அபிராமி அந்தாதி -- 13

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே (12)

ஈசனின் தலையில் அம்பிகையின் திருப்பாதங்கள் மாலை போன்று இருப்பதை த்யானிக்க, பட்டர் பெருமான், அடுத்து, அம்பிகையிடம் ஆனந்தமாக, தன் பாக்கியத்தை உணர்வதாக பகிர்ந்து கொள்கிறார்.
கண்ணியது உன் புகழைத்தான், நான் எப்போதும் கருதியது உன்னைப்பற்றிய உன் பராக்ரமங்களைத்தான். அம்பாளின் பராக்ரமங்களுக்கு அளவு தான் ஏது? திரிபுர சிந்தரியான அவளின் வீரம்மிக்க தேவியரோடு அவள் பண்டாசுரனை அழித்த கதையை படிக்கும் போதெல்லாம் நமக்கும் அவளது அந்த பராக்ரமத்தின் சாயல் தொற்றிக்கொள்ளும். அப்படி அவளுடைய புகழையே தான் பேசிகிறேன் என்று பட்டரும் சொல்கிறார்.
அவளைப்பற்றியே பேச, அவளைப்பற்றியே படிக்க வேண்டும் அல்லவா? தெரியாத ஒருவரைப்பற்றி எத்தனை நேரம் பேசமுடியும்? அம்பாளை முழுமையாக தெரிந்து கொள்வது என்பது மூவருக்கே முடியாத விஷயம். ஆதலால் தான் கற்பது என்று சொன்னார். கற்பது என்று சொன்னதால், சதா கற்றுக்கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொள்கிறோம்.
கற்க கற்க கல்லும் கரையும் அவளது காருண்யத்தின் வீச்சு நன்றாக புரிபட, பக்தி பண்ணுகிறார். எப்படி பக்தி பண்ணுகிறார்? கசிந்து பக்தி பண்ணுகிறார். உள்ளம் உருக, ஊன் உருக இறைவனை வேண்டுவது தான் உண்மையான பக்தி. அப்படி பக்தி பண்ண இரவு பகல் பாராமல் அவளின் சிந்தனையைக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி ஒரு உன்மத்தன் போன்ற நிலையில் தான் அவர் இருந்தார். அல்லும் பகலும் வேறு சிந்தனையே இல்லாது, அம்பாளின் ஒரே நினைவோடு நண்ணியது உன்னை என்று சொல்கிறார்.
அப்படி உன்னை நண்ணிய உன் பக்தர்கள் நிறைந்த சத்சங்கம் எனக்குக் கிட்டியது என்று சிலாகிக்கிறார். சாதகனின் முக்கியமான மூன்று விஷயங்கள், குரு, சாஸ்த்திரம், சத்சங்கம். இந்த ஒத்த கருத்துடைய அடியார்க்கூட்டமானது, அவன் சற்றே சறுக்கினாலும், தாங்கிப் பிடித்து, மீண்டும் நல்வழிப்படுத்த பெரிதும் துணையாகும். “ஸத்சங்கத்வே நிஸ்சங்கத்வம். நிஸ்சங்கத்வே நிர்மலத்த்வம்” என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்த்த்தில் சொல்கிறார் இல்லையா? அப்படி அடியார் கூட்டம் எனக்குக் கிடைக்க, தாயே, நான் என்ன புண்ணியம் செய்தேன் அம்மா என்று அன்னையை ஏழு உலகங்களையும் பெற்றவளாய் விளித்து வியக்கிறார்.
எத்தனையோ விஷய சுகங்கள் மலிந்து கிடக்கும் இந்த பூமியில், அன்னையின் நினைவே சுகம் என்றிருப்பது அத்தனை சுலபல் இல்லை. மனம் வெளி விஷயங்களுக்கு இயல்பாகச் செல்லும் தன்மை உடையது. அப்ப்டிப்பட்ட மனதை அவளிடம் செலுத்தி, அவ்வாறே செலுத்தும் கருத்துடையை நல்லோர் இணக்கம் கிடைத்ற்கரியது என்னும் கருத்து சொல்லப்பட்டது
.... கண்மணி
4/7/21

Comments