்தால் அவாச்ய வடிவாகும்
என்றார் குரு கைவல்ய நவனீத்த்தில். அவாச்யம் என்றால் விளக்க முடியாதது என்று
பொருள். எப்படி வரும் மாயையின் ப்ரபாவம் என்று ஒரு போதும் அறிய முடியாது.
ஆனால், ஒன்றுபட்ட
சிந்தனை அவள் பாலிருக்க, அவள் கோலத்தை உள்ளத்தில் வைத்து த்யானிக்கும் சாதகனுக்கு,
அருள்வது அவளது கருணா விலாசம் என்பதால், அவர் தைரியமாகச் சொல்கிறார், உன்னை
த்யானித்த நேரத்தில், அந்த யமன் வரும் நுண்ணிய வழியை அடைத்தேன் என்று.
அப்படி என்றால்
இன்றும் அபிராமி பட்டர், ஸ்தூல உடலுடன் இருக்கிறாரா? என்றால், யமன் வரும் வழி
என்பது அந்தகனின் பாசவலையில் வீழுதலைக் குறிக்கும். பாசவலையானது, மீண்டும் பிறக்க
வைக்கும் சக்தி வாய்ந்தது. நமது விருப்பு வெறுப்புகளும், கர்மங்களின் பலன்களின்
மீதுள்ள இச்சையும், அவற்றை அநுபவிக்க மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும். இது தான்
மரணத்தின் இயல்பு.
அப்படி என்னை
மீண்டும் பிறப்பு இறப்பு சுழலுக்குள் சிக்க வைக்கும் அந்தகனின் செயலுக்கு, அந்த
நுண்மையான வழிக்கு நான் ஒரு அடைப்பு செய்தேன் என்கிறார். எப்படி அடைத்தார்?
ஞானத்தால். நான்
பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்ட சுத்த சைதன்யம் என்னும் ஞானத்தால்
அடைத்தேன் அம்மா. அந்த அறிவு, உன்னால் உன்னையே சதா த்யானித்துக்கொண்டிருந்ததால் நீ
அளித்த வரம் அம்மா என்று சொல்கிறார்.
மறலி வரும் வழியை
நாமும் அடைப்போம், அவளது அருளால்
“ஶிவகாமேஸ்வராங்கஸ்தா
ஶிவா ஸ்வாதீந வல்லபா, ஸ்ரீகண்டார்த்த சரீரிணி” போன்ற நாமங்களை சிந்திப்போம்.
.... கண்மணி
4/9/21
அபிராமி அந்தாதி --
78
பயிரவி, பஞ்சமி,
பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும்
உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி,
மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை
சேர் திருநாமங்கள் செப்புவரே (77)
50வது பாடலில்
நாயகி, நான்முகி, நாராயணி என்று நாமங்கள் சொல்லித் துதித்தார். இங்கும் நாமங்களைச்
சொல்லித் தருகிறார்.
பைரவரின் பத்னியாக
இருக்கிறாள். ஸ்வாமிக்கு பல ரூபங்களில் பைரவர் என்ற ரூபம் ஒன்று. மிகவும்
கருணையுள்ள ரூபம். அம்பாள் பைரவி.
பஞ்சமி என்பது
ஐந்து தொழில்கள் உடையவள் என்பதைக் குறிக்கும் நாமம். ஆக்கல், காத்தல், அழித்தல்,
அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழில்கள் சிவபெருமானுக்கு உண்டு. அம்பாள் அவரில்
சரிபாதியாகியதால், அத்தனை தொழில்களும் அவளுக்கும் உண்டு. ஐந்தொழில் கொண்டவள்
பஞ்சமி.
பாசமும் அங்குசமும்
கையில் வைத்திருப்பவள் பாசாங்குசை. பாசம் என்பது யானையைக் கட்டும் கயிறு, அங்குசம்
என்பது யானையை அடக்கும் ஒரு ஆயுதம். காமத்தையும் க்ரோதத்தையும் அடக்க, இந்த
கயிற்றால் ஆசையை தன் பாதத்தில்
கட்டிப்போட்டு விடுவாளாம். அங்குசத்தால் கோபத்தை அடக்கி, மனதை பக்குவப்படுத்த
வைப்பாளாம்
நல்வழியில் செல்லாத
அசுரகுணமுடையவர்களின் உயிருக்கு எமனாக விளங்குபவள் சண்டிகா தேவி, காளி தேவி.
இவர்களெல்லாம், அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் சக்திகள்.
ஒளி பொருந்திய
கலைகளை உடைய வயிரவி, சூர்ய சந்திர மண்டலங்களை ஒளிர்விக்கும் மண்டலி, மாலினி,
உலகையே தாங்கும் வராகி, சூலி என்று அம்பாளின் பல்வேறு நாமங்களை நாமபாராயணம்
செய்கிறார் பட்டர் பெருமான்.
நாமங்கள் நம்
மனதில் உள்ள குறையான எண்ணங்களைக் களைந்து நிறைவைத் தரும் வல்லமை பொருந்தியன.
அதனால் தான் நான்மறைகளில் சொல்லப்பட்டுள்ள இந்த நாமங்களை செயிர் அவி, அதாவது
குற்றங்கள் தீர, இந்த நாமங்களை செப்புவர் என்று சொல்கிறார்.
நம் குறைகள் என்ன?
காம க்ரோதங்கள் தான் முதல் குறையே! அதில் இருந்து தான் நமக்கு அத்தனை துன்பங்களும்
வருகின்றன. நவீன வழியில் சொல்வதானால், Avoid expectations
என்று சொல்வார்கள். இந்த எதிர்பார்ப்புகள்
வருவது காமத்தால் தான். அது நிறைவேறாத போது தான் க்ரோதம் ஆகிறது.
மனம் எதையாவது
ஆசைப்பட்டுக்கொண்டே சதா இருப்பதால், தான் அதற்கு எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே
இருக்கின்றன. அவை நிச்சயம் நிறைவேற வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை என்பது
புரிவதில்லை. அப்போது, ஆசை ராகமாகி, ராகம் வெறுப்பு கொடுத்து, வெறுப்பு பொறாமை
வளர்த்து, அழிவுக்கு இட்டுச் செல்கிறது.
எதையாவது
நினைக்கும் மனதுக்கு அம்பாளின் நாமங்களையே விஷயமாக்கி விட்டால், அவற்றில்
லயித்திருக்கும் அல்லவா? வேலை செய்ய வேண்டும். அது அம்பாளின் பெயரை சொல்வது,
சிந்திப்பது அல்லது எழுதுவது. அவ்வளவு தான். வேறு விஷ்யங்களை எண்ண நேரமில்லாது
போகும். துன்பங்களும் பறந்து போகும்.
இது தான் நாம
பாராயணத்தின் பரம் ப்ரயோஜனம்.
இந்த பாடலில் உள்ள
அத்தனை நாமங்களும் லலிதா சஹஸ்ரநாமத்தில் இருக்கின்றன. ஆயிரம் நாமங்கள் தராதது எது?
சொல்வோம். வெல்வோம் மாயையை.
.... கண்மணி
7/9/21
அபிராமி அந்தாதி --
79
செப்பும்
கனககலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம
வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக்
குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும்
எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே (78)
நாமம்
சொல்லக்கற்றுத்தந்தார் சென்ற பாடலில். நாமம் உணர்த்தும் நாமியையும் த்யானம் செய்ய
கூடவேகற்றுத்தருகிறார் இந்த பாடலில்.
அபிராமியை எழுதி
வைத்தேன்என்கிறார். எழுதுதல் எங்கு? அவர் துணை விழியில். துணை விழி என்பது
மனம்.அகக்கண்கள். உள்ளத்தில் அம்பாளின் உருவத்தை எழுதி வைத்தேன் என்கிறார். துணை
என்பதுபுறக்கண்களின் துணையாகவும் கொள்ளலாம், அதே சமயம், இந்த பிறவி கடக்க
நல்லவ்ருத்திகள் நமக்கு ஏற்பட்டு, சத் சிந்தனையின் மூலம் சித்தம் சுத்தம்
அடைந்துகுருவின் அறிவார்ந்த ஸாஸ்த்ர விஷய போதனைகள் புரிந்து கொள்ள துணை செய்வது
சுத்தமானஅந்த மனம் என்பதால் அது துணை தான் நமக்கு.
மன விழி என்னும்
அகக்கண்களில்அவளைக்காண்பது மிக சுலபம். “அந்தர்முக சமாராத்யா பஹிர் முக ஸுதுர்லபா”
என்று அவளதுநாமம் சொல்கிறதே! அந்தர்முக என்றால், உள்ளே, அகத்தில் காண்பது எளிது
அவளை. வெளியில்உள்ள விஷயங்களில் செல்லும் மனதுக்கு அவள் அரிதானவள். அதனால் தான்
துணைவிழிக்கேஎழுதி வைத்தார் அவர்.
எப்பேற்பட்ட உருவம்
அவரதுஉள்ளே இருந்திருக்கிறது!!
கனக கலசம்,
பொற்குடம் போலஇருக்கிறதாம் அவளது ஸ்தன பாரங்கள். முன்னரே நிறைய
பாடல்களில்,அநுபவித்திருக்கிறோம், அவளது பெருங்கருணையின் குறீயீடு தான் அவளது
பெரும்ஸ்தனங்கள் என்று. அவற்றின் பெருமையை சொல்ல, நாம் நடைமுறையில் உயர்வு
என்றுநினைக்கும் பொருளைத் தானே உவமை சொல்ல முடியும்? அதனால் கனக குடம் என்றார்.
செப்பும் கனக கலசம்
என்றது பயன்பாட்டுக்கு உகந்தது என்று குறிப்பிடவோ என்னவோ. தூயபொன் குடமாகாது,
செப்பு சேர்க்கத்தானே குடமாகும் அதனால் இருக்கலாம். மொத்தத்தில்தங்கக் கலசம் அவளது
ஸ்தனங்கள்.
அத்திரு முலையில்
சந்தனம்(களபம்) “சீதக்களபச் செந்தாமரையும்” என்று பாடினாளே ஔவை பிள்ளையாரை, குளுமை
தரும்சந்தனம் என்று பொருள்.
சந்தனம் இரு
குணங்களைக் காட்டுகிறது. ஒன்று உயர்ந்த வாசம்.இன்னொன்று உயர்ந்த உடலுக்கு தீங்கு
செய்யாத, இன்னும் சொன்னால் உடலுக்கு நன்மைதரும் குளுமை. அம்பாளை மனதில் எழுதும்
போது, அவள் அளவுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்தபொருளைக்கொண்டு தானே நாமும் கற்பனை
செய்ய வேண்டும். வாசப் பொருட்களின் அரசியானசந்தனம் அவளது அழகிய திருமுலைகளில்
பூசியவாறு காண்கிறார். சந்தனக்காப்பு.
அணி என்றால்
ஆபரணம். அந்தஅழகிய திருமுலை மேல் முத்து ஹாரங்கள் தொங்குகின்றன என்று முன்னரே சொன்னார்.
அதேபோல், இப்போதும் அந்த அழகிய திருமுலைகளின் மீது சந்தனக்காப்போடு, அதன் மீது
அழகியஅணிகலன்கள் அணிந்து இருக்கிறாள்.
கொப்பு என்பது
காதுகளின்மேல் மடலில் அணியும் ஒரு ஆபரணம். குழை என்பது தோடு. வைரத்தால் ஆன தோடும்,
கொப்பும்அவளது முகத்தில் மேலும் அழகாக ஒளிர்கின்றன. இங்கும் உயர்ந்த ரத்னம்
அம்பாளுக்குசமர்பிக்கிறார்.
அவளது
தலையில்அணிந்திருக்கும் பிறை சந்திரனின் ஒளியால் கூந்தல் மிக அழகாக ஒளிர்கிறது.
துப்பும் நிலவொளிஎன்கிறார்.
“ஶேகரீபூத
ஶீதாம்ஸுரேகா”என்று சந்திரனின் குளுமையான கிரணங்களை வர்ணித்து அவள் அழகை காளிதாஸர்
ஶ்யாமளாதண்டகத்தில் பாடுகிறார்.
அவள் விழியின்
கடையோரஅருள் ஒன்றே போதுமாம் நம்மைக் காக்க. பகவத் பாதரும் 6, 13வது ஸ்லோகத்தில்
சௌந்தர்யலஹரியில் அம்பாளின் கடைவிழிப்பார்வையின் மேன்மையைக் கூறுகிறார்.
அவளதுகடைவிழிப்பார்வையின் அருளினால் தான் மன்மதனின் வேலைகள் யாவும் நடக்கின்றன
என்றபொருளில் 6வது ஸ்லோகத்திலும், உபநிஷத்துகளைப் பெண்களாக
உருவகப்படுத்தி,அப்பெண்கள் ப்ரஹ்மஞானியை நோக்கி தானாகவே வந்து சேர்வதாகவும், அதுவே
அம்பாளின்கடைக்கண் பார்வையின் அருளினால் தான் என்றும் பொருள் பட 13வது ஸ்லோகத்தில்
அருள்செய்கிறார் ஆதி சங்கரர்.
இவ்விரு
ஸ்லோகங்களின் மூலம், அவளது கடைவிழிப்பார்வை, இகலோக சுகங்களும் தரும், பர லோக
சுகங்களும் தரும், அழியா முக்தியும் தரும் என்பதேஇங்கு நமக்கான செய்தி.
இப்பேற்பட்ட
அம்பாளின்உருவத்தைத் தான் மனத்தில் எழுதி வைத்திருக்கிறார் நம் பட்டர் பெருமான்.
விபூதி யோகத்தில்க்ருஷ்ணர் அர்ஜுன்னுக்கு தான் இருக்கும் அத்தனை உயர்ந்த
பொருட்களிலும் இருப்பதைஉணர்த்துவார். அது போல, பட்டரும், இருக்கும் அனைத்து
உயர்ந்த பொருட்களையும்அவளுக்கே அர்ப்பித்து, அதன் மூலம் அம்பாளை மன விழியில் எழுதி
வைத்திருக்கிறார்.
அவளை நிறைப்போம். நிறைவில்திளைப்போம்
.... கண்மணி
8/9/21
அபிராமி அந்தாதி --
80
விழிக்கே அருள்
உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட
நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று,
வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும்
கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே? (79)
75ம் பாடலில்
இருந்து அன்னையின் அருளைப் பெற்றவர் முக்தியை அன்றி வேறு எவ்வளவு பெரிய உலக
சுகங்கள் தந்தாலும் அதை ஏற்பரோ? என்றுசொல்லியும், அன்னையின் அழகிய திருவுருவை
மனவிழியில் எழுதிவைத்தது வரைசொல்லிக்கொண்டே வந்த பட்டர் பெருமான், இப்படி அன்னையின்
அருள் பெற்ற பின் எதற்குகீழான ஆசைகளின் பின் செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.
அன்னையின்
விழிகளின் கடைக்கண் பார்வை மட்டுமே, நமக்கு இவ்வுலக சுகங்கள்அனைத்தும் தந்து,
அதனோடு, வானுலகும் ஈந்து, அதனினும் பெரிதான முக்தி ஆனந்த்த்தையேதரும் என்பதைத்
தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். சென்ற பாடலும் கடைவிழியின்பெரும் கருணை
குறித்ததே.
இப்படி அன்னையின்
கடைவிழியின் அருள் எப்போதும் உண்டு. யாருக்கு. வேதம் சொன்னவழிப்படி வாழ்ந்து
அவளிடம் மாறாத அன்போடு இருக்கும் சாதகனுக்கு. மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள
வேண்டிய விஷயம், ஈஸ்வரனின் அன்பு ஆளைப்பொருத்து மாறுவதில்லை.
அவர் கர்மபல தாதா.
நாம் செய்த செய்யும் கர்மங்களுக்கான பலன்களை வேறுபாடின்றி வழங்கும் செயல்தான்
அவருடையது. அபிராமிக்கு எல்லோரும் ஒன்று தான். எல்லோரிடமும் கருணை உண்டுதான்.
ஆனால், எல்லா தாய்க்குமே சொன்ன பேச்சைக்கேட்கும் குழந்தையிடம் கொஞ்சம் அன்புகூட
இல்லையா? அது போல, வேதம் இறைவனின் வாக்கு என்னும் பட்சத்தில், சொன்ன
பேச்சைக்கேட்கும் குழந்தைக்கு, வேதத்தில் தான் சொன்ன விஷயங்களைக்
கடைபிடிப்பதற்குநிர்ணயித்துள்ள பலன்களை நல்குவது அவளது கடமை அல்லவா?
அதனால் தான்,
வேதவழியில் வழிபட்டு, அவள் அருளை பெறுவது. வேத வழி என்றால்ஏதாவது தனி வழி உண்டா
என்றால், வேதம் சாமான்ய தர்மம், விசேஷ தர்மம் என்றுஅனைத்து தர்மங்களையும்
சொல்லியிருக்கிறது. சத்யம் வத, தர்மம் சர, என்று ஒருமனிதன் வாழ்க்கை எப்படி இருக்க
வேண்டும் என்பதற்கு அழகான Manual கொடுத்து நம்மை உலகில் வாழ வழி செய்கிறது. அந்த
சாமான்ய தர்மங்களைக்கடைபிடித்து, தன் ஆஸ்ரம, வர்ண தர்மங்கள் அதாவது, முன்னோர்கள்
கடைபிடித்த அநுஷ்டானங்களைவிடாது ஶ்ரத்தையுடன் வாழும் யாருக்கும், அன்னையின்
பேரருள், ஜீவனின் தகுதியைஅநுசரித்து, தகுந்த குருவைத் தந்து, முக்திக்கான ஞானத்தை
தந்து, அழியாத முக்தியைநல்குவது தான். இதுவே வேதம் சொன்ன வழிக்கே வழிபட
நெஞ்சுண்டு, விழிக்கே அருள் உண்டுஎன்கிறார்.
