அபிராமி அந்தாதி -- 1

சர்வ சக்தியும் பரமகருணையும் ஒருங்கே கொண்ட உலகனைத்துக்கும் தாயாக விளங்கும் அந்த பராம்பிகையின் புகழையும், அவள் கருணையென்னும் அமுதத்தின் அளவையும் யாராலும் அத்தனை சுலபமாக கூறிவிட முடியாது. அவள் பெருமைகள் சொல்ல மனிதர்களாலும் தேவர்களாலுமே இயலாது என்பதால் தான், வசின்யாதி வாக்தேவிகளைக்கொண்டே அம்பாள் தன்னுடைய ஆயிரம் நாமங்களைக் கூற வைத்தாள். அம்பிகையின் ப்ரத்யேக கருணை ஒன்றிருந்தால் மட்டுமே அவளைப்பற்றி சிந்திக்கவும் சொல்லவும் முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

தமிழில் அம்பாளைப் போற்றி எழுதப்பட்ட மிக உன்னதமான நூல் அபிராமி அந்தாதி. அந்தாதி என்பது ஈற்றடி அடுத்த பாடலின் முதலடியாகக் கொண்டு எழுதப்படுவது. இப்படி ஒரு நூலைப் புனைய அம்பாளின் திருவுள்ளம் தான் காரணமாக இருந்திருந்திருக்கிறது என்பது திண்ணம்.

