அபிராமி அந்தாதி -- 12

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே (11)
அழியாத முக்தி ஆன்ந்தமாக அம்பிகையைச் சொன்ன பட்டர் பெருமான் அவளை அடுத்து, ஆனந்தமான அறிவாகவே பார்க்கிறார். ஆனந்தமான அறிவு என்பது சிதானந்த ரூபம் அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஒன்று “பரமானந்தா” என்பது. பரம் என்றால் மேலான என்று பொருள். மேலான ஆனந்தமாக அவளே இருக்கிறாள், மேலான ஆனந்தத்தைத் தருபவளாக இருக்கிறாள்.
ஆனந்தம் என்பது நம்முடைய நிஜ ஸ்வரூபம், அது நம் அறிவில் ஏற்படும் தெளிவினால் வெளிப்படுவது என்பதால் தான் என் அறிவாய் என்றார். அம்பாளே அறிவில் நிறைந்திருந்தால், இந்த உலக விஷயங்களில் ஆசை வராது, அதனால் துன்பமும் வராது இல்லையா? அவளை “ஸத்யஞானானந்தரூபா” என்றல்லவா அழைக்கிறோம்?
அறிவாய், அறிவில் விளங்கும் ஆன்ந்தமாய்த் தெரியும் அன்னையின் கருணை நிறைந்த அமுதமுமாய் இருக்கிறது சாதகனுக்கு. அமிர்தம் என்றால் அழியா பொருள் என்று பொருள். ம்ருதம் என்றால் அழியக்கூடியது. அம்ருதம் என்றால் அழிவற்ற என்று பொருள். அழிவற்ற ஆனந்தமே, பேரின்பமே அறிவில் சதா நிறைந்த நிலை தான் பட்டருடையது. அதை அழகாகச் சொல்கிறார்.
காணவும் கருதவும் ஆனந்தத்தையே தரக்கூடிய அற்புத வடிவு கொண்டவள் அல்லவா அம்பிகை? வடிவு என்றால் அழகு. ஆனந்தமாக ஒருவர் இருக்கும் போது எவ்வித அலங்காரங்கள் இன்றியும் அழகு மிளிருமே! வடிவுடையவள் என்பதோடு ஆனந்த வடிவாய் இருக்கும் அவளை, வான் முதல் புமி வரை பரந்து விரிந்து எங்கும் எதிலும் நிறைந்து இருக்கிறாள் என்று சொல்கிறார். “விஶ்வரூபா, விஶ்வகர்பா” என்பது அவளது நாமங்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்தில். விஶ்வ என்பது அனைத்தும்.
மறை நான்கினுக்கும் புகலிடமாக, அந்தமாக இருக்கும் அவளது திருவடித்தாமரையை வர்ணிக்கிறார். அம்பாளின் இரு தாமரைப்பாதங்களை வேதங்களின் இருப்பிடமாக சாஸ்த்திரம் சொல்கிறது என்று முன்னெ பார்த்தோம். “சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ” என்று ஆச்சார்யார், அம்பாளின் பாதங்களின் வல்லமையை நிபுணத்துவத்தைப் புகழ்ந்து சொல்கிறார் சௌந்தர்ய லஹரியில்.
அப்படிப்பட்ட அம்பாளின் சரணத் தாமரைகளை யார் தாங்கிக்கொண்டிருக்கிறார்? அந்த ஈஸ்வரனே தாங்குகிறாராம். அவர், இடுகாட்டை நர்த்தனம் ஆடும் அரங்கமாகக் கொண்டு அந்தச் சுடுகாட்டுச்சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு, வெண்சாம்பல் நிறத்தில் இருப்பதால், தவள நிறத்தவர் என்று குறிப்பிடுகிறார். திருவெண்காடு என்னும் ஊர், அபிராமியின் திருக்கடையூருக்கு அருகில் இருப்பதால், அந்த திருவெண்காட்டீசரைக் குறிக்கும் என்றும் கூறுவதுண்டு.
அத்தகைய எம்பிரான் ஈஸ்வரனின் திருமுடி மேல் உன் இரு சரணங்கள் இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.
வேதங்கள் தான் அம்பாளின் கால்களில் இருக்கின்றன. வேதங்களை ஈஸ்வரன் அவரது தலை மேல் மாலை போல் வைத்துத் தாங்குகிறார் என்று கொள்ளவும் இடமளிக்கிறது. லௌகீகமாக எண்ணாமல், இதன் தத்துவார்த்த்த்தை சிந்தித்துப் புரிந்து கொள்வது சிறப்பு. அம்பிகையின் பாதங்களில் கர்ம காண்டமும் ஞானகாண்டமும் இருக்கிறது என்று கூறியதும், அதன் பெருமையை உலகுக்கு உணர்த்த, அம்பிகைக்கு மிகவும் ப்ரீதியான அவள் பர்த்தாவே அவ்வேதங்களை தாங்குகிறார் என்று புரிந்து கொள்வது நலம்.
வேதம் என்றாலே அறிவு என்றொரு பொருள். வேதத்தை விட்ட அறம் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தின் பெருமை தெரியாது, அதில் உள்ள கருத்துக்களை தெரிந்து கொள்ள முயலாது இருத்தல் பிறவியின் பயனை தராது என்பதால், அம்பாளும் ஈசனும் எப்படி வேதங்களைத் தாங்குகிறார்கள் என்பது உரைத்தது நம் மேன்மைக்குத் தான்.
.... கண்மணி
3/7/21

Comments