சரி அவ்வழி கிடக்க,
எதற்காக, பழிதரும் கருமங்கள் செய்ய வேண்டும்? அப்படிசெய்யும் கருமங்களால்,
பாவங்கள் சேர்த்து, பாழ் நரகக்குழியில் ஏன் விழ வேண்டும்என்று கேட்கிறார்.
நல்லவனாக வாழ நமக்கு ஒரு பாதை இருக்கும் போது, நம்மைநரகக்குழியில் இட்டுச்செல்லும்
ஆறு பகைவர்களான காம, க்ரோத, லோப, மோஹ, மத,மாஶ்சர்யங்களின் பின் சென்று அவற்றினால்
உண்டாகும் அசுர குணங்களின் ஆளுமையால்ஏற்படும் பாவங்களை சேர்த்து, மீளா நரகத்தை
தேடிக்கொள்வது அறிவீனம்.
இங்கு கயவர் என்று
சொன்னது, வெளியில் இருக்கும் யாரோ அல்ல. நமக்குள்உட்கார்ந்து நம்மை ஆட்டி வைக்கும்
மேற்சொன்ன ஆறு பகைவர்களைத் தான். சரியாக அடையாளம்கண்டு, பக்தி, ஸத்சங்கம், ஶ்ரத்தை
இவற்றினால் அவைகளை விரட்டினால், அன்னையின்அருளும் பூரணமாகக்கிடைக்கும், நாமும்
பூர்ணம், நிறைவு என்பதும் விளங்கும்.
குறையொன்றும்
இல்லை, அன்னையின் கடைவிழி நம்மைக் கண்டால்.
“பவசக்ரப்ரவர்த்தினி,
பவதாரிணி, பசுபாசவிமோசினி” போன்ற நாமங்கள் சிந்திக்கஅழகானவை.
.... கண்மணி
9/9/21
அபிராமி அந்தாதி --
81
கூட்டியவா என்னைத்
தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண்
ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட
கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா
நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே (80)
சென்ற பாடலில்
அன்னையின அருள், வேதத்தின் வழியில் அவளை வழிபட்டு, காமப்பகைவர்களை விரட்டி அவைகளோடு
இனி சேர வேண்டிய அவசியம் இல்லாத சூழலைச் சொன்னார்.
இங்கு, இப்படி,
அவரது தீய பகைவர்களிடம் இருந்து அன்னையின் அருள் தான் காப்பாற்றியது. அது அவளது
அடியாரின் கூட்டத்தில் தன்னை கூட்டி விட்டது தான் என்கிறார்.
சத்சங்கம் என்பது
ஆன்மீக பாதையில் மிக மிக முக்கியம். சேர்க்கை என்பது லௌகீக வாழ்க்கைக்கே மிகவும்
அவசியம் தானே? செலவாளியாக, ஊதாரியாக நண்பன் அமைந்தால், நமக்கும் அந்த மாதிரி வாங்க
வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் வருவது இயற்கை. ஆன்மீகத்திலும் அப்படித்தான். பக்தி மட்டும் அல்ல, நல்ல பழக்க
வழக்கங்கள், ஶாஸ்த்ரம் படிப்பதில் விடா முயற்சி, ஶ்ரத்தை, குருவினிடம் சரணாகதி,
ஈஸ்வரனிடத்தில் மாறாத அபிமானம், இவையெல்லாம், நல்லோரிணக்கம் தரும் நற்பயன்கள்.
41ம் பாடலில்
சொன்னார் இதே கருத்தை. தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணினாள் என்றார் அல்லவா?
அவள் அருள் இருந்தால் தான் நமக்கு அடியார் சுற்றம் கூட கிடைக்கும். சொல்லப்போனால்,
மனம் இறைவன் பால் நிலைத்து இருக்கும் போது, பெற்ற பிள்ளைகளும் சொந்த குடும்பமும்
கூட பெரும் அன்னியமாகத் தோன்றும் அவர்கள் நம் மன நிலை புரிந்து கொள்ளாது இருந்து
விட்டால். அதாவது அவர்கள் பொருளியல் நாட்டம் கொண்டவர்களாக இருந்துவிட்டால். அதனால்
தான் மனம் அடியார்களுடன் இருப்பதையே நலம் என்று நினைப்பது.
அடியார்களிடம்
கூட்டியவள், தன் கொடிய வினைகளை ஓட்டிவிட்டாள் என்கிறார். கொடிய வினைகள் புரியக்
காரணமான ஆறு பகைவர்களை அழித்த அவளது கடைவிழியின் கருணை, வினைகளின் பயனான நன்மைகள்
தீமைகள் என்ற இருமைகளையும் ஓட்டி விடும் வல்லமை பெற்றதே இல்லையா? அதனால் தான்
ஓட்டியவள் என்கிறார்.
எதனால் இவை நடந்தது
என்றால், அவள் கண்கள் என் பக்கம் திரும்பியதால் தான் என்கிறார். என் கண் ஓடியவள்
என்பது என்னை அவள் பார்த்த்தால் என்று பொருள்.
அன்னையின் அருள்
இருந்தால் தான் அவளது நிஜ போத ஸ்வரூபம் நமக்கு தெரியும் என்பதை 36ல் சொன்னார்,
அவளது விரிந்து பரந்த விஸ்வரூபத்தை. அவள் செய்யும் அரிய பெரிய கருணையை. அதில்
மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான பாடல்களில், அவர், அன்னையின் மேன்மை, அவள் கருணை,
அவள் பராக்ரம்ம் இவற்றை பெரிதும் கூறிக்கொண்டு வருகிறார். அப்படி அவளைத் தான்
அறிவது எப்படி என்றால், அதுவும் அவள் அருளால் தான், அவள் பாதம் தன் சென்னியில்
வைத்து அருள்கிறாள் என்றும் கூறுகிறார்.
அப்படி அவளது நிஜ
ரூபம் கண்ட பின் என்ன வரும்? ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!! அந்த ஆனந்த சச்சிதானந்த
ஸ்வரூபத்தை அறிந்த பின், அது தனக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்த பின், ஆனந்த களி
நடம் புரியுமே மனம்!
இந்த பாடலில்,
அப்படி உணர்த்திய அன்னையின் ரூபம், ஆடகத் தாமரையில் வீற்றிருக்கும் ஆரணங்காம்.
பொற்றாமரையில் வீற்றிருக்கும் அழகிய ரூபம் என்பது பட்டரின் வர்ணனை. பொன் என்பது
தூய்மையைக் குறிக்கும், உயர்ந்ததைக் குறிக்கும். உயர்ந்த அவளது உண்மை ஸ்வரூபம்,
தூய உணர்வாக அவள் இருப்பதை உணர்த்தும் உன்னத வடிவம் என்பதால் இப்படி உருவகம்
தந்திருப்பார்.
“ஸஹஸ்ரதள
பத்மஸ்தாயை, பத்மாஸனா, பத்மநிலையா” போன்றவை ஏற்ற நாமங்கள்.
.... கண்மணி
10/9/21
அபிராமி அந்தாதி --
82
அணங்கே.-அணங்குகள்
நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை,
வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது
உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு
ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே (81)
அடியார்
கூட்டத்தில் கூட்டுவித்து, கொடிய வினை ஓட்டி, தன்னையும் காட்டினாள் அன்னை என்று
புகழ்ந்தார். இப்போது, அப்பேற்பட்ட அவளைத் தஞ்சம் அடைந்த பின் வேறு தெய்வங்கள் ஏன்
தொழ வேண்டும்? தேவை இல்லை என்று சொல்கிறார்.
ஒருபோதும் அவருக்கு
வழிபாடுகளின் மீது பற்றோ அல்லது வெறுப்போ அல்ல. அன்னையைத் தவிர இன்னொன்று இல்லை
என்னும் த்ருட நிஶ்சயம் தான் பட்டருக்கு. சரி வேறு தெய்வங்கள், பெண் தெய்வங்களை
வணங்குவது தானே என்றால், யாரை வணங்குவது? சரஸ்வதியும் லக்ஷ்மியும் வணங்க வேண்டும்.
அவர்களோ அம்பாளின் பரிவாரங்களாக திரிபுர சுந்தரியாக அவள் இருக்கும் அவதாரத்தில்,
இருக்கிறார்கள்
“ஶிவாகார மஞ்சே
பரமஶிவ பர்யங்க நிலையா” என்று ஆச்சார்யார் வர்ணிக்கும் மணித்வீப நகரத்தின்
மத்தியில் கொலுவிருக்கும் அன்னையுடைய இரு மருங்கிலும் தேவியர் ஸரஸ்வதியும்,
லக்ஷ்மியும் இருக்கிறார்கள். அப்படி அணங்கான உனக்கு மற்ற இரு அணங்குகளும்
பரிவாரங்களாக இருப்பது காண்கிறேன். அது மட்டுமா? பண்டாசுரன் வதத்தின் போது, அத்தனை
தேவியரும் உனக்கே பரிவாரங்கள் ஆகினரே!
இப்படி இருக்கும்
போது வேறு யாரைத் தொழுவேன்? உன்னையல்லால் வேறு தெய்வமில்லை என்கிறார்.
நெஞ்சில் வஞ்சகரோடு
சேர மாட்டேன் என்று சொல்கிறார். வஞ்சம் என்பது என்ன? நம்மை ஆசை என்னும் குழியில்
அமிழ்த்தி, போகம் அனுபவிக்கச் செய்யும் எண்ணங்கள் தான் வஞ்சகமான எண்ணங்கள்.
ஆசைகளில் இருந்து அதாவது உலக ஆசைகளில் இருந்தி விடுபட்டு துன்பம் தராத இறை சிந்தனை
இருக்கவும், பர தேவதையின் நாமங்களை
எப்போதும் சொல்லவும் விடாமல், உலகியல் விஷயங்களில் ஈடு படுத்தும் கூட்டாளிகள்
இருந்தால், அது நெஞ்சில் வஞ்சகரோடு இணைவதாகும். நல்லோர் இணக்கத்துக்கு மாறுபட்ட
நிலை.
அன்னையின் அருளால்,
தம் அடியாருடன் அவளே கூட்டியவுடன் எப்படி வஞ்சகரோடு இணைவது? அதனால் தான் இணைய
மாட்டேன் என்று சொல்கிறார். உறுதி கூறுகிறார் அம்மாவுக்கு.
இங்கு, இரு பொருள்
கொள்ள முடியும். எனது உனது என்று இருப்பார் சிலர். அவர் வஞ்சகர் அதாவது யான் எனது
என்னும் செருக்கோடு இருப்பவர். அவரோடு இணங்கேன் என்பது ஒரு பொருள்.
இன்னொன்று,
எனதெல்லாம் உனதே என்று சிலர் இருப்பார். அதாவது பூரண சரணாகதியில் இருப்பார்கள்
சிலர். அவரோடு பிணங்கேன் என்றும் பொருள்.
ஆக, யான் எனது
என்னும் செருக்குற்றவரோடு இணங்காது, யானே இல்லை அனைத்தும் நீயே உனதே என்னும் பூரண
சரணாகதர்களுடன் பிணங்காது (பிணக்கு கொள்ளாது இணக்கமாக இருத்தல்) இருப்பேன் என்று
பொருள் கொள்ளும் விதமாக அமைத்து இருக்கிறார்.
அறிவற்ற எனக்கு நீ
செய்த பெருங்கருணை தானே இது? என்று வியக்கிறார்.
எத்தனை பெரிய
ஞானியாயினும், அன்னைக்கு பிள்ளையே. அவள் தான் பேரறிவு என்னும் விதத்தில்,
அப்பேரறிவு ஆட்கொண்டு, இச்சிற்றறிவை கையில் எடுத்து, உயர்வான ஆத்ம தத்துவத்தை
கருணையோடு புரியவைத்தது பெருங்கருணையே என்று வியக்கிறார்.
“அஜ்ஞாநத்வாந்த
தீபிகா, ஸம்ஸார பங்க நிர்மக்னா ஸமுத்தரண பண்டிதா, விப்ரரூபா” பொன்ற நாமங்களை
சிந்திப்போம்.
.... கண்மணி
11/9/21
அபிராமி அந்தாதி --
83
அளி ஆர் கமலத்தில்
ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்
திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி,
அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின்,
எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே? (82)
யாரோடு சேருவேன்,
சேர மாட்டேன் என்றெல்லாம் சொன்னார். அப்படி அடியாரோடு கூட்டுவித்தவள் அம்பாள்
என்றும் சொன்னார். அம்பாளின் கருணையினால், யான் எனது என்று நினைக்காத ஞானியரோடு
மட்டுமே உறவாடுவேன் என்று சொன்னார்.
அப்படி நல்லோர்
கூட்டத்தில் இருக்கும் போது, அவர்கள், சொல்லும், செயலும், அன்னையின் பெருமைகள்
ஸ்தோத்திரம் செய்வதும், அவளது கருணையை எண்ணி இன்புறுவதும், அவளை உபாசனை செய்வதும்,
அவளை உள்ளத்தில் இருத்தி த்யானம் செய்வதுமாகத்தானே இருக்கும்?
“ஸ்தோத்ரப்ரியா,
விப்ரப்ரியா, விப்ர்ரூபா” என்பதெல்லாம் அன்னையின் நாமங்கள்.
அளி ஆர் கமலம்
என்றால், வண்டுகள் மொய்க்கும் கமலம் என்று பொருள். “அளிக சும்பி கஸ்தூரிகா” என்று
அன்னையின் ஸஹஸ்ரநாம த்யான ஸ்தோத்திரத்தில் அவளது அலங்காரங்கள் சொல்லும் போது
வாக்தேவதைகள் வர்ணிப்பது பார்க்கிறோம். மலர்கள் தேன் மொய்க்கிறது என்று சொல்லும்
வர்ணனை, அவை அன்றலர்ந்து இருப்பதைக்குறிக்கும். 76ம் பாடலில், வண்டு கிண்டி தேன் சொறியும் கொன்றை மலர் சூடிக்கொண்டிருந்தார்
சிவபெருமான் என்றார். அது போல, வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும்
அம்பாளைக் காண்கிறார்.
அவள் கமலத்தில்
வீற்றிருக்கிறாள். ஆனால் அவளது தேக காந்தி, ஒளியானது, அகிலாண்டமும் பரவி
இருக்கிறது. 19ம் பாடலில் சொன்னார் இல்லையா? வெளி நின்ற நின் திருமேனியை
பார்த்தேன், என் விழியும் நெஞ்சும் கரை கண்டதில்லை என்று? அம்பாள் வானுக்கும்,
மண்ணுக்குமாய் விரிந்து பரந்து இருக்கிறாள், சூரிய சந்திரருக்கு இடையில்
இருக்கிறாள் என்றெல்லாம் அவளை இந்த புவனம் பதினான்கிலும் விரித்து காணும் பேறு
பெற்றிருக்கிறார் பட்டர் பெருமான்.
அப்படி, பேரொளியாக,
இந்த ப்ரபஞ்சம் முழுதும் வ்யாபித்திருக்கும் பேரொளியாக அம்பாளைக் காணக்காண அவரது
உள்ளம் ஆனந்த்த்தில் திளைக்கிறது. எப்படி திளைக்கிறது? களியாக, அந்த:கரணங்கள்
விம்மிக் கரை புரண்டதாம். மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அவரது
உள்ளத்தில் என்று அர்த்தம்.
பள்ளிக்கு
குழந்தையைத் தாய் காலையில் விட்டுச் சென்று, மாலை, பள்ளி வாசலில், காத்திருப்பது
கண்டு, அந்தக் குழந்தை, சுற்றி இருக்கும் எதுவுமே கண்ணுக்குத் தெரியாது,
அம்மாவைக்கண்டதும் உலகமே அம்மாவால் நிறைந்திருப்பது போல, ஓடி வந்து அணைத்துக்கொள்ளுமே!!!
அந்த மாதிரி, தன்னை தன் குழந்தைக்கு, அறிவித்து, அவனை ஆட்கொண்ட அன்னையை உலகில்
எங்கெங்கு நோக்கினும் அவளேயாய்க் காணும் பிள்ளையாய், வேறு ஒரு பொருள் இருப்பதறியாத
பூரண அத்வைத நிலையில், அம்பாளை உள்ளத்தில் நிறைத்துப் பார்க்கும் உன்னத சாதகனாக
இங்கு பட்டர் பெருமான் மிளிர்கிறார்.
அர்ஜுன்ன் விஸ்வரூப
தரிசனம் கண்ட போது ஸஞ்சயன் வர்ணித்தார்,
“திவி சூர்ய
ஸஹஸ்ரஸ்ய, பவேத் யுகபதுத்திதா
யதி பா: ஸத்ருஶீ ஸா
ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மன:” (11:12)
என்று. ஆயிரம்
சூரியர்களுடைய ப்ரகாசத்தை ஒத்த ஒரு பேரொளியாக இருந்தது என்று பொருள். அவர்
ஆச்சர்யப்பட்டது போல, கோடி சூர்ய ப்ரகாசம் நிறைந்து இருந்தது போல, அம்பாளின்
தோற்றத்தை அவளது தோற்றத்தின் காந்தியைக் கண்டார் பட்டர் பெருமான்.
