அபிராமி அந்தாதி -- 11

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே (10)
அம்பாளை தன் முன், தன் உள்ளத்திரையின் முன் எப்போதும் நிற்க வேண்டும் என்று ஆசையாகக் கேட்டவர், தான் என்ன செய்வார் என்பதை எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.
நின்று, இருந்து, கிடந்து, நடந்து என்று எத்தகைய வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், அவளுடைய திருவடிகளின் நினைவிலேயே இருப்பார் என்று சொல்கிறார். அம்பாளின் திருவடிகளை போற்றிச் சொல்லும் போது அவற்றை ஒரு திருவடி வேதத்தின் கர்மகாண்டத்துக்கும் இன்னொரு திருவடியை வேதத்தின் ஞானகாண்டத்துக்கும் உரியதாகச் சொல்லுவர். கர்ம காண்டத்தில் தான் செய்யவேண்டிய தர்மமான செயல்களும், பல தெய்வ உபாசனைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவற்றை பலனில் பற்றில்லாது, மனத்தூய்மை ஒன்றே வேண்டி செய்யும் போது, அந்த சாதகனுக்கு, அம்பாள் ஞானம் பெறுவதற்கான மனத்தூமையும், தயாரிப்பும் தருவாள். அதனோடு, அவனுக்குத் தகுந்த குருவாக, அவளே வருவாள். அப்படி கருணா விலாசம் நிறைந்தவள் அம்பாள். ”த்வதன்ய பாணிப்யாம்” என்று தொடங்கும் சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரம், அம்பாளின் பாதங்கள் தரும் அரும் பெரும் பாக்யங்களைச் சொல்கிறது.
அப்பேற்பட்ட பாதங்களை எல்லா நிலைகளிலும் நினைக்கிறார் பட்டர். அவற்றை எழுதா மறையின் அரும்பொருள் என்று சொல்கிறார். அருள் என்றும் சொல்கிறார். பொதுவாக கர்ம காண்டம் என்பது பல்வேறு யாகங்கள் குறித்தும் அவற்றைச்செய்தால் பெறும் பலன்கள் குறித்தும் பேசுவது ஞானகாண்டம் என்பது அருள் நிறைந்த உபதேசங்களாக இருப்பது என்பதைப் பார்க்கிறோம். அதைத் தான், முன்னே பார்த்த அவளது பாதங்கள் வேதத்தின் இரு காண்டங்களைக் குறிப்பன என்று சொன்னது.
உமா என்று அம்பாளுக்கு ஒரு பெயர். உமாவாக அவதரித்து, அந்த மஹேஸ்வரனைக் கைப்பிடித்தாள். அந்த சமயம், அவள் ஹிமய மலையின் அரசனான ஹிமவானின் புத்திரியாக அவதரித்தாள். “உமா ஶைலேந்திர தநயா” என்று அவளுக்கு ஆயிரம் நாமங்களில் ஒன்று. ஶைலம் என்றால் மலை. ஶைலேந்திரன் என்றால் மலையரசன். மலையரசன் மகள் மலைமகள் அவள் பெயர் உமா. அந்த உமா மஹேஸ்வரியைத் த்யானம் செய்ய, முக்தி என்று சொல்லப்படும் அழியாத ஆனந்தம் தான் கிடைக்கும் என்று சொல்கிறார்.
ஆனந்தமே அவள் வடிவில் வந்து அருள் தந்தது உண்மை தானே? ஸ: உமா ஸ்கந்த: என்று மூன்று மூர்த்தங்களை ஒன்று சேர்த்து தான் நாம் ஸோமாஸ்கந்த மூர்த்தியாக ஆலயங்களில் தரிசிக்கிறோம். அதன் பொருள், ஸ: என்பது ஈஸ்வரனையும் (சத்) உமா என்பது அம்பாளையும் (சித்) ஸ்கந்த: என்பது முருகப்பெருமானையும் (ஆனந்தம்) குறிக்கும். சச்சிதானந்தம் என்பது தான் அதன் உள்பொருள்.
அப்படி சதா அவள் நினைவாகவே, அவள் திருவடித் தாமரைகளிலேயே மனம் இருந்தால், எழுதா மறையான வேதத்தின் முழுமையான பொருளான சச்சிதானந்தம் சாதகனால் என்றும் உணரப்படும் என்பது இங்கு குறித்துக்கொள்ள வேண்டிய விஷயம். அம்பாளுக்கு “ஆனந்தாயை நம:, ஆனந்த்தாயை நம:” என்று பெயர்கள். ஆனந்த வடிவினள், ஆனந்தம் தருபவள் என்னும் பொருளில். அவளை காண, நினைக்க, அவள் குறித்து பேச, அவள் இருக்கும் சன்னிதிக்கு செல்ல, அவளை விரும்பும் சத்சங்கத்தில் இணைந்திருக்க, அவளே நினைவாக சிந்தனை முழுதும் நிறைந்திருக்க ஆனந்தம் அன்றி வேறு என்ன இருக்க முடியும்?
.... கண்மணி
2/7/21

Comments