அபிராமி அந்தாதி -- 9
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே (8)
ஒவ்வொரு முறை அம்பிகையை குறிப்பிடும் போதும், அவளை சிந்தூர வண்ணத்தினள் என்றே அவள் அழகை அழகின் அமுதத்தை பருகுகிறார் அபிராமி பட்டர். சிந்தூர வண்ணத்து சுந்தரியான அவள் யாராம்? என் தந்தையின் துணைவி என்று சொல்கிறார். உலகத்தின் தாயும் தந்தையும் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் தானே!
காமேஸ்வரன் என்று ஈஸ்வரனை சொல்கிறோம். காமத்தை ஆண்டவர். காமத்தை ஜெயித்தவர். அவருடைய பத்னியான அம்பாள் பேரழகு கொண்டவள். அழகு அவள் கருணையின் ப்ரதிபலிப்பாகவே இருக்கிறது. என் பாசத்தொடரை வந்து அரி என்று அம்பாளை வேண்டுகிறார். அன்னையின் கருணையினால் தான் இந்த பிறவி தொடரும் மஹா மாயையில் இருந்து விடுபட முடியும்.
பசுவாக இருக்கும் ஜீவன், பந்தமாகிய பாசத்தை அறுக்க பதியாகிய ஈசனை அடைய வேண்டும் என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. பாசத்தொடர் என்பது பந்தங்கள். நமக்கு இந்த உலகில், உயிரில், உறவுகளில் உடைமைகளில் இருக்கும் அபிமானங்கள். இவை இல்லாவிட்டால் நமக்கு ஆனந்தம் இல்லை என்னும் தவறான, மாயையினால் தூண்டப்பட்ட எண்ணங்கள். அதை அழிக்க, அவளிடம் சரணடைந்து, அவள் துணையை நாடுகிறார்.
அவள் தோற்றமோ துர்க்கையின் வடிவாக, மகிஷாசுரன் என்ற அசுரனைக் கொன்று அவன் தலையின் மீது கால் பதித்தபடி, அநீதியை ஜெயித்த தர்மத்தின் உருவமாக, ஆழ்ந்த அமைதியான அதே சமயம், ஒரு பெரும் வீரச்செயலை அநாயாசமாக செய்தவளாக இருக்கிறாள். மகிஷன் அந்தக்கரணத்தில் ஏற்பட்ட அகந்தையை அழித்து, அவனுக்கு எமனாக இருந்ததால், அவள் அந்தரி என்றார்.
இங்கு முக்கியம்மாகக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மகிடன், அதாவது அஹங்காரம் முதலிய துர்க்குணங்கள் தலை தூக்கும் போதெல்லாம், ஞானஸ்வரூபிணியான அந்த அம்பாளே உள் நின்று அந்த துர்க்குணங்களை அழிக்கிறாள்.
அந்தரங்கமாக, உள்ளே அவள் நின்று இந்த வேல செய்வதால் கூட அந்தரி என்று சொல்லலாம். “அந்தர்முக ஸமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா” என்று அம்பாளின் நாமம். உள்ளே மிக எளிதாக அவளை ஆராதனம் பண்ணலாம். வெளியே கடினம் என்னும் பொருளில். உள்ளே சுலபம் என்றால், தன்னில் தான் நிலைத்து இருக்கும், வெளி விவகாரங்களில் அதிகம் ஈடுபடாத, இந்த உலக விஷயங்களில் ஆட்படாத மனமானது, அம்பாளை எளிதாக உணரும். பஹிர்முகமான மனம், அதாவது விஷய போகங்களில் ஈடுபடும் எண்ணம் கொண்ட மனம் அம்பாளை உள்ளே இருத்தி உணர்வது கடினம் என்னும் பொருளில்.
கோபமும், ஆவேசமும் மிக்க அந்த ஸ்வரூபம், நீலியின் ரூபமாகத் தெரிகிறது. அது தான் காளியின் கோலம். உக்ரமாக இருப்பாள். அழியாத கன்னிகை என்று அம்பாளைச் சொல்கிறார். அவள் இந்த ஜெகன்மாதாவாகவே இருக்கும் போதும், அவளை ஒரு பாலையாக ஆராதிப்பது மிகவும் மனதுக்கு உகந்த ரூபமாக இருக்கிறது அவருக்கு.
சாதகனுக்கு உபாசனா தெய்வத்தை எந்த ரூபத்தில் எல்லாம் பார்க்கும் சாத்யம் உள்ளது என்று காட்டுகிறார். அழியாத என்றால், யாண்டும் இருக்கும் பரம் பொருள் அவளே என்னும் பொருள்படுகிறது. “நிர்நாசா, ம்ருத்யு மதனீ, நிரந்தரா” என்பதெல்லாம் ஆயிரம் நாமங்களில் சில இல்லையா?
அந்த சமயம், அவள் கரங்களில், ப்ரம்மதேவனின் கபாலம் இருப்பதால் அவள் ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் என்று வர்ணிக்கிறார். ஆரணத்தோன் என்றால் ப்ரம்ம தேவன். அவருடைய அகந்தை நீக்கும் சமயம், தலை பிடுங்கப்பட்டது. அவர் கபாலம் அவள் கையில் இருக்க, அவள் கந்தரி கைத்தலத்தாள் என்றார்.
அப்படிப்பட்ட அன்னையின் திருவடிகளிலேயே என் மனம் அசையாமல் இருக்கிறது என்று சொல்லும் பட்டர், ரூப பேதங்களால் தான் எந்த மாறுதல்களும் அடையாது, அன்னையின் கருணை பொங்கும் திருவடித் த்யானத்திலேயே லயித்திருக்கிறார் என்பது இங்கு வெளிப்படுகிறது.
அம்மா, பல விதமாக வேலை செய்து, யாரிடம் எப்படி பேசிக் கொண்டிருந்தாலும், கோபமோ, ஆசையோ, கண்டிப்போ எப்படி இருந்தாலும், குழந்தையின் மனம் அதனால் பாதிக்கப்படாமல், தாயின் நினைவே அவள் அன்பும் கருணையுமே மேலோங்கி இருப்பது பார்க்கிறோம் இல்லையா? அது போல, பட்டர், அன்னையின் திருவடித்யானமே கதி என்றிருக்கிறார்.. நம்மையும் இருக்கத் தூண்டுகிறார்
.... கண்மணி
30/6/21

Comments
Post a Comment