உள்ளே நிறைந்த அந்த
மகிழ்ச்சி அவருக்கு வெளியெங்கும் தெரிவது அவளது பேரறிவின் ஆற்றலினால் என்பதை
எப்படி மறுப்பது, மறப்பது? அதனால் தான் கேட்கிறார், எப்படி மறப்பேன் நின்
விரகினையே என்று? அன்னையின் கருணையை மறக்கவும் முடியுமா? அவள் தான் எங்கும்
எதிலும் வ்யாபித்து இருக்கிறாளே!!
“ஸர்வேஸ்வரீ,
ஸர்வமயீ, மஹாரூபா, மஹாமாயா, மஹாசக்தி:,” இவையெல்லாம் அவளது விஸ்வரூபத்தை
உணர்த்தும் சில நாமங்கள்.
...கண்மணி
12/9/21
அபிராமி அந்தாதி --
84
விரவும் புது மலர்
இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும்
இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும்,
அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும்,
கற்பகக் காவும் உடையவரே (83)
அவருக்கு அன்னையின்
தரிசனம் ப்ரபஞ்சம் முழுதும் ஒளிப்பிழம்பாக இருப்பதும் அதில் ஆனந்தம் அடைந்ததும்
சொன்னார். அந்த ஆனந்தம் எப்படிப்பட்ட ஆனந்தம் என்று சொல்கிறார்.
யார் ஒருவர்,
அன்னையை இப்படி, வண்டு கிண்டும் படியான புது மலர்கள் இட்டு, அவளது பாத
கமலங்களிலேயே இரவும் பகலும், இறைஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு இயற்கையாகவே
என்னவெல்லாம் கிடைக்கும் என்று சொல்கிறார்.
இப்படி அன்னையை சதா
நினைத்து தொழுது த்யானித்துக் கொண்டு இருப்பது முதலில் சாத்யமா? மனம் அலையாதா?
அலைந்தால் அவள் குறித்த த்யானம் நழுவாதா என்றெல்லாம் நமக்கு கேள்விகள் வரும்.
இப்படி சொல்வதால்,
ஸ்தூலமாக, நான் பூஜை அறையே கதி என்று எப்படி இருக்க முடியும்? அதெல்லாம்,
சந்யாசிகள் செய்யலாம் என்று தோன்றும், அவர்களுக்கே அதெல்லாம் முடிவதில்லை நாம்
எப்படி? என்றும் தோன்றும். அதனால், ஏதோ நம்மால் முடிந்த ரெண்டு ஸ்லோகம் சொல்லி,
ஒரு புஷ்பம் போடுவோம் என்று நம்மை நாமே சமாதானமும் செய்து கொள்ளும் மனம் வரும்.
ஆனால் இங்கு
பொருள், எப்போதும் அன்னையை பூவைக் கொண்டு அர்ச்சித்து வழிபடுவது என்ற ஸ்தூல
விஷயமாக அல்ல. அன்னையை எல்லாவிடங்களிலும் காண்பதே அவளை எல்லாவற்றிலும் இருக்கும்
அவளை, எல்லாமாக நினைத்து, எதை எண்ணும் போதும் அது அவள் தான் என்ற பாவனை மனதுக்கு
பழக்கப்படுத்துவது தான் இந்த உபாசனையின் மகத்துவம்.
பூ அவள்,
புதியதாகப் பூத்த பூ அவள், அதைக் கிண்டும் வண்டும் அவள், அதனின்று சொறியும் தேன்
அவள், தேன் சுவைக்கும் தேனீ அவள், தேன் அடை தாங்கும் மரக்கிளை அவள், அத்தேன் எடுக்கும்
மனிதனும் அவள். ஒரு பூவை நினைக்க இத்தனை விஷயத்தில் அவள் தெரிவது ஒரு
உதாரணத்துக்கு சொல்லப்பட்டதே.
நாம் நிறைய ஆழ்ந்து
த்யானிக்க த்யானிக்க, அவளன்றி ஓரணுவும் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக மனம் உணர
வேண்டும். அதுவே பேரானந்த நிலை.
இப்போது
அப்படிப்பட்ட பேரானந்த நிலை, அதாவது அனைத்தும் கிடைத்த ஒரு நிலை என்பது எங்கு
இருக்கும்? நமக்குத் தெரிந்து, சாஸ்த்ரம் சொல்வதால், அப்பேர்ப்பட்ட போகமான ஒரு
இடம், ஸ்வர்கம், தேவ லோகம் என்றெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதனால், அவர்
இமையோர் உலகத்தில் இருப்பர் என்கிறார். இமையோர் என்றால் தேவர்கள். தேவர்களுள்
யாராக இருந்தால் சந்தோஷம்?
இந்திரன் தான்.
அது தானே சகல
போகங்களும் பெற வல்ல பதவி. இருந்தாலும் ராஜாவாகத் தானே இருக்க ஆசைப்படும் மனம்?
ஆனந்தம் எதில் அதிகமோ அது வேண்டும் மனதுக்கு.
மிக உயர்ந்த
வஸ்துக்களின் உரிமை ஆனந்தம் தரும் மனதுக்கு. இந்திர பதவியும், அவரது ஐராவதமும்,
அங்கு பாயும் கங்கையும் (பாகீரதி) அவருடைய வஜ்ராயுதமும், இன்னும் வேண்டுவதெல்லாம்
தரும் கற்பகதருவும் தான் பெருமகிழ்ச்சி என்றால்,
அந்த பெரு
மகிழ்ச்சி, ஆனந்தம், அனைத்தும் அன்னையாக உணர்ந்த அந்த மனதுக்குத் தான் இயற்கையாகவே
இருக்கிறதே!!! என்கிறார் பட்டர் பெருமான்,
ஆனந்தத்திலேயே
பெரும் ஆனந்தம் ப்ரம்மானந்தம் தான் என்கிறது உபநிஷத். அது போல, அம்பாளை உணர்ந்த
ஆனந்தம் பெரும் ஆனந்தம், அப்பெரும் ஆனந்தத்தில் இருக்கும் ஒரு சாதகனுக்கு, இந்த
இந்திர பதவியும் அதன் காரணத்தால் கிடைத்த அநுபவங்களும் ஐஸ்வர்யங்களும் ஏற்கெனவே
கிட்டியதற்கு சமானம் தான் என்கிறார்.
பாடல் 34, 74, 75
இந்த கருத்துக்களை முன்னரே கூறினார். அதை மேலும் அழகு படுத்துகிறார் இப்போது.
“ஆனந்த்தாயினி,
ஆனந்தா” என்றெல்லாம் அவளைத் துதிக்கிறோம். ஆனந்தமயமானவள், ஆனந்தம் அளிப்பவள் என்னும்
பொருள் பட.
ஆனந்தமே நம் ஸ்வஸ்வரூம்.
.... கண்மணி
13/9/21
அபிராமி அந்தாதி --
85
உடையாளை, ஒல்கு
செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர்
நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள்
பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை,
உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே (84)
அன்னையை
வணங்குவதனால், பேரானந்தம் கிட்டும் என்பது பார்த்தோம். 27ம் பாடலின் சாயலில்
இந்தப்பாடலும் காண்கிறோம்.
செம்மையான பட்டு
அணிந்தவளான அம்பாள், அவளது சிரசில், ஒளி பொருந்திய சந்திரனை உடையவளாக இருக்கிறாள். இப்படி அவளை
78ம் பாடலிலும் துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என்று சொன்னார். சந்திர சேகரனின்
துணைவி அல்லவா, சந்திர சேகரீ தான் அவளும். மனக்காரகன் சந்திரன். சந்திரனைக் காண
நம் மனம் அமைதியும் குளுமையும் அடைவது நாம் இயல்பாக உணருவது. அந்த சந்திர பிரபை
அன்னைக்கு அலங்காரமாக இருக்கும் போது அவள் முகம் குளிர்ச்சியாக இருக்கும். அவளது
குளிர்ச்சி, நமக்கும் வரும்.
அவளது உருவத்தை
வர்ணிக்க வர்ணிக்க அலுக்கவே அலுக்காது பட்டர் பெருமானுக்கு.
வஞ்சகர் நெஞ்சத்து
அடையாள் என்கிறார். வஞ்சகர் என்று முன்னரே பல இடங்களில் கையாண்டிருக்கிறார்.
அசுரர்களை, அன்னையை நினையாது மனம் போன போக்கில் செல்லும் நற்பண்பு இல்லாதவரை,
அப்பேற்பட்டவர்களின் உயிருக்கே எமனாக இருப்பவள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
வஞ்சகர் என்றால்
யார்?
வஞ்சகம் என்பது,
தூய்மையற்ற மனத்தோடு, அடாத செயல்கள் செய்வது. அதாவது அதர்மமாக நடப்பது. அதர்மம்
அல்லது தர்மம் என்பதை யார் நிர்ணயிப்பது? மனிதர் நிர்ணயித்தால் அதில் விருப்பு
வெறுப்பு வரும். அதனால், வேதம் வகுத்து தருகிறது தர்மாதர்ம விஷயங்கள் யாவையும்.
அதை நன்னூல்கள் திருக்குறள், நீதினூல், மூதுரை போன்ற நூல்களும், இதிகாச புராண
கதைகளும் தான் நமக்கு புரியுமாறு விளக்கிச் சொல்கின்றன.
அப்படி வேதம்
வகுத்த வழிகளின் படி மனதை தூய்மையாக, இறையுணர்வோடு வைத்திருக்காதவர்களை வஞ்சகர் என்கிறார். ஏன்
வஞ்சகர்? அவர்கள் தனக்கும் கெடுதல் செய்து கொள்வதோடு தொற்று வ்யாதி போல, தன்னை
அணுகும் யாவரையும் அவ்வழியில் ஈடுபடச் செய்பவர்களாக இருப்பர். இது அஞ்ஞானம்.
அதாவது அறியாமை. அறியாமை குடியிருக்கும் மனம் வஞ்சகம் நிறைந்தது. அன்பற்றது.
அப்படி அன்பற்ற, பண்பற்ற அறியாமை நிறைந்த மனதில் எல்லா பகைமைக் குணங்களும்
நிறைந்து இருக்கும். அத்தகைய மனதில் அம்பாள் எப்படி குடியிருப்பாள்?
மனம் ஒரு அழகான
கண்ணாடி. நம் தூய்மை எண்ணங்களில் இருக்கும் தூய்மை முழுமையாக இருந்தால் தான்
அன்னையின் இருப்பை நம்மால் அந்தக் கண்ணாடியில் உணரக்கூட முடியும். Reflecting Medium அழுக்கா இருந்தால்
ப்ரதிபிம்பம் எப்படித் தெரியும்? நல்லோர் இணக்கத்தில் இருப்பவர்களுக்கே இப்படி
என்றால், அவற்றுக்கெல்லாம் இன்னும் பிள்ளையார் சுழியே போடாதவர்கள் மனதில் அம்பாள்
குடிபுகுதல் அரிதே.
தயங்கு நுண்ணூல்
இடையாளாம் அம்பாள். பல இடங்களில் அவளை கொடி போன்றிருக்கிறாள் என்றார் அல்லவா?
ஆச்சார்யார் கூட,
சௌந்தர்ய லஹரியில், “க்வணத் காஞ்சீ தாமா, கரி கலப கும்பஸ்தன நதா, பரிக்ஷீணா மத்யே”
என்று அவளது இடையானது பரீக்ஷை பண்ணிப்பார்த்து இருக்கிறதா என்று கண்டு பிடிக்க
வேண்டிய அளவுக்கு சிறியதாக இருக்கிறது என்று அழகாக வர்ணிக்கிறார்.
தமிழ்
விளையாடுகிறது பட்டரிடம். எங்கள் பெம்மான் இடையாளை என்கிறார். அத்தன் ஆனந்த
கூத்தனின் இடையாள், அதாவது சரிபாதியுடையவள் அவள் என்று சொல்கிறார்.
தனக்கு முக்தி
அருளினாள், இனி படையாள் என்று ஆனந்தமாக அறிவிக்கிறார். மற்ற அன்பர்களைப்பார்த்து,
உங்களையும் படையாத வண்ணம் பார்த்திருங்கள் என்கிறார்.
என்ன
பார்த்திருப்பது? அவர் என்ன பார்த்தார்? அவர் அன்னையை ப்ரபஞ்சம் முழுதுமாய்
அத்வைதமாய் பார்த்தார் இல்லையா? அதே போன்று நீங்கள் எல்லோரும், நல்ல தேர்ந்த
ஞானத்தோடு, அன்னையின் அருளோடு, இந்த உலகியல் பார்வைகள் அற்று, அவள் ஒருத்தியே
சகலமும் என்று பார்த்திருமே என்று கருணையுடன், சொல்கிறார்.
அடியார்கள் யாவரும்
முக்தியானந்த்த்தை அடைய வேண்டும் என்று தான் ஞானியர் விரும்புவர். தான் மட்டும்
ஆனந்தம் அநுபவித்தால் போதும் என்று சுய நலமாக நினைக்க மாட்டார்கள்.
“நாப்யாலவால ரோமாலி
லதாஃபல குசத்வய்யை, லக்ஷ்ய ரோம லதாதாரதா-ஸமுன்னேய மத்யமாயை, ரக்தவர்ணாயை,
துக்கஹந்த்ர்யை, ஶிவாத்மிகாயை, முக்திதாயை” என்று எல்லா நாமங்களும் கருணையை பறை
சாற்றுகின்றன.
.... கண்மணி
14/9/21
அபிராமி அந்தாதி --
86
பார்க்கும்
திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர்
ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும்
திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும
முலையும், முலைமேல் முத்து மாலையுமே (85)
சென்ற பாடலில்
அன்னையைப் பார்த்திருங்கள் என்று அறிவுறுத்தினார். எதற்கு பார்ப்பது? அவளை, அவளது
விஸ்வரூபத்தைப்பார்த்ததால் என்னை இனி படையாதிருக்கும் வரம் தந்தாள். உங்களுக்கும்
தருவாள். பார்த்திருங்கள் என்றாள்.
இன்னும் அவளை
விஸ்வரூபியாக பார்ப்பது எப்படி என்று சொல்கிறார். திசையெங்கும் அவளே. அவளது
கரங்களில் இருக்கும் பாசமும் அங்குசமும் எதற்கு என்று முன்னரே பார்த்தோம். நம்மை
ஆசைகளில் இருந்து விடுபட வைத்து, அவளது கழல்களில் இணைத்துக்கொள்ள பாசக்கயிறும்,
கோபத்தை வெல்ல வேண்டும் என்று உணர்த்த அங்குசமும் அவள் தரித்திருக்கிறாள்.
மலர் ஐந்தும்
கரும்பு வில்லும் வைத்திருக்கும் காரணம் பல பாடல்களில் பார்த்தோம். அம்மலர்கள்
புதிய மலர்கள், ஏனென்றால், வண்டுகள் மொய்க்கின்றன அவற்றை. புதிய மலர்களை
மொய்க்கும் வண்டுகள் வில்லின் நாண் கயிறு போல இருப்பதாக, மன்மதனின் வில், அம்புகளை
வர்ணனை செய்யும் போது ஆச்சார்யார் சௌந்தர்ய லஹரியிலும் சொல்கிறார். இங்கும் பட்டர்
பெருமான், அது போன்றே உவமை சொல்கிறார். இப்படி ஆர்க்கும் வண்டுகள் மொய்க்கும்
மலர்களும் கரும்பு வில்லும் என் அல்லல் எல்லாம் தீர்க்கும் என்று சொல்கிறார்.
எப்படி இந்த
கரும்பு வில்லும், அம்புகளும் அல்லல் தீர்க்கும்? நம் இந்த்ரியங்களை சரியான
வழியில் செலுத்தி, நல்லனவற்றையே நாடச்செய்து, கீழான ஆசைகளுக்கு மனதில் இடம்
கொடுக்காது, எப்போதும் அந்தப் பேருணர்வோடு நம்மை இணைத்து வைத்திருப்பதே அம்பாளின்
கரங்களில் உள்ள கரும்பும் வில்லும் செய்யும் வித்தை. அதே ஆயுதங்கள், மன்மதனுக்கு
மனிதர்களில் இச்சை தூண்டிவிட பயன்படுகிறது. அதே ஆயுதங்கள், அம்பாளின் கரங்களுக்கு
வந்தது, இச்சையில் இருந்து விடுபட வைக்க பயன் படுகிறது. பயன்படுத்துபவர் பொருத்து
பயன்பாடு மாறுகிறது. ஒரே மனம் தான். அம்பாளை அறியும் முன் ஒரு சிந்தனை, அவள்
அருளுக்குப் பின் ஒரு சிந்தனை. இது நம் வாழ்வில் கண்கூடு இல்லையா?
அவள் முலையின் மீது
குங்கும அலங்காரமும், அதன் மேல் முத்து மாலையும் ஆடும் அழகையும் சேர்த்தே
அநுபவிக்கிறார் பட்டர் பெருமான். அவள் கருணையின் அழகு சொல்ல சொல்ல பரவசம்
பெருகுகிறது அவருக்கு.
