அபிராமி அந்தாதி -- 8
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே (7)
அம்பாளின் சிந்தூர வர்ணம் மிக ஆகர்ஷணமாக இருக்கிறது பட்டருக்கு. அடிக்கடி அவளை அந்த “சிந்தூர திலகாஞ்ச்சிதா” என்று சொல்லும் சஹஸ்ரநாம நாமாவைப்போல, சிந்தூர வண்ணப்பெண்ணாகவே அழைத்து மகிழ்கிறார்.
அழைத்தவர், யாரெல்லாம் அவளை வணங்குகிறார்கள் என்று சொல்கிறார். கமலாலயன் என்றால், தாமரை மீதமர்ந்திருக்கும் ப்ரம்ம தேவர், மதியை தலையில் தரித்த, மூங்கிலைப்போன்ற தோள்களையுடைய அம்பிகையைப் பாதியுருவாய்க் கொண்டு இருக்கும், அம்பிகை மகிழும் மணாளன் சிவபெருமானும், அவரோடு திருமாலும் சேர்ந்து வணங்குகிறார்கள் அம்பாளை.
அப்படிப்பட்ட சுந்தரியிடம், வெறும் அல்பமான உலக விஷயங்களையா கேட்கமுடியும்?
தயிரைக்கடையும் மத்தானது எப்படிச் சுழன்று கொண்டே இருக்கிறதோ அப்படி இந்த உயிரானது, மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து, பல்வேறு பிறவிகளில் அகப்பட்டு, சுழற்சியே நிற்காது தளர்வுற்று இருக்கிறதாம். புல்லாகிப் பூடாய் பல்விருகமாகி எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் என்றார் அல்லவா மாணிக்கவாசகர்? அதுபோல.
அந்த தளர்வு நீங்கவேண்டுமானால், மேலான கதியை பிறவா பெருநிலையை அடைவது ஒன்றே சிறந்த வழி என்பதால், அந்த பிறவா பேரின்ப நிலையை அம்பிகையின் கருத்தால் அவளது அனுக்ரஹத்தினால் அடைய வேண்டும் என்றும், அதற்கு உன்னைத் துதிக்கிறேன், உன் திருவடியையே சதா துதித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார் பட்டர். அம்பாளின் திருவடி ஒன்றே ஞானத்தைத் தரவல்லது. கதியுறு என்றால் முக்தியை அடைய என்று பொருள்.
“மோக்ஷப்ரதாயினி” அம்பாள். எப்போதுமே, இறைவனிடம் நமது வேண்டுதல்கள் இவ்வுலக வாழ்வின் சுகங்களுக்காகவே இருப்பது தான் நாம் சகஜமாகப் பார்ப்பது. ஆனால், ஒரு சாதகன், மேலான பரம்பொருளில் லயித்து இருக்கும் போது, என்னவிதமான வேண்டுதல்கள் இருக்கும் என்பதும், அந்த மன நிலையில் மேலான பிறவா நிலை ஒன்றே வேண்டத்தக்கது என்றும் சொல்லித்தருகிறார் பட்டர் பெருமான்.
“கருதா மறவா நெறி காண எனக்கு
இருதாள் வனசம் தர என்றிசைவாய்?”
என்று அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் கேட்கிறார்.
மஹான்கள் எப்படி இறைவனிடம் பேசுகிறார்கள் என்பதைப்பார்த்து நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்.
.... கண்மணி
29/6/21

Comments
Post a Comment