அபிராமி அந்தாதி -- 7

சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே (6)
அரும்பாடுபட்டு, அரிய சாதனைகள் செய்து, தன் உடலாலும், மனதாலும், தூயவனாக்கிக்கொண்டு, புற உலக நாட்டங்களில் இருந்தும், அகத்தில் அபரிமிதமான அன்புடனும், அன்னையைத் தன் ஹ்ருதயத்தில் வீற்றிருக்க வைக்கும் சாதகன், அடுத்த நிலை என்னவாக இருக்கும்?
சிந்தை முழுதும், அன்னையின் பொற்றாமரைப்பாதங்கள், சாதகனின் தலையில் (சென்னியில்) வைத்திருக்க, அகில சராசரங்களும் அன்னையின் அருளால், அன்னையாகவே தெரியும் அதிசயம் உள்ளத்தில் தோன்றும் அல்லவா?
அம்பாளின் அருள் கிடைத்துவிட்டால், முதல் மாற்றம் சாதகனின் பார்வை விசாலமாவது தான். அத்தனை உயிர்களிடமும் அன்பும் கருணையும், அபரிமிதமாக ஊற்றெடுக்கும். யார் பசியும் தான் பொறுக்க மாட்டார். யார் துயரும் காணவொட்டாது. அம்பாளின் பரம வாத்ஸல்யம் அப்படியே அனுபவமாக வந்துவிடும்.
அதனால் தான் அந்தரி சுந்தரி உன் பாதம் என் சென்னியதே என்று சொன்னவர், அப்படி வைத்த உன்னிரு பாதமானது சிந்தையில் நிறைந்தது அம்மா என்று கூறுகிறார்.
அதோடு, அவள் பாதம் தீண்டிய புத்தியில், அவளது மந்திரங்கள் மின்னியது என்றும் சொல்கிறார். அம்பாளின் சிந்தூர வணமயமான மேனியைத் தரிசித்து, அவளுடைய பாதம் பட்டதால் கிடைத்த மந்திர தீக்ஷையின் மேன்மை உணரலாம் இந்த பாடலில்.
மனம் வாக்கு காயம் மூன்றினாலும் செய்யும் உபாசனைகள் கூறப்படுகின்றன. இப்படி மந்திரங்கள் தெரிந்தபின், அவளது தீவிரமான அடியார்களுடன் கூடி, முறையாக, சாக்த ஆகம நூலகளைப் பாராயணம் செய்வதும், அப்பத்ததிகளை முறையாக அறிந்து கொண்டு, அம்பிகையின் மேன்மையையும், பெருமைகளையும், பராக்ரமங்களையும் சதா சத்சங்கமாக இருந்து சிந்திப்பது தானே இந்த மனித வாழ்வின் பரம ப்ரயோஜனமாக இருக்கும்?
அதைத் தான் “என்றும்” என்ற சொல்லால், அதையே நித்யம் பண்ணுவது சிறந்த சாதனை என்று குறிப்பிடுகிறார் அபிராமி பட்டர். மெதுவாக, உபாசனை பண்ணும் தெய்வத்தின் மேன்மை தெரிய தெரிய, அந்த உபாசனையின் பலன்களை நன்கு உணர முடியும்.
"சனை: சனை: உபரமேத்" என்றார் க்ருஷ்ணர். மெதுவாக இவ்வுலக மாயை விலகத் துவங்கும்.
.... கண்மணி
20/6/21

Comments