“பஞ்சதந்மாத்ர
ஸாயகா,” அவள் நாமம். சொல்வோம். வெல்வோம் உலகியல் இச்சைகளை
.... கண்மணி
15/9/21
அபிராமி அந்தாதி --
87
மால் அயன் தேட, மறை
தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக்
கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன்
என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும்
பாகையும் போலும் பணிமொழியே (86)
தான் எப்படி
அன்னையைப் பார்த்தார் என்று அழகாக எடுத்துரைத்தார் சென்ற பாடலில். முன்னரே
18,32,33 பாடல்களில், அந்தகனாகிய யமனின் கை வரும் நேரம் அன்னையின் அருள் காத்து
நிற்க வேண்டும் என்று வேண்டினார். இங்கும்,அதுபோல கதித்த கப்பு வேலை வெங்காலன் என்
மேல் விடும் போது நீ வந்து காக்க வேண்டும் என்கிறார்.
யமனுடைய ஆயுதம்
திரிசூலம் போன்று மூன்று கூர்மையான முன் பாகங்கள் கொண்டிருக்கும், அது கப்பு
எனப்பட்டது. கப்பு என்றால் கிளை. கிளை விட்டது போல இருக்குமாம் யமனின் ஆயுதம்.
வெங்காலன் என்றதால் கோபத்தோடு வரும் காலன் என்று பொருள்.
முன்னரே வெங்காலன்
என்ற சொல்லாடல் பார்த்திருக்கிறோம். அன்னையின் கருணையால், பெற்ற அறிவோடு பூரண
ஞானத்தோடு இருக்காது, உலகியல் ஆசைகளுக்கு ஆட்பட்டு, விதிவழியே வந்த வினை முடிந்து
யமனின் வேலை வரும் போது அவருக்கு, இப்படி பிறவியை வீணாக்கி விட்டதே இந்த ஜீவன்
என்று கோபமாக வருவார் என்று பார்த்தோம்.
விண்ணுக்கும்
மண்ணுக்கும் விரிந்து பரந்து நின்ற அன்னையை, மால், அயன் இருவருமே தேட முடியவில்லை.
அவள் கழல்களை அடைய முடியவில்லை. மறையாவது முழுதும் தேடி உரைத்ததா என்றால்,
மறைக்கெல்லாம் அப்பாற்பட்ட பேரறிவுப்பெரும்பொருளாக அவள் இருப்பதால், அவற்றினாலும்
முழுமையாக அவளை எடுத்துணர்த்த முடியவில்லை. அதனால், மால், அயன் மறை யாவரும்
தேடிக்கொண்டு மாத்திரமே இருக்கிறார்கள்.
அப்பேற்பட்ட
திருவடிகளையும், அதனோடு, அழகிய வளைகள் அணிந்த திருக்கரங்களையும், கொண்டு, அந்த
யமன் கோபத்தோடு கொண்டு வந்த திரிசூலத்தை என் மேல் விடும் போது நீ காக்க வேண்டும்
என்று கேட்கிறார்.
அவளை ஸ்துதி பண்ணி
சொல்கிறார். அம்மா, உன் குரல் பாலும் தேனும், வெல்லப்பாகும் கலந்தாற்போன்ற
சுவையோடு இருக்கின்றது என்று சொல்கிறார்.
என்ன இது?
அன்னையைக் கண்டேன் என்கிறார், அன்னையோ தன் நிஜ போத ரூபத்தைக் காட்டினாள்
என்கிறார், அடியாருடன் கூட்டினாள் என்கிறார், முக்தி ஆனந்தம் அளித்தாள்
என்கிறார்!! இப்போது பழையபடி யமன் வருவார், கோபத்தோடு வருவார், அப்போது வா என்று
வேறு கேட்கிறாரே! முரண்பாடாக உள்ளதே என்று தோன்றும்.
சாதகனுக்கு மரணம்
என்பது தூக்கத்துக்கு சமானம். பின் எதற்கு அம்பாள் வந்து காக்க வேண்டும்?
யாராலுமே தேடியுணர
இயலாத வேதப் பெரும்பொருளான பரம்பொருள் தத்துவமாகவே இருக்கும் அன்னையைத் தெரிந்து
கொண்டு முக்தி ஆனந்தத்திலேயே திளைத்திருக்கும் பட்டருக்கு எப்படி அந்தகன் வரும்
நேரம் காக்க அன்னை வர வேண்டும் என்று தோன்றியது?
பட்டர், தன் நிலை,
பின் சாதகர்களின் நிலை என்று மாற்றி மாற்றி உரைத்து வருவது முதலில் இருந்தே
பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒரு பாடலில், உன்னை அடைந்தேன், உவகை கொண்டேண், இனி
ஒரு சமயம் வேண்டேன் என்கிறார், பின், நல்லோருடன் இணைந்தேன் முக்தியில் இருக்கிறேன்
என்கிறார். உடனே அவளை துதிக்கிறார்.
பின் உன்னை
சரணடைந்தவர்க்கு வானுலகம், ஸாம்ராஜ்யங்கள் எல்லாமே கிடைக்கும் என்கிறார், பின், அவற்றையெல்லாம்
நாடாத மனம் தந்தது நீதான் அதற்கு என்ன புண்ணியம் செய்தேன் என்கிறார். தன் ஒருவர்
நிலையில் மட்டும் இருந்தால், இத்தனை விதங்கள் உரைக்க இயலாது. அவருக்கு இன்னும்
ஞானத்தை முழுமையாக அடையாத சாதகர்களுக்கும் சொல்ல வேண்டியிருப்பதால், அப்படி ஒரு
வேளை, அன்னையின் கருணை அபரிமிதமாக இருந்தும், ஞான நிஷ்டை கூடாத யோகப்ரஷ்டனுக்காக
பல இடங்களில் பேசுகிறார். அப்படித் தான் இந்த பாடலிலும், யோகப்ரஷ்டனாக இருக்கும்
ஒரு சாதகனை கை விடாதே என்று கேட்கிறார்.
இது குறித்து 8ம்
அதிகாரத்தில் க்ருஷ்ணர் சொன்னதையும் முன்னரே பார்த்தோம். அந்திம காலத்தில் என்ன
நினைவிருக்கிறதோ அதுவே தொடரும் அடுத்த பிறவியிலும். அதனால், அப்படி யமன்
வரும்போது, என் வினையினால் ஏதாவது கீழான விஷயங்கள் நினைத்து மீண்டும் முழு
சாதனையும் தொடர வேண்டியிருக்காது, உன் காட்சி ஒன்று போதும் என்னை உய்விக்க என்பது
அவரது கோரிக்கை.
“ஹரிப்ரஹ்மேந்த்ர
ஸேவிதாயை நம:, கநகாங்கத கேயூர கமனீய புஜான்விதாயை நம:” போன்றவை சிந்திக்க உகந்தவை.
.... கண்மணி
16/9/21
அபிராமி அந்தாதி --
88
மொழிக்கும்
நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும்
வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
அழிக்கும் தலைவர்,
அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு
பாகம் கொண்டு ஆளும் பராபரையே (87)
வெங்காலன்
வரும்போது அன்னை வந்து காக்க வேண்டும் என்றார். அப்பனின் ஒரு பாகத்தை தனதாக்கிக்
கொண்டு, இந்த உலகை ஆளும் பராபரை என்று அவளை அழைக்கிறார்.
பராபரை என்றால்,
மேலானவற்றுள் எல்லாம் மிக மேலானவள் என்று பொருள். மேலானதில் மேலானது என்றால்,
அதற்கு அடுத்து இன்னொரு மேலான பொருள் இல்லை என்று கொள்ளலாம். அன்னையைப் போல
இன்னொன்று இருந்தால், அவள் பெரியவளா, அல்லது அந்த இன்னொன்று பெரியதா என்று
நிறுத்து பார்க்கலாம். அவளோ வானாகி, மண்ணாகி, வளியாகி, உயிராகி, அனைத்துக்கும்
உள்ளே, புறம்பே, வெளி முதலாகிய பூதமும் ஆகி, அவள் மட்டுமே அனைத்துமாகி இருக்கும்
போது, அவளைக்காட்டிலும் என்று எதை சொல்ல முடியும்? அப்படி ஒப்பாரும் மிக்காரும்
இல்லை இல்லையா? அதனால் தான் பராபரை அவள்.
இப்படி ஒரு பாகத்தை
அப்பனுடன் பகிர்ந்ததால், அவர் தவம் அல்லது அழியாத விரதம் அண்டமெல்லாம் பழித்தது
என்று எப்படிச் சொல்கிறார்?
மன்மதனை எரித்தார்
சிவபெருமான். எதற்கு? அவன் தன் “இச்சா சக்தியைத் தூண்டும்” வேலையை அவரிடமே காட்ட
முற்பட்டதால். அனைத்து கலைகளுக்கும்
உறைவிடமாக இருக்கும் அம்மையப்பனிடமே நம் வேலையைக் காட்டலாமா? ஈசனுக்கு கால நேரம்
தெரியும். எப்போது எப்படி அன்னையின் சக்தியுடன் இணைந்து அதிவீரனான குமரனைத்
தோற்றுவிக்க சரியான தருணம் தெரியும். ஆனால் தேவர்களுக்கு அவசரம். அவர்கள்
துன்பங்கள் அப்படி. இதெல்லாம் அவரது தவம் கலைவதற்கு சரியான காரணமாக இருத்தல் ஆகாது
என்பதால், தன்னை அணுகும் முறை தவறு என்பதால், மன்மதனுக்கு தண்டனை தரப்பட்டது.
அந்த சமயம்,
அன்னையின் பெருங்கருணை தான் மன்மதனையும் காத்து, சிவனின் கோபமும் தணிந்து,
அன்னையின் அனுக்ரஹத்தோடு கூடிய குமார ஸம்பவமும் நிகழ்ந்தேறியது. விழியாலேயே
மன்மதனை அழித்த காரணம், அவரது நிஶ்சலனமான தவம் கலைந்தது என்பதால். தவம் கலைத்ததோ,
அன்னையுடன் சேர்வதற்காகவே. ஆனால், எப்போதோ ஒரு முறை ஒரு காரணத்துக்காக, அன்னையுடன்
இணைய வைக்கப்போய், அவளோ, அவரது பாதி உடலில் சேர்ந்து கொண்டு, அனுக்ரஹம் செய்ய
நினைத்தாள்.
சிவன் சத் என்றால்
சக்தி சித் அம்சம். சத் என்றால் சத்யம். யாண்டும் இருப்பது. சித் என்றால், சத்தின்
சக்தி வடிவம். சத்தும் சித்தும் சேர்ந்த ஆனந்த ஸ்வரூபம் தான் ஆத்ம ஸ்வரூபம் என்பது
உண்மை. சிவனும், சக்தியும் இணைந்த இந்த உருவம், ஞானத்தைத் தேடும் சாதகனுக்கு, கீழான
இச்சைகள் தோன்றாமல், மேலான பரம்பொருளை உணரும் இச்சையைத் தூண்டும். இதனால் தான்,
சிவபெருமானின் தனியான தவத்தை விட, தன்னுடன் இணைந்து இருக்கும் அந்த அர்த்தநாரீ
ஸ்வரூபத்தை தன் பிள்ளைகளுக்கு அருளத்தான் அன்னை இந்த ஸ்வரூபத்தைத் தவம் இருந்து
பெற்றாள்.
ஏன் அண்டமெல்லாம்
பழிக்க வேண்டும்? அண்டம், உலக இச்சைகளில் மூழ்கி இருப்பது தானே நடந்து
கொண்டிருக்கும் நிஜம்? இது வேண்டாம், எனக்கு பராம்பிகையின் அருளும், ஆத்மஞானமும்
தான் வேண்டும் என்று உதடு சொன்னாலும், அதில் தீவிரமாக மனம் செல்வது யாரோ ஒரு
சிலருக்குத்தான். “கஶ்சித் தீர:” என்று தான் க்ருஷ்ணரும் சொல்கிறார். யாரோ ஒரு
தீரனுக்குத் தான் உலக இச்சைகளில் பற்றற்ற தன்மை வரும் என்பதால், உலகம் (பொதுவான)
பழிக்கும் என்றார்.
இப்படி பரம
கருணையோடு இருக்கும் பராபரையானவள், மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதவளாகவே
இருக்கிறார் என்றார். 16ம் பாடலிலும் சொன்னார், அளியேன் அறிவு அளவிற்கு அளவானது
அதிசயமே என்று. அதே போல், இங்கும் சொல்கிறார், மனதுக்கு, வாக்குக்கும் எட்டாத
“மனோவாசாமகோசரா” வாக இருக்கும் அன்னை, எந்தன் விழிக்கும் வினைக்கும் எட்டினாயே
என்று ஆனந்தமாக ஆச்சர்யப்படுகிறார். விழிக்கும் என்பது, அவரது மனவிழியில்
எழுதினாரே, 78ம் பாடலில், அதுபோல, மனத்திரையில் அன்னையின் உருவம் கண்டதும், வினை
என்பது, அவர் செய்யும் உபாசனைகள். அவற்றுக்கு இரங்கி அநுக்ரஹம் செய்ததைச்
சொல்கிறார்.
“சொல்லுக்கடங்காவே
பராசக்தி சூரத்தனங்களெல்லாம், வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்”
.... கண்மணி
17/9/21
அபிராமி அந்தாதி --
89
பரம் என்று உனை
அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன்
என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப்
பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற,
கையான் இடப் பாகம் சிறந்தவளே (88)
வேத பரிபுரையான
அம்பாளை பராபரையான உலகன்னையை, சரணடைகிறார் பட்டர். பக்தனுக்கு லக்ஷணம் சரணாகதி.
ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்திலும் நாம் பார்ப்பது, நான் எனது என்பனவற்றை விடுத்து
முழுமையாக சரணடைந்த ஒரு சாதகனுக்குத் தான் பரப்ரம்மத்தைக் குறித்த அந்த மெய்ஞானமானது
நன்கு புலப்படும். அன்றி நம் பொருட்டும், நமக்கிருக்கும் திறமைகள் பொருட்டும் துளி
கர்வம் இருந்தாலும் நம் பாடு திண்டாட்டம் தான். அதனால் தான் க்ருஷ்ணர், குணங்களைப்
பற்றிக் கூறும் போது விரிவாக, அமானித்வம், அதம்பித்வம், அஹிம்ஸா என்று
ஒவ்வொன்றையும் விளக்குகிறார் கீதையில்.
இங்கு பரம் என்று
உனை அடைந்தேன் என்கிறார். பரம் என்றால் மேலானது என்று பார்த்திருக்கிறோம். உனை
அடைந்தேன் என்றால், அறிந்தேன், அதனால், மனம் உன் பால் அடைந்தேன், காப்பது உன் கடன்
என்பது. உனக்கோ பக்தர்களுக்கா பஞ்சம்? பலர் இருக்க, தமியேனையும் ஏற்றுக்கொள்
என்கிறார். தன்னை கடைநிலையில் வைத்து பணிவைக்காட்டுவது ஒரு அழகு இப்பேற்பட்ட
பக்தர்களுக்கு. தரம் அன்று இவன் என்று தள்ளிவிடக்கூடாது என்கிறார். எப்படி அவர்
தகுதி இழந்தவராக ஆக முடியும்?
நாத்தங்கு புன்
மொழி ஏற்றிடுவாய் அம்மா என்றார் 26ம் பாடலில், நான் என் செயினும் நடுக்கடலில்
வீழினும் தடுப்பதுன் கருணை என்றார் 30ல். நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து
வந்து நீயே ஆண்டுகொண்டாய் என்றார் 61ல், வினையே தொடுத்த சொல் அவமாயினும் நின் திரு
நாமங்கள் தோத்திரமே என்றார் 66ல், அறிவொன்றிலேன் என் கண் நீ வைத்த பேரளியே என்று
81ல் சொன்னார். இப்படி ஒவ்வொரு முறையும், தனக்கு அன்னையின் அநுக்ரஹம் அன்றி வேறு
ஒரு பெரிய சாமர்த்யம் எல்லாம் இல்லை என்பதை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார்.
அதனால், இப்போதும் தமியேனுக்கு தகுதி இல்லை என்றாலும், உன் பக்தர்களுக்குள்
ஒருவனாக என்னை நீ வைக்கத்தான் வேண்டும் என்று இறைஞ்சுகிறார்.
அன்னையைத் தொழ
இலக்கணமும், இலக்கியமும் விளையாட வேண்டியதில்லை. அன்னையைத் தவிர ஒன்றில்லை என்ற
பூரண சரணாகதி ஒன்று தான் வேண்டும்.
இங்கும் அம்பாளின்
அர்த்தநாரி ஸ்வரூபத்தையே நினைக்கிறார்.
ப்ரம்ம தேவருக்கு
ஒரு சமயம் தான் மட்டுமே அனைத்து ஜீவர்களின் உள்ளத்தில் ஒளிரும் பரம்பொருள்
தத்துவம் என்று எண்ணம் வந்து அதனால் கர்வமும் வந்தது. அந்த ஒரு தேவனை மட்டும் தான்
எல்லா உயிரினங்களின் ஆதாரமாக இருப்பதாக தவறான, தத்துவத்துக்கு முரணான ஒரு விஷயம்
ஸ்தாபிதம் ஆகிவிடும் என்ற கருணையினால், வேதம் வகுத்த பரம்பொருள் தத்துவமானது
இப்படி ஒரு தேவ ரூபமாக இருப்பதில்லை என்பதை உணர்த்தவே, ஈஸ்வரன், அவரது கர்வத்தை
பங்கம் ஆக்க, ஐந்து தலைகளில் நடுவில் உள்ள தலையை பைரவ ரூபம் எடுத்து நீக்கினார்.
அதைத் தான் அயன் சிரம் ஒன்று செற்ற என்று சொல்கிறார்.
