அபிராமி அந்தாதி -- 3
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. (2)
அம்பிகையை அவருக்கு என்னவாகவெல்லாம் சொல்கிறார் என்று பார்க்கலாம். துணை என்று சொல்கிறார். துணை என்றால், உதவுபவர். எதில்? எதில் என்று ஒரு வரைமுறையெல்லாம் கிடையாது, சகல காரியங்களுக்கும், துணையாக, சகல நேரத்திலும், இருக்க வேண்டும் என்று பொருள் பட, துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் அன்னை தான் என்று கூறுகிறார்.
கொஞ்சம் உதவி செய்தாலே அவர் தெய்வமாகத் தெரிவார் இல்லையா? ஆபத்து காலத்தில் யார் உதவி செய்தாலும் தெய்வ ரூபம் என்று சொல்வோம். எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் துணையாக, ஆபத்து காலங்கள் எல்லாம் உதவி செய்பவர் தெய்வம் என்றால் அது சரி தானே!. அம்பாள் துணையாய் இருக்கிறாள், தெய்வமாக இருக்கிறாள்.
எப்போதும், அலுத்துக்கொள்ளாமல், சதா சர்வகாலமும், கேட்ட உதவியெல்லாம் செய்ய வேண்டும் என்றால், வேறு யாரால் முடியும்? அதனால் தான் பெற்ற தாய் என்று சொல்கிறார் பட்டர். அம்பாளை எல்லா உலகங்களும் தாயாராகத்தான் பார்க்கின்றன. அவளுடைய கருணைக்கு ஒரு வரையறை இல்லை “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்று சொல்கிறோம் லலிதா சஹஸ்ரநாமத்தில். அவ்யாஜ என்றால் என்ன, காரணம் என்று ஒன்று அவளுக்கு தேவையே இல்லை கருணை பண்ண. “அசேஷ ஜன மோஹினி” என்று வேறு சொல்கிறோம். ஒருவரைக்கூட விடாமல் அனைவரையும் ஈர்ப்பவள். சும்மா ஈர்க்கப்படுவார்களா? அவளுடைய கருணை ஈர்க்கிறது. அவள் நேரம் காலம் பார்க்காமல், அவரவர் தகுதிகள் எல்லாம் பார்க்காமல், எந்த பாகுபாடும் இல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறாள் இல்லையா? அதனால் அவள் பெற்ற தாயாராகிறாள்.
அன்னையை, வேதமாதா என்று தான் போற்றுகிறோம். வேதங்கள் ஸ்ருதிகள் என்று சொல்லப்படும். அந்த வேதங்களை ஒரு மரத்துக்கு ஒப்பிட்டு, அம்மரத்தின் கிளைகள், கொழுந்துகள் வேர் முதலியவற்றை, வேத சாகைகள், உபநிடதங்கள், மற்றும் ஆதாரமான ப்ரணவ மந்திரம் என்று முறையே சொல்கிறார். பணை என்றால் சாகை அதாவது கிளைகள், கொழுந்து என்பது உபநிடதங்கள், வேர் என்பது ஓங்காரம். அப்படி அம்பாளே இவ்வனைத்துமாய் இருக்கிறாள்.
அன்னையின் கரங்களில் கரும்பும், பாசம் அங்குசம் முதலியன இருக்கின்றன. பூவினாலான அம்புகள் இருக்கின்றன என்றும் வர்ணனை செய்கிறார். கரும்பு வில்லும் அம்புகளும் மனிதனுக்கு இருக்கும் ஆசைகளையும், அவற்றை அனுபவிக்கும் ஐந்து இந்திரியங்களையும், (மெய், வாய், கண், மூக்கு, தோல்) குறிக்கும்.
அவை மிகவும் பற்றுகொள்ளும்போது அவற்றை முறைப்படுத்தவல்ல அங்குசமும் வைத்திருப்பதால், அப்பேற்பட்ட, திரிபுர சுந்தரி ரூபத்தில் இருக்கும் அம்பிகையை துணையாக நான் அறிந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.
துணை என்று போன பாடலில் சொல்லியாகிவிட்ட்து. துணையாக வருபவர் தகுதி சொல்ல வேண்டும் இல்லையா? ஒன்றுக்கும் ஆகாதவரை விழுத்துணையாக, அதாவது யாண்டும், எப்போதும் துணை என்று சொல்லிவிட முடியுமா?
அம்பிகையானவள், நம் இந்த்ரியக்கூட்டங்களின் எல்லா அவஸ்த்தைகளையும் தன்னுடைய பாசம், அங்குசம் கொண்டு அடக்கி, நம்மை காக்க, அந்த வேத மாதாவாகவே, நம்முடன் இருப்பாள் என்று பொருள். வேதம் என்றாலே அறிவு என்று தான் பொருள். அறிவு தான் அற்றங்காக்கும் கருவி. அன்னை அறிவு ஸ்வரூபமாக நம்மை நல்வழிப்படுத்திக் காப்பாள் என்று அறிய வேண்டும்.
.... கண்மணி
24/6/21

Comments
Post a Comment