அபிராமி அந்தாதி -- 4
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே (3)
துணையாக வேறு ஒரு தெய்வமும் இல்லை, அபிராமியின் துணை ஒன்றே துணை என்று அறிந்தார் பட்டர். மறை என்றால், உயர்ந்த ரஹஸ்யம் என்று பொருள். மறை என்றால் வேதம் என்றும் ஒரு பொருள். எவரும் அறியா என்று சொன்னதால் இங்கு ரஹஸ்யம் என்று கொள்ளலாம். எவரும் அறியாத ரஹஸ்யமான அம்பிகையின் மேன்மைகளை ஸ்ரீவித்யையின் பரமதாத்பர்ய ரஹஸ்யங்களை நன்கு தகுந்த குருவின் மூலம் கற்றதனால், செறிந்தேன் என்று கூறுகிறார்.
செறிவது என்றால், செம்மையாவது, பண்படுவது. உத்தமமான மனதை அடைவது என்று கொள்ளலாம். அம்பிகையின் அருளானது உத்தமமான ஒரு மனதைத் தரும். அவளுடைய அருளை சிந்திக்க சிந்திக்க, மனம் கீழ் நிலைகளில் உள்ள ஆசைகளில் இருந்து விடுபடும்.
நின் திருவடிக்கே திருவே என்று சொல்கிறார். அம்பிகையின் திருவடியே சகல மங்களங்களும் தர வல்லது. திரு என்றால் மஹாலக்ஷ்மி என்று பொருள். மஹாலக்ஷ்மி என்ற நாமமும் அம்பாளின் நாமமாக ஸஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது இல்லையா?
திருவடிக்கே திருவே வெருவினார். வெருவுதல் என்றால் விரும்புதல். அந்த அருள் தரும் ஆனந்த்த் திருவடிகளை விரும்பி, அவர், சிலவற்றைப் பிரிந்தாராம். எதைப் பிரிந்தார்? அம்பிகையின் பெருமையை அறியாது அதை எண்ணாது சதா பலன்களை விரும்பிச்செய்யும் கர்மங்களிலேயே நாட்டம் கொண்டு, உலகியல் இச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நெஞ்சை உடைய மனிதர்கள், நரகத்துக்குப் போகும் வழியைத்தேடிக் கொண்டிருக்கும் அத்தகையவர்களின் சேர்க்கையில் இருந்து என்னைப் பிரித்துக் கொண்டேன் அம்மா, எதற்கு? என்றால், உன் திருவடி தரக்கூடிய மங்களங்கள் அனைத்தையும் பெறுவதற்கு என்று பட்டர், அம்பிகையை, அவள் பெருமையை, அந்த ரஹஸ்யத்தை அறிந்ததையும், அதன் பயனான மங்களங்களை அடையும் வழிக்குத் தடைகள் நீக்குவது பற்றியும் சொல்கிறார்.
இங்கு உலகியல் இச்சைகளை நரகத்துக்குச் செல்லும் வழி என்று சொன்னது, பராம்பிகையின் தத்துவத்தின் மீது உள்ள இச்சையை மேன்மை படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில்.
உலகியல் வாழ்க்கை தேவைதான். ஆனால் அதுவே முடிந்த முடிவாக இருத்தல் கூடாது. அதனால் இன்பம் இருப்பது போல் தோன்றினாலும் துன்பம் தருவதே அதிகம் என்று சொல்லப்பட்டிருப்பதை உணர வேண்டும்.
“யத் ஞாத்வா ந புனர்மோஹம் ஏவம் யாஸ்யஸி பாண்டவ” என்று க்ருஷ்ணர் கீதையில் அர்ஜுன்னிடம் சொல்கிறார் இல்லையா? அந்த மேலான பரா வித்யையானது அறிந்தவரை மீண்டும் கீழான உலகியல் இன்பங்களில் ஈடுபடாது இருக்க வைக்கும். இங்கு உபாசனையில் அம்பாளே அந்த பரா வித்யையின் ஆதியும் அந்தமுமாக இருக்கிறாள்.
.... கண்மணி
25/6/21

Comments
Post a Comment