அதே போல, மூன்று
கோட்டைகள் கட்டி அதனால் உலகைத் துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிக்க முப்புரமெரித்த
அவதாரத்தில், சிவபெருமான், மேரு மலையை வில்லாக பயன்படுத்தினார். அதைத் தான்
தரியலர் தம் புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கினார் என்றார். இறைவனின் இரு
நிகழ்வுகளும் உலக நன்மைக்கே. அப்பேற்பட்ட உலகத்தின் நன்மைக்காகவே காரியங்கள்
செய்யும் அப்பனுடன் அவனது இடப்பாகம் சேர்ந்து கொண்டு அன்னையும் சதா தன்
பிள்ளைகளின் நலனுக்காக அநுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.
“த்ரிபுராம்பா,
த்ரிபுரமாலினி, கபாலி ப்ராணநாயிகா, அபர்ணா” போன்ற நாமங்கள் சிந்திக்க இன்பம்.
…. கண்மணி
18/9/21
அபிராமி அந்தாதி --
90
சிறக்கும் கமலத்
திருவே நின் சேவடி சென்னி வைக்க
துறக்கம் தரும்
நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து,
உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது,
என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே (89)
பரம் என்று
அம்பாளைச் சரணடைந்ததால் தள்ளி விடாது உன் பக்தனாகும் தகுதி இருக்கோ இல்லையோ நீ
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டார் சென்ற பாடலில்.
இங்கு, அம்பாளின்
அநுக்ரஹம் எந்த சமயத்தில் வேண்டும் என்பதையும் சொல்கிறார். முன்னரே அவளது பாதங்கள்
சென்னியில் வைத்து ஆண்டு கொள்ள வேண்டும் என்று முறையிட்டார். இப்போதும், அவளது
பாதங்களைச் சென்னியில் வைக்க வேண்டும் என்று கேட்கிறார். சிறப்பான தாமரை மலரில்
வீற்றிருக்கும் அன்னையின் திருவடிகளின் மேன்மையை நாம் வரிசையாக நிறைய பாடல்களில்
பட்டர் கூறக்கேட்டோம்.
அன்னையின் பாதங்கள்
வேதங்களின் இருப்பிடமாகப் பார்த்தோம். வேத பரிபுரை என்றார். வேதங்கள் நமக்கு தரும்
ஆத்ம ஞானமானது தான் நம்மை இந்த பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுவிக்க வல்லது.
ஆத்மஞானம், குருவின் அநுக்ரஹம் இருந்தால் தான் வரும். குருவின் வழிகாட்டுதலுடன்,
சாஸ்த்ர விஷயங்களைப் பொறுமையாக நீண்ட காலம் நேரம் கொடுத்து படித்து உணர்ந்து
கொள்ளும் ஒரு சாதகனுக்கு, அந்திம காலத்தில், தன் நினைவு மறக்கும் நிலையில்,
அச்சமோ, இந்த பிறவி வீணாகி போனதே என்ற துக்கமோ, இனி ஒரு பிறவி வருமே என்னும்
எதிர்பார்ப்போ யாதும் அற்ற ஒரு மன நிலை தான் இருக்கும்.
த்யான நிலைகளில்
துரீயம் என்ற நிலையில் எண்ணங்களற்று இருக்கும் நிலையாக இருக்கும் என்று கூறுவர்.
ஒரே பொருளை, அதுவும் தன் ஆத்ம ஸ்வரூபத்தையே சதா த்யானித்து, சாஸ்த்ரம் உரைக்கும்
விஷயங்களின் துணையோடு சிந்தித்து அந்த சிந்தனையிலே லயித்து. “த்தா ஸ்வரூபே
அவஸ்த்தானம்” என்றாரே பதஞ்ச்சலி அது போன்ற சமாதி நிலையானது பயிற்சி செய்யும்
சாதகனுக்கு வாய்க்கும். அந்நிலையில், மனம் ஒடுங்கி இருக்கும். தன் ஸ்வரூபத்தில்
ஒடுங்கி இருக்கும்.
இங்கு, அம்பாளையே
சகலமும் என்று உணரும் சாதகன், யாவற்றிலும் காணும் அவளே தானும் ஸ்வரூபத்தின்
நிலையில் என்று உணர்ந்து, அவள் அருளால், உணர்ந்த அந்த ஆனந்த நிலையை அனுபவிப்பது,
இறுதி க்ஷணம் வரை தொடரும்.
துறக்கம் தரும்
என்பது துறந்த நிலையை அருளும் என்று பொருள். எதைத் துறந்த நிலை? உலக பற்றுகள்
துறந்த நிலை. இதை ஈசன் அம்பாளின் பதி அருளுகிறாராம். பதியுடன் பத்னியான அம்பாளும்
இணைந்து தன் திருவடிகளைத் சென்னியில் வைக்க, அந்த துரீய அவஸ்த்தையானது, நிரந்த
உறக்கம் கொள்ள வேண்டிய சமயமான, உடலும் உயிரும் உறவு இழக்கும் இறுதி நேரத்தில்
வாய்க்கும் என்கிறார்.
சுருங்கச்
சொன்னால், மரணம் நிகழ்வது ஒரு கடினமான அவஸ்தையாக இருக்காது. ஒரு ஆழ்ந்த த்யானம்
போன்று தான் இருக்கும். மரணத்தின் மன, உடல் வேதனைகள் பூரணமாக அற்றுப்போகும்.
சரி இதெல்லாம்
எப்போது வேண்டும்? துறவு தரும் ஈசனுடன், அம்மை எப்போது திருவடியை தலையில் வைத்து
அருள வேண்டும்? மரண காலத்தில். உடல் உயிர் உறவு அற்றுப் போகும் போது. அறிவு மறக்கும்
போது என்று சொல்கிறார்.
அறிவு மறக்கும்
என்றால், அந்த நிலையில், உன்னைத் தனியாக, தொழும் அறிவு மறந்து போக வாய்ப்புண்டு.
மரண அவஸ்த்தையில் அதுவே நினைவாக இருந்து விட்டால் என்ன செய்வேன்? அப்போதைக்கு
இப்போதே அழைத்து வைத்தேன் என்று அம்பாளுக்கு ஒரு விண்ணப்பம் சேர்த்து விடுகிறார்
பட்டர் பெருமான்.
சொல்லப்போனால்,
அவரது விண்ணப்பம் மரண காலத்துக்கு என்று கொள்வது போல இருந்தாலும், ஆத்மஞானத்தினை
நன்கு உணர்ந்த ஞானியின் அன்றாட நிலையே இந்த துரீயாதீத நிலை தான் என்று சாஸ்த்ரம்
சொல்கிறது. அதனால் எப்போதும் அவளது கருணையினால், ஞான நிஷ்டையைத் தான் கேட்கிறார்
பட்டர் பெருமான்.
வருந்தியுமே என்று
சொல்வது அறிவு மறக்கும் சமயம் நான் வருந்தியிருப்பேனே அப்போது நீ என் முன்னே வரல்
வேண்டும். நான் மறந்தது வருத்தமாக இருந்தாலும், நீ அதைப்பாராது, என் முன்னே வர
உன்னை இறைஞ்சுகிறேன் என்று கேட்கிறார்.
“மெய்யைச்,சக்தி
தனக்கே கருவியாக்கு-
சிவ சக்திதரும்
திறனதிலேறும்-மெய்யைச்
சக்தி தனக்கே கருவி
யாக்கு-அதுசாதலற்ற வழியினைத் தேறும்” என்றார் பாட்டன் பாரதி
“மஹாபத்மாடவே
ஸம்ஸ்தாயை, துர்யாயை, பத்மாஸனாயை, த்த்பத லக்ஷ்யார்த்தாயை” போன்ற நாமங்களை
உள்வாங்குவோம்.
.... கண்மணி
19/9/21
அபிராமி அந்தாதி --
91
வருந்தாவகை, என்
மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய
இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு
பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை
மருந்தானதை நல்கும் மெல்லியலே (90)
இப்படி அனவரதமும்
அவளது அருள் வேண்டி, அது கிடைத்த உவகை காட்டி, தன் உள்ளம் முழுவதும் அம்பாளைத்
தவிர ஒன்றையும் நிறைக்கத் தெரியாத ஒரு நிலை வந்தால் பின் என்ன தான்
வேண்டியிருக்கும் வாழ்வில்? அதைத்தான் அந்த நிறைவு நிலையைத் தான் இங்கு சொல்ல
வருகிறார் பட்டர் பெருமான்.
எனக்கு வருத்தம்
தராத வகையில் என்கிறார், வருத்தம் எது தரும்? உலக இச்சைகளும் அதனால் உண்டாகும்
உணர்ச்சி குவியல்களும் தான். அவற்றுக்கு உள்ளே இடம் அளிக்காது, அம்பாள் வந்து
அமர்ந்தாளாம், அவளது கருணையினால்.
வந்து புகுந்தாய்
என் இதயத் தாமரையில் உன்னை அழைத்து வைத்திருக்கிறேன். நீ இதுவும் தாமரையாய்
இருப்பதால், உன் பழைய இருப்பிடம் என்று அமர்ந்து கொண்டாய். வெளியில் புறத்தில்
பொருள் மட்டும் பார்க்கும் போது இது சரியான பொருள் தான் என்றாலும், நாம் முயற்சி
செய்வது அதன் ஊடு பொருள் அறிவது என்பதால், இங்கும் எதற்காக பழைய இருப்பிடம் என்று
கூறியிருப்பார் என்பது சிந்திக்க உகந்ததே.
ஒவ்வொரு
ஜீவனுள்ளும் உறைவது அந்த பரம் பொருளே. உண்மையில் பரம்பொருள் அன்னியில் ஒன்றும்
இல்லை. உயிர், அதை உணராது, பரத்தின் நிழலான தன்னுள் ஒளிரும் விவகாரத்திற்கான
ஜீவனையே பரம சாஸ்வதம் என்று அதற்கு ஏற்படும் இச்சைகளுக்காக தன் வாழ்நாளை
செலவழிக்கிறது. ஆனால், இது போலி தான். அசல் அல்ல. அசலுக்கு வேண்டுதலும் இல்லை,
வேண்டாமையும் இல்லை, அது விருப்பு வெறுப்பு, மாற்றம், தோற்றம் இதற்கெல்லாம்
அப்பார்ப்பட்ட யாண்டும் அழிவற்ற பெரும்பொருள் என்பதையும், அதுவே நான் என்பதையும்
உணரும் வரை உள்ளத்தில் ஆத்மஞானம் ஒளிராது இல்லையா?
ஆத்மஞானம்
ஒளிரும்போது, அங்கு பரம்பொருளன்றி வேறொன்று இல்லை என்பது புலப்படும். புலப்படும்
என்பதால், புதியதாய் தோன்றியது அல்ல. ஏற்கெனவே அது தான் உள்ளது. சாதகன்
அறியவில்லை. அறிந்ததும் புலப்பட்டது. அதனால் தான் பழைய இருப்பிடம். புதிதாக
அன்னையை வரவழைப்பதில்லை. அவள் தான் இருக்கிறாள் என்பதை உணர்தல் தான் ஞானம்.
அப்படி அன்னையே
சகலமும் என்றுணர்ந்தபின், எனக்குப் பொருந்தாதது என்று ஒரு பொருள் இல்லை அம்மா
என்கிறார். ஏன்? வேறொன்றில்லை. ஒரே காட்சி, அது அவளது காட்சி. புறத்தேயும்,
அகத்தேயும். இது தானே அம்ருத நிலை. ம்ருதம் என்றால் அழிவு. அம்ருதம் என்றால்
அழிவற்ற. அழிவற்ற நிலை பெற விரும்பிய தேவர்கள் மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி
என்ற பாம்பைக்கயிறாக்கி பாற்கடலைக் கடைய, மாஹாலக்ஷ்மி முதல் அத்தனை ஐஸ்வர்யங்களும்
வந்தன, பின் அம்ருதமும் வந்தது.
அந்த அம்ருதம்
யாருக்கு என்பதில் தேவாசுரர்களுக்கிடையே சண்டை வர, சமாதானமாக ஈஸ்வரனும் நாராயணரும்
இணைந்து மோஹினியாக அவதரித்து அம்ருதத்தைப் பிரித்து வழங்கினர் என்பது புராணக்கதை.
அப்படி நாராயணர் ஈசனுடன் சேர, அவரது உட்சக்தியாக அம்பாள் இருந்தாள். அதனால் தான்
புலவருக்கு விருந்தான அம்ருதத்தை நல்கியவள் மெல்லியள் என்கிறார். இங்கு மோஹினியாக
அவளை உருவகித்து பேசுகிறார்.
அப்படி
தேவர்களுக்கு அம்ருதத்தை வழங்கியது போல, என்னுள்ளே இருந்து அம்ருதமாக இருப்பதால்,
இனி எனக்கு வேறொரு நினைவில்லை உன்னையன்றி என்பதே கருத்து.
“ஸ்வாத்மான்ந்தலவிபூத
ப்ரஹ்மாத்யானந்த ஸந்தத்யை, மோஹின்யை” போன்ற நாமங்கள் சிந்திக்க உகந்தவை
.... கண்மணி
20/9/21
அபிராமி
அந்தாதி – 92
மெல்லிய நுண்
இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென்
முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம்
தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம்
ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே (91)
மிக உயர்ந்த
நிலையில் சென்ற பாடலில் அவள் இதயத்தாமரையில் வேற்றிருப்பதையும், அதனால் வேறு ஒன்றில்லை என்ற த்ருட ஞானம் பெற்றதைச்
சொன்னார்.
ஒவ்வொரு முறை
பட்டர் தனதுஇது போன்ற ஆனந்த மயமான அநுபவம் உரைக்கும் போதும், தவறாது, ஆரம்ப நிலையில் உள்ள சாதகனின் மனம் துவளாது இருக்க, அம்பிகையைத் தொழும் அடியாருக்கு என்னவெல்லாம் தருவாள்
என்பதை, ஞானம்
நல்குவது தான் பரம ப்ரயோஜனமாக இருந்தாலும், அதை உணரும் பக்குவம் வரும் வரை, என்னவெல்லாம் தருவாள் என்பதைச் சொல்லத் தவறுவதே
இல்லை.
முதல்
முயற்சியிலேயே உச்சம் தொட முடியாது இல்லையா? அப்படி தொட்டால், அது முதல் முயற்சி அல்ல. இது வாழ்வியலுக்கே
பொருந்தும். ஆன்மீக வளர்ச்சி என்பது படிப்படியாகத்தான் வளர்ந்து வரும்.
அதற்காகத்தான் நாரதரும் நவ வித பக்தி பற்றி பக்தி சூத்ரத்தில் சொல்லியிருக்கிறார்.
மெல்லிய
நுண்மையான இடை கொண்டவளாக அம்பாள் இருக்கிறாள், அவளது இந்த உருவத்தை அபர்ணா என்று சொல்வதுண்டு. கொடி
இலைகளற்று, மெல்லிய
தண்டு மாத்திரம் இருப்பது அபர்ணா எனப்படும். பர்ண என்றால் இலை. பர்ணங்கள் அற்றவள்
அபர்ணா. மின்னனையாள் என்பது மின்னலைப் போன்று ஒளி மிகுந்தவள். அம்பாளின் ஒளி தான்
மின்னலுக்கே. என்றாலும், நமக்கு
தெரிவது மின்னலைத்தான் என்பதால், அதனை
ஒப்பிட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்.
விரிசடையோன்
மகிழ்ந்து தன்னுடன் இணைத்துக்கொண்ட மென்முலையாள் என்பது அவளது இளமையான வடிவத்தைக்
குறிக்கிறது. இவளைத் தொழுபவர்களுக்கு பல்லியம் ஆர்த்து வெண்பகடூரும் பதம் தருமே
என்கிறார். வெண் பகடு என்பது ஐராவதம் என்னும் வெள்ளை யானை. அது எங்கு இருக்கும்? இந்திரனிடம். தேவர்கள் வாழும் இந்திர லோகம்
சித்திக்குமாம்.
எப்போது? மறை சொல்லிய படி தொழுதால். மறை இறைவனின் ஸ்வரூபத்தை
யாண்டும் அழியாத பரம்பொருளாக இருக்கும் தன்மையை, “ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம” என்று போற்றுகிறது. இருப்பதெல்லாம் இறைவனே என்று
சொல்கிறது. அப்படி உள்ளதெல்லாம் அம்பாளின் பரப்ரஹ்ம ஸ்வரூபமே என்னும் எண்ணத்தோடு
தொழும் அடியாரை, அதாவது
ப்ரஹ்மஞானிகளான ஜீவன்முக்தர்களைத் தொழும் அவர்க்கு, அதாவது சிஷ்ய சாதகனுக்கு, வெண்பகடூரும் பதம் தருமே.
க்ருஷ்ணர்
சொன்னார் இல்லையா?
“பார்த்த
நைவேஹ நாமுத்ர விநாஶஸ் தஸ்ய வித்யதே
நஹி
கல்யாணக்ருத் கஶ்சித் துர்கதிம் தாத கச்சதி” என்று.
அதாவது, ஆத்மஞானத்துக்காக செய்யும் சாதனை ஒரு போதும்
வேணாகாது. இவ்வுலகிலும் சரி, வானுலகிலும்
சரி, அது
நல்ல பயனைத் தரும், அழிவே
தராது என்றார்.
ஆகையினால், சாதகனுக்கு முக்தி இந்தப் பிறவியில் ப்ராரப்த
வசத்தால் கிட்டவில்லை என்றாலும், வானுலகில்
நல்ல சுகங்கள் பெற்று மீண்டும் நல்ல ஸம்ஸ்காரத்தோடு பிறந்து தன் கற்றலைத்
தொடர்வான் என்று சாஸ்த்ரம் உறுதி கூறுவதைக் கருத்தில் கொண்டு, இங்கு, சாதகனின் சாதனைக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு
என்கிறார்.
