அபிராமி அந்தாதி -- 6
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே (5)
அம்பிகையை அத்தனுடன் சேர்ந்து தன் புத்தியில் யாண்டும் இருந்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார் பட்டர் பெருமான். இந்த பாடலில் அப்படி யாண்டும் இருக்கும் அம்பிகையின் பாதங்கள் அவர் தன் தலையில் இருக்கும் விதமாக த்யானித்துத் துதிக்கிறார்.
முப்புரை என்றால், திரிபுரை என்று பொருள். திரிபுரா ரஹஸ்யம் என்பது அம்பாளின் பரம ரஹஸ்யமான ஸ்வரூபங்களின் அர்த்தங்கள் பொதிந்த ஸ்ரீவித்யா மார்க்கத்தில் உபாசனைக்கான ஒரு அரிய நூல். அம்பிகை திரிபுரசுந்தரி என்று திருநாமம் கொண்டு துதிக்கிறோம் சஹஸ்ரநாமத்தில்.
புரை என்றால் மூத்தவள் என்றும் ஒரு பொருள் உண்டு. மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் அம்பாள் என்றொரு பொருள் உண்டு. மூவகை நாடிகளான, இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியவற்றில் உரைபவள் என்றொரு பொருள். மூன்றாக இருக்கும் சிலவற்றில் மூன்று ஸ்வரம், முத்தீ, மும்மூர்த்திகள், மும்மறை, முச்சக்தி, மூவுலகு, முந்நகரம் இவையாவற்றுக்கெல்லாம் அவளே தலைவியாய் இருப்பதால் திரிபுரை என்று கூறுவதுண்டு என்று கௌடபாத காரிகை என்னும் நூல் சொல்கிறது.
செப்பு போன்றிருக்கும் இரு ஸ்தன்ங்கள், பாரமாக இருக்கிறது, அந்த ஸ்தன்ங்களின் பாரம் தாங்காமல் இருக்கும் சிற்றிடையைக் கொண்டிருக்கிறாள் அம்பாள் என்று சொல்கிறார். “பரிக்ஷீணா மத்யே” என்று அம்பாளின் மத்ய பாகம் சௌந்தர்ய லஹரியில் ஆச்சர்யமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், பரீக்ஷை பண்ணித்தான் இருக்கிறது என்று தெரிய வேண்டுமாம், அவ்வளவு சிறிய இடையாம் அவளுக்கு.
மனோன்மணி என்பது அம்பாளின் ஒரு நாமம். மனதை உன்னதமான நிலைக்கு கொண்டு செல்பவள் அவள். உன்மணி என்பது மனதின் ஒரு நிலை. இருமைகள் தெரியாத ஆனந்த நிலை. த்யானத்தில், அம்பாளை ப்ரம்மரந்திரத்தில் வைத்து த்யானிக்கும் எட்டு நிலைகளில் இதுவே இறுதி நிலை என்று சொல்வார்கள். இந்த உன்மணியில் உறையும் தேவிக்கு மனோன்மணி என்று பெயர் வந்தது.
இவள் பராக்ரம்ம் என்னவென்று சொல்கிறார் பட்டர்? சிவபெருமான், நஞ்சை உண்ட போது அது கீழே இறங்கினால், சகல உயிர்களுக்கும் ஆபத்து என்பதால், அவருடையை நஞ்சுண்ட கண்டத்தை அப்படியே அழுத்திப்பிடித்து, அந்த நஞ்சை கீழே இறங்கவிடாமல் காத்தாள் அம்பிகை.
அப்படிப்பட்டவள், “பத்மாஸனா” என்ற பெயருக்கு இணங்க, தாமரையின் மீது சுந்தரியாகவும், அந்தரியாகவும் இருக்கிறாள் என்று சொல்கிறார்.
நம் ஹ்ருதயம் தாமரை மலரை ஒத்ததாக சாஸ்த்திரம் கூறுவதுண்டு. அங்கு, ஆகாசம் இருக்கிறது. ஆகாசம் என்பது இடம் என்று கொள்ளலாம். அந்த இடத்தில், அம்பாள், “தஹராகாச ரூபிணி” என்ற சஹஸ்ரநாம பதத்துக்கு ஏற்ப, அந்தரத்தில், இதயத்தாமரையின் உள்ளே, அமர்ந்திருப்பதால், அவள் அந்தரி என்று சொன்னார்.
இங்கு பட்டர், எத்தனை அழகாக, அம்மாவிடம் கொஞ்சுவது போன்று கொஞ்சம் கொஞ்சமாக அன்னையுடன் ஒன்று படுகிறார் என்னும் அழகை ரசிக்க வேண்டும். முதலில், அம்பிகையின் துணை வேண்டும் என்றார். அதன் பின் அவள் துணையாக இருக்க எப்போதும் புத்தியில் அத்தனுடன் இருக்க வேண்டும் என்றார். அதன் பின் அம்பிகையைக் கொண்டாடாத மனிதரிடமிருந்து விலகிடுவேன் என்றார். யாரெல்லாம் அம்பிகையின் அருளைப் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லி, தனக்கும் அவள் அருள்புரிய வேண்டும் என்று கேட்டார். அவள் தன்னை அனுக்ரஹம் செய்ய தன் இதயத்தாமரையில் வீற்றிருக்க வேண்டும் என்று ஆசையோடு அழைக்கிறார்.
அவள் இருக்க வேண்டும் என்றால் என்ன விதமாக இருக்க வேண்டும் மனம்? இது குறித்து சிந்தித்து அவளை வீற்றிருக்கச் செய்ய அதன் தூய்மைக்காக பாடுபட வேண்டும் சாதகன்.
.... கண்மணி
27/6/21

Comments
Post a Comment