அபிராமி அந்தாதி -- 5

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே (4)
அம்பிகையைச் சரணடைந்தார். அவளது சரணங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டார். மேலும், அதனின்று விலகி இருக்காது, எந்த நாளும், எல்லாப் பொழுதுகளும் அருள் சக்தி புத்தியில் நிறைந்து இருக்க வேண்டும் என்று தனக்கு விபரீதமான எண்ணங்கள் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக துதிக்கிறார் பட்டர் பெருமான்.
யாரெல்லாம் அம்பிகையை வழிபடுகிறார்கள் என்று விவரிக்கிறார். மனிதர்கள், தேவர், மாயா வித்தைகள், சித்துக்கள் வரப்பெற்ற முனிவர்கள், தங்கள் தலையைக் குனிந்து, அம்பிகையின் திருவடியில் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம்மை அல்லவா. அவள் முன் அத்தனை பேரும் வணங்குவது இயல்பே. என்ன கடினமான சூழல் யாருக்கு வந்தபோதும், அன்னையின் கருணை இருந்தால் அந்தக் கஷ்டங்கள் ஒரு க்ஷணத்தில் பொடிப்பொடியாகி விடும் என்பது தானே நிதர்சனம்?
சுரபதியான இந்திரனுக்கு துன்பம் வந்த போது, சூரர்களை அழிக்க, குமரன் போருக்குச் செல்ல, அன்னையின் வேலைப் பெற்றுத்தானே சென்றார்? தேவர்பதிக்கு உதவியது அம்பிகை தான். மன்மதன் ஈசனின் கோபத்துக்கு ஆளான போது, அவனுக்காக பரிந்து பேசி, அவன் உருவம் ரதி தேவிக்கு மட்டும் தெரியும்படி செய்தது அன்னை தான். முனிவர்கள் பெற்றிருக்கும் அத்தனை சித்துக்களும் அன்னையின் அருளால் தான் கிடைத்தது. மனிதர்கள் பாடு கேட்கவே வேண்டாம். எந்த சங்கடம் வந்தாலும், அவள் தானே முதலில் அணுகும் புகலிடம்!?
அப்படி எல்லோரும், உன் இரு சரணங்களை தங்கள் சென்னியால், (தலையால்) வணங்கி வருகிறார்கள். எனக்கு நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அம்மையப்பனாக சதா என் புத்தியில் ஆனந்தமாக காட்சி தர வேண்டும். குளிர்ச்சியான, பனிப்பொழிவைப்போன்ற குளுமை தரும் சந்திரனை தன் தலையில் தரித்து, அந்தக் குளிர்ச்சி போதாதென்று, அதனொடு கங்கையையும் சடையினிடையில் வைத்துக்கொண்டு, கொன்றை மலைகளை மாலையாகத் தொடுத்து அணிந்து, பாம்பும் மாலையாக அணிந்த உன் துணைவனோடு, நீயும் எந்நாளும் இடைவிடாது என் புத்தியில் இருக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்கிறார்.
அம்பிகையின் நினைப்பு, அதுவும் ஈசனுடனான இருவர் நினைப்பும் எப்போதும் கொண்ட ஒருவருக்கு, வாழ்க்கையில் அச்சம் இருக்காது. அதனோடு, அவர் தர்ம நெறி வழுவாதிருப்பார். தர்ம நெறியில் இருப்பதாலேயே அச்சம் அற்றிருப்பார். அதனால், இன்னொன்று அடைய வேண்டும் என்று ஆசை அற்றிருப்பார். இப்படி, மனம் இறைமயமாவதால், நன்கு பண்படும் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
.... கண்மணி
26/6/21

Comments