"விப்ரப்ரியா"
என்கிறது ஆயிரம் நாமங்கள். விப்ர என்றால் ஞானிகள், கற்றுணர்ந்தவர்கள். அவர்கள் மீது ப்ரியமானவள்.
அவர்களின் அடியார்களுக்கு அவள் கருணை நிச்சயம் உண்டு என்பது நோக்க தகுந்தது.
.... கண்மணி
21/9/21
அபிராமி
அந்தாதி -- 93
பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி
மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர்
மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே (92)
அடியாரைத்
தொழும் அடியார்க்கெல்லாம் ஐராவதம் இருக்கும் இந்திர லோகமும் அதன் சுகங்களும்
தருவாள் அம்பாள் என்றார். தன் நிலையைச் சொல்லும் போது, பதத்தில் உருகினேன் என்றார். பதம் என்றால் நன்கு
பழுத்த பக்குவம் அடைந்த தன்மை. பதமான மனமாக இருந்ததால் உருகி. பதம் என்பது
அம்பாளின் திருவடிகளும் குறிக்கும். திருவடிகளின் பெருமை கண்டு உருகி என்றும்
பொருள். பதமான மனத்தால், பதத்தைக்
கண்டு, அதனால்
உருகி, அந்த
பாதத்திலே மனம் பற்றினேன் என்று சொல்கிறார்.
பாதத்திலே
மனம் பற்றியதால், அன்னையின்
இடத்தில் இருக்க வைத்தாள் அவள். எப்படி இருக்க வைத்தாள்? அடிமையாக. அடிமை என்றால், பூரண சரணாகதியில் இருக்க வைத்தாள் என்று பொருள்.
அடிமையாய் இருப்பவர்கள் தானாக ஒன்று செய்ய முடியாது. எதுவாக இருந்தாலும் அதற்கு
எஜமானர் அநுமதி வேண்டும். தனது என்று ஒன்றை வைத்திருக்க மாட்டார்கள். யானும், எனதும் நீக்கிய, பூரண சரணாகதி நிலையே அடிமை கொண்டாய் எனப்பட்டது.
இப்போது அவரை
அவள் அடிமை கொண்டதால், அவரது
நலன்களின் பொருப்பு அடிமையின் எஜமானருக்கே என்பதால் அவளுக்கே உண்டாகும். அதனால், சாதகனின் அனைத்து விஷயங்களும் அம்பாள்
பார்த்துக்கொள்வாள் என்பது கருத்து. பூரண சரணாகதியின் குறியீடாக, அந்த இக்கட்டான சூழலிலும் இரு கரங்களை த்ரௌபதி மேலே
உயர்த்திய பின், முழுவதும்
தன் பொருப்பில் எடுத்துக்கொண்டு அபயம் அளித்தாரல்லவா க்ருஷ்ணர்? அதுபோல. அப்படி, என் எல்லா விஷயங்களையும் பார்த்துக்கொள்ள நீ
இருப்பதால், நான்
ஏன் இனியும் ஒருவர் மதத்திற்கு செல்லப்போகிறேன்? செல்லேன், மதி மயங்கேன் என்று சொல்கிறார். மதத்தே என்பது வேறு
ஒரு பாதை அல்லது வழியை நாட மாட்டேன். ஏனென்றால் நாடியது அடைந்தாகி விட்டது என்று
பொருள்.
முதல் தேவர்
மூவர் யார் என்று முன்னரே பார்த்தோம், கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்னனும் மாலும் வணங்குகிறார்கள்
என்று 7ம்
பாடலில் சொன்னார் அல்லவா? இன்னும்
இதே கருத்தை முதல் மூவர் என்று 25ம்
பாடலிலும் சொன்னார், இப்படி
முத்தேவர்களும் போற்றும் அழகிய புன்னகையுடையவளே என்று அம்பாளை விளிக்கிறார்.
“த்ரயாணாம்
தேவானாம் த்ரிகுண ஜனிதானாம் தவ ஶிவே
பவேத் பூஜா
பூஜா தவ சரணயோர் யா விரசிதா”
என்கிறார்
ஆச்சார்யார் சௌந்தர்ய லஹரியில். மூன்று குணங்களினின்று தோன்றிய முத்தேவர்களுக்கும்
பூஜையானது எதுவென்றால், உன்
சரணங்களில் செய்யப்படும் பூஜையே என்று சொல்கிறார். அம்பாளின் சரண காம்பீர்யம்
அப்படிப்பட்டதாக இருக்கிறது. அது ஒன்றே அனைத்து தேவதைகளின் சரணங்களுக்கும்
செய்யும் ஆராதனைகளாகின்றது என்னும் பொருளில் அவளது சரண மஹிமை சொல்லப்படுகிறது.
அருணகிரியார்
கேட்டது பொல அம்பாளின் சரண கமலாலயத்தில் அரை நிமிஷமட்டில் இருக்க அருள்
வேண்டுவோம்.
.... கண்மணி
22/9/21
அபிராமி
அந்தாதி -- 94
நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ்
முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே
பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே
இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே (93)
அன்னையின்
முகிழ் நகையை ரசித்த பிள்ளையாய், அவள்
பாதத்திலே மனம் பற்ற, அவளது
நிஜ போத ஸ்வரூபம் மனதில் அலைகள் எழுப்ப, சட்டென்று சுய நினைவு வந்தவர் போல, இவ்வளவு நேரம் தானே வரிந்து வரிந்து வர்ணித்த அவளது
அங்க லாவண்யங்களை எல்லாம் முரண் என்கிறார் இந்த பாடலில்.
நகையாடுவது
போல் இருக்கிறதாம். சிரிப்பாக இருக்கிறது அவருக்கு. எது நகைப்புக்கு உரியதாயிற்று
இப்போது?
ஒரு பிள்ளை
பெற்றாலே, பெண்ணின்
அங்க லாவண்யங்கள் சற்றே குறைந்து, தொய்வுகள்
ஏற்பட்டு, அதை
மறைக்க படாதபாடு படுவதைப் பார்க்கிறோம். பட்டரும் தான் பார்க்கிறார். அதனால்
சொல்கிறார், ஒரு
பிள்ளையல்ல, உலகையே
பிள்ளையாகக் கொண்ட அந்த பெருந்தாயான அம்பாளின் நகில்களை எவ்விதம் தாமரை மொட்டினோடு
உவமைப்படுத்தி சொல்ல முடியும்? இது
நகைப்புக்குரியதாயிற்று அவருக்கு.
இளம் பெண்ணின்
கண்கள், கன்னிப்
பருவத்திடையிருபவளுக்கு மானையொத்த விழிகள் என்றால் அது சரியாக இருக்கலாம். ஆனால்
அவளை, மூத்தவளை, மூவா முகுந்தர்க்கும் மூத்தவளை, முதல் தேவர் மூவர்க்கும் மூத்தவளை அத்தனை பழையவளை, கண்கள் மானின் விழிகள் போல இருக்கின்றன என்று கூறுவது
எவ்விதம் சரியாகும்?
“ம்ருகாக்ஷி” என்கிறது சஹஸ்ரநாம ஸ்தோத்திரம். மானின் விழிகள் மருள
மருள இருக்கும். அது இப்படியும் அப்படியும் அசையும் போது ஒரு வித பயத்தோடு, எங்காவது பின்னால் தனைப் பிடிக்க ஏதேனும் ஆபத்து
வருமோ என்றெண்ணி பயந்தவாறு இருக்கும் இல்லையா? இளம் பெண்ணின் கண்கள், அவள் வீதியில் நடக்கும் போது அப்படி இருக்கலாம். அது
இயல்பு.
ஆனால் அன்னையோ, காருண்யத்தை அல்லவா விழிகளில் தேக்கி இருக்கிறாள்? அவளது பிள்ளைகளுக்கு தன் விழிகளின் கடைப் பார்வை
ஒன்றிலேயே அத்தனை துன்பங்களையும் போக்க விழைகிறாள் அல்லவா? அப்படி காருண்யமே நிறைந்திருக்கும் விழிகளை எப்படி
மானின் மருட்சியான விழிகளோடு ஒப்பிட்டார்கள்? என்று நகைப்பாக உள்ளது அவருக்கு.
சரி இது தான்
சிரிப்பாக இருக்கிறது என்றால், பிறவாத
அவளை ஒரு மலையரசனுக்கு மகள் என்று மலைமகள் என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பது
மிகையாகவே இருக்கிறது என்கிறார்.
இவளது தகைமையை
நாடி அறிய முற்படுவது கூட மிகையான செயலே என்கிறார்.
நிர்குணமாக, வடிவமற்ற, காலத்தைக் கடந்த, மாற்றங்கள் இல்லாத அந்த தூய உணர்வே அன்னையாக இங்கு
உருவகப்படுத்தி, உபாசிக்கப்படுகிறது.
க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் அது ஶஸ்த்ரங்களால் அழியாதது, அது நீரால் அழியாது, அது நெருப்பால் அழியாது, அது காற்றால் அழியாது, அது வெளிப்படாதது, அது சிந்தனைக்கு அப்பாற்பட்டது, அது செயல்களற்றது, அது நித்யமானது, சத்ய வஸ்து, இவ்வாறு அந்த ஆத்மாவை அறிவாயாக என்றார் இரண்டாவது
அத்யாயத்தில். அந்த ஆத்மா தான் தூய உணர்வு, அது சாக்த த்த்துவத்தில் அன்னையாக உருவகித்து
உபாசிக்கப்படுகிறது.
ஜீவன் முக்தி
அடைந்த ஒரு ஆத்ம ஞானியான பட்டர் பெருமான், இத்தனை நேரம் ஸ்துதிகள் செய்தாலும், சகுணமாக, அதாவது உருவத்தோடு வழிபட்டுக்கொண்டே இருப்பது
இறுதியல்ல, அதனின்று
மேற்சென்று, உருவம்
கடந்த ஞான மோன வெளியில் அவளது தூய உணர்வு என்ற உண்மையான நிலையில் அறிய வேண்டும்
என்பதற்காக, நிர்குணமாக
இருக்கும் அவளுக்கு ஏன் நகில்களின் வர்ணனையும், மானின் விழிகளின் வர்ணனையும், பின் அவள் பிறப்பு குறித்த ஆராய்ச்சியும்?
இவையெல்லாம்
ஆராய்ச்சி செய்வது நகைப்புக்கு உரியது என்று சொல்கிறார். அதே சமயம், இவளது தகைமையை நாடுவது மிகை என்றும் சொல்கிறார். ஏன்
மிகை என்றால், சகுணத்திலிருந்து
நிர்குணத்துக்கு உயர, தன்னைச்
சாதகன் தயார் படுத்திக்கொள்ளாமல் அவளது உண்மையான ஸ்வரூப ஞானத்தை அடைவது இயலாது
என்பதால், தகுதி
அடைந்து தகைமை அறிய வேண்டும் என்கிறார்.
“ப்ரஹ்மாண்யை, ப்ரஹ்மணே, பஹுரூபாயை, தத்வாதிகாயை, தத்வமர்த்த ஸ்வரூபிண்யை, நிர்த்வைதாயை, த்வைதவர்ஜிதாயை, அஜாயை” போன்ற நாமங்கள் சிந்திக்க அழகு.
.... கண்மணி
23/9/21
அபிராமி
அந்தாதி -- 95
விரும்பித்
தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித்
ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின்
களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர்
ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே (94)
அன்னையை
உள்ளது உள்ளபடி அவளது தூய உணர்வாகிய ஸ்வரூபத்தை அறிந்து, அதை அறியவென்றே விரும்பித் தொழும் அடியார்கள் நிலை
சொல்லப்படுகிறது.
ஆர்ஜவம்
என்றொரு குணம் சொல்லப்படுகிறது. அதாவது சொல்லைக் காத்தல். அப்படி ஒருவர் தான்
சொன்ன சொல்லைக் காத்தல் என்ற தவத்தை விடாது 12 வருடங்கள் செய்ய அவருக்கு வாக்பலிதம் உண்டாகும்
என்கிறது ஶாஸ்த்ரம். வாக்பலிதம் என்றால், அவர்கள் சொல்வது அப்படியே நடக்கும்.
இங்கு
அன்னையைத் தொழுவதில் இருந்து விலகாத மனத்தை உடைய உயர்ந்த மெய்ஞானம் அடைந்த ஜீவன்
முக்தராக இருக்கும் அன்னையின் தொண்டர், அல்லது அடியார், அவளை எண்ணும் போது உள்ளம் உருகி, ஊன் உருகி, விழி நீர்மல்கி, புளகாங்கிதம் அடைந்து ஆனந்தத்தின் எல்லையை அடைந்து, அதன் காரணமாக, தான் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வுகள் ஏதும் அற்று, அறிவிழந்த, வேற்றுமை அறிவிழந்த நிலையில் இருப்பர் என்கிறார்.
அப்படி அவளே
சிந்தை முழுதும் நிறைந்த அவர், சொன்னது
அப்படியே நடக்கும் என்று சொல்கிறார். அது தானே நடந்தது அவருக்கு? அநுபவம் சொல்கிறார்.
அவர் உல்ளம்
அவள் பால் இருந்து, உள்ளே
அவளது பேரொளியை அம்ருதமயமான ஸ்வரூபத்தைத் தரிசித்துக் கொண்டிருந்த அவரது வாய்
மட்டும் அன்றைய திதி என்னவென்று கேட்ட அரசனிடம், உள்ளே இருந்த பேரொளியை வெளியே எங்கும் இருப்பதாக
எண்ணி பௌர்ணமி என்று கூறவில்லையா?
அதை அன்னையும்
அவரது வாக்கை மெய்ப்பிக்க அநுக்ரஹம் செய்ய தனது தாடங்கத்தை வானில் இடவில்லையா? இதெல்லாம் தான் ஆதாரம், அவளது எண்ணத்தில் லயித்து இருக்கும் போது, உண்மையான உணர்வு மயமாக ஆன ஒரு அடியார், சொன்னதை மெய்ப்பிக்க அன்னையே மெனக்கெடுவாள்
என்பதற்கு.
இப்படியெல்லாம்
செய்வதால், செய்பவர்
உலகக் கண்களில் “பித்தர்” என்று அழைக்கப்படுவார்,. பட்டருக்கும் அதுவே நிகழ்ந்தது. ஆயினும், அப்படி பித்தர் என்ற அடைமொழி கிடைத்தாலும், அவளது சமயம் நல்வழியைத் தந்து, அவள் மீது தானே பித்துக் கொள்ளச் செய்கிறது? அதனால் அவள் சமயம் நன்றே என்று சொல்கிறார்.
அத்தனை
நாமங்களும் ஒருங்கே சொல்லும் சாதகன் இந்த நிலையை ஒவ்வொரு முறை அவளது நாமம்
சொல்லும் போதும் உணர்வான்.
.... கண்மணி
24/9/21
அபிராமி
அந்தாதி -- 96
நன்றே
வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும்
இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது
என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே (95)
தான் சரி
என்று கொண்டு கடைப்பிடிப்பதன் மீது ஒரு அசைக்க முடியாத பற்று வரும் அல்லவா? அது இப்போது வந்தது பட்டருக்கு. சென்ற பாடலில்
சொன்னார், என்
உணர்ச்சி குவியல்கள் என்னை பித்தன் என்று அடையாளம் காட்டி, அதற்கு காரணம் உன் சமயம் என்றாலும் கூட, அபிராமி, உன் சமயம் நன்றே என்றார்.
இப்போது
சொல்கிறார், நான்
எடுத்த இந்த என் வழி, அதாவது
உன் சமயத்தைப் பின்பற்றும் வழி, நன்மை
என்றாலும் சரி, தீமை
என்றாலும் சரி, அது
என்னால் முடிவு செய்யப்பட்டதல்ல. நான் உன்னையே பரம் என்று சரண் அடைந்தேன், நீ என்னை அடிமை கொண்டாய், அதன் பின், எனக்கு என்று ஒன்று தனியாக இல்லை. யான் எனது என்பதை
நீக்கிய பின், எல்லாம்
உனதே என்றாக்கி விட்டேன். அதனால், எனக்கு
உள்ளதெல்லாம் உனது என்று அளித்து விட்டேன்.
குணங்களில்
மிக உயர்ந்தவளாக இருக்கும் அம்பாளை குணக்குன்றே என்று அழைக்கிறார். குணமே இல்லை
என்று தானே நிர்குணமாக பார்க்க வேண்டும் அதற்கு முயல வேண்டும் என்றார்? பின் குணக்குன்றே என்கிறாரே என்றால், குணங்களைக் கடந்த அந்த நிலை, குணாதீத நிலை எனப்படும். அன்னிலையில், விருப்பு வெறுப்பு இருக்காது. அம்பாளுக்கு விருப்பு
வெறுப்பு கிடையாது. சகலரும் ஒன்றே, சகலமும் ஒன்றே. அதனால் அவள் குணகுன்று. குன்றின்
உச்சியில் நின்றுகொண்டு பார்த்தால் எல்லாமே ஒன்று போலத தானே தெரியும்? ஏற்றத்தாழ்வுகள் தெரியாதில்லையா?
அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே என்றது ஹிமாத்ரி என்ற அவளது
ரூபத்தைக் குறிப்பதாக இருக்கிறது.