சோழ தேசத்தின் காவிரி கரையில் திருக்கடையூர் என்ற சிறு க்ராமத்தில் உறையும் அம்பாள் அமிர்தகடேஸ்வரர் சஹித ஸ்ரீ அபிராமி. அவ்வன்னையின் திருவுள்ளத்தால், அந்த ஊரில் அம்பிகையின் தீவிர உபாசகராக இருந்த ஸ்ரீ சுப்ரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்ரீ அபிராமி பட்டர் இந்த அரிய பொக்கிஷத்தை அருளினார். அபிராமியிடம் அவர் கொண்டிருந்த பேரன்பினால், எந்நேரமும் அவள் சிந்தனையாகவே இருந்ததால், அவரை அபிராமி பட்டர் என்றே அழைத்தார்கள்.
உபாசனையில் பல நிலைகள் சரியை, கிரியை யோகம் என்று இருக்கின்றன. அவற்றில் அவர் சரியையையும் கிரியையையும் கடந்து யோக நிலையில் இருந்தார். அம்பாளை சஹஸ்ராரத்தில் தரிசனம் செய்து, அமிர்தத்தை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு இருந்தார் பட்டர் பெருமான்.
அப்படி ஒரு யோக நிலையில், தஞ்சையின் மன்னர் அன்றைய திதி குறித்து அவரிடம் கேட்க, அவர் அம்பிகையே வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி நின்ற பேரெழிலின் தரிசனத்தில் லயித்திருந்த சமயமாக இருந்ததால், அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் இருந்த அம்பிகையின் தரிசனத்தால், அமாவாசையாக இருந்த அன்றைய திதியை பௌர்ணமியென்று கூறியதும், அதன் பின் அந்நிகழ்வே இந்த
அருமையான
அந்தாதி நமக்குக் கிடைக்க ஒரு காரணமானது அனைவரும் அறிந்ததே. அம்பிகையின் ரூப வர்ணனை, அவளது விதவிதமான பெயர்கள், அவளது கருணையின் ஆழம், சாதகனின் எண்ண ஓட்டங்கள், அவற்றின் பாதையில் அவன் அம்பிகையை அனுபவிக்கும் அழகு என்று இந்த நூலில் பல விஷயங்களைக் காணலாம். ஒவ்வொரு பாடலும், ஓராயிரம் செய்திகள் தாங்கி வருகின்றன.
இந்த உன்னதமான பாடல்களின் பொருளை சற்று ஆழ்ந்து சிந்தித்து இன்புற வேண்டும் என்றெழுந்த ஆவலால், மனதில் இதை எழுதினால், அதுவே ஒரு உபாசனையும் அம்பாளைப்பற்றிய மேலான த்யானமுமாக அமையும் என்ற நோக்கில், ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் என்று பதிவிடலாம் என்று எண்ணம். காப்பும் பயனும் சேர்த்து 102 பாடல்கள் அமையப்பெற்றிருக்கின்றன. இறையருள் வேண்டுவோம் இந்த சிந்தனை தொடர்ந்து இன்பம் தர.
காப்புச்செய்யுள்
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.
மாலையாகத் தொடுத்த கொன்றைமலர்களை விரும்பி அணிந்த தில்லையம்பதியின் ஈசன், சிதம்பரேசன், சிற்சபேசனை, தில்லை ஊரர் என்று குறிப்பிட்டு, அந்த தில்லை வாழ் அந்தணர்த் தலைவன் சிதம்பரநாதனின் ஒரு பாகத்தவளாய் அழகுற அமைந்திருக்கும் உமையம்பிகை, செண்பக மாலை அணிந்தவளாய் இருக்க, அன்னையின் மைந்தன் கண நாதனிடம் வேண்டிக்கொள்ளும் இந்த முதல் பாடல்.
எப்போதும், ஒருவரைப் புகழ்ந்து சொல்லவேண்டும் என்றால், அவர்களின் தாய் தந்தையின் பெருமையைத் தான் முதலில் சொல்ல வேண்டும். அப்படிச்சொல்லும் போது தான் அவர்கள் கொஞ்சம் கூடுதலாக மகிழ்ச்சி அடைவார்கள், அதனால், அவர்களின் தயவும் அதிகமாகக் கிடைக்கும் இல்லையா?
கண நாதனைப் புகழ வேண்டும். அவரோ மஹாபெரியவா சொன்ன மாதிரி “பெரிய இடத்துப் பிள்ளை”, அதனால் தான் அவருக்கு “ஆர்” விகுதி என்று சொல்வார் பெரியவா. பிள்ளையார் என்று சொல்வது கூட அதனால் தானோ என்று சொல்வார். உண்மை தானே!. உலகையே காத்து ரக்ஷிக்கும் அந்த பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் தாயும் தந்தையுமாய் இருக்கும் போது பெரிய இடம் தான் அவர்.
அவர் மட்டும் பெரிய இடம் இல்லை. அவருடைய தொந்தியும் பெரிய இடம் தானாம். எப்படி? “உலகேழும் பெற்ற” என்று சொல்கிறார் இலையா? எல்லா உலகங்களும் விநாயகரின் தொந்தியில் அடக்கம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட விநாயகர். அன்னை சிவகாம சுந்தரியைக் குறிப்பிடும் போது, உலகேழும் பெற்றவள் என்பது பொருந்தும். அவள் ஜகன்மாதாவாக இருக்கிறாள். அனைத்து உலகங்களுக்கும் தாயாக அவளே இருப்பதால், அவள் பெருமை பாட, அவள் மகனிடம், கரிய நிறத்தில் இருக்கும் அந்தக் கணபதியின் துணை இருந்தால் தான் அவருடைய அன்னையின் பெருங்கருணையைப் பாட முடியும் என்பது உண்மை தானே!
பாடுவது மட்டும் அபிராமி பட்டரின் நோக்கமென்று சொல்ல முடியாது. அவரது ஆசை எப்போதும் அபிராமியின் சிந்தனை தன்னுள்ளே இருக்க வேண்டும் என்பது தான் என்று தெரிகிறது. அதனால் தான் சீர் மிகும் அபிராமியின் அந்தாதி என் சிந்தையில் இருக்க வேண்டும் என்று கேட்கிறார். அந்தாதி என்றால், ஒரு பாடலின் அந்தம் இன்னொரு பாடலின் ஆதியாக வரும் வகையில் அமைக்கப்பட்ட செய்யுள் வகை.
இங்கு அந்தாதி என்பதை செய்யுள் வகை என்பதோடு. அன்னையைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே தொடர்ச்சியாக சங்கிலி போல வ்யாபித்து இருக்க வேண்டும், முதலும், முடிவும் அவளே சிந்தையில் நிறைந்து இருக்க வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு வரத்தைப் பெற்று, இந்த நூல் படிப்பவர்களுக்குமே அப்படிப்பட்ட ஒரு அரிய வாய்ப்பும் கிடைக்கச்செய்யவே இந்த பெரிய ப்ரார்த்தனை என்று நினைக்கிறேன்.
எந்த ஒரு காரியமுமே, கணபதியின் அனுக்ரஹம் இல்லாமல் நடக்க முடியாது. தடைகளை தகர்த்து அருள்பவர் விக்நேஸ்வரர் ஆதலால், முதல் பாடலில், அவரது பெற்றோரைப் புகழ்ந்து, அவருடைய பராக்ரமத்தைப் புகழ்ந்து, அவர் அருளால், இந்த நூலை இயற்றுகிறார்.
நாமும் சுவைப்போம், அன்னையின் அமுதத்தை, இயன்றவரை விநாயகப்பெருமானைத் மனம் மொழி மெய்யால் வணங்கி.
.... கண்மணி
22/6/21

Comments