அபிராமி அந்தாதி 10
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே (9)
தனது கருத்தெல்லாம் அம்பிகையின் தாளில் இருக்கிறது என்றார், இப்போது, தந்தையான சிவபெருமானோ, அம்பாளின் கருணை பொங்கும் ஸ்தனங்களைக் காண்கிறார் என்று சொல்கிறார் இந்த பாடலில்.
தந்தையின் கண்கள், எதைக் காணுகின்றன? பொன்னிறத்தில் ஜொலிக்கும் அன்னையின் இரு மலைகள் போல் பெருத்திருக்கும் திருமுலைகளை. எதற்காக, காண்கின்றன என்றால், அந்த கருணை என்ற திருவமுது ஒத்த பால் சுரக்கும் பெருமுலையாள், திருஞானசம்பதப்பெருமானுக்கு கிண்ணத்தில், அவர் பாலுக்கு அழும் பிள்ளையாக, குளத்தின் கரையில் நின்று அழுத போது பரிவோடு தந்ததை நினைத்து, அப்பேற்பட்ட கருணையின் இருப்பிடமாக, கருணைக்கு அளவில்லை என்பதற்கு உதாரணமாக, குறீயீடாக, பெருந்தனம் என்று சொல்லி, அதை அத்தன் காண்கிறார் என்றும் சொல்கிறார்.
அழகான அந்த பெரும் மலை போன்றிருக்கும் முலைகள் மேல் முத்து மாலைகள் ஆரம் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவள் கைகளோ செம்மையாக இருக்கின்றன. சிந்தூர வண்ணத்தினள் கரங்கள் செம்மையாகத்தானே இருக்கும்? கொடுத்துக் கொடுத்துக் கூட, அவளது திருக்கரங்கள் செம்மை நிறம்பெற்றிருக்கும் இல்லையா? வரம் தருவதில் வித்தகி அவள்.
அந்த செம்மையான கரங்களில், கரும்பு வில்லும் அம்பும் இருக்கின்றன. இரண்டாவது பாட்டில், சொன்னார், “கணையும், கரும்புச்சிலையும், கையில் பாசாங்குசமும்” என்று. மன்மதனின் கரங்களில் கரும்பு வில்லும் அம்புகளும் இருப்பதாகவும் அவரது வேலை நடப்பது அம்பாளின் அருளினால் தான் என்றும், சௌந்தர்ய லஹரியில் ஆச்சார்யார் சொல்கிறார். “பஞ்ச விஶிகா:” என்று சொல்கிறார். அங்கு ஐந்து மலர் அம்புகள் மன்மதனிடம் இருக்கிறது, அவனுக்கு அம்பாளின் அனுக்ரஹத்தினால் வேலைகள் நடக்கிறது என்ற அர்த்தம்.
அதே ஐந்து அம்புகளையும் வில்லையும், காமாக்ஷியாக அவதாரம் செய்யும் போது அம்பாள் தானே எடுத்தது தனிக்கதை. காமேஸ்வரனின் அன்பை பெருவதற்காக, காமாக்ஷியாக, கரும்பையும் ஐந்து இந்திரியங்களான ஐந்து மலர் அம்புகளையும் அவர் முன் சமர்ப்பணம் பண்ண பிறகு தான் பார்வதி கல்யாணம் நடந்தது. அன்பின் வலிமை எடுத்து சொல்லக்கூடிய
அருமையான
விசேஷமான புராண நிகழ்வு அது.தன்னால் செய்ய முடியும் என்ற அஹங்காரத்தினால் மன்மதன், காமேஸ்வரனிடமே தன் வேலையைக் காட்ட நினைத்தார். நோக்கம் என்னவோ குமார கடவுளின் அவதாரம் என்ற உன்னதமான நோக்கம் தான். ஆனாலும் யாரிடம் எப்படி நடந்து கொண்டு காரியம் சாதிக்க வேண்டும் என்பது தெரியா விட்டால், தோல்வி தான் என்பது தான் மனமதனை எரித்த காம தஹனம் என்று சொல்லும் நிகழ்வு காட்டுகிறது.
அப்படி அஹங்காரத்துடன் இருக்கக்கூடாது, எத்தனை சக்தி இருந்தாலும், “வித்யா விநய ஸம்பன்னே” என்று பகவான் சொன்னது போல, சக்தியின் ப்ரதாபத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டி, விநயம் காட்ட வேண்டிய இடத்தில் விநயம் காட்டி காரியத்தை சாதிக்க வேண்டும் என்று அன்னையே தன் குழந்தைகளான நமக்கு கற்றுக்கொடுக்கவே, சர்வேஸ்வரியான அவளே, காமாக்ஷியாக, கரும்பும் வில்லும் மன்மதனிடமிருந்து எடுத்துக்கொண்டு, அன்பினால் சரணடைந்து அந்த சரணாகத ரக்ஷகரின் மனதை ஆட்கொண்டு, அவர் மூலமாக குமரக்கடவுளின் ஜனனத்துக்கு வழி பண்ணினாள். இது தான் புராணத்தின் செய்தி.
சௌந்தர்யலஹரியில் கூட ஆச்சார்யாள் அம்பாளை "தனுர்பாணான் பாசம் ஸ்ருணிமபி ததாநாம் கரதலை" என்று இதே போல வில்லும் அம்பும் கூட சேர்ந்து பாசம் அங்குசம் கொண்டிருக்கிறாள் என்று ஆனந்தப்படுகிறார் இல்லையா?
முருத்தன மூரலும் என்றால், பூவின் மொட்டு அவிழ்வது போன்ற புன்னகையை உடையவள் என்று பொருள்.
அப்படிப்பட்ட, அன்பின் அடையாளங்களைக் கொண்ட அம்பாளின் புன்முறுவல் பூத்த அழகிய முகத்தோடு அவளது உருவம் தன்முன் நிற்க வேண்டும் என்று வேண்டிக்கேட்டுக் கொள்கிறார் பட்டர்பெருமான். நாமும் அன்னையை சரணடைவோம்.
.... கண்மணி
1/7/21

Comments
Post a Comment