என்ன தான்
நிர்குண உபாசனையை செய்ய வேண்டும் என்று சொன்னாலும், அன்னையின் வடிவங்கள் சிந்திக்க உகந்தவை. சித்தம்
சுத்தம் ஆக்கக்கூடியவை. அதை ஜீவன்முக்தராக இருக்கும் பட்டர் போன்றவர்கள் சொல்வது
தனிச்சிறப்பு.
அத்வைத
சித்தாந்தம் ஸ்தாபிக்க ஷண் மதங்கள் ஸ்தாபித்து, மடங்களும் நிறுவி அவற்றில் நாள் தவறாது
சந்த்ரமௌலீஸ்வரர் பூஜை முறைகள் வகுத்தாரே ஆச்சார்யார்! எதற்காக? பக்தியினால் தான் படிப்படியாக முன்னேற முடியும்
என்பதால். எண்ணற்ற உபாசனைகளை ஆச்சார்யார் ரசமான நடையில் சொல்லியிருக்கிறார். ஆனந்த
லஹரி, அம்பாளுக்கும், ஈஸ்வரனுக்கும், இன்னும் எத்தனையோ ஸ்தோத்திரங்கள் இயற்றினார். அத்தனையும் சகுண
உபாசனையைத் தான் சொல்வது போல இருக்கிறது. நாளடைவில் நிர்குண உபாசனைக்கு
இட்டுச்செல்லும். பின் உபாசிக்க ஒன்று தனியே இல்லை. அத்தானையும் ஒன்றே என்று
புலப்படும்.
மனதுக்கு
உருவம் சட்டென்று பிடிபட்டு, தன்னோடு
இணைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். அதற்குத் தான் முதல் படியாக உருவங்கள் பற்றிய
வர்ணனை.
இங்கு பட்டர்
பெருமானும், அபிராமியை
அவர் எவ்வாறெல்லாம் அநுபவித்தாரோ அவ்வாறெல்லாம் நமக்கும் காட்டிக்கொண்டே
வருகிறார்.
சக்தியின்
வடிவங்கள் மனதில் இருக்கட்டும். சத்தியம் நன்கு ஒளிரட்டும்
.... கண்மணி
25/9/21
அபிராமி
அந்தாதி -- 97
கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச்
சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும்
தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே (96)
“ஒரு
நாமம் ஓர் உர்வம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திருநாமம்
பாடித் தெள்ளேணம் கொட்டாமோ”
என்ற திருவாசக
மொழி நினைவுக்கு வருகிறது. உருவத்துக்குள் அகப்படாத அந்த பேரொளியை, சாக்தம் என்று சொல்லப்படும் சக்திவழிபாட்டில், அம்பாளாக உருவகப்படுத்தி, வெவ்வேறு வடிவங்களில் கண்டு இன்புற்றிருக்கிறார்கள்
பட்டர் பெருமான் போன்ற ஞானிகள்.
பழைய
இருப்பிடமான இதயத்தாமரையில் வந்திருந்தாள் என்று அம்பாளைச் சொன்னார் 90ம் பாடலில். இங்கும் அல்லியிலும் தாமரையிலும் கோயில்
கொள்ளும் கோமள ரூபிணியைத் தொழுவதனால் கிட்டும் பலன்கள் பற்றி சொல்கிறார்.
அல்லி இரவில்
சந்திரனைக் கண்டதும் மலரும். தாமரை பகலில் சூரியனைக் கண்டதும் மலரும். முன்னே
சொன்னார், சூரியனுக்கும்
சந்திரனுக்கும் நடுவிருப்பாள் என்று. அதாவது காலங்கள் மூன்றிலும் நிறைந்து
இருப்பாள். காலங்கள் கடந்த, காலாதீத
ஸ்வரூபம் அவள். அதைக் குறிக்க, குறியீடுகள்
தான் பகலுக்குத் தாமரையும், இரவுக்கு
அல்லியும்.
வல்லி என்றால்
கொடி. கோமள வல்லி என்றால், அழகு
மிகுந்த கொடி போன்ற வடிவினள். யாமள வல்லி என்றும் சொல்கிறார். யாமளம் என்ற ரூபம்
ஈசனுடன் இணைந்திருக்கும் அர்த்தநாரி ரூபத்தைக் குறிக்கும் சொல்.
ஏதமிலாள்
என்றால் இணையற்றவள் என்று பொருள். நிறைய முறை இதைச் சிந்தித்து இருக்கிறோம். இணை ஒன்று
இருக்க இரண்டு பொருள் இருந்து ஒப்பீடு செய்ய வேண்டும் என்று. அப்படி இல்லாததால்
இணையற்றவள். “அப்ரமேயா, ஸ்வப்ரகாசா, மனோவாசாமகோசரா, நிர்த்வந்த்வா” என்றெல்லாம் அவளது நிர்குணங்கள் நன்கு
உணர்த்தப்படுகின்றன ஸஹஸ்ரநாமங்களில்.
எழுதரிய சாமள
மேனி அவள். சாமள என்றால் நல்ல கரிய நிறத்தவள். கருப்பு என்றால் ஒரு வெறுப்புண்டு
பொதுவாக. ஆனால், அம்பாள்
நமக்கெல்லாம் அந்த வெறுப்பு போக வேண்டும் என்பதாலோ என்னவோ தன்னையே கரிய
நிறத்தவளாகக் காட்டிக்கொள்கிறாள். அழகிய கருமையாம், அதை ஓவியமாக எழுதவும் முடியாதாம். அப்படிப்பட்ட ஒரு
நிறத்தவளாக, வடிவினளாக
இருக்கிறாள்.
அனைத்து
கலைகளுக்கும் இருப்பிடம் அவள். சகல கலா மயில் என்கிறார். மயில் போன்று அழகானவளாக
இருக்கிறாள்.
இப்படியெல்லாம்
எல்லாவற்றிலும் உயர்வான இரண்டற்ற அந்த ஒன்றான பரம்பொருள் ஸ்வரூபமான அம்பாளை, தன்னால் இயன்ற மட்டும் தொழுபவர்களுக்கு என்ன
கிடைக்கும்?
எழுபாருக்கும்
அதிபரே என்கிறார். எழுபார் என்றால் ஏழு உலகம் என்றும் கொள்ளலாம், அவர்கள் எழும், அதாவது செல்லும் இடங்களுகெல்லாம் என்றும் கொள்ளலாம்.
சென்ற இடத்திலெல்லாம் சிறப்புடையார் என்று சொல்கிறார்.
அம்பாளின்
கருணையும் கடாக்ஷமும் கிடைத்தபின் காளிதாஸர் எப்படி இருந்தார்? அதற்கு முன் எப்படி இருந்தார்? மூகர் பஞ்சதஸி எழுதும் முன் எப்படி இருந்தார்? அவளது அநுக்ரஹத்துக்குப் பின் எப்படி இருந்தார்? மஹான்கள் பலரின் பூர்வாஶ்ரமங்கள் பார்த்தால்
அம்பாளின் அநுக்ரஹம் அவர்களுக்கு எப்படியெல்லாம் பெரிய இடங்களை அளித்திருக்கிறது
என்பது தெரியும் இல்லையா? அதனால்
தான் சொல்கிறார், எழுபாருக்கும்
அதிபர் என்று.
அதிபர்
என்றால் ஆளுமை நிறைந்தவராக இருப்பார். ஒரு சபையில் அவர் சொல்லுக்கே மதிப்பு
இருக்கும் என்று பொருள்.
“வாக்வாதினி, ஸரஸ்வதி, ஸர்வாதாரா” போன்ற நாமங்கள் சிந்திக்க உகந்தவை.
.... கண்மணி
26/09/21
அபிராமி
அந்தாதி -- 98
ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன்
புராரி, முராரி பொதியமுனி,
காதிப்
பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த
புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே (97)
நிகரற்ற
அன்னையின் பெருமைகளை நன்கு உணர்ந்து அவளைத் தொழும் அடியார்கள் செல்லும் இடமெல்லாம்
சிறப்பு பெறுவார்கள் என்றார் சென்ற பாடலில்.
அப்படி
சிறப்பு பெற்றவர்கள் சிலரையாவது சொன்னால் தானே அந்தச் சிறப்பு எத்தகையது என்று ஒரு
பக்தன் உணர முடியும்?
அன்னையைத்
தொழு, அவள்
அனைத்தும் தருவாள் என்று மட்டும் சொன்னால் போதாது. இப்போதுள்ள குழந்தைகள்
எல்லாவற்றின் பின்னும் உள்ள விஞ்ஞான விளக்கங்கள் கேட்டுத்தானே நம் பழக்க
வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றனர். அது மட்டும் அல்ல, ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லும் போது அதை
அநுபவித்தவர்களைப்பற்றியும் சொன்னால் தான் அவ்விஷயத்தின் பெருமை நன்கு விளங்கும்
இல்லையா?
சில சமயம், ஒரு பொருளை அறிமுகப்படுத்த பெரிய நடிகர், நடிகைகளை விட்டு அதன் பெருமை சொல்லச்சொல்வார்கள். அது, அந்த நடிகரோ நடிகையோ பலரின் ப்ரமிப்புக்கு
ஆளாகியிருப்பார்கள். உண்மையில், அந்த
பொருள் அவர்களை விடவும் உயர்ந்ததாகக் கூட இருக்கும். ஆனாலும் தெரிந்த உயரம் கொண்டு
தெரியாத உயரம் அறிவது போலத்தான் இது.
அன்னையை
யாரெல்லாம் தொழுது போற்றுவர் என்று தெரிந்தால், அவர்கள் போல் நாமும் போற்றித் தொழுது அத்தகைய உயர்ந்த
சுகங்கள்/நிலைகள் அடையலாம் என்றும் தெரியும்.
முதலில்
ஆதித்தன். அதிதியின் புத்திரன் அதனால் ஆதித்தன். ஆதித்தன் என்பது சூரியன். உலகையே
ஒளிக்கடலால் நிறைக்கும் சூரியன் எப்போதுமே ப்ரமிப்புக்கு உரியவன். அவனது கிரணங்கள்
இந்த உலகின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. அதனால், சூரியனுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது.
ஸர்வதேவாத்மகோ
ஹ்யேஷ தேஜஸ்வீ ரஶ்மிபாவன: |
ஏஷ தேவாஸுர
கணான் லோகான் பாதி கபஸ்திபி: ||
என்று ஆதித்ய
ஹ்ருதயம் என்னும் அகஸ்த்யர் சொன்ன ஸ்தோத்திரம் சூர்யனைப் புகழ்கிறது. அனைத்து
தேவர்களும் சூரியனுக்குள் அடங்குவர், ஒளிபொருந்தியவற்றுள் எல்லாம் ஒளி பொருந்தியவர், ஸ்வயம் ப்ரகாசமானவர், அனைத்து உலகங்களையும், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தன் கிரணங்கள் மூலம்
ஒளி தருபவர்.
இத்தனை
பெருமைகள் உள்ள சூரியனுக்கு, இத்தனை
சக்தி எங்கிருந்து வந்தது? அன்னையின்
பேரருளால் என்கிறார் பட்டர் பெருமான்.
சூரியன்
எத்தனை முக்கியமோ அப்படியே சந்திரனுக்கும் முக்கியத்துவம் உண்டு. அவர் தன்
குளிர்ந்த கிரணங்களால், மனங்களை
நிறைக்கிறார். மனக்காரகன் சந்திரன் என்று சொல்வதுண்டு. சந்திரனுக்கு சூரியனின்
ஒளியின் ப்ரதிபிம்பம் கிடைத்து அதன் மூலம் அவர் குளிர்ந்த தண்ணிலவாக இருப்பதற்கும்
அம்பாளின் பேராற்றல் தான் காரணம். பேராற்றலை அவருக்கு அவளைத் தொழுத போது தந்த
ப்ரசாதம்.
ஒளியின்
மூன்றாவது ரூபம், அக்னி.
அக்னி பகவான் தேவனாக இருக்கிறார். பஞ்ச பூதங்களுள் ஒருவர். இந்த உலகம் பஞ்ச
பூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்கள் அம்பாளின் கருணையினால், சக்தியைப் பெற்று இந்த உலக இயக்கத்துக்கு காரணமாக
இருக்கின்றன. ஆகையால் அக்னி தேவர் தொழுது பயனுற்றார் என்றார்.
தேவனாகிய
அக்னி தேவனைச் சொன்னதும் தேவர் கோன் இந்திரன், அவருக்கு பொருள் தரும் குபேரன் இவர்களும் பட்டர்
பெருமானின் நினைவுக்கு வருகிறார்கள்.
போதிற் பிரமன்
என்றது, தாமரைப்பூவின்
மீது அமர்ந்து இருக்கும் பிரமன் என்பது. புரத்தை, திரிபுரத்தை அழித்ததால் புராரி, முரன் என்ற அசுரனை அழித்ததால் முராரி. புராரி
ஈசனையும், முராரி
மஹாவிஷ்ணுவையும் குறிக்கும். முதல் தேவர் மூவர்க்கும் மூத்தவள் என்றார் அல்லவா? மூத்தவளான அம்பாளின் அருளைத் தொழுது பெற்றார்கள்
என்பதும் சரிதானே!
அகஸ்த்ய
முனிவரை பொதிய முனி என்றார். புராணக்கதைகளைக் காணும் போது, ஈசனுக்கும் அம்மைக்கும் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய
ஒருவராக அவரைப்பார்க்கத் தோன்றுகிறது. முக்கிய நிகழ்வான பார்வதி பரமேஸ்வரர்
திருமணத்தின் போது சகல லோகங்களும் ஒரு பக்கம் குவிய, அகஸ்தியரின் தவ வலிமையை நன்கு உணர்ந்த அம்மையும்
அப்பனும் தென்கோடிக்கு சென்று பாரம் தாங்கப் பணித்தார்கள் இல்லையா? அப்படி தாங்குவது என்பது அவரது சொந்த திறமையல்ல. அது
அன்னையின் பேரருள். அப்பேரருள் அவரது அயராத தவத்தால் வந்தது. லலிதா நவரத்ன மாலை
இயற்றிய அவருக்கு அம்பாளின் அன்பு கிடைத்தது என்று சொன்னதும் மிகப்பொருத்தமாகவே
இருக்கிறது.
அடுத்து, அன்னை கருணை செய்து, அன்பை பொழிந்து தன் சக்தியெல்லாம் திரட்டிக் கொடுத்த
வேலைக்கொண்டு எப்பேற்பட்ட எதிரிப்படையையும் வெல்லும் வல்லமை பெற்ற குமரக்கடவுளைச்
சொல்லி, அன்னையின்
அன்பின் உருவமான கணபதியையும் சொன்னார்.
அன்னை, ஈசனிடம் எடுத்துச் சொல்லி மீண்டும் உயிர்ப்பித்த மன்மதனும்
அவளுக்கு ஒரு மகனே என்னும் அளவில், இவர்கள் மூவரையும் ஒரு சேர வைத்தார் போலுள்ளது.
இன்னும்
யாரெல்லாம் என்று கேட்க ஆவல் மிகும். ஆனால், உலகன்னையைத் தொழுது துய்த்து இன்புற்று உயர்ந்தவர்கள்
பட்டியல் போடத்தான் முடியுமா? அதனால்
தான் சாதித்த புண்ணியர் எண்ணிலர் என்று சொல்லி விட்டார். இப்போது நாம் etc.,
என்கிறோமே அப்படி.
சாதித்த
புண்ணியர் என்றால், அன்னையை
உபாசித்து அவளது அருளைப்பெற்ற சாதனையைச் செய்த புண்ணியர். இப்படி அத்தனை பேரும்
போற்றுகின்றனர். தையலையே என்றால் அலங்காரம் உடையவள் என்று பொருள். அன்னையின்
பரந்து விரிந்த குடும்பத்தை அறிமுகப்படுத்துவதில் அவளது பிள்ளைக்கு பெரும் பெருமை
தான்.
.... கண்மணி
27/9/21
அபிராமி
அந்தாதி -- 99
தைவந்து நின்
அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?--
மெய் வந்த
நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த
நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே (98)
யாரெல்லாம்
அன்னையைப் போற்றுகின்றனர் என்று ஒரு முன்னோட்டம் தந்தார். முன்னோட்டம் என்று
சொன்னது எண்ணிலர் என்று வேறு சொன்னதால். இன்னும் ஏராளமான பேர்களை சொல்ல முடியாமல், ஒரு முன்னோட்டம் காட்டிச்சென்றார் பட்டர் பெருமான்.
சரி இத்தனை
பேர்கள் அன்னையை வழிபட்டு அருள் பெற்றார்கள் என்றாலும், அவள் யாரைத் தேர்ந்தெடுத்து எந்த மனத்தாமரையில்
குடியிருப்பாள்? அவளது
தேர்வு எப்படி இருக்கும்? முன்னரே
பல இடங்களில் சொல்லிய போதும், திரும்ப
திரும்ப சொல்வது அடியார்களின் புரிதலுக்கும், அவர்களின் மனதூய்மைக்காகவும் தான்.
மெய் வந்த
நெஞ்சில் தான் அவள் குடியிருப்பாள் என்கிறார். பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி
என்றார் மாணிக்கவாசகர், போற்றிப்புகழ்ந்திருந்து
பொய் கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே என்றும் சொன்னார்.
இறைவன் பொய்யான நெஞ்சில் குடியிருக்க முடியாது. சாதகனின் உழைப்புக்கு ஏற்ப, இறையின் கருணை அந்த சாதகனைத் தகுதியுடையவனாக்கி, அதன் பின் அவன் உள்ளத்தில் வந்தமர்ந்து, அவனை மீண்டும் இங்கு வந்து பிறவாத பெருவரமும் தரும். இதில் ஈசனுக்கு சொல்வது, தேவிக்கு சொல்வது என்று வேறுபாடுகள் இல்லை. தூய
உணர்வாகிய அந்த பரம்பொருள் தான் ஒரு வகையில் ஈசனாக புகழப்படுகிறது, அது சைவம் என்பது, ஈஸ்வரியாக புகழப்படுகிறது அது சாக்தம் எனப்படுகிறது.
இந்த பிரிவுகளெல்லாம் நம் மனதுக்குத் தான். மனம் ஏதாவது ஒரு பிடிமானத்துக்கு
ஏங்குகிறது. அதனால் தான் ஆதி சங்கரர் ஆறு விதமான வழிபாட்டு முறைகளை நிறுவி, இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து
மனத்தூய்மைக்குப் பாடுபடுங்கள் என்றார்.
இங்கும்
பட்டர் பெருமான் கூறுவது, விரகர்
தங்கள் பொய்வந்த நெஞ்சில் புக மாட்டாள் என்று தான். பொய் என்பது மனத்தின் மாசுகள்.
மனமாசுகள் தீய குணங்களைக் கொண்டுவரும். தீய குணங்கள் மனதில் ஒளிரும் இறையுணர்வை
அநுபவிக்க விடாது. அதனால், அன்னையின்
இருப்பு அப்படிப்பட்ட விரகர்களுக்குப் புலப்படாது என்பது கருத்து.
பூங்குயில்
போன்ற அம்பிகையின் பதியான சங்கரருக்கும் அவளுக்கும் நடந்த சிறு ஊடலின் போது, அவளைச் சமாதானம் செய்ய அவளது திருவடியைப் பற்றினார்
ஈசன் என்றொரு கதை சொல்வதுண்டு. பொதுவாக, ஈசனது கரங்களில் அக்னி எப்போதும் இருக்கும். அதே போல
அவரது தலையில் கங்கையும் இருப்பாள். அன்னையை சமாதானப் படுத்தும் அந்த வேளை, கைகள் சூடாக இருந்தால் அவளது திருவடிகள் நோகுமே
என்பதால் அக்னிக்கு விடையும், சென்னியில்
அவளது பத்மபாதத்தை சூடியிருக்கும்போது அங்கு கங்கை இருந்தால் அவளை
சமாதானப்படுத்துவது இயலாது என்பதால், அவ்விரண்டும் சிறிது நேரம் ஈசனிடமிருந்து நீங்கின
என்று சொல்வதுண்டு.
அதனால்
அன்னையிடமே கேட்கிறார், அம்மா, உன்னடித்தாமரைகளை தலையில் சூடிய சமயத்தில் அரனாரின்
கையில் இருந்த தீயும், தலையில்
இருந்த ஆறும் போனது எங்கே என்று!!
ஈசன் கரத்தில்
அக்னி, அழித்தல்
தத்துவத்தைக் குறிக்கும். அதே சமயம், கங்கை அருளல் தத்துவத்தைக் குறிக்கும். அழிக்க
வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், ஊடலுக்குப் பின் சமாதானம் நடந்து கொண்டிருக்கிறது
அம்பாளிடம். அருளல் தேவையில்லை. சகல உயிர்களுக்கும் அருளும் வல்லமை படைத்தவள்
அருகிலேயே இருப்பதால். அதனால் அவையிரண்டும் காணாது போனதுவோ என்று கேட்டு
வியக்கிறார் பட்டர் பெருமான்.
ஆச்சார்யரும்
அதியற்புதமாக, அன்னையின்
அருளை நாடித் தொழும் அடியவர்களுக்கு அவள் செய்யும் கருணையை, சுத்தமான மனதுடன் செய்யும் பூஜைக்கு என்ன தருகிறாள்
என்பதும் சொல்கிறார், சௌந்தர்ய
லஹரியில் 22வது
பாடலில்.
உன்
அடியவனிடத்தில் கருணைமிக்க பார்வையை செலுத்து அம்மா, என்று யார் ஒருவன் நீ காட்டிய வழியில் செல்கிறானோ? அவன் பொருட்டு அந்த நொடியிலேயே உன் திருவடி மலர்களில்
நிஜ சாயுஜ்ய பதவி தருகிறாயே!. எப்படிப்பட்ட திருவடி மலர்கள் தெரியுமா? ப்ரஹ்மா, விஷ்ணு, இந்திரன், முதலியவர்களின் கிரீடங்களின் ஒளியால் மங்கள நீராஜனம்
செய்யப்பட்ட திருவடி மலர்கள் அவை என்கிறார்.
இங்கு அம்பாளின்
திருவடி மலர்களின் மஹிமை, அவளது
கருணையைப் பெறும் தகுதி அனைத்தும் சிந்திக்க தகுந்தவை.
“புண்யலப்யா, புண்யஶ்ரவண கீர்த்தனா, பக்தநிதி:” போன்றவை சிந்திக்க உகந்தவை
.... கண்மணி
28/9/21
அபிராமி
அந்தாதி -- 100
குயிலாய்
இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய்
இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய்
இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு
அன்று இமவான் அளித்த கனங்குழையே (99)
அன்னை
சுத்தமான மனதில் தான் வந்துதிப்பாள் என்பது சொன்னார். பொய்யான நெஞ்சங்களில் அவள்
விளங்க மாட்டாள் என்பதும் சொன்னார்.
அப்படி
சாதகர்களுக்கு விளங்கும் அன்னையின் விசேஷ ரூபங்களை எண்ணிப்பார்க்கிறார்.
கனத்த
"குழை"என்ற திருவாபரணத்தைக் காதுகளில் அணிந்திருக்கும் அன்னையை, ஒரு சமயம், கயிலாயரான ஈசனுக்கு இமயமலையின் அரசனான இமவான்
அளித்தார். அவரது மகளாக அன்னை அவதரித்து இருந்த சமயம், ஈசனுக்கு அவளை மணமுடித்துக்கொடுத்தார் இமவான்.
அவள்
எப்படிப்பட்டவள் என்று சொல்கிறார்.
குயிலாய்
இருக்கிறாள். கடம்பவனத்தின் உள்ளே. கடம்ப வனம் என்பது ஸ்ரீபுரத்தின் வர்ணனையில்
சொல்லப்பட்டிருக்கிறது. சௌந்தர்ய லஹரியில், ஶ்யாமளா தண்டகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அம்பாளின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள கடம்பாடவி என்று. கடம்ப அடவி என்றால். கடம்ப
மரங்களால் ஆன சிறு வனப்பகுதி. அதன் நடுவே தான் அம்பாள் கொலுவிருக்கிறாள்.
இசையினால்
ப்ரீதி அடைபவள் அம்பாள். ஸாமகானப்ரியா அவள். நாமபாராயணப் ப்ரியாவும் கூட. இசைக்கு
நல்ல சாரீரம் வேண்டும். அதற்கு இயற்கையின் உவமை குயில் தான். குயில் போன்று குரல்
என்று தான் சொல்கிறோம். அந்த குயிலாக இருக்கிறாள். அதாவது அம்பாள் இசையரசியாக
இருக்கிறாள் கடம்ப வனத்திடை.
குயிலாக
இருந்து குரலின் பெருமை சொன்னால் போதுமா? நளினமான நடையழகு, உடலழகு சொல்ல வேண்டாமா? அதற்கும் இயற்கையில் மயில் தான் உதாரணம். மயில் போன்ற
அழகு, ஒயிலான
நடை இவற்றை அழகுக்கு உதாரணமாக சொல்கிறோம். அம்பாள் கோல மயிலாக, அதாவது அழகிய மயிலாக இமாசலத்தில் இருக்கிறாளாம்.
ஈசனுடன் இருக்கும் போது அவளது அழகு பலமடங்கு வெளிப்படுவது இயற்கை தானே!
விசும்பில் வந்து
உதித்த வெயிலாய் இருக்கிறாள் என்கிறார். விசும்பு என்றால் மேகங்கள், மேகங்களின் மீது வெயில் விழும் போது அவை ஒரு அழகிய
வெள்ளி போன்று பளபளக்கும் ஒளிக்கற்றைகளால் சூழப்பட்டு இருகும். Silver
Lining என்று சொல்வார்கள். அப்படி, ஒளிக்கற்றையாக மேகக்கூட்டங்களில் ஊடுருவி இருக்கிறாள்
என்கிறார்.
அறியாமை மேகம்
மூடியிருக்கும் மனதுக்கு, அவள்
ஒரு தெளிவு தரும் வெளிச்சமாக, அறிவு
ரூபமாக இருக்கிறாள் என்று பொருள் கொள்வது சிறப்பாக இருக்கும்.
கமலத்தின்
மீது அன்னம் என்று சொல்கிறார். கமலம் என்பது ஆன்ம மலர்ச்சியின் குறியீடாக சொல்லப்படுகிறது.
அன்னப்பறவை, நல்லது
ஏற்று அல்லது களையும் தன்மை கொண்டது. ஆன்மீகத்தின் முழு மலர்ச்சி அடைந்து தூய
பரம்பொருளே சத்யமான வஸ்து, மற்றவையனைத்தும்
உண்மையில் இருப்பே இல்லாதவை என்றுணர்ந்த ஞான நிலையை பரமஹம்ஸ நிலை என்று
சொல்கிறார்கள்.
முதலில்
இதிரியங்களுக்கு விருந்தாக இருக்கும் அம்பாள், நல்ல ஒலிக்கும் நல்ல அழகுக்கும் உவமையாக இருந்து, பின் அகம் தெளிர்விக்கும் ஒளியாக இருந்து, தெளிந்த அகத்தில் தூய உணர்வை அறியும் ஜீவன் முக்தியை
தரும் அவளது பெருங்கருணைப் பேராற்றலைச் சொல்லும் அழகை என்னவென்று சொல்வது?
இப்படி
அனைத்தும் அருளும் அன்னை ஈசனுக்கு இமவானால் அளிக்கப்பட்டவள் என்றும் சொல்கிறார்.
முக்திப்ரதாயினி, மோக்ஷப்ரதாயினி, ஹம்ஸின்யை, கமலாஸனஸ்தாயை போன்றவை சிந்திக்கத் தக்க நாமங்கள்.
.... கண்மணி
29/9/21
அபிராமி
அந்தாதி -- 101
குழையைத்
தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத
திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு
திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப்
பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!(100)
குயிலாய், மயிலாய், வெயிலாய், பரமஹம்ஸ ஸ்வரூபமாக அம்பாளைப் பார்த்தார்.
மேன்மையானவற்றுள் எல்லாம் மேன்மையானவற்றைச் சிந்தித்து அதிலெல்லாம்
அம்பாளைப்பார்ப்பது அவளது விபூதியைத் த்யானம் செய்வது ஆகும். க்ருஷ்ணர், ஒரு அத்யாயம் முழுவதிலும் தான் எப்படி
எல்லாவற்றுள்ளும் இருக்கிறேன் என்பதை சொல்கிறார். எல்லா விஷயங்களிலும் உள்ள
உயர்வானதென்று நாம் அறிந்தவற்றை சொல்லிக்கொண்டு வருவார். அதுபோல, அன்னையை நினைக்கும் போது பட்டருக்கும் உயர்ந்த
விஷயங்களாக உவமைகள் வருகின்றன.
அம்பாள் அவரது
உள்ளத்தில் எப்போதும் உதிக்கின்றாளாம். எப்படி? மான் போன்ற விழிகளுடன், அழகிய வெண்முத்துப்பற்கள் சிந்தும் புன்னகையுடன், வேரியம்பாணங்களுடன். அழகிய மலரம்புகள். எப்படிப்பட்ட
மலரம்புகள்? பொருதிறல்
மலரம்புகள். பொருதிறல் என்றால் மனதை ஈர்க்கும் இச்சையைத் தூண்டும் தேனைச்சொரியும்
மலரம்புகள். அதாவது அன்றலர்ந்த புதுமலர்கணைகள். கரும்பு வில் கையில்.
திருநெடுந்தோளுடன், மூங்கிலைப்போன்ற அழகிய நெடுந்தோள்கள். வேயுறு தோளிப் பங்கன்
என்று அத்தனைப் பாடியது அவளது மூங்கிலைப்போன்ற தோள்களைக்குறித்தே. வேய் என்றால்
மூங்கில்.
இவையெல்லாம்
இருந்தால், இருமாந்து
இருக்கிறாளா தன் அழகால் என்றால், இல்லையாம்.
குழைந்து போயிருக்கிறாள். ஏன் குழைந்தாள். அவள் பதியின் அருகாமையினால் குழைந்து
போய் இருக்கிறாளாம்.
எத்தனை தான்
நிர்குணமாக அன்னையை எண்ண வேண்டும் என்று பட்டர் பெருமானே சொன்ன போதும், மனக்கண் முன் அவளது இப்படிப்பட்ட, ஒரு அழகான தோற்றத்தைத்தான் அவர் பெரும்பாலும்
பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். உருவங்கள் நம் மனதின் பிடிப்புக்குத் தான்
என்றாலும், அவ்வுருவங்களில், நிறைய தத்துவங்களை சாஸ்த்ரங்கள் சொல்கின்றன.
அதனால் தான்
எப்போது அன்னையைப் பார்த்தாலும் அவள் கரங்களில் கரும்பு வில்லும்
சொல்லப்படுகின்றன. பாசமும் அங்குசமும் கூட சொல்லப்படுவது அதிகம்.
மனம் ஆசை
வயப்பட்டது. ஆசைகள் அவள் வயப்பட்டதாக இருக்கும் வரை அது எத்தனை பெரிய ஆசையானாலும்
நம்மை பாதிக்காது. இச்சையைத் தூண்டும் வேலையைத் தந்தது மன்மதனுக்குத் தான். பின்
ஏன் அம்பாள் அந்த கரும்பையும் வில்லையும் தான் வைத்திருக்க வேண்டும்?
மன்மதனின்
வேலை ஆசையைத் தூண்டுவது. அவ்வாசை உலகின் பால் ஈர்க்கவைக்கும். அம்பாளின் வேலை, அதே ஆசையை அவள் பால் ஈர்க்க வைக்கும். அப்படி என்றால்
அம்பாள் மன்மதன் போல் ஒரு தேவன் ஆகி விடுவாளா என்றால், அப்படி அல்ல. அம்பாளுக்குக் கட்டுப்பட்டு தான்
அனைத்துமே நடக்கின்றன. முக்கியமான இயக்கத்துக்கு காரணமான காமம் அம்பாளின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தால், பின்
சாதகனுக்கு பிறழ்வே இருக்காது இல்லையா? அது தான் அம்பாள் கரும்பு வில்லும், அம்புகளும் வைத்திருக்கும் ரகசியம். பஞ்ச பாணி
என்கிறோம் அவளை. பஞ்ச பாணங்கள் ஐந்து இந்த்ரியங்களையும் கட்டுக்குள் வைக்கும்.
இவ்விதமாக
அன்னையின் உருவம் அவரது உள்ளத்தில் சதா ஒளிர்ந்து கொண்டிருந்தது நமக்கும் அவளது
அந்தர்முக தரிசனம் கிடைக்க ஆவலைத் தூண்டுகிறது இல்லையா?
அது தான்
நூற்பயனாகவும் சொல்கிறார் பட்டர் பெருமான்.
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
எப்படி
அவளைப்பார்த்தால் தீங்கில்லை என்கிறார் என்று பார்ப்போம். தாயாய், மிக ஆனந்தம் தரும் கொடிபோன்றவளாய், இந்த சகல ப்ரபஞ்சங்களையும் படைத்தவளாய், செம்மையான மாதுளம்பூவொத்த நிறத்தவளாய், படைத்த அத்தனையினுள்ளும் இருந்து காத்தவளாய், ஐந்து மலர்க்கணைகளுடன் கூடிய கரும்பு வில்லும், பாசமும் அங்குசமும் வைத்திருப்பவளாய், சூரிய, சந்திர, அக்னியை மூன்று கண்களாக கொண்டவளாய், அன்னையைக் கண்டு, சகலமும் அவளே என்று தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை
என்கிறார்.
தீங்கு என்பது, இங்கு மீண்டும் பிறத்தலே. பிறவாமை வேண்டின், இறவாமை வேண்டுவோம். இறவாமை வேண்டின், பிறவாமை உணர்வோம். அது அவளது அருள் இருந்தால் மட்டுமே
கிட்டும் என்பது சத்தியம்.
அன்னையின் சரண
கமலங்களில் நம் சிந்தையை வைத்து, அவள்
அருளை நாடுவோம்.
********************************************
இந்த அரிய பணி, அவள் நிறைவேற்றிக்கொண்ட அற்புதம் என்றால் அது
மிகையில்லை. அன்றி, அவள்
குறித்து சிந்திக்கவோ, சிந்தித்ததை
எழுத்தாக்கவோ, யாருக்கு
சாமர்த்தியம் இருக்கும்? அவள்
ஒருவளுக்கே அது சாத்யம்.
இவ்வுரைகளில்
ஏதேனும் குறையிருப்பின் அது இந்த உபாதியைச் சேரும். நிறையென்று சிறிதிருந்தாலும்
அது அன்னையின் பாதார விந்தகளையும், அவளை எனக்கு உணர்த்திய என் குருநாதரையும் சேரும்.
ஸ்ரீகுருப்யோ
நம:
ஶிவசக்த்யைக்யாயை
நம: ஸ்ரீலலிதாம்பிகாயை நம:
.... கண்மணி
30/9/21
Comments
Post a Comment